இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற சமூக ஜனநாயக கொள்கையை முற்படுத்துகிறது என்றாலும், இந்திய தேர்தல் விதிமுறை பல விசித்திரமான சூத்திரங்களை உள்ளடக்கியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, தேர்தல் முறையில், அரசை புதுப்பித்துக் கொள்ளவும், ஆளும் கட்சிகளை மாற்றிக் கொள்ளவும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அதிகாரம் (mandatory) வழங்கியிருக்கிறது.

muslims

ஓர் அரசின் நிதிக்கொள்கை, பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதரங்களின் பாதுகாப்பு, பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது, அமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் சட்டப்படியும் நீதிப்படியும் பாதுகாக்கப்படுவது, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது ஆகிய அம்சங்களை ஒரு கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைக் கொண்டே ஆட்சி மாற்றங்கள் நிகழவேண்டும்.

The Economic Times பத்திரிக்கையின் ஒரு பத்தியை கூட இந்தியாவின் சராசரி வாக்காளரால் புரிந்து கொள்ள முடியாது. எல்லை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கை சொல்லும் ‘தர்மமே’ உண்மையானது என்றிருக்க, குப்பனுக்கும் - சுப்பனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை சரியான புரிதலுடன் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது காந்தி சுடப்பட்டதெல்லாம் கூட பழைய கதையானது.

சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் ஒரு தொகுதியை பொருத்தமட்டில் நகர்ப்புற வாக்குகள் 40 சதவிதமாகவும், கிராமப்புற வாக்குகள் 60 சதவிதமாகவும் இருக்கிறது. இதனால் நகர்புறத்தார் தேர்தல் மூலம் விரும்பும் மாற்றத்தை கிராமப் புறத்தாரின் நோக்கமின்மை அல்லது தேவைகள் தோற்கடிக்கின்றன. சில நேரங்களில் தேர்தல் கொள்கைக்கும் ஆசைக்கும் இடையேயான மோதலாக நடந்துவிடுகிறது. எனவே ஆட்சி மாற்றத்தை எந்த மக்கள் விரும்பினார்கள் என்பது பெரியதொரு கேள்வி. நகர்ப்புறமும் கிராமப்புறமும் வெவ்வேறான நோக்கமும் தேவையும் உடையதாக இருப்பதால் வெவ்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பிரச்சினை நகராட்சி முதல் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை விரிகிறது. இங்கே நகர்ப்புறத்தார் சிறுபான்மை வாக்காளர்களாகவும் புறநகர் கிராமப் புறத்தார் பெரும்பான்மை வாக்காளர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மதரீதியான பிளவுண்டு கிடக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை வாக்காளர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் அனைத்து சிறுபான்மையினரும் சேர்ந்து கால்பங்காக இருக்கின்றனர். எனினும் அவர்களது வாக்குகள் எந்த மதிப்பும் இல்லாமல் போகிறது. வாக்கை எந்திரத்தில் போடுவதும் குப்பைக் கூடையில் போட்டு வருவதும் ஒரேமாதிரியான விளைவையே தருகிறது.

இந்தியா விடுதலையடைந்து 67 வருடங்களில், இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட (1952) ல் இருந்து 62 வருடங்களில் இந்தியாவின் முதன்மையான சிறுபான்மை சமூகமாக இருக்கும் முஸ்லிம்கள் இடம் பெறாத ஓர் அரசு 2014 ல் அமைகிறது. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தில் அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சராகவும், அலிஅகமது கித்வாய் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். எனினும், பாதுகாப்பு, வெளியுறவு, நிதி, உள்துறை போன்ற பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படவில்லை. முதன்முறையாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அரசில்தான் சல்மான்குர்ஷித்துக்கு வெளியுறவுத் துறையின் கேபினெட் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நரசிம்மராவ் அமைச்சரவையில் ஜாபர்சேட் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் முப்தி செய்யது முகம்மது உள் துறை அமைச்சராகவும் (ஒன்றறை ஆண்டுகள்) பொறுப்பு வகித்தனர்.

இம்முறை, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக வழியில்லை. பாரதீய ஜனதாவில் இருந்து ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. பா.ஜ.க. சார்பில் நான்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மோடி அலையில் தே.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற போது அந்த நான்கு பேர் மட்டும் தோற்றுள்ளதில் இருந்து வகுப்புவாதம் எந்த ஆழத்துக்கு வேர்பிடித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் 39 இடங்களில் தே.ஜ.க போட்டியிட்டது. விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் கட்சிகளில் கூட ஒரு முஸ்லிம் நிறுத்தப்பட வில்லை. உத்திரப்பிரதேசத்தில் 80 இடங்கள் உள்ளன. 2009ல் முஸ்லிம்கள் 7 பேர் உ.பி.யில் இருந்து பாராளுமன்றம் சென்றார்கள். இம்முறை ஒருவர் கூட செல்ல வழியில்லை. மாயாவதி 19 முஸ்லிம்களுக்கும், முலாயம்சிங் 13 முஸ்லிம்களுக்கும், ஆம் ஆத்மி 12 முஸ்லிம்களுக்கும் காங்கிரஸ் 11 முஸ்லிம்களுக்கும் இடம் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தை பாரதீய ஜனதா நன்கு பயன்படுத்திக் கொண்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.க சார்பில் ஒரு இந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டார். 11 இடங்களில் 5 முனைப் போட்டியும் 10 இடங்களில் 4 முனைப் போட்டியும் ஏற்பட்டது. முஸ்லிம்வாக்குகள் நான்காக, மூன்றாக பிரிந்து போக, பா.ஜ.க வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றார். எந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரைத் தோற்கடிக்க எந்த கட்சிக்கு பலம் உள்ளதோ அந்த கட்சி வேட்பாளரை முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள். அதனால் தான் 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களில் பாரசீக ஜனதா 10 இடங்களை மட்டும் பெறமுடிந்தது. இப்போதும் அதே வழிமுறை கையாளப்படும் என்று உத்தரப்பிரதேச முஸ்லிம் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் முஸ்லிம் இளைஞர்களும் புதிய தலைமுறை வாக்காளர்களும் புதிதாக வந்த ஆம் ஆத்மி ஆட்சிக்கு வாக்களித்தார்கள். மற்றவர்கள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க பா.ஜ.க யின் வெற்றி சுலபமானது.

முஸப்பர் நகர் கலவரம் உத்திரப்பிரதேச தேர்தலில் பெரிய பங்காற்றியது. எதிர்பார்த்தப்படி, முஸ்லிம் வாக்குகள் சிதறிப்போக இதுவே பெரிய காரணம். முஸப்பர் நகர் சம்பவத்துக்கு முஸ்லிம்களை பழிவாங்க பா.ஜ.க வுக்கு வாக்களியுங்கள் என்று அமித்ஷா வெளிப்படையாகவே பேசினார். தலித்துகள் சாதி பார்க்காமல் இந்து உணர்வுடன் இம்முறை வாக்களிக்க வேண்டும் என்றார். எனவே உ.பி.யில் தலித், யாதவர், குர்மி, ஜாட், பார்ப்பனர் அனைவரும் பா.ஜ.க பக்கம் சாய்ந்து விட்டனர். மாயாவதி பார்ப்பனர்களுக்கு 21 தொகுதிகள் கொடுத்தார்கள். அவர் சார்ந்த தலித் சமூகத்திற்கு 17 இடங்கள் தான் கொடுத்தார். பார்ப்பனர்களும், முஸ்லிம்களும் என்னை ஏமாற்றி விட்டனர்; முஸ்லிம் வாக்குகள் பிரிந்து சென்றதனால்தான் பகுஜன் சமாஜ் அனைத்து இடங்களிலும் தோற்க காரணம் என்று மாயாவதி கூறுகிறார். இதற்காக முஸ்லிம்கள் வருத்தப்படுவார்கள் என்கிறார். முலாயம்சிங் மற்றும் மாயாவதி இருவரும் முன்னர் பா.ஜ.க வை ஆதரித்து ஆட்சியிலும் பங்கெடுத்தவர்கள். பா.ஜ.க பெரும்பான்மை பெறாவிட்டல் இருவரும் பா.ஜ.க வுக்கு ஆதரவளிக்க வாய்ப்புண்டு. அதனால் முஸ்லிம்கள் நேரடியாக ஆம் ஆத்மிக்கு வாக்களித்து விட்டார்கள் என்பதே உண்மை.

கடந்த முறை மாயாவதி 20 இடங்களிலும் காங்கிரஸ் 21 சமாஜ் வாடி 23 இடங்களிலும் அஜித்சிங் 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த 69 இடங்களில் 63 இடங்கள் பா.ஜ.க பக்கம் சென்றுவிட்டது. பா.ஜ.க 10 இடத்தில் இருந்து 71 இடங்கள் பிடிக்க இந்த சிக்கல் தான் காரணம். 71 இடங்களைப் பிடித்தாலும் உ.பியில் பா.ஜ.க எடுத்தது 42 சதவீத வாக்குகள்தான். 58 சதவீத வாக்குகள் பா.ஜ.க.வுக்கு எதிராக விழுந்துள்ள போதும் அது பிரிந்து விட்டது. உ.பி. யின் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி 2ம் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி 3 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட இக்கட்சிகள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற தவறியதும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து ஒரு மாற்று அரசியலைத் தேடியதும் உ.பி.யில் பெரும் தோல்வி கிட்ட நேர்ந்தது.

பா.ஜ.க மொத்தமாக எடுத்த 283 இடங்களில் இருந்து உ.பி யில் கூடுதலாக பெற்ற 61 இடங்களைக் கழித்தால் 222 இடங்கள் தான் பெற முடியும். பெரும்பான்மைக்கு வெளியில் இருந்து எதிர்பார்க்க நேர்ந்திருக்கும். ஜெயலலிதா, மாயாவதி, நவின் பட்நாயக், நிதிஷ்குமார் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்தார்கள். உத்திரப்பிரதேசம் தான் இந்த சந்தர்ப்பத்தை பொய்யாக்கியது.

பீகார், மகாராஷ்டிராவைப் பொருத்த மட்டில் ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தது. அங்கெல்லாம் முஸ்லிம்கள் எப்படி அச்சமின்றி வாக்களிக்க வெளியே வந்திருப்பார்கள் என்பதும் சந்தேகத்திற்குரியதே. ஆரம்ப காலத்தில் உ.பி., ம.பி, பீகார் உள்ளிட்ட வடக்கு மேற்கு மாநிலங்களில் முஸ்லிம்களும், தலித்துகளும் தேர்தல் காலங்களில் வாக்களிக்க முடியாது. அப்போதிருந்த காங்கிரஸ்காரர்கள் தான் இந்த அயோக்கியத்தனத்தை செய்தனர். முலாயம் சிங், கன்ஷிராம், லல்லுபிரசாத் போன்றவர்கள் தலையெடுத்து சமூக நீதிக்கான போராட்டங்கள் வலுப்பெற்ற பிறகுதான் தலித்துகளும், முஸ்லிம்களும் வாக்களிக்க முடிந்தது. இதனால் தான் காங்கிரஸ் முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்தது.

ராஜஸ்தானில் 11.7 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர் 1952 முதல் ஒரேயொரு முஸ்லிம்தான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு போயிருக்கிறார். இம்முறை ராஜஸ்தானின் 26 தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றிக் கொண்டது. குஜராத்தில் 25 தொகுதிகள் உள்ளன. 1984 –ல் இறுதியாக அகமது பட்டேல் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு போயிருக்கிறார். அதன் பிறகு கடந்த 30 வருடங்களிள் குஜராத்தில் இருந்து ஒரு முஸ்லிம் கூட பாராளுமன்றம் சென்றதில்லை. 2009 தேர்தலில் 26 க்கு 15 இடங்களில் தான் பா.ஜ.க வென்றிருந்தது. 11 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்தது. இம்முறை 26 இடங்களையும் பாரதிய ஜனதா கைப்பற்றிக்கொண்டது . மகராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இங்கு 42 இடங்களை பா.ஜ.க சிவசேனா கூட்டணி கைப்பற்றிக் கொண்டது. மகாராஷ்ராவில் 2009 – ல் வெறும் 9 இடங்களில் தான் பாரதீயஜனதா தனித்து இடம் பிடித்தது. 5 வருடங்களில் 21 இடங்கள் கூடுதலாகி 30 இடங்களைப் பிடித்துள்ளது. 2009 – ல் ராஜஸ்தானில் வெறும் 4 இடங்களைத் தான் பா.ஜ.க வைத்திருந்தது. 5 வருடங்களில் 21 இடங்களை கூடுதலாகப் பிடித்து மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது.

மத்திய பிரதேசத்தில் 2009 – ல் 16 இடங்களை மட்டும் வைத்திருந்தது. 5 வருடங்களில் 13 இடங்களை கூடுதலாகப் பெற்று மொத்தமுள்ள 25 இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றிக் கொண்டது. 2009 – ல் தில்லியில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை. இம்முறை 7 இடங்களையும் எடுத்துக் கொண்டது. தில்லியில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். ஆம் ஆத்மி 7 தொகுதிகளிலும் 5 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது.

தில்லி, உ.பி, ம.பி, பீகார், அஸ்ஸாம், மகராஷ்ட்டிரா மாநிலங்களில் தான் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களது வாக்குகள் செல்லாத வாக்குகளாகிவிட்டன. நாங்கள் வெற்றிபெற முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்லிவருவது சரி என நிருபிக்கப்பட்டுள்ளது.

தில்லி(7), உ.பி(80), ம.பி(29), பீகார்(40), மகாராஷ்டிரம்(48) அஸ்ஸாம்(14), ராஜஸ்தான்(25) – என வடக்கு மாநிலங்களில் இருந்து 246 தொகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றிக் கொண்டது.

உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 18 சதவீதம் இருக்கிறார்கள். அகிலேஷ்யாதவ் அரசில் 65 முஸ்லிம்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அங்கு 5 சட்டமன்றங்கள் சேர்ந்து ஒரு நாடாளுமன்றம். அப்படி பார்த்தாலும் 65 பேருக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால், இம்முறை ஒருவர் கூட நாடாளுமன்றம் போகவில்லை.

வழக்கம் போல தென் மாநிலங்கள் பா.ஜ.க – க்கு கைகொடுக்கவில்லை. கர்நாடகத்தில் மட்டும் 28க்கு 17 இடங்களை பிடித்துள்ளது. 2009 – ல் 19 இடங்களை பிடித்திருந்தது. 2 இடங்களை மட்டும் இழந்திருக்கிறது. தவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா வில் சோபிக்கவில்லை. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி – யில் மட்டும் பா.ஜ.க வென்றிருக்கிறது. காங்கரஸ் சார்பில் எச். வசந்தகுமார் வாக்குகளைப் பிரித்ததால் அ.தி.முக. வேட்பாளர் தோற்றுவிட, பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறமுடிந்தது. பொன்னார் வென்றது ஒரு விபத்து. என்றாலும் 2ல் இருந்து 5 ஆக அதன் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆந்திராவில் 42க்கு 5 இடங்களை மட்டும் பிடித்திருக்கிறது. இதற்கு முன்னர் ஆந்திராவில் பா.ஜ.க வுக்கு கணக்கு இல்லை. ஒரிசாவில் 21 க்கு 3 இடங்களை பிடித்திருக்கிறது. பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து 2004 – ல் 7 இடங்களை பா.ஜ.க பெற்றிருந்தது. காந்தமால் கலவரம் காரணமாக நவீன் பட்நாயக் பா.ஜ.க கூட்டணியை விட்டு விலகியதால் 2009 – ல் ஒடிசாவில் பா.ஜ.க. வெற்றி பெறமுடியவில்லை. இம்முறை தனித்து 3 இடங்களை கைப்பற்றிக் கொண்டது.

கேரளாவில், திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இறுதியில் சசிதரூர் (காங்கிரஸ்) வெற்றி பெற கேரளாவை முற்றிலும் இழந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. 2009 – ல் ஓரிடத்தை மட்டும் பிடித்திருந்தது. தென் மாநிலங்களில் மொத்தம் 151 தொகுதிகள் உள்ளன. அதில் 26 இடங்களில் மட்டும் தான் பாரதீய ஜனதா கைப்பற்றியிருக்கிறது. ஆனாலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெற தென் மாநிலங்களின் செல்வாக்கு தேவைப்படவில்லை.

இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 218 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை முஸ்லிம்கள் தீர்மானிக்கிறார்கள். இந்த 218ல் 128 தொகுதிகள் உ.பி, பீகார், மகராஷ்டிராவில் உள்ளன. இந்த 128 தொகுதிகளில் இருந்து ஒரு முஸ்லிம் கூட வெற்றி வெறவில்லை. அதாவது, உத்திரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரம் மூன்று மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்றம் செல்லவில்லை. இதுதான் விசித்திரமான சூத்திரம்.

இது குறித்து மகாகவி அல்லாமா இக்பால் 75 வருடங்களுக்கு முன்னர் முகம்மது அலி ஜின்னாவுக்கு கடிதம் எழுதி குறிப்பிடுகிறார். முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்பதன் அவசியம் குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “இந்திய விடுதலைக்குப் பிறகு அமையும் அரசில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக தேர்வு செய்யும் உத்தி காங்கிரசுக்குத் தெரியும்” என்று எழுதுகிறார். இக்கடிதத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘தி சண்டே இண்டியன்‘ வார இதழ் வெளியிட்டது. அன்று மகாகவி சொன்னது இன்று நடந்துவிட்டது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் 128 தொகுதிகளில் இருந்து ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

16 வது மக்களவைக்கு 24 முஸ்லிம்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 8 பேர், பீகாரில் 3 பேர், கேரளாவில் 3 பேர், காஸ்மீரில் 3 பேர், அஸ்ஸாமில் 4 பேர், ஆந்திராவில் ஒருவர், தமிழ் நாட்டில் ஒருவர், லட்சத்தீவில் ஒருவர் மொத்தம் 24 பேர். இந்தியாவில் முஸ்லிம்கள் 14 சதவீதம் உள்ளனர் என்கிறது மத்திய அரசு புள்ளி விபரம். மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24 என்பது 4.4 சதவீதம் மட்டுமே. நாங்கள் வெற்றி பெற முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று பா.ஜ.க. வினர் தொடர்ந்து சொல்லி வந்ததின் கணக்கு இதுதான். இந்தத் தேர்தலில் பரிதாபத்திற்கு ஆளான முஸ்லிம்களின் நிலை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது ஒரு ஆரோக்கியமான நிலை.

இந்தியாவின் தேர்தல் ‘ First past to the post’ என்ற முறையாகும் தமிழில் இதனை முந்தி தேர்வோர்கள் என்று கூறலாம். ஒரு தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெறுவோர் வெற்றி பெற்றவராக கருதாமல் போட்டியிட்ட வேட்பாளர்களின் அதிக வாக்கு பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஒரு தொகுதியில் 70 சதவித வாக்காளர்கள் 7 வேட்பாளர்களுக்கு தலா 10 சதவித வாக்குகள் இடுவதாக கொண்டால் அத்தொகுதியில் 30 சதவித வாக்குகளை மட்டும் பெறும் ஒரு நபர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அவரை வேண்டாமென்று வாக்களித்தவர்கள் 70 சதவித வாக்காளர்கள். இதுதான் First past to the post. இந்த முறையில் தான் முஸ்லிம்கள் தாக்கம் உள்ள தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்க்கு வாக்குகள் பிரிய, பா.ஜ.க வுக்கு ஒரு முகமாக சேர்ந்த குறைந்த பட்ச வாக்குகள் அக்கட்சியின் பெரும்பான்மைக்கு உதவியுள்ளது. இம்முறையில் தான் பா.ஜ.க 2004, மற்றும் 2009 – ல் 10 இடங்களில் இருந்து 2014 –ல் 71 இடங்களை அக்கட்சி பெற்றுள்ளது. உ.பி யில் மட்டும் 42 விகித வாக்குகளைப் பெற்று பா.ஜ.க 71 இடங்களை பிடிக்க, அக்கட்சிக்கு எதிராக விழுந்த 58 சதவீத வாக்குகள் 9 வெற்றியாளர்களை மட்டும் உருவாக்க முடிந்தது. ஜனநாயகத்தில் இது மிகப் பெரிய விபத்து. இதனை ஊடகங்கள் காவிவிளாசல் (saffran Sweep) என்று குறிப்பிடுகின்றன. இத்தேர்தல் முடிவுகள் மன்மோகன்சிங் அரசுக்கோ, அவரது அரசின் நிதிக்கொள்கைகோ எதிரானது அல்ல. முஸ்லிம் விரோதமாக்கப்பட்ட வடக்கு மாநிலங்களில் மட்டும் நிகழ்ந்த தேர்தல் முடிவாகும்.

இத்தகைய ஆபத்து எப்போது வேண்டுமானாலும் உருவாக முடியும் என்ற அச்சம் அப்போதே முஸ்லிம் தலைவர்களுக்கு இருந்தது. இதை கருத்தில் கொண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், இந்தியாவில் விகிதாச்சார முறைப்படியான (Precentage voting system) தேர்தல் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று கூறினார்கள். நேரு, பட்டேல் போன்றோர் இருந்த அந்த அவையில் காயிதே மில்லத் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாத ஓர் அவையை உருவாக்குவதுதான் பட்டேல் போன்றவர்களின் கனவு. காயிதே மில்லத் அவர்களின் வாதம் அன்றைய வகுப்பு சிந்தனையாளர்களுக்கு கடும் கோபத்தை தந்திருக்கும்.

2001 ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், ஜி.எம். பனாத்வாலா அவர்கள் விகிதாச்சாரத் தேர்தல் முறை கேட்டு உரையாற்றினார். அப்போது, சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி, It is Poisonous word (நஞ்சான வார்த்தை) என்று கடித்து கூறினார். முஸ்லிம்கள் தங்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப நாடளுமன்றத்தில் 80 க்கும் கூடுதலான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விகிதாச்சார தேர்தல் முறையில் தான் பெறமுடியும். முஸ்லிம் மற்றும் தலித்துகளின் நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் விகிதாச்சார முறையிலான தேர்தல் மறுக்கப்படுகிறது. இனி சமூக நீதிக்காக போராடுபவர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமூக நீதி கிடைக்க போராட வேண்டும்.

பொய்த்துப்போன சவால்கள்:

எங்களின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சவால்விடும் முஸ்லிம் தலைவர்கள் தில்லி முதல் திருநெல்வேலி வரை இருக்கிறார்கள். இந்த தேர்தல் அந்த சவால்களை பொய்யாக்கிப் போட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரசையும், பீகாரில் லல்லு, நித்திசையும் உ.பி யில் முலாயம் சிங்கையும், ஆம் ஆத்மியையும் ஆதரித்த போதும் முஸ்லிம்களால் அக்கட்சிகளை வெற்றி பெறச் செய்ய இயலவில்லை. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையாக, அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் தி.மு.க வை ஆதரித்தார்கள். இருந்தும் ஒரு வேட்பாளரைக்கூட முஸ்லிம்கள் வெற்றி பெற வைக்க இயலவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 12 லட்சம் முதல் 14 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அவைகளில் ஒரு சில தொகுதிகளில் முஸ்லிம்கள் 2 லட்சம் வாக்காளர்களாகவும் பல தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்காளர்களாகவும் இருக்கின்றனர். சுமார் 5 முதல் 7 லட்சம் வாக்காளர்கள் ஒரு கட்சியை மொத்தமாக ஆதரிப்பதாக முடிவெடுத்தால் முஸ்லிம்களின் ஒரு லட்சம் மற்றும் இரண்டு லட்சம் வாக்குகளால் டெப்பாசிட் கூட வாங்கிதர முடியாது. தி.மு.க 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது இதனால்தான்.

தமிழகத்தில் முஸ்லிம் வாக்குகளில் 60 முதல் 70 சதவித வாக்குகள் தி.மு.க விற்கு விழுந்ததாக கொண்டால் இந்த வாக்குகள் தி.மு.க வை அதன் பரிதாப நிலையில் இருந்து காப்பாற்ற உதவவில்லை. இதிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இப்போது தமிழகத்தில் உள்ள முக்கியமான முஸ்லிம் அமைப்பு ஒன்று எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகள் எடுக்கப்போவதில்லை என்று அதன் அதிகாரப்பூர்வமான வார ஏட்டில் தெரிவித்திருக்கிறது.

சிறுபான்மை என்ற சொல் முஸ்லிம்களோடு ஐக்கியப்பட்டு போனது. சிறுபான்மையினர் அதிகம் பேசக்கூடாது, வாலாட்டக்கூடாது, அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்கக் கூடாது, உரிமை போராட்டங்களை வலுப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் பெரும்பான்மை என அடையாளமிடப்பட்ட மக்களிடம் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது. துப்பாக்கி, விஸ்வருபம் படப் பிரச்சனைகளின் போது, முஸ்லிம் அமைப்புகள் அரசுடன் தங்களுக்கு தீவிர நெருக்கம் இருப்பதாக காட்ட முயற்சித்தது. அச்சமயத்தில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டதை அறிய முடிந்தது. முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் தி.மு.க வை ஆதரித்ததும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததையும் பிற சலுகைகளையும் தி.மு.க கூட்டங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டதும் தி.மு.க வுக்கான வாக்கை பிறழச் செய்திருக்க முடியும் என்று கருத இடமுண்டு.

முஸ்லிம்கள் இனியும் தனிக்கட்சி அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளர் மூன்றாம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 2019 தேர்தலில் அதே வேலூரில் ஒரு முஸ்லிம் லீக் வேட்பாளர் வெல்லக் கூடும். அந்த சூழ்நிலை இருப்பினும் முஸ்லிம்கள் தங்களின் அரசியல் இருப்பு குறித்து தீவீரமாக ஆராய வேண்டும்.

பொதுவான கட்சிகளில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. தி.மு.க வில் சாதிக் பாட்சா அவர்களுக்குப் பிறகு வேறு ஒரு முஸ்லிம் முக்கிய பொறுப்புக்கு வர முடியவில்லை. திமுக, அதிமுக, காங்கரஸ், பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் முஸ்லிம்களுக்கு என்று தனியாக சிறுபான்மைப் பிரிவுகள் உள்ளன. அதாவது நீங்கள் மைய நீரோட்டமான அரசியலுக்குள் வரவேண்டாம், எங்கள் கட்சிகளில் உங்களுக்கான உட் பிரிவு ஒன்று உள்ளது. அதற்குள் நீங்கள் நீந்திக்கொள்ளுங்கள் என்கின்றனர்.

முஸ்லிம்களில் நிறைய செல்வந்தர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் சொத்துக்கள், உடைமைகளைக் காக்க அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்த கட்சியிலும் சேர்ந்து சமூகத்திற்கான பிரதிநிதியாக இருக்க விரும்பவில்லை. தேர்தல் சமயத்தில், சில கோடிகளை கொட்டிக் கொடுத்து சீட் வாங்குவதும், வென்றால் நாடாளுமன்றத்துக்கும் வீட்டுக்கும் நடப்பது, தோற்றால் ஒழுங்காக தொழிலை கவனிப்பது என்று ஒதுங்கிக் கொள்கிண்றனர். இவர்களால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாக்கப்படுகின்றனர்.

ஜனநாயக அரசியல் அமைப்பில் கட்சிகள் தான் நாட்டை ஆள்கின்றன. உண்மையில் கட்சியை ஆள்பவர்கள் தான் நாட்டை ஆள முடியும். மக்கள் மத்தியில் செல்வாக்குடைய கட்சிகளில் இணைந்து அதன் உச்சிக்குடுமியை பிடிக்காதவரை முஸ்லிம்களுக்கு இந்திய அரசியலில், முற்றத்துக்கு வெளியே நாற்காலி போடப்பட்டிருக்கும் மற்றவைகளின் வெற்றி விழாக்களை வேடிக்கை பார்ப்பதற்காக. நேரு, காயிதேமில்லத் அவர்களிடம், “முஸ்லிம் லீக்கை களைத்து விட்டு முஸ்லிம்கள் அனைவரும் காங்கரசில் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று சொன்னதில் நேர்மையான உள் அர்த்தம் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

- அத்தேஷ்.ஜி

Pin It