கடந்த 11..6.2014 ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லுதர்ன் திருச்சபை என்ற நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் புகுந்து அங்கு தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் சமூக விரோத சக்திகளால் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்ட கொடுமையான நிகழ்வினைத் தொடர்ந்து, மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் 13.6.2014 ஆறுபேர் கொண்ட உண்மையறியும் குழு சென்று ஆய்வு மேற்கொண்டது.

pollachi hostel

இக் குழுவில் கீழ் கண்டோர் இடம் பெற்றிருந்தனர்.

1.ச.பாலமுருகன், மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

2.முகமது அபுபக்கர், மாவட்ட செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

3.சந்திர சேகர், மாவட்ட பொருளாளர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

4..து.சேகர் அண்ணாதுரை, மாவட்ட துணைச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

5.சுதீஷ் ,வழக்குரைஞர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

6.மா.பாலச்சந்தர், வழக்குரைஞர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள தேவாலயத்தை ஒட்டி,தேவாலயத்தால் நடத்தப்படும் இந்த ஆரம்பப் பள்ளி மாணவர் விடுதி அமைந்துள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடுதி நடத்தப்படுவதாக விடுதியின் அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் மாணவியர் கடந்த ஆண்டில் முதல் முறையாக சேர்க்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு மூன்று மாணவியர் மட்டும் விடுதியில் உள்ளதாகவும் தெரிய வந்தது. மாணவர்கள் 17 பேர் இருந்துள்ளனர்.

மாணவர் விடுதி இரண்டு வரிசையிலான வில்லை கூரை வேயப்பட்ட கட்டிடமாக இருந்தது. அந்த கட்டிடத்திற்கு வரும் காம்பவுண்டில் எந்த கதவுகளும் இல்லை. அதனைச்சுற்றி பாழடைந்து, இடிந்த நிலையில் சுவர்கள் இருந்தன. இந்த விடுதியின் இடது ஓரமாக சில அடிகள் தள்ளி விடுதிக் காப்பாளரின் குடியிருப்பு உள்ளது. ஆனால் அந்த குடியிருப்புக்குள்ளிருந்து விடுதியினை நேரிடையாக பார்க்கமுடியாது. மேலும் பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலையிலிருந்து விடுதிக்குள் நுழைந்து வரும் வகையில் சந்துகள் இருந்தன. அந்தப் பகுதி திறந்த வெளி சிறுநீர் கழிப்பறையாக காட்சியளித்தது. 

சம்பவத்தன்று விடுதிக்குள் புகுந்த நபர் பத்து வயது மற்றும் பதினொரு வயதுள்ள சிறுமிகளை இழுத்துச் சென்றபோது சக மாணவர்கள் சப்தமிட்டு விடுதிக் காப்பாளரை எழுப்பி இந்தத் தகவலை கூறியுள்ளனர். சிறுமிகளை டார்ச் லைட் அடித்து தேடிய பின் ஒருவன் ஓடுவதாக சிலர் கூறியதை அடுத்து சிறுமிகளை விடுதிக்கு எதிரில் உள்ள மொட்டை மாடியில் கண்டுபிடித்து அழைத்து வந்ததாக விடுதிக் காப்பாளரின் துணைவியார் குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார். காவல்துறை வந்த பின் சிறுமிகளை மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறினர்.

இந்த விடுதி பாதுகாப்பு குறைபாடானதாகவும் போதிய வசதிகளற்றதாகவும் உள்ளது. எளிதில் உள்ளே நுழையும் நிலையில் உள்ள காரணத்தால் சமூக விரோத சக்திகள் தொடர்ந்து இந்த விடுதிப் பகுதியினை தங்களின் சமூக விரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இப் பகுதிகளில் உள்ள இடிந்த கட்டிடப்பகுதிகளில் காணப்பட்ட பயன்படுத்தப்பட்ட மது புட்டிகள் இதற்கு சான்றாக உள்ளன.

சிறுமிகளின் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்குப் பின் மாவட்ட வருவாய் நிர்வாகமும் காவல்துறையும் விடுதியினை சீல் வைத்து மாணவர்களை அரசு இல்லங்களுக்கு தங்க வைத்து விட்டனர். விடுதிக் காப்பாளர் குறையுடைய விடுதியினை நிர்வகித்து அலட்சியமாக நடந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் நல கமிட்டி (Children welfare committee ) என்ற அமைப்பு உள்ளது. மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி என்ற ஒன்றும் உள்ளது. இவைகளுக்கு அப்பால் சமூக நல அமைச்சகத்தின் கீழ் மாவட்ட சமூக நல அதிகாரி உள்ளார். மாணவர் விடுதிகள் குறையுடையதாக தரம் அற்றதாக இருக்கும் போது அதனை ஒழுங்கு செய்து பராமரிக்க வேண்டியது இந்த குழுக்களின் கடமை. ஆனால் பிரச்சனை வரும் போது வசதியாக குழந்தைகள் விடுதியின் பொறுப்பாளர்களை குற்றவாளிகளாக்கிவிட்டு அரசும் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளும் ஒதுங்கிக்கொள்வது தொடர்கதையாகி உள்ளது. 

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகள் என்பது பல சமயம் ஏதேனும் உதவி புரியும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன, விதிவிலக்காக சில அமைப்புகள் அதில் வருவாய் மற்றும் புகழ் போன்ற நோக்கில் செய்ல்படுபவையாக உள்ளன. அரசு குழந்தைகளுக்கான விடுதியினை தரமாக நடத்தும் தனது கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியிலிருந்து விலகிப் போகின்ற நிலையிலேயே தனியார் தொண்டு அமைப்புகள் இந்த சேவையினை வழங்க முன் வருகின்றன. அரசு குழந்தைகளுக்கான விடுதிகளை முறையே கண்காணிக்கத் தவறியதுடன், குழந்தைகளுக்கான சுகாதாரத்துடன் கூடிய தரமான, குழந்தைகளின் சுதந்தரமான உரிமையை வழங்கும் பாதுகாப்பான விடுதிகளை உருவாக்குவதில் கூட எந்தப் பார்வையும் இல்லை.

இவ் வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டவுடன் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் நிம்மதியடைந்து விட்டனர். ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தப் பிரச்சனை ஒரு பழைய செய்தி என்ற நிலையினை தற்போது எட்டி விட்டது. ஒவ்வொரு முறை குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை நடக்கும் போதும் இந்த நிலை தொடர்கின்றது. தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் கல்வியை வழங்கவும் அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு செயல் திட்டம் இல்லை. குழந்தைகளிடம் இது குறித்து விவாதிக்கும் ஒரு ஆரோக்கியமான பாதுகாப்புக் கல்வி பாடத்திட்டத்தின் வழி வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் மத்தியிலும் இது குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மேலும் குழந்தகளின் மீதான பாலியல் வன்முறை குறித்து ஓர் ஆரோக்கியமான விவாதம் சமூக பழமை வாதங்களால் மறுக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு தீங்கு செய்யும் சமூக விரோதிகளுக்கு இந்த மெளனம் சாதகமாக அமைகின்றது. தொடர்ந்து குழந்தைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பின் இவர்களால் குழந்தைகளுக்கு தீங்கிழைக்கப்படுகின்றது. இந்தப் பொதுத் தன்மையே பொள்ளாச்சியில் நிகழ்ந்த வன் செயலிலும் நிகழ்ந்துள்ளது.

பரிந்துரைகள்:

பொள்ளாச்சி குழந்தைகள் மீதான வன்முறையில் விடுதியினை முறைபடுத்த மற்றும் கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மீது விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநிலம் முழுதும் இந்த கண்காணிப்பு நடைமுறைப்படுத்தவேண்டும்.

குழந்தைகளுக்கு தீங்கிழைக்கும் குற்றவாளிகள் அல்லது குற்றவாளியாக வாய்ப்புள்ளவர்கள் குறித்து அறிந்து தடுப்பு நடவடிக்கையில் இறங்குவது அவசியம். 

குழந்தைகளிடம் அவர்களின் உரிமை குறித்தும், பாலியல் பாதிப்பு ஏற்படுத்துவோர் குறித்தும் மேலும் தன்னைத் தொட முயலும் ஒரு தீங்கிழைப்பவனிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் செயல்கள் குறித்தும் , அவர்கள் உதவி கோரும் நபர்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உடனடி தேவையாகும்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இல்லப் பொறுப்பாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட குழந்தைகளுடன் இருக்கும் நிலை உள்ளவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு குழந்தைகளின் உரிமை குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படவேண்டும். 

குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் தாக்குதல்கள், அதன் அறிகுறிகள் குறித்தும் விழிப்புணர்வு இவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். இதில் பொது மக்களையும் இணைக்கும் வகையில் சமூகத்தின் மதிப்பு மிக்க கலைஞர்களின் ஆதரவுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஓர் இயக்கமாக எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நாடு முழுதும் மாவட்ட அளவில், தாலுக்கா அளவில், கிராமம் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்புக்கான அமைப்புகள் முறையே செயல்பட உரிய கண்காணிப்பு மற்றும் ஆதரவினை அரசு வழங்கவேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான சுகாதாரமான, தரம் வாய்ந்த குழந்தைகள் காப்பகங்கள் நிறுவுவது அரசின் கடமை. 

சமூக நலத்துறையில் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பரவியுள்ள ஊழல் மற்றும் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவதில் அதிகாரிகள் கடைபிடிக்கும் பாரபட்சமான அணுகு முறை ஆகியவை குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

தமிழகத்தில் தொடரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை தடுக்க உடனடியான தடுப்பு செயல் திட்டம் ஒன்றை அரசு ஏற்படுத்தி நடைமுறைபடுத்த வேண்டும்.

- ச.பாலமுருகன், மாநிலச் செயலர் ,மக்கள் சிவில் உரிமைக் கழகம்

Pin It