இந்தியா முழுவதும் தமிழகத்திலும் இன்றளவும் சாதிய ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமைகளும் பெருமளவில் உள்ளன. ஆனால் கடந்த கால நிலைமைகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் அரசியல், பொருளியல் வகையில் சிறிய வளர்ச்சியையும் பெற்றுள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற்ற அளவிலான வளர்ச்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் பெறமுடியவில்லை.

brahmin 270சமூகத்தில் சாதிய அமைப்பின் தேவை தோன்றியதே நில உடைமை ஆதிக்க நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான். வேலைப் பிரிவினை அடிப்படையில் பிரிந்திருந்த மக்கள் சமூகத்தை சாதிய அடிப்படையில் திட்டமிட்டு மாற்றி அமைத்தது பார்ப்பனியம். உழைக்காத ஒரு பிரிவு தன்னை இறைவனின் அவதாரம் என்று கூறி மேலாளுமை கொண்டவர்களாக நிறுவிக்கொண்டனர். உழைக்கும் பெரும் பிரிவு மக்களை சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் அடிமைப்படுத்தினர். ஆளுகின்றவர்களையும் வணிகம் செய்வோரையும் தம் சொல்லுக்கு கட்டுப்படுவோராக மாற்றிக்கொண்டனர்.

தொழில்கள் வளர, வளர சாதிகளும் வளர்ந்தன. சாதிய சமூக அமைப்பை புனிதமானதாக நிறுவிக்கொள்ள பல்வேறு புராணங்களையும், இதிகாசங்களையும் எழுதி அவற்றை மக்களிடம் இடைவிடாது பரப்பி மக்களை நம்ப வைத்தனர்.

சாதிய சமூக அமைப்பிற்கு எதிராக கிளர்ந்த மக்கள் போராட்டங்களையும், சிந்தனையாளர்களின் போரட்டங்களையும் பார்ப்பனிய சக்திகள் மூர்க்கமாக அடக்கி ஒடுக்கியே வந்துள்ளனர்.

இந்தியத் துணைக் கண்டத்தின் சாதிய சமூக அமைப்பு உலகத்தின் எந்தப் பகுதியிலும் இல்லாதது. சாதிய நில உடைமை அமைப்பானது கொடூரமான சுரண்டலைப் புனிதமாகக் காட்ட வழிவகுத்தது, பார்ப்பனிய சமூக அமைப்பில் பார்ப்பனர்கள் மட்டும் பலன் பெற்றிருந்தால் அது நிலைத்திருக்காது. மாறாக படிநிலை முறையில் பலதட்டுகள் பலன் பெற்றன. அதனால்தான் நில உடமை நலனை பாதுகாக்க வேண்டி ஆதிக்க சக்திகள் அனைத்தும் பார்ப்பனியத்தைப் பாதுகாப்பவர்களாக மாறினர்.

அதனால் தான் இந்தியாவிற்குள் வந்த அன்னியர்கள் அனைவரும் இந்த அமைப்பை பாதுகாத்தனர். இது பற்றி தோழர் கார்முகில் இப்படிக் கூறுகிறார் "பார்ப்பனிய சக்திகள் பார்ப்பன-சத்திரியக் கூட்டின் மூலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதிமுறை சமுதாய அமைப்பையும், அதில் தமது தலைமை ஆதிக்கத்தையும், ஒட்டுண்ணி வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதுவரை ஆட்சியில் இருந்து வந்துள்ள எல்லா மன்னர்களுமே, அவர்கள் சிற்றரசர்களாயினும் சரி, பேரரசர்களாயினும் சரி, இந்து மதத்தவராயினும் சரி, வேற்று மதத்தவராயினும் சரி, இந்நாட்டவராயினும் சரி படையெடுத்துவந்து ஆட்சியியைக் கைப்பற்றியவர்களாயினும் சரி, எல்லோருமே பார்ப்பனர்களுடன் சேர்ந்து இந்து வர்ண-சாதி தர்மத்தையும் அதில் பார்ப்பன தலைமை ஆதிக்கத்தையும் ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். வர்ண-சாதி தர்மத்தைப் பாதுகாக்கும் பொறுப்பேற்ற மன்னர்கள் சூத்திரர்களிலிருந்து வந்தவராயினும் அந்நியராயினும் அவர்களை சத்திரியர்களாக ஆக்கினர் பார்ப்பனர். வர்ண-சாதி தர்மத்தை பாதுகாப்பதில் மௌரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர், குஷானர், சார்வாகனர், சுல்தானியர், முகலாயர், மராட்டியர், விஜயநகர அரசர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வரை யாரும் விதிவிலக்காயில்லை" (இந்தியாவில் தேசியப் பிரச்சினையும் சனநாயகப் புரட்சியும் பக்கம்;19)

சாதிய அமைப்பைப் பாதுகாப்பதில் நில உடமை சக்திகளுக்கு இருந்த வர்க்க நலனை மேற்காண் வரலாற்று ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

சாதிய அமைப்புடன் இணைந்து உருவான இந்திய முதலாளியம்

மேற்கு ஐரோப்பியாவில் தோன்றிய முதலாளியம் ஒரு தேசிய வட்டகை கொண்ட தேசிய முதலாளியமாக இருந்தது. அது ஈவிரக்கமின்றி நில உடைமையை ஒழித்துக்கட்டியது. பண்ணை அடிமை முறைக்கு முடிவுகட்டியது, தேசிய இனமொழியின் வளர்ச்சிக்கு ஊக்கம் தந்தது. அனைத்து மக்களையும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக நீதி முழக்கத்தின் கீழ் இணைத்தது. இதனால் இது ஒரு தேசிய முதலாளியமாக சமூகத்தை முன் கொண்டு செல்லும் முற்போக்குப் பாத்திரம் ஆற்றியது.

இந்திய முதலாளியம் பிற்போக்கிலிருந்து தோன்றியது. இந்தியாவின் ஆதிக்க சாதிப் பிரிவினராக இருந்த பார்ப்பன, சத்திரிய, பனியா பிரிவிலிருந்த நில உடைமையாளர்களிலிருந்தும் மார்வாடி, நாட்டுக்கோட்டை செட்டி போன்ற வட்டிக்கடைக்காரர்களிலிருந்தும் முதலாளிகள் தோன்றினர். இவர்கள் ஒரு தேசிய இனத்தில் மட்டும் சந்தை கொண்டவர்கள் அல்லர்.

ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதையாகவே தம்தொழில்துறையை வைத்துக் கொள்ள விரும்பினர். இந்திய முதலாளியத்தின் சாதியத்தன்மை பற்றியும் அதன் பிற்போக்கு நிலை பற்றியும் தோழர் கார்முகில் தம் ஆய்வுரையில் இப்படிக் கூறுகிறார் "இந்தியாவில் தொழிற்துறையில் இறங்கிய முதல் வகையினர் ஜுஜுபாய், டாடாக்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தொழில் தொடங்கினர். மார்வாரிகள் நாடு முழுவதும் வணிகர்களாகவும், வட்டிக் கடைக்காரர்களாகவும் பேங்கர்களாகவும் பரவி இருந்தனர். தொழில்துறையில் இறங்கிய இரண்டாம் வகையினர் பிர்லா, சிங்கானிய, தாபர்கள் போன்ற மார்வாரிகள். இவர்கள் முந்தியவர்களைப்போல அந்த அளவுக்கு வெளிவணிகத்தொடர்பு கொண்டவர்களாக இல்லை. அதே நேரத்தில் வட மாநிலங்கள் முழுவதும் சிறிய, பெரிய வணிகர்களாக இருந்தவர்கள் இவர்களே. தொழில்துறையில் இறங்கிய மூன்றாவது வகையினர் நிலப்பிரபுத்துவ, வட்டித்தொழில் வர்க்கங்களிடமிருந்து தோன்றிய கோயாங்கோ, பாங்கூர் போன்றவர்கள். இவ்வாறு தோன்றிய தரகு முதலாளிகளில் மிகப் பெரும்பாலோர் இந்து மேல்தட்டுச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் யாவரும் ஏதேனும் ஒரு தேசிய இனத்துடன் கட்டுப்பட்ட சந்தை கொண்டவர்களாக இல்லை.மாறாக அனைத்திந்திய சந்தை கொண்டவர்கள். இவர்களது சந்தை நலன் பாதுகாக்கப்படுவதற்கு அனைத்திந்திய ஒற்றுமை பாதுகாக்கப்படுவது அவசியமாகிறது."(இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் சனநாயகப் புரட்சியும் நூல் பக்கம் 19) மேலே கண்ட விபரங்களிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வந்தடைய முடியும்.

இந்தியாவில் தோன்றிய முதலாளியம் ஆதிக்க சாதி நலனோடும், தேசிய இனங்களின் இறையாண்மையை மறுக்கும் இந்திய தேசியத்தோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. எனவே சாதியத்தைக் கட்டிப் பாதுகாப்பதில் இந்த இரு பிறவியர்களான தரகு முதலாளிகளும்
மிகுந்த அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்.

சாதியியம் நின்று நிலவுவதற்கு அடிப்படையாக இருப்பது பின்தங்கிய அரை நில உடமை உற்பத்தியும், தரகு முதலாளிய உற்பத்தியுமே ஆகும். மக்களை முன்னேறிய ஜனநாயக உற்பத்திமுறைக்குள் வர முடியாமல் தடுக்கின்ற இந்தக் காரணிகளினால் தான் சாதிய உறவுகளிலிருந்து மக்கள் விடுபடமுடியவில்லை.

இடஒதுக்கீடு சாதியை ஒழிக்குமா?

இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது கெட்டிதட்டிப் போன சாதிய கட்டமைப்பில் ஒரு தளர்வை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மையங்களிலும் அரசியல் பதவிகளிலும் நீடித்திருந்த அக்கரஹார மேலாண்மையை மாற்றியுள்ளது. இங்கு ஒரு உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. என்னவென்றால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிலிருந்து அதிகாரத்தில் இடம் பிடித்தவர்கள் பெரும்பாலோர் இந்த சமூக அமைப்பைப் பாதுகாப்பதில் பார்ப்பனிய சக்திகளின் கூட்டாளிகளாக மாறிவிட்டனர். இதற்குக் காரணம் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் தரகு முதலாளிகள் மற்றும் ஆதிக்க சாதி நில உடமை வர்க்கங்களிடம் அரசியல் அதிகாரம் இருப்பதே ஆகும். எனவே ஆதிக்க சாதியிலுள்ள பிற்போக்கு வர்க்கங்களின் கையிலுள்ள அரசியல் அதிகாரத்தை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் அதிகாரம் பெறமுடியும். இது நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் மூலம் சாத்தியமில்லை. தாழ்த்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவின் தொங்குசதைகளாக மாறிவிட்டனர். அல்லது மாயாவதியே பார்ப்பனிய சக்திகளோடு கூட்டு போட்டுக் கொண்டார்.

இந்த நிலைக்குக் காரணம் பழைய உற்பத்தி உறவை மாற்றியமைக்காமல் இருக்கின்ற அமைப்பிற்குள் சில மாறுதலை ஏற்படுத்திக் கொள்ளும் சீர்திருத்தமாக இருப்பதுதான். இன்னொரு பொருளில் கூறினால் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக ஒடுக்கப்பட்ட
சாதிகளிலிருந்தும் ஒரு பிரிவை உருவாக்கிக் கொள்கின்றனர் குடியரசுத்தலைவராக நாரயணன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணன், உள்துறை அமைச்சராக ஷிண்டே, முதல்வராக மாயவதி, உயர் காவல்துறை அதிகாரிகளாக பலபேர் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட மக்களிலிருந்தும் வந்துள்ளனர். தேவே கவுடா, முலாயம், லாலு என்று நீளும் பட்டியல்.

இந்த மாறுதலை நாம் எதிர்க்கவில்லை, ஆனால் இதே போதுமானது; சாதி ஒழிப்பை இவ்வாறே நிறைவேற்றி விடலாம் என்று கூறுவதைத்தான் மறுக்கின்றோம்.

தேசிய விடுதலைப் புரட்சியால் சாதியை ஒழிக்க முடியுமா?

தேசிய விடுதலைப் புரட்சி நிறைவேறுகின்றபொழுது சாதி ஒழிப்பு எவ்வாறு படிப்படியாக நிறைவேறும் என்பதைக் காண்போம்:

சாதி ஒழிப்பில் பார்ப்பனியத்திற்கு எதிராக மிகப்பெரும் பணியை அம்பேத்கரும் பெரியாரும் ஆற்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. புனிதமானது என சொல்லப்பட்ட இந்துமத இலக்கியங்கள் எனப்படும் மனுஸ்மிருதி, இராமயணம், மகாபாரதம், பகவத்கீதை
உள்ளிட்ட அனைத்து இந்துமத ஆதார நூல்களையும் ஆய்வு செய்து அதன் சாதிய சாரத்தை பெரியாரும், அம்பேத்கரும் அம்பலப்படுத்தினர். இந்து இலக்கியங்களின் சாரம் சாதிய சமூக அமைப்பை புனிதப்படுத்தி பாதுகாப்பது என்று மக்களுக்கு உணரவைத்தனர்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். கம்யூனல் ஜி.ஒ எனப்படும் முதல் இட ஒதுக்கீடு அரசாணை தொடங்கி மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவது வரையிலுமான சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெரியார், அம்பேத்கர் தொடங்கிவைத்த சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் தொடர்ச்சியே. உலகமயம் நடைமுறைக்கு வந்த இந்த இருபது ஆண்டுகளில் அரசுத்துறைகள் தனியார்மயப்படுத்துப்படுவது வேகப்பட்டு அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. அதே போல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கு வேகமாகி விட்டது. கல்வி வணிகமயமாக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் இட ஒதுக்கீடு கேள்விக் குறியாக மாறிவிட்டது. சமூக செல்வத்தில் அனைவரது பங்கும் உறுதி செய்யப்படும்போது மட்டுமே சமூக நீதி சாத்தியம்.

பார்ப்பனியமும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலும் கைகோர்த்து செயல்படுகின்றன. தேசிய இனமக்களின் செல்வங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையடிக்கப் படுகின்றன. பார்ப்பனியமயமாக்கல் முன்னெப்போதும் விட வேகம் பெற்றுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வித்யவிகாஸ்களாகவும், வித்ய‌மந்திர்களாவும் மாறிப்போய்விட்டன. இப்படிப்பட்ட பார்ப்பனிய அடிவருடி நிறுவனங்கள் பகுத்தறிவுக் கல்வியை எக்காரணம் கொண்டும் கற்றுத்தராது. மாறாக அனைத்து வகையான சமக்கிருதமயமாக்கலின் உறைவிடமாகவே இருக்கின்றன. தமிழ்த் தேசிய உணர்வும் சமத்துவம் மற்றும் சமூகநீதி கருத்துக்களும் புத்தாக்கம் பெறவேண்டும்.

சாதியை ஒழிக்க நாம் இருபெரும் பணிகளை முன்னெடுத்தாக வேண்டும். ஒன்று சாதிகளாகப் பிளவுப்பட்டுக் கிடக்கின்ற தமிழ்ச் சமூகத்தை தமிழர்களாக ஒன்றுதிரட்டவேண்டும்.

இரண்டாவது சாதியத்தின் இருப்பிற்குக் காரணமாக இருக்கின்ற அரை நில உடமை, தரகு முதலாளிய உற்பத்திமுறையை உழவர்-தொழிலாளர் தலைமையிலான தேசிய உற்பத்திமுறையால் மாற்றீடு செய்ய வேண்டும். சாதியத்தால் பிளவுபட்டிருப்பினும் தேசிய ஒடுக்குமுறையால் தமிழ்ச் சமூகம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கோரிக்கைகளை முன்வைத்து உழைக்கும் தமிழ்மக்கள் அனைவரையும் ஒரு தேசிய இயக்கத்தை கட்டமைப்பதன் மூலம் அணிதிரட்டவேண்டும். தேசிய கோரிக்கைகள் சுரண்டும் வர்க்கங்களான தரகு, நில உடமை வர்க்கங்களை ஒரு முகாமிலும் உழைக்கும் தமிழ்மக்களான உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களை தமிழ்த் தேசிய முகாமிலும் அணிதிரளச் செய்யும்.

இந்த அரசியல் பணியை வெற்றிகரமாக்கியதற்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றி உழவர், தொழிலாளர் தலைமையில் தற்சார்பு தேசிய உற்பத்தியைக் கட்டமைக்கும் பணி தொடங்கும்.

இந்த தற்சார்பு ஜனநாயக உற்பத்தியானது, அரை நில உடமை உற்பத்தியையும், தரகு முதலாளிய ஏகாதிபத்திய உற்பத்தியையும் துடைத்தெறியும்.

கட்டமைக்கப்படும் இந்த தேசிய உற்பத்தியானது சாதியத்தால் கட்டுண்டு கிடக்கின்ற ஒடுக்கப்படும் வர்க்கங்களாகவும், ஒடுக்கப்படும் சாதிகளாகவும் உள்ள பெரும்பான்மையான மக்களை முன்னேறிய உற்பத்திக்குள் உள்வாங்கும்.

இதன் மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் சாதி ஆதிக்க கட்டுத்தளைகளிலிருந்து விடுபட்டு ஜனநாயக வாழ்க்கை முறைக்குள் கொண்டுவரப்பட முடியும்.

தொகுப்பாக:

இரண்டாயிரமாண்டுகளாக பார்ப்பனியம் உழைக்கும் மக்களை சாதிகளாக பிரித்து ஒடுக்கிவருகிறது. அது மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களை தனது சமக்கிருத மேலாண்மையின் மூலம் அடக்கி ஆண்டுவருகிறது. சாதிய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என்ற இரண்டு கோரமுகங்களைக் கொண்டது பார்ப்பனியம்.

தமிழக உழைக்கும் மக்கள் சாதிய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் ஆளாகி அடிமைத்தளையில் உழல்கின்றனர்.

மூன்று ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்று ஜனநாயக, சமூக நீதி கொண்ட வாழ்க்கையைப் பெறும் வழியே தரகு முதாலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்தியமாக இருக்கின்ற இந்திய தேசியத்திலிருந்து விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சியின் மூலம் தமிழ் தேசிய மக்கள் குடியரசை நிறுவுவது ஆகும்.

இப்படித்தான் சாதி ஒழிப்பை சாதிக்க முடியும்!

- கி.வே.பொன்னையன்

Pin It