'தெகல்கா’ வார ஏடு, குஜராத் பா.ஜ.க. முதல்வர் மோடியின் திட்டமிட்ட இனப்படுகொலைகளை ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ‘தெகல்கா’ செய்தியாளர்கள் ஆறுமாத காலத்துக்கு மேலாக குஜராத் மதவெறி சக்திகளுடன் நெருக்கமாகப் பழகி, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் வாய் மொழியாகவே குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, அதைப் பதிவாக்கி ஆதாரங்களுடன் நாட்டின் முன் சமர்ப்பித்திருக்கிறார்கள். ‘தெகல்கா’வின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்ட வேண்டும்.
இந்தப் பதிவுகளை ஆதாரமாக வைத்து குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட மதவெறிப் படுகொலைக் கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆட்சி குஜராத்தில் நடக்கிறதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
இந்து மதம் என்ற பார்ப்பன மதத்தின் கொடூரமான வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டதுதானே! புத்த, சமண மடங்களை அழித்து, புத்தர்களையும் சமணர்களையும் பிணமாக்கி ஆரியத்தை நிலைநிறுத்திய பார்ப்பனர்களைப்போல பயங்கரவாதிகள் வேறு யார் உண்டு? பார்ப்பனீயத்தின் கொடூரமான கொலைகளை ‘தெகல்கா’ வழியாக அறியும் போது நாடே அதிர்ந்து போய் நிற்கிறது. வன்முறையாளர் தரும் ஒப்புதல்களிலிருந்து சில உதாரணங்கள்:
• ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது.
• முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும், கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை.
• அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும். மறுமுனையோ செங்குத்தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரையும் எரித்துக் கொன்றோம்.
இவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவ, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா... இவர்களெல்லாம் யார்? பஜ்ரங்தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள்.
மூன்று நாள் அவகாசம் தருகிறோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான ‘ரேஷன்’கள் வழங்கப்படும்.
உங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை. நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேச மாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்.
இப்படி படுகொலைக்கு ஆணை பிறப்பித்தவர் மோடி!
இப்படி திட்டமிட்டே படுகொலைகளை அரங்கேற்றிய மோடியின் வாரிசுகள் தான்
தமிழ்நாட்டின் ‘பயங்கரவாதம்’ பற்றி பேசுகிறார்கள். ஓநாய் சைவத்தைப் பேசுவதுபோல் இருக்கிறது.
மனித சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள படுகொலைகளை துக்ளக் சோ, இராமகோபாலன், சுப்ரமணிய சாமிகள், இல. கணேசன்கள் ஏன் கண்டிக்காமல் பதுங்கி நிற்கிறார்கள்? தமிழர்கள் மீது ஆயுதப்படை எடுப்பு நடத்தும் சிங்கள அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து, தாக்குதல் நடத்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்திடும் பார்ப்பன சக்திகள் - குஜராத் படுகொலை களுக்கு என்ன பதில் கூறுகின்றன?
முஸ்லீம்களாக பிறந்த ஒரே காரணத்தால் சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு அரசு பாதுகாப்புடன் நடத்தி முடித்துள்ள இந்தக் கொடூரமான படுகொலை களைவிட பயங்கரவாதம் வேறு உண்டா என்று கேட்கிறோம்.
மத்திய அரசு இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. மனித உரிமையாளர்கள், மதச் சார்பின்மையாளர்கள் ‘நரபலி மோடிகளின் இந்தக் கொடூரங்களை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுச் சென்று இவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும்!