நேற்று (06/12/2019) ஐதராபாத் காவல்துறையால், பிரியங்கா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேர், பிரியங்கா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை செய்யப்பட்ட அதே சம்பவ இடத்தில் மோதல் கொலையாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தரப்பில், 4 பேர் கொல்லப்பட்டதற்கான காரணமாக, வழக்கமான காவல் நிலைய எழுத்தரின் கதைதான் சொல்லப்படுகிறது.

அதாவது, 4 பேரையும் விசாரணைக்கு அதிகாலையில் அழைத்துச் சென்றாதாகவும், அவர்கள் திடீரென தாக்க முற்பட்டதாகவும், அதில் ஒருவர் காவல்துறையின் துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டதாகவும், இந்த சமயத்தில் மற்ற மூவர் தப்பி ஓட முற்பட்டதாகவும், எனவே வேறுவழியின்றி காவல்துறை சுட்டதாக சைபரபாத் காவல் ஆணையர் தெரிவிக்கிறார். இந்த சம்பவத்தை நீங்கள் கேட்கும்போதே, வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் தங்கள் கண்முன்னே வந்து போகும்.

hyderabad encounterஉடனே, இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் சம்பவ இடத்தினை நோக்கி ஓடுகின்றன. இந்தியா முழுவதும் சில இடங்களில் திட்டமிடப்பட்டதுபோல் கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் 'காவல்துறை வாழ்க' என முழக்கமிடுகிறார்கள், பூக்களைத் தூவுகிறார்கள். காவல்துறையை தோளில் வைத்து கொண்டாடுகிறார்கள். இனிப்பு வழங்குதல், பட்டாசு வெடிப்பு என கொண்டாட்டம் உச்சத்திற்கு செல்கிறது.

அதிகாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதியம் 3 மணிக்குப் பிறகே எடுத்துச் செல்லப்படுகிறது. அவை சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலே சுமார் 12 மணி நேரம் கிடத்தப்பட்டது. இவை அனைத்தும் திட்டமிட்ட திரைக்கதை போலவே அமைந்துள்ளது. பொதுமக்கள் மனதில் இம்மாதிரியான சட்டவிரோத தண்டனைகளே தீர்வு எனும் பிம்பத்தை ஊடகங்களும், அரசும் திட்டமிட்டு கட்டமைக்கின்றன.

இதை ஒரு சில நாட்களுக்கு பின்னோக்கிப் பார்த்தோமானால், நமக்கு சில கேள்விகளும், உண்மைகளும் புலப்படும். நவம்பர் 27ம் தேதி இரவு பிரியங்கா சிலரால் கடத்தப்படுகிறார். உடனே அவர் சகோதரிக்கு தகவல் தெரிவிக்க முற்படுகிறார். அவரது தந்தை காவல் துறையில் புகார் அளிக்கிறார். அந்தப் புகாரை அக்காவல் நிலையம் பெற்றுக் கொள்ளாமல், அது தனது ஆளுகை வரம்பில் இல்லை என பதிலளிக்கிறது. அடுத்து மற்றொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அங்கு மிகச் சாதாரணமாக, உங்கள் மகள் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள் என பதிலளிக்கிறார்கள்.

தேடுதல் என்பது மிகத் தாமதாமாகவும், அலட்சியமாகவும் காவல் துறையால் நடத்தப்படுகிறது. மறுநாள் ஒரு பாலத்தின் அடியில், முற்றிலும் எரிந்த நிலையில் ஒரு பிரேதம் கண்டெடுக்கப்படுகிறது. அப்பிரதேம் பிரியங்காவினுடயதுதான் என்று அவரின் சகோதரி அடையாளம் காட்டுகிறார். ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பரவலாக்குகின்றன.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள், தெலுங்கானா உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பும்போது, "பிரியங்கா படித்த பெண்தானே? ஏன் காவல் உதவி மையம் எண் 100க்கு அழைக்காமல், தனது சகோதரிக்கு போன் செய்தார்?" என பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார். மக்கள் மத்தியில் கோபக்கனல் அதிகரிக்கிறது. அதே நாளில் ட்ரக் டிரைவரும், மூன்று கிளினர்களும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் நான்கு பேரை நீதிமன்றக் காவலிலிருந்து, விசாரணைக்காக காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறது. அவ்வாறு எடுத்த பின்னர்தான், நேற்று அந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அந்த 4 பேர்தான் இந்த கொலை மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள் என சட்டப்படியாக நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவில் கொலை மற்றும் பாலியல் வல்லுறவிற்கு தூக்குத் தண்டனைதான் அதிகபட்ச தண்டனை. ஆனால், அதுவும் அரிதில் அரிதான வழக்குகளில்தான் வழங்கப்படுகிறது. மரண தண்டனை தேவையா, இல்லையா என்ற விவாதமும் நடந்து வருகிறது.

இந்திய நீதித் துறையில் தீர்ப்புகள் மிக விரைவாக கிடைப்பதற்கான வழியில்லை என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையும் உள்ளது. 2012ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட நிர்பயா வழக்கிற்குப் பிறகு, பாலியல் வல்லுறவில் கொலை செய்தால், தூக்கு தண்டனை என சட்டமும் திருத்தப்பட்டது. விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களை நடத்தப் போதுமான நிதியையும், கட்டமைப்பையும் அரசாங்கம் உருவாக்கித் தரவில்லை. இதனால், இவ்வழக்குகளும் மற்ற சாதாரண வழக்குகள் போல மாறி விடுகிறது. அதனால் இம்மாதிரியான இன்ஸ்டண்ட் தீர்ப்புகளுக்கு மக்கள் கொண்டாட்டம் அடைகிறார்கள்.

ஒரு குற்றச்செயல் நடந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்து, விசாரணையைத் துரிதப்படுத்தி, 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர் செய்து, விரைவாக வழக்கை முடிக்க வேண்டியது அரசின் மிக முக்கிய பணியாகும். அதைச் செய்ய வேண்டியது காவல் துறை. ஆனால், அவ்வாறு வழக்கினை துரிதமாக விசாரிப்பது கிடையாது. குற்றப்பத்திரிக்கையும் உரிய காலத்தில் தாக்கல் செய்வதும் கிடையாது. ஒரு சில ஆண்டுகள் வழக்குகள் இழுத்தடிக்கப்படும் போது, சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி விடுவார்கள். இவை அனைத்திற்கு உடந்தையாக காவல் துறையின் மெத்தனப் போக்கும், ஒருபக்க செயல்பாடும் காரணம். நீதித் துறையும் இதில் சமப்பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, காவல்துறை மீது அழுத்தம் அதிகரிக்கும்போது அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த மோதல் கொலைகள். இம்மோதல் கொலைகளை மேம்போக்காக பார்த்தாலே, இவை போலியானவை என புரிந்து கொள்ள முடியும். இதற்கு சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

இவ்வழக்கில் கூட கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ள 4 பேர்தான் இந்த கொடூர சம்பவத்தை செய்தார்கள் என்ற எந்தவித முடிவிற்கும் வர முடியாது. 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில்தான் கைதாகி உள்ளார்கள். காவல் துறையின் விசாரணையில் கொடூரமான தாக்குதலோ, சித்திரவதையோ நடத்தப்பட்டால், குற்றத்திற்கு சம்பந்தமில்லாதவர்கூட, வலி தாங்காமல் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிடுவார். அதனால்தான் காவல் நிலைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சடங்காகத்தான் இருக்கிறது. அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடையாது.

அந்த ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு குற்றவாளி என அனைவரும் ஏற்றுக் கொண்டால், இந்தியாவில் துப்பாக்கித் தோட்டாக்கள் மிச்சமிருக்கும்; மக்கள் இருக்கவே மாட்டார்கள். எனவே தான், இந்தியாவில் மூன்றடுக்கு நீதிபரிபாலன முறை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் வரை தனது வழக்கினை எடுத்துச் செல்ல, இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உரிமையுண்டு.

இவ்வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்ட 4 பேருக்கும் அதே உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமை காவல்துறையின் தோட்டாக்களால் பறிக்கப்பட்டுள்ளது. அதை மக்களாகிய நாமும் வெட்கமே இல்லாமல் கொண்டாடுகிறோம். நாம் தான் இப்படியென்றால், நம்மை வழி நடத்தும் - சட்டத்தை இயற்றும் சட்டதாரிணிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும், "உடனே நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும், ஆண்குறியை நீக்க சட்டம் வேண்டும்" என முழக்கமிடுகிறார்கள். இதெல்லாம், அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்பதை அவர்கள் அறிந்தே பேசுகிறார்கள்.

பாலியல் வல்லுறவு, கொலை போன்றவை வெறும் புறக்காரணிகளால் நிகழ்வதல்ல. இந்த 4 பேரை சுட்டுக் கொல்வதால், ஒட்டுமொத்த இந்தியாவும், பாலியல் வல்லுறவு அற்ற நாடாகி விடாது. துப்பாக்கி ரவைகளில் சமூகத்தின் அழுக்குகளை சீராக்கிட முடியாது.

நவம்பர் 27, 2019ம் நாள் பிரியங்கா மட்டும்தான் பாலியல் வல்லுறவிற்கு ஆட்பட்டாரா? அதே தேதியில், ராஞ்சியில் 26 வயது பழங்குடியினப் பெண், துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறுவு செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 20 வயது பட்டியலினப் பெண் ரோஜா வல்லுறவு செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். கடலூர் நெய்வேலியில் 32 வயது பெண், தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வரும்போது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். 14 வயது பெண் வதோரோவிலும், 11 வயது பெண் சண்டிகரில் ஒரு ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு 3 நாட்கள் தொடர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்.

2017ல் இந்தியாவில் 32,559 பாலிய ல்வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 93.1% பேர், தங்களுக்கு நன்றாக தெரிந்த நபர்களாலே பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள். 3155 பேர், தனது சொந்த உறவினர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்கள். 16591 பேர் குடும்ப நண்பர்கள், மூத்த அதிகாரிகள், அருகாமை வீட்டிலிருப்போரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன் சராசரியாக ஒரு நாளைக்கு 92 பேர் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய பாதுகாப்பற்ற நிலைக்கு யார் காரணம்? இந்த சமூகம் காரணமில்லையா? சமூகத்தை சரியான திசையில் வழி நடத்தாத இந்த அரசு காரணமில்லையா? இந்த 4 பேரைக் கொன்றதால், இனி இந்தியாவில் அமைதி நிலவுமா? இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், பலதை மறக்கடிக்க கொண்டாட வைக்கப்படுகிறார்கள்.

காவல்துறையை மெச்சி, பூமாரி பொழிந்த என் அன்பு மக்களே...! இதே காவல்துறை தனது பாதுகாப்பில் இருந்த சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, திண்டிவனம் ரீட்டாமேரி ஆகியோரை பாலியல் வல்லுறவு செய்ததே..... அந்த காவல் அதிகாரிகள் மோதல் கொலை செய்யப்பட்டார்களா? வாச்சாத்தி எனும் சிற்றூரில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை ஆகிய மூன்று துறைகளின் 269 பேர் 17 பெண்களை சீரழித்தார்களே... அவர்களுக்கு என்ன தண்டனையை நீங்கள் பரிந்துரை செய்யப் போகிறீர்கள்?

கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவில் 48 எம்.பி./எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருக்கின்றன. இந்த 48 பேரிலும் அதிகமான பேர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.

அதற்காக அவர்களையும் போலி மோதலால் கொல்லனும் என நான் கேட்கப் போவதில்லை. சட்டப்படியாக நடந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

இஷ்ராத் ஜெகான் எனும் மாணவி, தீவிரவாதி எனப் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் போலிஸாரால் கொல்லப்பட்டார். அந்த போலி மோதலை முன்னின்று நடத்தியவர் இன்றைய அரசின் உள்துறை அமைச்சராக இருக்கிறார். அதையும் கொண்டாடிலாமா?

இவ்வளவு ஏன், காஷ்மீரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆஷிபா எனும் சிறுமி கோயிலில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்து பாஜகவினரால் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்காக ஆஜராகும் வழக்கறிஞரே மிரட்டப்பட்டார். இதுதான் நாம் மறுக்க முடியாத இந்தியாவின் கோர முகம். பாலியல் வல்லுறவுக் கொலைகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவைதான். சட்டத்தின்படி ஆட்சி எனும்போது இந்த வழக்குகளுக்கான தண்டனையும் சட்டப்படிதான் நிகழ்த்தப்பட வேண்டும்.

போலி மோதல் கொலைகள், சட்டத்தின் ஆட்சி சீரழிந்து போனதின் வெளிப்பாடு. குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் அதற்கில்லை. பொதுமக்களின், ஊடகங்களின் வாயை அடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அதற்கு உண்டு. அதில் கொல்லப்படுபவர்கள் குற்றத்திற்குத் தொடர்பில்லாத எளியவர்களாகக் கூட இருக்கலாம். எனவே, அவை கொண்டாடத்தக்கதல்ல.

- வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன்

Pin It