பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையை மிக நுட்பமாக முன் வைக்கிறது இக்கட்டுரை. கட்டுரை யாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர்.
சமீபகாலமாக என் தலையி ல் ஏறிவிட்ட ஒரு கருத்து, ‘போராட் டங்கள் எல்லாமே கல்வி முறையி லிருந்துதான் துவக்கப்பட வேண்டும்’ என்பது. ‘பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சனநாயகத்துக்கான போராட்டம் எல்லாமே பள்ளிக் கல்வியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்’ என்று எல்லாக் கூட்டங் களிலும் பேசிக் கொண்டு திரிகிறேன். சமீபத்தில், அக்கருத்தின்மீது ஒரு சின்ன ஆப்பைப் பெரியார் வைத்து விட்டார். இம்மாதம் மகளிர் தினக் கூட்டங் களுக்கான வாசிப்பில் தந்தை பெரியாரின் கட்டுரைகளைக் கையில் எடுத்திருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தது:
“மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும் நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் ஆகிய குணங்களுக்கும் உள்ள வித்தியாசங்களுக்கு முக்கியக் காரணம் என்னவென்றால், மேல்நாட்டு ஆண் மக்கள் அடிமையாய் வைத்து இழிவாய் நடத்தப்படாத பெண்மணிகளால், உலக அனுபவமும், கல்வி, அறிவு, சுதந்திர உணர்ச்சியும் உள்ள பெண் மணிகளால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.
நம் நாட்டு ஆண் மக்கள் என்பவர்கள் அடிமையாகவும் இழி வாகவும் நடத்தப்படும் பெண் யந்திரங் களால் கல்வி, அறிவு, சுதந்திரம் ஆகியவை அடியோடு அற்ற பெண் உருவங்களால் பெற்று வளர்க்கப்படு கிறார்கள். இந்த தாரதம்மியமானது பெண்களை அடிமை கொண்டு நடத்து வதால் ஆண்களுக்கு எவ்வளவு இலாபமும் சுயநலமும் இருந்தாலும் அவற்றிற் கெல்லாம் எத்தனையோ பங்கு அதிகமாய், நஷ்டமும், கெடுதியும் உண்டாகி வருகின்றது.”
பெரியார் எப்போதும் வாழ்வனுப வத்திலிருந்து அறிவுத் தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவர்.
An organic Intellectual. மிக முக்கியமான ஒரு புள்ளியில் நம்மை நிறுத்தி விட்டார்.
‘என் அம்மாவைக் கைது பண்ணி யாச்சா?’ என்கிற கவுசல்யாவின் குரல் இப்போது இன்னும் கூர்மையான பன்முகப்பட்ட அர்த்தத்துடன் நமக்குக் கேட்கிறது. ஜாதிய சமூகத் தால் தனித்து விடப்பட்டுள்ள கவுசல்யா. ஆம், இந்த மார்ச் மாதம் வார்த்தைகளில் வடித்துவிட முடியாத இன்னொரு துயரச் சம்பவத்தைச் சந்தித்து நிற்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் 81ஆவது ஜாதி ஆணவக் கொலையால் உடுமலைப்பேட்டை ப° நிலையத்துக்கு எதிரே பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சங்கரின் காதல் மனைவி கவுசல்யா. கோவை அரசு மருத்துவ மனையில் வெட்டுக் காயங்களோடு உயிர்த் தப்பிப் போராடிக் கொண் டிருக்கும் கவுசல்யா, தன் கணவரைக் கொன்ற கொலையாளியைத் தப்ப விடக் கூடாத குற்றவாளியாகத் தன் தாய் அன்னலட்சுமியின் பெயரை எல்லோரிடமும் சொல்லிக் கொண் டிருக்கிறாள்.
கவுசல்யா இன்று தன் கணவனைக் கண்முன்னால் சாகக் கொடுத்துவிட்டு, பாதுகாப்புக் காரணங்களால் புகுந்த வீட்டுக்கும் போக முடியாமல் கொலை யாளிகளின் கூடாரமான தன் பிறந்த வீட்டுக்கும் போக முடியாமல் சமூகத் தின் முன் நிற்கிறாள். ஜாதி காக்கும் அரசும், ஜாதி காக்கும் காவல்துறையும் அவளை எப்படிக் காக்கும்? இளவரசனை மணம் முடித்த திவ்யா வின் கதை என்னவென்றே தெரியாத அளவுக்குச் ஜாதியச் சமூகம் அவளை நம் கண்களிலிருந்து மறைத்து விட்டது.
தஞ்சையில் கொல்லப்பட்ட மாரிமுத்துவின் இணையரான அபிராமி தன் குழந்தையுடன் வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருக் கிறாள். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் இத்தகைய பெண் களுக்கான ஆதரவுக் கரமாக அரவணைக்கிறது.
மீண்டும் பெரியாரிடம் வருவோம். பெண்கள் நிலையங்கள் அமைப்பது பற்றி நாற்பதுகளில், பெரியார் காலத்தில், விவாதங்கள் நடந்துள்ளன. அவருடைய பல்வேறு பணிகள் காரணமாக அதை அவரால் முன் னெடுக்க முடியாமல் இருந்திருக்கிறது.
“என்னைப் பொறுத்தவரை பத்திரிகைப் பொறுப்பும், பிரச்சார காரியமும், எதிரிகளோடு மாரடிக்க வேண்டிய தொல்லை, விஷமப் பிரச்சாரத்துக்கு மார்பைக் கொடுக்க வேண்டிய கஷ்டமும், பகுத்தறிவு நூற்பதிப்பு மேல் பார்வையும் ஆகிய காரியங்கள் போதுமானதாகவே இருந்து வருகின்றது... தமிழ்நாட்டுப் பெண்கள் நிலையத்தின் முக்கியப் பொறுப்பை யாராவது ஏற்று நிர்வகிப்பதாக இருந்தால் மற்றபடி என்னால் கூடிய உதவியைச் செய்யத் தயாராய் இருக்கிறேன்.”
அப்படிப்பட்ட பெண்கள் நிலையம் என்னென்ன செய்யலாம் என்றும் பெரியார் கனவுகளை விரித்திருக்கிறார். “வயது சென்ற பல விதவைப் பெண்கள் அந்நிலையத்து மேற்பார்வைக்கு வர வேண்டும். பெரும் குடும்பங்களில் அவ°தைப் படும் விதவைப் பெண்களைக் கூட்டிக் கொண்டு வரவேண்டும். அவர் களுக்குக் கல்வி, தொழில் முதலியவை களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
கலியாணம் வேண்டியவர்களுக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டும். கல்யாணம் வேண்டாதவர்களைப் பிரச் சாரத்துக்குப் பழக்கிப் பிரச்சாரம் செய்யச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்கள் சுயமரியாதைக்காரர்கள் செய்தால்தான் உண்டு. மற்றவர்கள் செய்யவே மாட்டார்கள். அதனால் கூடுமானவரை செய்வதற்கு உடனே முயற்சிக்க வேண்டும்” என்று 1935 ஏப்ரல் 19 அன்று காரைக்குடியில் பேசியிருக்கிறார்.
நிறைவேறாதுபோன பெரியாரின் எண்ணற்ற கனவுகளின் பட்டியலில் இந்தப் பெண்கள் நிலையமும் சேர்ந்து விட்டது. அத்தகைய அறிவியல் பார்வையுடன் நடத்தப்படும் பெண்கள் நிலையங்கள் மாவட்டத் துக்கு ஒன்றாவது இன்று தேவை. ஜாதி ஆணவக் கொலைகளால் பாதிக்கப் பட்டவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் குடும்பத் தாரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கையர்கள் என வீதியில் நிற்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. குடும்பங்கள் இவர்களை ஏற்கும் விதமாக மாற்றப்படுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். ஆனாலும் இடைக்கால ஏற்பாடாக வேனும் பெண்கள் நிலையங்கள் அவசியம்தான். மாதர் அமைப்புகள், பொறுப்புள்ள தொழிற் சங்கங்கள் இன்றாவது இக்காரியத்தை முன்னெடுக்க வேண்டும்.
நன்றி:‘புதிய புத்தகம் பேசுகிறது’ ஏப்.2016