நவம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டத் தலைநகர்களில் - வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை - ஒத்த கருத்துடைய அமைப்புகளோடு இணைந்து - பெரியார் திராவிடர் கழகம் நடத்துகிறது. சென்னையில் எழுச்சியுடன் அக்.7 இல் நடந்து முடிந்த சென்னை மாவட்டக் கழக மாநாட்டின் நிறைவுரையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இதைத் தெரிவித்தார். இது பற்றி அவரது உரையில் குறிப்பிட்டதாவது:
நம்முடைய பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரான வீரப்பமொய்லி அறிக்கைக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் நாளன்று பெரியார் திராவிடர் கழகம் வீரப்ப மொய்லியின் அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து மாவட்ட தலைநகரங்களில் நடத்த இம்மாநாடு முடிவு செய்கிறது.
ஏற்கனவே இப்படி ஒரு போராட்டத்தை மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ஒரு பெரும் பங்காற்றியிருக்கிற மார்க்சிய பெரியாரிய பொது உடைமைக் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் ஆனைமுத்து அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவரும் நவம்பர் 22 ஆம் நாளன்றே போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.
இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக பெரியார் 1925-ல் காஞ்சி மாநாட்டில் இருந்து வெளியேறிய நாள் நவம்பர் 22. நாமும் அதே நாளை ஏற்று போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். எனவே மா.பொ.க. போராட்டம் நடத்துகிற இடத்தில் நம் தோழர்கள் அவர்களோடு இணைந்து நடத்த வேண்டும் என்றும், பிற இடங்களில் நாம் ஒத்த கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும், அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறோம். அதோடு கூட இந்தச் சிக்கலைப் பற்றி மக்கள் மத்தியில் விளக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே அதற்கும் 10 நாள் களுக்கு முன்னாலே 9 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும், நான்கு குழுவினர் புறப்பட்டு வழிநெடுக பிரச்சாரம் செய்து திருச்சிக்கு வந்து சேர்வார்கள்.
இறுதியாக திருச்சியில் வகுப்புரிமை கோரிக்கை மாநாடாக மிகப் பெரிய அளவில் நவம்பர் 12 ஆம் நாள் நடத்த இருக்கிறோம். அதற்கும் நீங்கள் ஆதரவு தரவண்டும். நமது உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது.
பாலியல் வன்முறை: உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
உச்சநீதிமன்றம் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஒரு முக்கிய தீர்ப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. தாரகேசுவர் சாகு என்பவர், 12 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு, தூக்கிச் சென்றுள்ளார். அத்தகைய வன்முறை நிகழ்வதற்கு முன்பே, அந்தச் சிறுமி மீட்கப்பட்டாள். குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றத்தை இழைக்கவில்லை என்று வாதித்ததை விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கமறுத்து, தண்டனை வழங்கியது. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்கா மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் வழக்கை விசாரித்து 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
“தவறான எண்ணத்தோடு, ஒரு பெண்ணைத் தொட்டால்கூட அது தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரணமாக தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைத் தவறான நோக்கத்தில் ஒருவர் தொட்டால், அந்தப் பெண்ணுக்குத் தெரியாததால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கலாம். அதற்காக அது குற்றம் இல்லை என்று கருத முடியாது.
ஒரு பெண், தன் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல் அல்லது உடலியல் அடிப்படையிலான அவமானத்துக்கு எதிர்வினை ஆற்றாமல் போகலாம். ஆனால், கிரிமினல் நோக்கத்தோடு, குற்றவாளி ஒரு பெண்ணைத் தொட்டாலே, அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
(‘இந்து’ அக்.3)