kashmir 380

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ கலைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் பாஜக அரசு தீவிரமாகி உள்ளது. இதற்கான பொறியைத்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தூவி விட்டிருக்கிறார். இந்த விவாதம் ஏதோ யதார்த்தமானது அல்ல. பாஜக அரசால் திட்டமிட்டு வெடிக்க வைக்கப்பட்ட விவாதம்தான். 370வது பிரிவு குறித்து சிறிது அளவேனும் வாசிப்பு இல்லாத இந்திய பாமர மக்கள் மனதில் ஒரு எண்ணத்தை அல்லது ஒரு கருத்தியலை பாஜக தூவி விட்டிருக்கிறது. இந்த பாமர இந்தியன் இந்த கேள்வியை தற்போது ஜிதேந்திர சிங்கின் பேட்டிக்குப் பின்பு கேட்க ஆரம்பித்துள்ளான். அது என்ன ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அதிகாரம்? எல்லா மாநிலங்களையும் ஒன்றாக பார்ப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்? இந்தக் கேள்வியின் மேற்பரப்பு நியாயமாகத்தான் தோன்றும். ஆனால் அதன் உட்பரப்பை சிறிது ஆய்வு செய்தால் இந்த சட்டப்பிரிவின் பின்னால் உள்ள மிக சக்தி வாய்ந்த சதி அரசியல் என்னவென்று புரியும். எப்படியாவது ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்த சட்டத்தை பறித்து விடவேண்டும் என்ற இந்துத்துவ கோட்பாட்டாளர்களின் அரசியல் மிகவும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம்.

இதே சட்டப்பிரிவு மகாராஷ்டிராவின் விதர்பா, மரட்வாடா குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீருக்கு இருப்பதைப் போன்ற சிறப்பு அதிகாரங்கள் இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், நாகலாந்து போன்ற பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளன. ஆனால் அங்கு எல்லாம் இந்த சட்டத்தை குறித்து கேள்வி எழுப்பாத பாஜக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கேள்வி எழுப்புகிறது என்றால் இதன் பின்னால் மிக வலுவான திட்டமிடுதலுடன் கூடிய ஒரு பயங்கரவாத அரசியல் உள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியா 526 சமஸ்தானங்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு சமஸ்தான முறையிலான ஆட்சியமைப்பு கலைக்கப்பட்டு கூட்டாட்சி முறை அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர், ஜுனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்திய கூட்டாட்சியில் இணைய மறுத்துவிட்டன. இதில் ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ராணுவ பலத்தின் உதவியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜுனாகத், மக்கள் வாக்கெடுப்பு மூலம் இணைக்கப்பட்டது. பூகோளவியல் அடிப்படையில் ஹைதராபாத்தும் ஜுனாகத்தும் இந்தியாவின் உட்புறப் பகுதியில் இருந்தன. இதனால் இந்த இரு மாகாணங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால்தான் தெளிவான கூட்டாட்சி முறையை அமல்படுத்த முடியும். ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் எல்லையில் அமைந்திருந்ததால் அம்மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. பாகிஸ்தான் அல்லது இந்தியா இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதிலும் ஒரு பெரும் சிக்கல் என்னவென்றால் ஜம்மு காஷ்மீரின் 80 சதவீத மக்கள் முஸ்லிம்கள், ஆட்சியாளர் இந்து மன்னர் ஹரிசிங். இதில் மன்னருக்கும் மக்களுக்குமிடையே ஒரு பாரிய இடைவெளி உண்டு.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்த இரண்டு வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல் இருந்தது. அவர்களுக்கு இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைய விருப்பம் இல்லை. தனி நாடாக ஜம்மு காஷ்மீரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை மக்களின் விருப்பமாக இருந்தது. அதற்கான‌ வலுவான காரணங்களும் உண்டு. 1846ம் ஆண்டு அமிர்தசரஸ் உடன்படிக்கையின் படி ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு நெருக்கடியான சூழ்நிலை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷார் திட்டமிட்டு அந்த அழகிய ஆப்பிள்தோட்டத்தை வெறும் 75 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடூர அடக்குமுறை ஆட்சியாளர்களான டோக்ரா மன்னர்களுக்கு விற்றனர். இதை இப்படியும் கூறலாம், கொலை வாளுடன் முஸ்லிம் இனமக்களின் இரத்த பசிக்காக ஏங்கி கொண்டிருந்த கும்பல்களிடம் அந்த மக்களின் உயிரை பிரிட்டீஷார் அடகுவைத்தனர். ஏனென்றால் பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு காஷ்மீரின் மண்ணின் மைந்தர்கள் கடும் எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகத்தான் டோக்ரா கொடுங்கோலர்களிடம் அந்த மக்களை பிரிட்டீஷார் ஒப்படைத்தனர். இது முதற்கொண்டு அந்த மண்ணின் மைந்தர்கள் பல்வேறு உயிர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து அநியாய ஆட்சியாளர்களர்களின் தொடர் அடக்கு முறைகளுக்கு ஆளாகி வந்த அந்த மக்களின் பொதுப் புத்தியில் நம்பிக்கையின்மை என்பது அதிகரித்து விட்டது. இனி அடக்கு முறைக்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கான அரசை நாமே கட்டமைக்க வேண்டும் என்ற கோட்பாடு பெருவாரியான காஷ்மீரிகளின் பொதுப் புத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டது. இதனால்தான் இந்த இரு வாய்ப்புகளையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில்தான் இந்தியா-பாகிஸ்தான் இரு அரசுகளும் காஷ்மீர் பிரச்சினையை மேலும் வலுவாக வேரூன்றி போனதற்கான பாரிய தவறை செய்தன‌. இரு நாட்டு ராணுவங்களும் காஷ்மீரை கைப்பற்ற பலமாக மோதிக் கொண்டன. இதைத் தொடர்ந்து காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. மீதி இரண்டு பாகம் இந்தியா வசம் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக 1947 அக்டோபர் 26ம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

இந்த இணைப்பு உடன்படிக்கை தற்காலிகமானதுதான். இந்த இணைப்பு ஒப்பந்தத்தின் படி ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு இந்த மூன்று துறைகளை விடுத்து அனைத்து அதிகாரமும் காஷ்மீர் மக்களின் கைவசம் கொடுக்கப்பட்டது. இணைப்பை நிரந்தரமாக்க வேண்டும் என்றால் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 21.4.1948ம் ஆண்டு 47வது எண் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மழுங்கடித்து காஷ்மீர் மக்களின் பொது புத்தியிலிருந்து வாக்கெடுப்பு என்ற கருத்தியலை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 370 வது சட்ட பிரிவு 1948ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசின் சதியை உணர்ந்த சட்ட மாமேதை அம்பேத்கர் அப்போதே இந்த சட்டத்தை எதிர்த்தார்.

இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலங்களை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாங்க முடியாது. காஷ்மீருக்கு என்று தனி குடி உரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் போன்ற சட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும். மேலும் காஷ்மீரின் மாநில ஆட்சி மற்ற மாநிலங்களைப் போன்று அல்லாமல் 6 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசன சட்டம் 17.11.1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதே போன்று காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி தேசியக் கொடி உருவாக்கப்பட்டது உட்பட பல்வேறு தனி சிறப்பு சலுகைகள் இந்தியாவுடன் அவர்கள் தொடர்ச்சியாக இணைந்திருப்பதற்காக வழங்கப்பட்டது. ஆனால் மைய அரசு பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த சட்டத்தை செயல் இழக்கச் செய்து வருகிறது. இது வரை அம்மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பறிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்திருத்தங்களை இந்திய மைய அரசு கொண்டு வந்துள்ளது. 370வது பிரிவில் சில சிறப்பு அம்சங்கள் மட்டும்தான் எஞ்சியுள்ளன. மேலும் இந்த சட்டம் காஷ்மீருக்குத் தேவையா இல்லையா என்பதை காஷ்மீர் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர ஆர்.எஸ்.எஸ்ஸோ பாஜகவோ அல்ல.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். 370வது பிரிவை ரத்து செய்ய பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து உள்ளது. இந்துத்துவவாதிகள் இந்த சட்டத்தை துடைத்தெறிய வேண்டும் என்று துடியாய் துடிப்பதன் பின்னால் சக்தி வாய்ந்த அரசியல் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாக‌ணத்தில் உணர்வு உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளதாலும் முஸ்லிம்களின் முழு கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி சென்று விடக்கூடாது என்பதற்காக இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடைமுறைப்படுத்தியதைப் போன்று இந்துச் சமூகத்தை சேர்ந்த கந்து வட்டிக் கும்பல்களான மார்வாடி இன மக்களின் குடியிருப்புகளை காஷ்மீரில் அதிகப்படுத்தி முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை கருத்தியல். இந்துத்துவ சக்திகளின் இந்த கருத்தியலுக்கு எதிராக 370வது சட்டப்பிரிவு இருப்பதால்தான் அதை எப்படியாவது துடைத்தெறிய வேண்டும் என்ற வேலையில் இறங்கி உள்ளார்கள். கண்டிப்பாக மோடி ஆட்சிக் காலம் முடிவதற்குள்ளாக‌ 370வது சட்டப்பிரிவை நீர்த்துப் போகச் செய்வார்கள். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் போராட்டம் வெடிக்கும். காஷ்மீரிகள் வீசுகின்ற கற்கள் மோடி அமர்ந்து இருக்கின்ற பாராளுமன்றத்தை சீர்குலைக்கும் என்பது திண்ணம்.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It