என் கல்லூரிக் காலங்களில் இது நடந்தது. இன்று நடந்தது போல அது இன்றைக்கும் எனக்குள் துக்கமாய்க் கனக்கிறது. அந்தத் தம்பியின் பெயர் தங்கராசு. பொதுவாகப் பெயருக்கும் அதற்குரிய மனிதர்க்கும் பொருத்தம் இருப்பதில்லை. குபேரன் என்பது பெயராக இருக்கும்; பார்த்தால் அந்த மனிதர் உண்ணவும் உடுத்தவும் ஏதுமின்றி உழல்பவராக வாழ்வார். கருணாமூர்த்தி என்றிருக்கும்; ஆனால் நடைமுறையில் புதுமைப்பித்தன் சொல்வது போலக் ‘கருணை’ என்பது கிழங்கு வகையில் ஒன்றாகத்தான் அவருக்குத் தெரியும். ஆனால் தங்கராசு பெயருக்கேற்பத் தங்கம்தான்.

love failure 300நான் அப்பொழுது மதுரையில் தமிழ் இலக்கியம் படிக்கிறேன் என்ற பெயரில் நண்பர்களோடு விடிய விடிய வாதம் செய்தும் வாசித்தும் கட்சி கட்டியும் சண்டை போட்டும் இந்த வாழ்க்கையைக் கற்றுக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் ஊரில் இருந்து வரும் கடிதங்களை நெஞ்சில் ஆர்வம் அலையடிக்கத் திறந்து வாசித்தேன். ‘தங்கராசு செத்துவிட்டான் அண்ணாச்சி’ என்பதுதான் செய்தி; ஒரு நிமிடம் ஆடிப் போனேன். ஒரு இருபது வயது பையன் சாவதற்கு என்ன காரணமாக இருக்கும்? தற்கொலை செய்து கொண்டான் என்ற தகவலும் மடலில் இருந்தது. என் உடல் நடுங்கியது; கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது; வார்த்தைகள் சிதறின. எப்பொழுதும் சத்தமாய்ச் சிரித்தே பார்த்த அறை நண்பர்கள் சுத்தமாய்ச் சுருங்கிப் போன என் முகங்கண்டு பதறிப் போனார்கள். ஊருக்குப் புறப்பட்டேன். தனியே அனுப்ப அவர்களுக்குச் சம்மதம் இல்லை. கூடவே ஒரு நண்பரும் கிளம்பிவிட்டார். பயணச் செலவிற்கும் சேகரித்து விட்டார்கள். வாலிபப் பருவத்தில்தான் இப்படியெல்லாம் நடக்கும். இன்றைக்கு என்றால் இரண்டு மணி நேரம்; அன்றைக்கு ஆறு மணி நேரம். தூரங்களை எவ்வளவு வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறோம்!

தங்கராசு அப்பாவிற்கு மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் என்று ஏழு பிள்ளைகள். மூத்த அண்ணாச்சி பாலிடெக்னிக் வரை படித்தவர். ஆனால் அன்றைய திராவிட இயக்கம் புயலாய்க் கிளம்பி விதைத்த தமிழ்ப்பற்று எனும் விதையைத் தனக்குள் ஆலமரமாக வளரவிட்டவர். அவரது பேச்சும் எழுத்தும் பழக்கமும்தான் என்னையும் தமிழிலக்கியம் படிக்கத் தள்ளின. அந்த அளவிற்கு அவரது ஆலமரம் பரந்து விரிந்தது. வேலை கிடைக்காமல்தான் ஊரில் இருந்தார். அவர் தம்பி தங்கராசு பழக்கமும் அவர் மூலமாகத்தான் ஏற்பட்டது. விடுமுறைக்குப் போகும் போது தென்மொழி, கண்ணதாசன், ஞானரதம், தாமரை என்று நிறைய சிறு பத்திரிக்கைகளையும் எங்கள் கல்லூரி நூலகத்தில் இருந்து கார்க்கியின் “தாய்”, “நான் பயின்ற பல்கலைக்கழகம்” முதலிய அரிய பல நூல்களையும் அள்ளிச் செல்வேன். அவைகளை வாசிப்பதற்காகவே வீட்டிற்கு வந்து விடுவான். அவனும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துவிட்டு வேலையை எதிர்பார்த்து இருந்தான். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்குள் ஊற்றெடுக்கும் சோக அணுக்கள் நிகழ்த்தும் வேதியியல் வினைகளின் தன்மையே வித்தியாசமானது. அத்தகைய பருவகால மனத்தின் உருவமற்ற துக்கத்திற்கு நானும் எனது புத்தகங்களும் அவனுக்கு மருந்தாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவனுக்குள் வேறொரு ‘துக்கமும்’ அடைகாத்துக் கிடந்திருக்கிறது என்பதை மாலை ஆறு மணி அளவில் ஊரை அடைந்து அண்ணாச்சியைப் பார்க்கும் போதுதான் தெரிய வந்தது. இவ்வளவு பழகியவன், உலக இலக்கிய மனிதர்கள் குறித்தும் ஊர் மனிதர்களின் பல்வேறு விசித்திரமான வாழ்க்கை குறித்தும் பொழுது போவது தெரியாமல் ஆற்று மணலில் படுத்தும், குளத்தங்கரையில் நடந்தும், புத்தூர் மலையில் ஏறியும் விடிய விடியப் பேசிப் பழகியவன், அவன் அடைகாக்கும் துக்கத்தைக் குறித்து ‘அரசல் புரசலாகக்’ கூடச் சொல்லவில்லையே என்பது எனக்குள் ஓர் அதிசயமாக நீண்டது. ‘போய்விட்டானே’ என்ற துக்கம், ‘சொல்லாமல் பழகியிருந்திருக்கானே’ என்ற துயரமாக எனக்குள் வடிவம் மாறிவிட்டது. மனித மனம்தான் என்னென்ன லீலைகளை எல்லாம் புரிகிறது!

எங்கள் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பனைமரங்கள் ஏராளம். இங்கேயே பதனீர் இறக்கிப் பண்ணையில் காய்ச்சி, கருப்பட்டியை உற்பத்திப் பண்ணிப் ‘பிழைக்கிறோம்’ என்ற பேரில் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதியினர்; மற்றொரு பகுதியினர் பனைமரத்தில் பங்குனி மாதக் கடைசியில் பாளைவரத் தொடங்கும்; அப்போதே தான் பனையேறினாலும் அது போதாதென்று, பனையேறுவதற்கு மாத வாடகை பேசி ஆட்களைத் திரட்டிக் கொண்டு குடும்பத்தோடு தஞ்சாவூர் மாவட்டத்திற்குப் புலம்பெயர்ந்து விடுவார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தாலும் அவர்கள் படிப்பு அவ்வளவுதான்; சில பேர், கல்வி அருமை தெரிந்தவர்கள் பிள்ளை படிப்புப் பாழாகிவிடக் கூடாதே என்று சொந்தக்காரர்களிடமோ, வயதான தாத்தா பாட்டிகளிடமோ விட்டுச் செல்வர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி - நான்கு மாதங்கள்தானே! தஞ்சாவூர் சீமைக்குச் சென்று அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு மாமூல் கட்டிவிட்டு, பனைமரத்திலிருந்து ‘கள்ளிறக்கி’ விற்பார்கள். அந்தக் காலம் “முழு மதுவிலக்கு” இருந்த காலம். எனவே கள்ளிறக்கிற பனையேறிகளுக்கு நல்ல பணம் கிடைக்கும். நான்கு மாதத்தில் சம்பாதித்து வந்து சொந்த ஊரில் சில பேர் வீடு, நிலபுலம் என்று வாங்கி பெரும் வசதியாகி விடுவார்கள். ஆனால் பலபேர், ‘தாம்தூம்’ என்று சம்பாதித்து வந்த பணத்தைச் செலவழித்து, மீதமுள்ள எட்டு மாதமும் இருந்தே தின்று எல்லாவற்றையும் ஒட்ட அழித்து விடுவார்கள். “குந்தித் தின்றால் குன்றும் கரைந்துவிடும் தானே!” மீண்டும் பங்குனி மாதம் ‘கடனக்கிடன’ வாங்கி வெறுங்கையோடுதான் தஞ்சைச் சீமைக்குப் புறப்படுவார்கள். இப்பொழுதும் இது தொடரத்தான் செய்கிறது. ஆனால் முன்பு போல் வருமானம் அவ்வளவாக இல்லை; ‘கள்ளிறக்கக் கூடாது’ என்றுதானே மதுவிலக்குச் சட்டம் இருக்கிறது; முழு மதுவிலக்கு இல்லைதானே! எனவே புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் குறைந்து போனார்கள்; தஞ்சாவூர்ச்சீமை போலீஸ்காரர்களுக்கும் வருமானம் குறைந்து போய்விட்டது.

தங்கராசுவின் அப்பா அவ்வாறு தஞ்சாவூர்ச் சீமைக்குப் புறப்பட்டு வந்து ‘வியாபாரம்’ பண்ணுகிறவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் “வியாபாரம்” பண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் இது நடந்துள்ளது. சித்திரை, வைகாசி - கோடைகால விடுமுறைதானே! எனவே விடுமுறைக் காலங்களில் வந்த தங்கராசு ஊருக்குப் புறத்தே அப்பா தற்காலிகமாகப் போட்டிருக்கும் ‘பண்ணை’யிலேயே தங்கியிருக்கிறான். அப்பொழுதுதான் எப்படியோ அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறான். தங்கராசு எப்பொழுதும் எதிலும் தீவிரமான மனப்போக்கு உடையவன். ஒரு புத்தகத்தை எடுத்தால் விடிய விடிய வாசிப்பான். அதுபோல் தூக்கம் போட்டான் என்றால், மூன்று நேர சாப்பாடும் கட். இப்படி எதிலும் தன்னை இழந்து போகிற தீவிரம் அவனுக்குள் இருந்தது. முகத்தில் ஒருவிதமான பிரகாசம் தொனிக்கப் பேசுவான். இரண்டு கண்களுக்கும் மேலே இமையும் சரி, புருவமும் சரி ரோமம் ரொம்ப அடர்த்தியாக இருக்கும். இன்னொரு பெரிய வித்தியாசம் புருவங்களுக்கு இடையில் இடைவெளி இருக்காது; ஒரு நேர்கோடு போல அடர்த்தியாக இருக்கும். அது ஒரு தனிக்கவர்ச்சியாக யாருக்குள்ளும் இறங்கும். அந்தப் பெண்ணும் இப்படித்தான் முதலில் அவனது இனிய முகத்திற்கு இணங்கி வந்திருக்கிறாள். ஆனால் பனையேறியின் மகன், வேலை இல்லாதவன் என்று அறிய நேர்ந்த போது ஒதுங்கிக் கொண்டாள். கும்பகோணத்து உயர்சாதிப் பெண் வேறு; ஆனால் இவனால் ஒதுங்கிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே தீவிரமாக எதிலும் ஈடுபடக் கூடிய இயல்புடையவன். இந்தப் பருவ கால இழுப்பிற்குச் சொல்லவா வேண்டும்! இரண்டு ஆண்டுகளாக இது தொடர்ந்துள்ளது. இவனது தீவிரம் அப்பாவின் ‘வியாபாரத்திற்குத்’ தொல்லை என்கிற அளவிற்குப் போய்விட்டது. மாமூல் வாங்கும் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு “பையனைக் கண்டித்து வையுங்கள்” என எச்சரிக்கத் தொடங்கினார்.

அப்பா பார்த்தார்! “ஊரில் ஆச்சிக்கு (அம்மாவைப் பெற்றவள்) உடம்பு சரியில்லையாம்; டாக்டரிடம் கூட்டிட்டுப் போகணுமாம். உடனே புறப்படு” என்று இவனது ஆச்சி பாசத்தைப் பயன்படுத்தி மூட்டை கட்டி அனுப்பிவிட்டார். உண்மையிலேயே ஆச்சிக்கும் உடம்பு சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. டாக்டர், மருந்து, மாத்திரை என்று ஆச்சிக்குப் பணிவிடை செய்வதிலும் ஒரு தீவிரப்பட்ட நிலை. இதற்குள் மூன்று மாதம் ஓடி விட்டது. அப்பாவும் அந்த ஆண்டு வியாபாரத்தை முடித்துக் கொண்டு குடும்பத்தோடு ஊருக்குத் திரும்பிவிட்டார். இப்பொழுது அவளை எப்படிப் பார்ப்பது? தூரம், கையில் காசு இல்லாமை, அதனால் இயலாமை, வீட்டில் எதிர்ப்பு முதலிய எல்லாத் தடைகளும் இவனது ஒரு தலைக்காதலை மேலும் மேலும் அதிகமாக்கவே பயன்பட்டுள்ளன. ஊரில் இவனோடு படித்த பணக்கார நண்பன் ஒருவன் உண்டு. அவனிடம் பணம் வாங்கிக் கொண்டு கும்பகோணத்திற்குப் புறப்பட்டு விட்டான். இதற்கிடையில் ஆறு மாதம் ஓடிவிட்டது. இவன் அந்தக் கிராமத்திற்குச் சென்ற அன்றைக்குத்தான் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் முடிந்திருக்கிறது. ‘கதை முடிந்துவிட்டது’ என்று அவன் வாய் முணுமுணுத்ததாக அங்குள்ள அவன் தோழர்கள் சொன்னதாக அண்ணாச்சி சொன்னார்.

பொதுவாக ஆண்-பெண் காதல் உறவின் தன்மைகளை ஏழு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துக் காண்கிறார். கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பன அவை. இவைகளுக்கு உரைகண்ட இடைக்கால உரையாசிரியர்கள் அறநெறிக்குப் பெரிதும் இடம் கொடுப்பவர்கள் என்பதால் கைக்கிளையை ஒருதலைக்காதல் என்றும் பெருந்திணையைப் பொருந்தாக் காமம் என்றும் மிகவும் விரும்பத்தகாத ஓர் உறவுமுறையாகப் புனைந்து தமிழ் மனத்தில் நிரப்பி விட்டனர். இடைப்பட்டவற்றை மட்டும் அன்பின் ஐந்திணை எனப் போற்றி உள்ளனர். இதுபோலவே அகப்பாடல்களைத் தொகுத்த காலமும் சமணர்களின் அற ஒழுக்கக் கோட்பாடுகள் கோலோச்சிய காலமாதலின் கைக்கிளை, பெருந்திணை சார்ந்த பாடல்கள் பலவற்றைத் தொகுக்காமல், தொல்காப்பியரின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சில பாடல்களை மட்டும் தொகுப்பில் சேர்த்துள்ளனர். ஆனால் பக்தி இலக்கிய காலக்கட்டத்தில் ‘நாயகன்-நாயகி பாவம்’ என்ற பேரில் ஆண்டவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்துக் கொண்டு புலவர்கள் இந்த ஒருதலைக்காதலுக்குத் தெய்வாம்சம் கொடுத்து ‘ஓகோ’ என்று கொண்டாடியுள்ளார்கள். ஆண்டாளின் பாடல்கள் இதில் உச்சத்தைத் தொட்டவை. என்ன அற்புதம்! எப்படி அதை உள்ளே விட்டார்கள் இந்த மரபுவாதிகள் என்று எனக்கு அடிக்கடித் தோன்றும்.

உண்மையில் ஒருதலைக்காதல்தான், ‘காதல்’ என்ற அந்த முழுமைப் பொருளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது; எதிர்பார்ப்பற்ற ‘தியாகம்’ மட்டுமே கொண்ட ஒன்று ஒருதலைக்காதல்தான். காதலிக்கும் தன் காதலியிடம் இருந்து, எந்தப் பதிலும் பெறாமல், தானே சொல்லிச் சொல்லி இன்புறும் தூய வடிவக் காதல் ஒருதலைக்காதல்தான்; எப்பொழுது இந்த ஒருதலைக்காதல், இருதலைக்காதலாக மாறுகிறதோ, அப்பொழுது அது, காமத்தை நோக்கி நகர்கிறது. “உடலைக்” குறிவைத்து இயங்கத் தொடங்கி விடுகிறது. காமமே-உடலே-அடையும் இலக்காகிப் போன சூழலில் ‘காதல்’ காணாமல் போய்விடுகிறது. காதல் வெற்றி அடைவது ஒருதலைக்காதலில்தான். அதைப் போய் காதல் தோல்வி என்கின்றனர். காதல் தோல்வி அடைவது அது திருமணத்தில் முடியும் போதுதான். பல காதல் திருமணங்களின் தோல்வி வரலாறே இதற்குச் சான்று. நான் மேலும் இதை விளக்கத் தேவையில்லை; இப்படி ஒருதலைக்காதல் தாழ்வானது அல்ல; இழிவானது அல்ல; தோல்வி அல்ல. அதை மேற்கொள்கிறவன் தன்னைத் தாழ்வு மனப்பான்மையால் கொன்று கொல்லத் தேவையில்லை. உண்மையில் அதுதான் உன்னதமானது என்கிற கருத்து இளம் பருவத்தினரிடையே பரவி இருந்தால் என் தங்கராசை நான் இழந்திருக்கத் தேவையில்லை அல்லவா? இந்த ஒழுக்கவாதிகளின் பேய் வயிறு கேட்கும் இரத்தப்பலிகள்தான் வரலாற்றில் எத்தனை எத்தனை?

ஒருதலைக்காதல் குறித்த இந்தப் பார்வைதான் பின்னால் நான் சென்னையில் எம்.ஏ படிக்கும் போது மேலும் உறுதியானது. கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்ற நூல் காதல் கொண்ட ஓர் ஆன்மாவின் புலம்பலாக வெளிவந்து சக்கை போடு போட்டது; இந்த ஒருதலைக்காதலுக்கு, ஆண்டாள் போலக் கடவுள் அம்சத்தைக் கற்பிக்காமல் பகுத்தறிவுவாதியான மீரா, பேரழகை அள்ளி அணைக்கத் துடிக்கும் ஓர் ஆன்மாவின் அலைச்சலாக விளக்கம் அளிக்கிறார்:-

உலகபந்தம் என்னும்
ஒரு சக்தியின் பிடியிலிருந்து
மீற முடியாமல்-அதே நேரத்தில்
மீற வேண்டும் என்னும்
வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல்
தவிக்கும் ஓர் ஆன்மா
ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை
அள்ளி அணைக்கும்
ஆர்வ வெறியில் அலைகிறது

தமிழில் மு.வ.வின் திருக்குறள் உரைதான் அதிகப்படிகள் விற்ற நூல் என்பர்; அதற்கடுத்துப் பல பதிப்புகள் கண்டது மீராவின் ஒருதலைக்காதல் கவிதைதான். ‘ஒருதலை ராகம்’ என்ற ஒரு படம்தானே ஒரு சாதாரண கல்லூரி மாணவனை மிகப்பெரிய திரைப்படக் கலைஞனாகத் தமிழகத்தின் மன உலகத்திற்குள் கொண்டு நிறுத்தியது. கண்களில் கண்ணீர் கட்டாமல் இவைகளை வாசிக்க முடியுமா? அதுவும் காதல் கனவுகள் ததும்பும் அந்தப் பருவ காலத்தில் இந்தக் கவிதைகள், மன உலகத்தில் எழுப்பிய விதவிதமான அலைகளைக் கணக்கிட முடியுமா என்ன?

மீராவின் கவிதைப் பாதிப்பில் ஒருதலைக்காதலை மொழிப்படுத்தும் கவிதைகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் புறப்பட்டு வந்த வண்ணம் இருந்தன. என்னுடைய ‘ஒட்டுப்புல்’ கூட அப்படி வந்ததுதான்;

ஆணாகப் பிறந்த நானும்
கருக்கலைக்கும் வேதனை
அனுபவிப்பதை உன்னால்
உணரமுடிகிறதா?

என்று எழுதினேன். 80-களுக்குப் பிறகு அத்தகைய போக்கு நின்றுவிட்டது என்றே சொல்லலாம்; பழமலய்-யின் கவிதைப்பாணி என்றொரு புதிய போக்குத் தோன்றித் தூள் கிளப்பி விட்டது; இப்பொழுது மீண்டும் ஒருதலைக்காதல் பாணிக் கவிதைகள் வரத் தொடங்குகின்றன போல் தெரிகிறது. எழுத்தாளர், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பு ஒன்று இப்படி வந்துள்ளது; ‘க்ரியா’ வெளியிட்டுள்ளது என்பது இன்னும் கூடுதலான சிறப்பு; வியப்பு! நூலின் பெயர் ‘மழை மரம்’. அதிலிருந்து ஒரு கவிதை.

பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது போல்
கடினமானது எதுவுமில்லை
அதிலும் பிரியமானவர்களுக்குச்
தருவதென்றால் சொல்லவே வேண்டாம்
எப்போதும் வைத்திருக்கக் கூடியதாய்
விலை மதிப்பில்லாததாய்
இருக்க வேண்டும்
அன்பைச் சொல்வதாக
வேறெவரும் தர முடியாததாக
இருக்க வேண்டும்
எங்கு போய்த் தேடுவது
அந்தப் பரிசுப் பொருளை

துணிக்கடைகளில் இல்லை
நகைக்கடைகளில் இல்லை
வாசனைத் திரவியங்கள்
விளையாட்டுப் பொம்மைகள்
பழங்காலச் சிற்பங்கள்
விற்கும் கடைகளிலும்
விரும்பியது போல் கிடைக்கவில்லை

எனவேதான்
உயிரில் நனைத்தெடுத்த
வார்த்தைகளைத் தருகிறேன்

கண்ணனின் கீதையைப் போல்
புத்தனின் போதனை போல்
வேதாகமத்தின் வாசகம் போல்
காலம் கடந்து
வாழாது இக் கவிதை

எனினும்
நான் இறந்தபின் வரும்
உன் பிறந்த நாளில்
இதை நீ நினைப்பாய்
அது போதும் என் அன்பே!

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It