வேட்டைக்காரர்கள் பழைய யுக்தியை விட்டுவிட்டு, புதிய பரிணாமத்தை அடைந்துள்ளனர். இவர்கள் வேட்டையாடும் காடு ஒன்றுதான். வேட்டையாடும் முறையும் ஒன்றுதான்.

modi 360முகுசின்ஷேக், 24 வயதான இவர் சோலாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர். புனேவிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. துறையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை புனேவில் வைத்து அநியாயமாக படுகொலை செய்தனர்.முகுசின் ஷேக் தன்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு, பள்ளிக்கு தொழுகையை முடித்து விட்டு வந்துகொண்டிருந்தார். அப்பொழுது, கலவரக் கும்பல் ஒன்று கற்கள் மட்டும் ஹாக்கி மட்டையுடன் இரவு 9.00 மணிக்கு வந்துள்ளனர். முகுசினை குறிவைத்து தலையில் அடித்து, தாடியை பிடித்து இழுத்து பலமாக தாக்குதல் நடத்தினர். முகுசின் ஷேக் தலையில் பலத்த காயங்களுடன் மறுநாள் செவ்வாய்கிழமை இறந்துள்ளார். இதே போன்று அதே வயதுடைய இஜாஸ் யூசுப் பகவான் மற்றும் அமீன் சேக் தாக்கப்பட்டு இந்த இரு பையன்களும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

முகநூலில் முஸ்லிம் பேரில் போலி கணக்கை உருவாக்கி சிவாஜி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர்களை தவறாக சித்தரித்து, புகைப்படங்களையும் மே 30 அன்று பதிவு செய்கின்றனர். கலவரத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டே முஸ்லிம் பெயரில் தவறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் கலவரம் தொடர்கிறது. இதில் கடைகள் மற்றும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சோலாப்பூர் மற்றும் சிவாஜி சிலை அருகில் கூடுகின்றனர்.

இதில், அடிப்படைவாத அமைப்புகளான சிவசேனா, பி.ஜே.பி. மற்றும் ஹிந்து ராஷ்டிர சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அங்குள்ள கலவர சூழலில் 33 காவல் நிலையங்களில் 24 காவல் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. கற்களை தூக்கி வீசியதில் 130 அரசு பேருந்துகளும் 21 தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குறிவைத்து கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கெதிராகவும் இவர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள், படுகொலைகள், இழப்புகள் அனைத்திற்கும் ஒரு சரிதான் என்ற ஒரு சூழ்நிலையை மக்கள் முன் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். மக்களிடம் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு சிந்தனையை மிகவும் அழகாக ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதனுடைய வெளிப்பாடுதான் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது மற்ற சமூகத்தவர்கள், வாய் மூடி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை அரசியல்வாதிகள் ஒரு வலுவான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதனுடைய வெளிப்பாடுகள் தான் இந்தக் கலவரங்களாகும்.

இதை வைத்தே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இவர்கள் வென்று காட்டியுள்ளார்கள். கடந்த காலங்களில் நடைபெற்ற கலவரங்கள், படுகொலைகள் வெளியேற்றம் போன்றவைகள் நல்ல உதாரணமாகும்.

முஸாஃபர் நகர் மற்றும் அஸ்ஸாம் கலவரங்கள் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் பி.ஜே.பி. இந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்டு ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. உத்திரப்பிரதேசத்தில் 80 இடங்களில் போட்டியிட்டு 71 இடங்களில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் பின்னணியில் கலவரங்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது.

இந்த வருடம் லோக்சபா தேர்தலுக்கு முன்பு, நாடு முழுவதும் வகுப்பு கலவரங்களின் சதவீதம் 25 ஆகும். இதில் உத்திரபிரதேசம் மிக மோசமாக உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 247 சம்பவங்கள் நடந்துள்ளது. 2012ல் 118 கலவரங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறும் போது, உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் வகுப்பு கலவரங்கள் 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

இதில், குஜராத்தில் 68 வழக்குகள் வகுப்புக் கலவரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரங்களில் 10 நபர்கள் இறந்துள்ளனர். 2012ல் 57 கலவரங்கள் நடந்துள்ளது. இதில், ஐந்து பேர் இறந்துள்ளனர். இரண்டாவதாக, கர்நாடகாவில் 2012ல் மட்டும் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் செய்தவர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை முக்கியமானவர்களாக அடையாளப்படுத்துகின்ளனர். 2007ல் நரேந்திர மோடி அரசு குஜராத் கலவர வழக்கில் தொடர்புடையவரான மாயா கோத்னானிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கி கவுரவித்தது. இதே போன்று, இந்த வருடம் உத்திரப்பிரதேசத்தில் முஸபர் நகர் கலவர வழக்கில் தோடர்புடையவரான எம்.பி. சம்ஜுவ் பலியான் என்பவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்தது. தற்பொழுது மஹாராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கிய, இந்துராஷ்ட்ரா சேனா அமைப்பினர்களுக்கு நாளை மராட்டியத்தில் பாராட்டு விழா நடத்தினாலும் ஆச்சிரியப்படுதற்கில்லை.

கடந்த காலங்களில் குஜராத்தில் மோடியை மூன்று தடவை முதலமைச்சராக அழகு பார்த்தார்கள். தற்பொழுது குஜராத் மாடலில் மக்கள் ஓட்டளித்திருப்பார்களோ என்று சந்தேகம் உள்ளது. இந்த தேர்தலின் முக்கிய பிரச்சாரமாக மக்களை ஏமாற்றுவதையே அவர்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தினார்கள். அதனுடைய வெளிப்பாடு தாராளமயமாக்கல் மற்றும் காலனித்துவ சக்திகளை நோக்கி சாமான்ய மக்கள் கேள்வி கேட்கும் ஒரு சூழ்நிலை முடக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் இருந்து இந்துத்துவ அமைப்புகள் செய்த பல்வேறு கலவரங்கள் மறைக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த 1984 சீக்கியர் படுகொலையே பத்திரிகைகளாலும், ஊடகங்களாலும் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸை ஊழல் கட்சியாக பார்க்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சி அதற்கு எதிரான தீர்வாக வெளிப்படுத்தப்பட்டது. தற்பொழுது ஜனநாயகத்தின் விழுமியங்கள் தகர்க்கப்பட்டு, அதற்கெதிரான சித்தாந்தங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்பது மக்களால் தங்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அரசு அமைக்கப்படுகிறது. தற்பொழுது ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள புதிய பிரதமர், அவருடைய அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் தேர்தலில் தேர்வாகாதவர்களையெல்லாம் அமர்த்தியுள்ளார். நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர்கள் முக்கியமான துறைகளில் அமர்த்தப்பட்டுள்னர். இதுதான் இன்றைய ஜனநாயக அமைப்பு முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா ஆட்சியின் தொடக்கமே முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாடுகளில் இருந்து தான் தொடங்கப்படுகிறது. ஆட்சியாளர்களை நாம் தான் தேர்ந்தெடுத்து ஆட்சிக்கட்டிலில் வைக்கின்றோம். அவர்கள் தவறு செய்யும் போது நாம் அதற்கெதிரான ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எத்தனை முஹ்சீன்கள் இறக்கப்போகிறார்களோ என்று தெரியவில்லை. நாம் போராடவில்லையென்றால் அதற்கான விடையையும் விரைவில் நாம் காண்போம்.

- நெல்லை சலீம்

Pin It