கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், விருத்தாசலம் சேலம் சாலையில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் பரவலூர். இக்கிராமத்தின் ஊடாக செல்லும் மணிமுத்தாற்றில் கடந்த 11.09.2014 அன்று அரசு மணல் குவாரி ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இக்குவாரி அமைக்க ஆற்றின் உள்ளே செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றபோதே பரவலூர் பொதுமக்களும், இப்பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தார்கள். விருத்தாசலம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துறையினரின் முழு ஒத்துழைப்போடு குவாரி ஒப்பந்ததாரர்கள் பொது மக்களாகிய எங்களை அடியாட்கள் மூலம் மிரட்டியும், பொது மக்களிடையே சாதி அடிப்படையிலான பிளவுகள், மோதலை உருவாக்கும் வகையிலான தந்திரங்களைக் கையாண்டும் மக்களின் எதிர்ப்பை சிதறடிக்க முயற்சித்து வருகின்றன‌ர். இதோடு பரவலூர் கிராமத்திலும் இவ்வட்டாரத்திலும் உள்ள அரசியல் கட்சியினரையும் மற்றும் ஊராட்சிமன்ற தலைவரையும் விலைக்கு வாங்கியும் எமது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயன்று வருகின்றனர்.

பரவலூர் பொதுமக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில் தங்களிடையே சாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் மணல் குவாரி ஒப்பந்ததாரரின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாத வகையில் போராட்டங்களை மிகவும் கவனமாக நடத்தி வருகிறார்கள்.

இதன் ஓர் அங்கமாக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பிரதான வழிமுறையாக கடைபிடித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய தேதிகளில் இரண்டு சமாதானக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். முதல் சமாதானக் கூட்டம் நடைபெற்ற 14.09.2014 அன்று மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எமது இந்தக் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை மணல் குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அது வரை போராட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் கோட்டாட்சியர் மக்களை கேட்டுக்கொண்டார். கோட்டாட்சியரின் இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். ஆனால் இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக மறுநாளே 15.09.2014 மீண்டும் மணல் குவாரி செயல்படத் துவங்கியது. மணல் குவாரியில் நான்கு பொக்லைன்(HITACHI) கனரக இயந்திரங்கள் மூலம் நூற்றுக்கணக்கான லாரி மணல் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த மக்கள் உடனடியாக மணல் லாரிகள் குவாரியை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் மக்களை கலைந்து போகச்சொன்னதுடன் உங்கள் கோரிக்கையை கோட்டாட்சியரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை மக்கள் ஏற்க மறுத்ததால் மணல் அள்ளுவதை இப்போதைக்கு நிறுத்துவதாகவும், நாளை மீண்டும் கிராம மக்களை சந்திப்பதாகவும் கூறினார். வட்டாட்சியரின் இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்க வேண்டும் என்றால் லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள மணலை ஆற்றிலேயே திருப்பிக் கொட்ட வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். இதன் அடிப்படையில் லாரியில் ஏற்றப்பட்ட மணல் கொட்டப்பட்ட பிறகு மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீண்டும் முன்பு போலவே வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் அள்ளப்பட்டது. ஆனால் இம்முறை உள்ளூரில் விலைக்கு வாங்கப்பட்ட அடியாட்களை வைத்து மணல் அள்ளியதால் அப்பகுதிக்கு மக்கள் சென்றால் அடியாட்களால் பொதுமக்கள் தாக்கப்படும் அபாயமும், சாதிய மோதலும் நிகழும் என்பதால் பொதுமக்களை மணல் குவாரிக்கு அழைத்து வருவதை தவிர்த்துவிட்டு, எமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டகுழு உறுப்பினர்கள் மட்டும் மணல் எடுப்பதை எதிர்த்து மறியல் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைப் போன்றே மணல் குவாரியில் தயார் நிலையில் இருந்த அடியாட்கள் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் திருப்பித் தாக்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி அரசு அதிகாரிகளும், காவல்துறையும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக எமது போராட்டத்தை திசைதிருப்புவார்கள் என்பதால் நாங்கள் பின்வாங்கினோம்.

பின்னர் கிராம மக்களிடையே பேசி மணல் குவாரி செயல்படுவதை நேரடியாகத் தடுத்தால் அது அடியாட்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக, சாதிய மோதலாக திசை திருப்பப்பட்டுவிடும் என்பதால் இனி குவாரியில் நேரிடியாகப் போராடாமல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானித்தோம். அதன்படி 20.09.2014 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டோம். எமது முற்றுகையை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முந்தைய சமாதானக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் எடுக்க கோட்டாட்சியர் அனுமதி வழங்கியதற்கும், அதற்கு அடுத்த நாள் மணல் குவாரியில் வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மணல் எடுக்க அனுமதி வழங்கியதற்கும், மணல் குவாரி ஒப்பந்ததாரர் அடியாட்களை பயன்படுத்துவதைக் கண்டும் காணாமல் வந்த வட்டாட்சியரின் செயலுக்கும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். இதோடு இச்சமாதான கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மணல் குவாரி ஒப்பந்ததாரர் நூற்றுக்கணக்கான அடியாட்களைத் திரட்டி மணல் குவாரி அருகில் விருத்தாசலம் – சேலம் சாலையில் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்திருப்பதால் நாங்கள் ஊர் திரும்பும்போது அடியாட்களால் தாக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக மணல் குவாரியை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைக்கு ஏற்ப உடனடியாக மூடிவிட வேண்டும். மேலும் மணல் குவாரி அருகில் திரட்டப்பட்டுள்ள அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் அனைவரும் இந்த அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்ற எமது முடிவை கோட்டாட்சியரிடம் தெரிவித்தோம்.

இதற்குப் பதில் அளித்த கோட்டாட்சியர் உங்கள் கோரிக்கைகளைப் பற்றி உடனடியாக முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி ஆலோசித்துவிட்டு உரிய பதில் அளிப்பதாகவும், அதுவரை காத்திருக்குமாறும் கூறினார். இரண்டு மணி நேரம் கழித்து மணல் குவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், மணல் குவாரி அருகில் ஒப்பந்ததாரரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறும் அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்திரவிட்டிருப்பதாகவும், அடுத்த சமாதானக் கூட்டம் மீண்டும் 23.09.2014 அன்று நடைபெறும் என்றும் கோட்டாட்சியர் அறிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நாங்கள் ஊர் திரும்பினோம்.

அன்றிலிருந்து தற்போதுவரை வரை மணல் குவாரியில் மணல் அள்ளப்படாவிட்டாலும் கோட்டாட்சியர் அறிவித்த சமாதான கூட்டம் 23.09.2014 அன்று நடத்தப்படவில்லை. அதோடு 2001-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பரவலூர் கிராமத்தில் மணல் எடுக்க நிரந்தரத் தடையாணை விதித்து அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் சுட்டிக்காட்டியும், அதன் நகலை கோட்டாட்சியரிடம் வழங்கி எச்சரித்த பின்னரும் மணல் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறவில்லை. மேலும் மணல் குவாரியில் மணல் அள்ளிய கனரக பொக்லைன் இயந்திரங்கள் மணல் குவாரிக்கு எதிரிலேயே இன்றுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாற்றின் இயற்கை கட்டமைப்பு:‍

மணிமுத்தாறு விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் சிற்றோடையாக தொடங்குகிறது. இதனோடு பல்வேறு சிற்றோடைகளும் இணைந்து கடலூர் மாவட்டம் நல்லூர் என்ற ஊரின் அருகில் இருந்துதான் மணல் வளமிக்க ஆறாக வடிவமெடுக்கிறது. இங்கிருந்து விருத்தாசலம் ஊடாக பயணிக்கும் இந்த ஆறு சேத்தியாதோப்பு என்ற ஊரில் வெள்ளாற்றுடன் சங்கமிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு இதே பாதையில் பயணித்து, தான் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் வாழுமிடங்களை வளம் கொழிக்கும் பூமியாக வைத்திருக்கிறது. இந்த ஆற்றில் நல்லூர் அருகே உள்ள மேமாத்தூர் என்ற ஊரில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் விருத்தாசலம் வரை உள்ள கிராமங்களின் பாசன ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கொடுக்கூர், பெரம்பலூர், மன்னம்பாடி, சாத்தியம், விளாங்காட்டூர், தொரவலூர், பரவலூர், கோமங்கலம், முகுந்தநல்லூர், சாத்துக்கூடல், க.இளமங்கலம், ஆலிச்சிக்குடி, விருத்தாசலம் ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்படுகிறது. இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீர் அவ்வூர்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதோடு அவ்வூர்களில் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகவும் அமைகிறது.

நல்லூர் கிராமத்தில் இருந்து மணல் வளமிக்க ஆறாக வடிவம் எடுக்கும் மணிமுத்தாற்றின் தென்கரையில் நல்லூர், வண்ணாத்தூர், மேமாத்தூர், கச்சிபெருமநத்தம், பரவலூர், கோமங்கலம், மணவாளநல்லூர் ஆகிய கிராமங்களும், வடகரையில் இலங்கியனூர், மேமாத்தூர், மேமாத்தூர் ரயில்வே காலனி, ராசாபாளையம், எருமனூர் ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன.

மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்குகளின் போது ஏற்படும் மண் அரிப்பும் பாதிப்புகளும்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த ஆற்றில், கடந்த ஐம்பதாண்டுகளில் மேமாத்தூரில் இருந்து கோமங்கலம் வரை வரலாற்றில் வேறெப்போதும் நிகழாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பலநூறு ஏக்கர் விளைநிலங்கள் ஆறாக மாறியுள்ளன‌. ஆற்றின் அகலமும், ஆழமும் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆற்றின் பல பகுதிகளில் சுண்ணாம்புப் பாறைகளும், களி மண்ணும் வெளியே தெரிகின்றன. ஏறத்தாழ இருபது ஆடி அளவிற்கு இயற்கை அன்னையின் மடியில் காலம், காலமாகப் படுத்திருந்த மணல் காணாமல் போய்விட்டது.

கடந்த ஐம்பதாண்டுகளில் மண் அரிப்பிற்கான மூலக்காரணம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளுக்கு இம்மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மற்றும் வெள்ளாற்றில் இருந்து மணல் கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மணல் குவாரி அமைந்துள்ள அதே இடத்திலிருந்து அதாவது பரவலூர் கிராமத்தின் கிழக்கு பக்க எல்லையில் இருந்து, மேற்கு பக்க எல்லை வரை உள்ள ஆற்றுப் பகுதியில்தான் ஆயிரக்கணக்கான லாரி மணல் 20 அடி ஆழத்திற்கு, மணலுக்குக் கீழே சுண்ணாம்பு பார் வெளியே தெரியும் அளவிற்கு முற்றாக சுரண்டி எடுக்கப்பட்டது. ஆற்றில் இருந்த மணல் 20 அடி ஆழத்திற்கு முற்றாக சுரண்டி அள்ளப்பட்டுவிட்டதால் - இயற்கையாகவே இப்பகுதி வடக்கிலிருந்து தெற்காக சரிவாக அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் 1960-களுக்குப் பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் உண்டான நீரின் அழுத்தம் மற்றும் வேகத்தினால் ஆற்றின் தென்பகுதி கரையில், வரலாற்றில் வேறெப்போழுதும் நிகழாத அளவுக்கு மண் அரிப்பை ஏற்படுத்தி ஏராளமான விளை நிலங்களை காவுகொண்டது. இதன் மற்றொரு விளைவு பரவலூர் கிராமத்தில் குடியிருப்பிற்கு கிழக்கிலும், மேற்கிலும் முற்றிலும் புதிதான இரு கொண்டை ஊசி வளைவுகள் உருவாகின.

கொண்டை ஊசி வளைவுகளின் சிறப்பம்சங்கள்

கொண்டை ஊசி வளைவின் நடுப்பகுதி ஆற்றங்கரையின் நேர்க்கோட்டுப் பாதையில் இருந்து வெளிப்பக்கமாக வளைந்து செல்லக்கூடியது. இதனால் கொண்டை ஊசி வளைவு தொடங்கிய பகுதியின் முனையும் முடியும் பகுதியின் முனையும் ஏறத்தாழ நேர்க்கோட்டுப் பாதையில் வருகிறது. இந்த கட்டமைப்பின் காரணமாக கொண்டை ஊசி வளைவு தொடங்கும் இடத்தில் இருந்து ஆற்று நீர் வெளிப்பக்க வளைவிற்கு ஏற்ப வளைந்து சென்று, முடியும் பகுதியின் மீது தனது முழுபலத்துடன் மோதுவதால் அவ்விடத்தில் நீர் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழல்வட்டப்பாதை ஆற்றின் எதிர்கரை வரை சென்று ஆற்று மணலை எதிர்ப் பக்கத்தில் குவிக்கிறது. இந்த சுழற்சியின் போது மென்மையான, வளமான மணல் எதிர்க்கரையின் பக்கம் நீர் சுழற்சியோடு இணைந்து கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்படுகிறது.

கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதி இயற்கையாகவே அதன் எதிர்ப்பக்கத்தை விட தாழ்வான பகுதியாக உள்ள காரணத்தால், அதன் எதிர்ப்பக்க கரைப் பகுதியில் மணல் குவிக்கப்படுவதற்கு நேர் எதிராக கொண்டை ஊசி பகுதி நீரின் வேகம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மண் அரிப்பு மேலும் அதிகரித்து அது கொண்டை ஊசிப் பகுதியின் ஆழத்தையும், அகலத்தையும் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றின் நீர் செல்லும் அளவிற்கு ஏற்ப அதிகரிக்கச் செய்கிறது.

பரவலூர் கிராமத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியும், மேற்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 2-ன் பகுதியும், இரண்டின் தொடக்கப்பகுதியும், இவ்விரு கொண்டை ஊசி பகுதிகளுக்கு இடையில் உள்ள பரவலூர் கிராம குடியிருப்புப் பகுதியின் தென்பகுதி எல்லையும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. இரண்டு கொண்டை ஊசிப் பகுதிகளுக்கும் இடையில் உள்ள குடியிருப்புப் பகுதி, ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கொண்டை ஊசி வளைவுகளின் விரிவடைதலுக்கு ஏற்ப அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாகத் தடுக்கும் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் கீழ்ப்பகுதி, மேற்பகுதி கொண்டை ஊசி வளைவுகளின் கோரத்தாண்டவத்தால் அவைகள் நேர்கோட்டில் இணைவதை எவராலும் தடுக்க முடியாது.

paravalur map

இரு மஞ்சள் கோடுகளுக்கு இடைப்பட்ட 1 குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -1. 2- என குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -2 ஆகும். மேலும் சிவப்பு நிறத்தில் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதிகள் பரவலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்புகள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவன கட்டுமான பணிகளுக்காக 1956 மற்றும் 1990களில் பெருமளவு மணல் எடுக்கப்பட்டதால்தான் பரவலூர் கிராமத்தில் இரு ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உருவாகியுள்ளன.

கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியின் தென்புறக்கரை மூன்று மீட்டர் அகலம் மட்டுமே தற்போது உள்ளது. இதை அடுத்து மேமாத்தூர் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயும், கொண்டை ஊசி வளைவு- 1 –ன் ஆபத்தினால் விருத்தாசலம் – சேலம் சாலையும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க அவ்விடத்தில் 10 மீட்டர் உயரமும் நீளமும் உடைய ஒன்பது தடுப்புச் சுவர்களை வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 17.65 கோடி செலவில் பொதுப்பணித்துறை கட்டியுள்ளது. இந்த தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல் இருந்திருந்தால் வெள்ளப்பெருக்குகளின் போது கரை உடைப்பெடுத்து விருத்தாசலம் – சேலம் சாலை துண்டித்து கோமங்கலம், மணவாளநல்லுர் ஆகிய ஊர்களில் பெரும் வெள்ளப்பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கும்; நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டிருக்கும். அதே வேளையில் இந்த தடுப்புச்சுவர்கள் குறிப்பிட்ட அப்பகுதியை பாதுகாத்தாலும், மண் அரிப்பிற்கு உள்ளாகியுள்ள பரவலூர் கிராமத்தையும் அதன் விளைநிலங்களையும், கோமங்கலம் கிராம விளைநிலங்களையும் பாதுகாக்கவில்லை. முன் எப்போதும் போலவே இப்போதும் மண் அரிப்பினால் ஆபத்தை எதிர்கொண்டே உள்ளன.

இதற்கு முன்பு இருமுறை பெருமளவு அள்ளப்பட்ட மணலினால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள இப்பகுதியை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, அதற்கு நேர்மாறாக மூன்றாவது முறையாக மணல் குவாரி அமைத்ததன் மூலம் ஏற்படப் போகும் அழிவின் வேகத்தை துரிதப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு 1956 மற்றும் 1990களில் அள்ளப்பட்ட மணலால் உருவான கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை அன்னை தன்னை சமனிலைப்படுத்திக்கொள்ள அரிப்பு மற்றும் சரிவு ஆகிய வடிவங்களில் சேமித்து வைத்துள்ள மணலை தாயின் மடியறுத்து பால் கறப்பதைப் போன்று மணல் கொள்ளையர்கள் ஒட்டச் சுரண்டிவிடுவார்கள். இதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரியில் ஏறத்தாழ பதினைந்து அடி ஆழத்துக்கும் மேலாக ஒரு சில நாட்களிலேயே செம்மண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மணல் ஒட்ட சுரண்டி அள்ளப்பட்டுள்ளது.

paravalur village

கீழே செம்மண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மண் அள்ளியுள்ள காட்சி.

paravalur

ஏறக்குறைய 15 ஆழத்திற்கு மண் அள்ளியுள்ள காட்சி.

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப்போகும் அழிவுகளும், பாதிப்புகளும்

• தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் மணிமுத்தாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்குகளின் போது கொண்டைஊசி வளைவு – 1 மற்றும் -2 இரண்டும் இணைந்து பரவலூர் என்ற கிராமமே தமிழக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும். இதுவே இந்த மணல் குவாரியால் ஏற்படப்போகும் முதன்மையானதும் மிகப்பெரியதுமான விளைவாகும்.

• இதன் அடுத்த விளைவாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மண் அரிப்பிற்குள்ளாகி ஆறாக மாறுவதால் இதை நம்பி உயிர்வாழும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

• மணிமுத்தாற்றில் உள்ள மணல் ஒட்டசுரண்டி அள்ளப்படுவதால் இந்த ஆற்றின் கரையில் உள்ள கிராமங்களில் மட்டுமல்ல இவ்வாற்றைச் சுற்றியுள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இதனால் இவ்வட்டாரத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நிலத்தடிநீர் இல்லாமல் போய் இவ்வட்டாரமே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. இதற்கு ஆதாரமாக பரவலூர் கிராமப் பகுதிகளில் 1960களில் ஐந்தடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 55 அடி முதல் 60 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இக்கிராமத்திலும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 60 அடிக்கு கீழே 300 அடி வரை நிலத்தடிநீர் வளமே இல்லை என்பதும், அப்படியே ஒரு சில இடங்களில் கிடைத்தாலும் அந்த நீர் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாத வேதிப்பொருட்கள் நிறைந்த நீராகவே உள்ளது. எனவே இப்போதுள்ள 60 அடி ஆழ நீர்மட்டத்தை பாதுகாப்பதும், அதற்கான ஆதாரமாக உள்ள ஆற்றுமணல் கொள்ளை போவதை தடுப்பதுமே இவ்வட்டார மக்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழிமுறையாகும்.

1990 -களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் அதில் வழங்கப்பட்ட தீர்ப்பாணையும்

பரவலூர் கிராமத்தில் 1990களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரு குழந்தைகளின் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக பரவலூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திரு. ஆசைத்தம்பி அவர்கள் விருத்தாசலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் மு. வ. எண் 939/91 –ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 26. 10. 1999 தேதி அன்று அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மனுதாரருக்கு எதிராக அமைந்ததால், இத்தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு எண்:2/2000 மேல்முறையீடு செய்தார்.

இம்மேல்முறையீட்டு வழக்கில் எதிர்வாதிகளாக
1. தமிழ்நாடு அரசு ரெப் பை தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர்
2. விருத்தாசலம் கோட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
3. விருத்தாசலம் வட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
4. ராஜசேகரன், (மணல் குவாரி ஒப்பந்ததாரர்) ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக 2001-ம் ஆண்டு ஜீன் திங்கள் 15 –நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது(தீர்ப்பாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக 2001- க்குப் பிறகு பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற தடையாணை நீடிக்கும் போதே அதைப் பொருட்படுத்தாமல் அதை அவமதிக்கும் வகையில் தற்போது மணல் குவாரி தமிழக அரசின் அதிகாரிகளால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய இரு சமாதானக் கூட்டங்களிலும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களிடம் நீதிமன்ற தடையாணைப் பற்றி சுட்டிக்காட்டியும், அதன் நகலை அளித்த பின்னரும் கூட அதை ஒரு பொருட்டாக அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை.

எப்படியாவது பொதுமக்களை ஏமாற்றி மணல் குவாரியை அதன் குத்தகைதாரருக்கு ஆதரவாக இயங்கவைப்பதிலேயே கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் தீவிர கவனமும், அக்கறையும் செலுத்தி வருவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர், விருத்தாசலம் கோட்டாட்சியர், விருத்தாசலம் வட்டாட்சியர் ஆகியோருக்கு எமது போராட்டக்குழுவின் சார்பில் கடந்த 24.11.2014 அன்று பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளித்தது, நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்பதையும் அது நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக்காட்டி, எச்சரித்து உடனடியாக மணல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்ப பெறாவிட்டால் உங்கள் மூவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதையும் குறிப்பிட்டு எமது வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு சமாதானக் கூட்டங்களிலும் மணல் குவாரி ஒப்பந்ததாரர் யார் என்பதை நாங்கள் வலியுறுத்திக் கேட்டும், கோட்டாட்சியர் தகவல் தர மறுத்துவிட்டார். மணல் குவாரி ஒப்பந்ததாரரின் பெயரை வெளியே சொல்ல கோட்டாட்சியர் ஏன் மறுக்கிறார் என்பது எமக்கு விளங்கவில்லை.

நீதிமன்ற ஆணைக்கே கட்டுப்பட மறுக்கும் தமிழக அரசு அதிகாரிகளின் மூலம் எமக்கு நியாயம் கிடைக்கும், எமது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும், எமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதில் பொருள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

தினசரி பத்திரிக்கையில் மக்களின் போராட்ட செய்திகள்

http://www.dailythanthi.com/News/Districts/2014/09/19011132/Trucks-prison-The-villagers-caught-Vehicles-struggle.vpf

http://www.dailythanthi.com/News/Districts/2014/09/15021506/Virudhagireeswarar-near-paravalur-farmers-in-the-sand.vpf

http://www.dailythanthi.com/News/Districts/2014/09/20210820/The-fight-against-sand-quarrying.vpf

- சூறாவளி

Pin It