முலாயம் சிங் யாதவ்... இவர் சமஜ்வாடி கட்சியின் தலைவர். உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை. அண்மையில் இவர் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது “பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது இளைஞர்களின் இயல்பு. அதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தவறு”, என்று பேசியுள்ளார்!

Mulayam Singh Yadav 350இப்படி அவர் பேசியது இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக உணர்வு படைத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முலாயம் சிங்கின் கருத்து ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லப்பட்டதாக விமர்சித்தனர். இப்படி விமர்சித்தவர்களில் உண்மையிலேயே ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் மட்டுமல்ல போலிகளும் அடங்குவர். ஒட்டுமொத்தத்தில் இப்போலிகள் முலாயம் சிங்கின் சிந்தானா முறையில் இருந்து வேறுபட்டவர்கள் இல்லை. இவர்களுக்கிடையே இப்படிப்பட்ட ஜனநாயக விரோத கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவங்களில்தான் வேறுபாடு உள்ளது.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே முலாயம் சிங் அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களின் பிரதிநிதி என்றாலும் அவர் இதை இப்போது, இவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் என்ன வந்தது என்பதைப் புரிந்து கொண்டால்தான் முலாயமின் கருத்தை விமர்சித்தவர்களில் போலிகள் மற்றும் உண்மையான ஜனநாயக உணர்வுள்ளோரின் நோக்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான 16- வது தேர்தல் நடைபெறும் போது இப்படியான அப்பட்டமான ஜனநாயக விரோதக் கருத்தை ஒருவர் வெளிப்படையாகக் கூறமுடிகிறது என்றால், இந்த நாடு எப்படிப்பட்ட ஜனநாயக அடிப்படையைக் கொண்டது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முலாயமின் கருத்து, தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இப்படியான கருத்துகள் தமக்கு தோல்வியைத் தந்துவிடும் என்று அவர் கருதியிருந்தால் ஒருபோதும் அப்படி பேசியிருக்க மாட்டார். முற்போக்கைப் பேசுகிறோமா, இல்லை பிற்போக்கைப் பேசுகிறோமா என்பது முக்கியமில்லை. எதைப் பேசினால் வெற்றி என்பதே தேர்தலின் இலக்காகும். அந்த வகையில் ஆணாதிக்க கருத்துடையவர்களின், அதிலும் ஹார்மோன் செயல்பாட்டின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை கவர்வதே அவரின் தந்திரம். இந்த வகையில் தான் பிற்போக்குவாதி என்பதை அவர் சிறிதும் மறைக்கவில்லை. முழுப்பொய்யை விட, அரை உண்மை ஆபத்தானது என்பதைப் போன்று வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை விட, போலித்தனம் மிகப்பெரிய ஆபத்தானதாகும். இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இந்தியாவில் எப்போதும் பிற்போக்குத்தனத்தை விட, போலியான முற்போக்குத்தனம்தான் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. இந்தப் போலித்தனம் இந்திய சமூகத்தின் சாரமாக விளங்குகிறது; எங்கும், எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அதுவன்றி இங்கு ஓர் அணுவும் அசைவதில்லை.

கடந்த 11.04.2014 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் ஆலிசிச்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை நேரில் பார்த்த அனைவரும் அரசுப்பள்ளியில் அதிலும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படியும் திறமைகள் உண்டா என்று வியக்கும் அளவுக்கு, அதிலும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் கூட தன்னுடைய பிள்ளைகளிடமா இப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்று வியக்கும் அளவுக்கு அந்த ஆண்டு விழா அமைந்திருந்தது.

பன்னிரண்டு நடன நிகழ்ச்சிகள், அரசுப்பள்ளியா, தனியார் பள்ளியா என்ற பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி , தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நாடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் திறமை, பொறுப்புணர்ச்சி மட்டுமே போதுமானதல்ல, பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் 'மறுபக்கம்' என்ற குறும்படம் ஒன்றையும் இப்பள்ளியின் ஆசிரியர்களே தயாரித்து திரையிட்டும் காட்டியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இப்பள்ளி மாணவர்களிடையே உள்ள திறமையை இப்படிப்பட்ட கலைநிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமல்ல கல்வித்தரத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். உண்மையில் இப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தானா என வியக்கும் அளவுக்கு அவர்களின் ஆற்றல் அமைந்துள்ளது.

தனது குழந்தையை தனியார் ஆங்கிலப் பள்ளியில்தான் சேர்ப்போம் என்று பிடிவாதம் பிடித்தவர்களை மட்டுமல்ல, தமது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திருந்த பெற்றோர்கள் மனதையும் இந்த ஆண்டு விழா மாற்றிவிட்டது. தமது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்போம் என்று அறிவிக்கவும் செய்துள்ளது.

எத்தனை கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தினாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை ஒரு ஆண்டுவிழா செய்துகாட்டிவிட்டது. இந்த அதிசயிக்கத்தக்க மாற்றத்திற்கான பெருமை அனைத்தும் இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களையே சாரும். இதற்காக அவர்களுக்கு நமது மன்மார்ந்த நன்றியை காணிக்கையாக்குவோம்.

ஆனால் இந்த ஆண்டுவிழாவில் அரசுப்பள்ளிகள் பற்றி தாங்கள் வெளிக்கொணர்ந்த கருத்துக்கள் எதுவும் தங்களுக்குப் பொருந்தாது என்பதுதான் இப்பள்ளி ஆசிரியர்களின் நடைமுறையாகும். ஏனெனில் இந்த ஆசிரியர்கள் எவரும் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை. மாறாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கின்றனர்.

அடுத்து மகஇக குழுமத்தின் ஒரு நிறுவனமான வினவு இணையதளம் கடந்த 11.04.2014 அன்று அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக‌ விருதையில் பிரச்சாரம் என்ற தலைப்பில் இதே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்ட கிராமங்களில் தமது குழும அமைப்புகள் செய்த பிரச்சாரம் சம்பந்தமாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் தமது குழுமத்தின் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டிக்குப்பம், பெரிய வடவாடி, சத்தியவாடி, சாத்துக்கூடல், செம்பளக்குறிச்சி, கோமங்கலம் ஆகிய கிராமங்களில் மக்களிடையே அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.வீரபாண்டியன் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திய மகஇக குழும அமைப்புகளின் செயலை பலரும் பாராட்டுவார்கள். இப்படி பாராட்டுவதற்கு முன்பு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

“அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்துகொண்ட மகஇக குழும அமைப்பின் உறுப்பினர்களான செந்தாமரை கந்தன், வேலுமணி, வீரகாந்தி, அதிலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் வழக்கறிஞர் ராஜீ இவர்களின் அனைவரின் வீட்டுப்பிள்ளைகளும் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில்தான் தமது வாரிசுகளை படிக்க வைக்கின்றனர். தமது பிள்ளைச் செல்வங்களின் கல்வி உரிமைக்காகத்தான் இப்புரட்சியாளர்கள் பெற்றோர்கள் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தி தமது வாரிசுகளுக்கு கட்டணச் சலுகை வென்றெடுத்துக் கொண்ட சாதனை புரிந்துள்ளனர்.

இப்புரட்சியாளர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மையை சென்ற ஆண்டும் நாங்கள் அம்பலப்படுத்தியிள்ளோம். ஆனால் அதைப்பற்றி அவர்கள் ஒரு சிறிதும் அதாவது அவர்களின் மனசாட்சி கூட அவர்களை உறுத்தவில்லை. எந்த கூச்சமும் இன்றி இந்த ஆண்டும் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்று பிரச்சாரம் செய்ய கிளம்பி விட்டனர்.

பாலியல் பலாத்காரம் பெரிய குற்றமல்ல என்று பேசிய முலாயமின் நோக்கம் அரசியல் ஆதாயமடைவது, அதாவது அரசியல் அவரின் பிழைப்புக்கான சாதனம். இதைப் போன்றுதான் புரட்சி, முற்போக்கு, சமூக சேவை ஆகியவை மகஇக குழுமத்தின் பிழைப்புக்கான சாதனங்கள். இதனால்தான் இவர்களின் மனசாட்சி கூட இவர்களை உறுத்துவதில்லை. அப்படியென்று ஒன்று இருந்தால் தானே உறுத்துவதற்கு!

இந்த வகை பிழைப்புவாதத்தில் இந்தியாவிலேயே இந்தக் குழுமம்தான் முதலிடத்தில் திகழ்கிறது. அதிலும் தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கே உரிய வடிவத்தில்.

அதாவது வட இந்தியாவில் பார்ப்பனியம் முரட்டுத்தனமானது; தென்னிந்திய அதிலும் தமிழக பார்ப்பனிய வடிவமோ நாசுக்கான, நயவஞ்சகமானது, அதைப்போன்றதுதான் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமும்.

இவர்களுக்கும் முலாயம் சிங் போன்றவர்களுக்கும் இடையே சாராம்சத்தில் என்ன வேறுபாடு உள்ளது?

இந்தக் கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாம் சொல்வதை தமது குடும்பத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் மகஇக குழும உறுப்பினர்களின் செயலை விமர்சித்த அளவுக்கு ஆசிரியர்களின் செயலை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கருதலாம்.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்ற தமது பிரச்சாரத்திற்கு ஏற்ப அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடந்து கொள்ளாவிட்டாலும், தாம் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும், கலைத்திறமைகளையும் வளர்த்தெடுத்து, சாதித்துக் காட்டியுள்ளனர். அரசுப்பள்ளியில், தாய்மொழியில் கல்வி அளிப்பதன் மூலம் குழந்தைகளின் புரிதலை உயர்த்தி, பகுத்தறிவாளிகளாக பிற பிள்ளைகளை உயர்த்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு அதை அளிக்க முன்வருவதில்லை.

இதற்கான காரணம், பிள்ளைகள் பகுத்தறிவற்றவர்களாக, ரோபாக்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறமுடியும். தனியார் நிறுவனங்களுக்குத் தேவை மனிதர்கள் இல்லை; மனித உருவில் நடமாடும் ரோபாக்கள்தான். இதனால்தான் தெரிந்தே தமது பிள்ளைகளை அவர்கள் மூடர்களாக வளர்த்தெடுக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் தனியார்மய அநீதியைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையோ, வழிமுறைகளோ ஏதும் இல்லாதவர்கள். சமூகத்திற்குப் பின்னே வால்பிடிப்பவர்கள்.

ஆனால் மகஇக குழுமத்தினரோ தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளுக்குத் தாங்கள் எதிரானவர்கள், இவைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உலகிலேயே நாங்கள் மட்டுமே வைத்துள்ளோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இதை இந்த கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களிலும் பேசியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் கேடுகளை அறிந்தவர்கள் இவர்கள். அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் அறிந்தவர்கள் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழியில் படிக்க வைப்பதுதான் பெருங்குற்றம்.

ஏனென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படிக்க வைக்கும் செயலுக்கான அடிப்படை கையாலாகாத்தனமே காரணமாகும். ஆனால் மகஇக குழுமத்தினர் தமது பிள்ளைகளை இப்படி செய்வதற்கான காரணம் புரட்சி, முற்போக்கு , சமூக சேவை ஆகியவற்றை தமது பிழைப்பிற்கான சாதனமாக ஆதாரமாகக் கொண்டிருப்பதுதான்.

சமூக மாற்றம் என்ற உன்னதமான மனிதகுல செயல்பாட்டையே தமது பிழைப்புக்கான ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான் அதாவது சாரம்சத்தில் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை பாதுகாப்பவர்கள் என்ற வகையில்தான் இவர்களை நாங்கள் முதலாளித்துவ குழும அமைப்புகளில் ஒன்றாக மகஇக குழுமம் என்று வரையறுத்துள்ளோம்.

சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடைக்கற்களாக திகழும் மகஇக குழுமத்தை போன்ற போலிகளை களையெடுக்காமல் இவைகளை சாதிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்:

1. காயடிக்கும் கட்சி 

2. சமச்சீர்கல்வி. . . . ! கார்ப்ரேட்மூலதனத்தின்தேவையைமறுக்கும்பார்ப்பனகும்பலுக்குவிழுந்தஅடி

3. சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1

4. சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

வினவின் ரசிகர்கள் யார்? தோழர் ரெட்மீரா அவர்களுக்கான எமது பதில்.

6. சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3

7. முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4

8. சமச்சீர்கல்வி: புஜ+புக+வினவு=கலவைசித்தாந்தம்

9. இன்னமும் இங்கதான் புடுங்கினுக்கிறாரா?

10. தவளை தன் வாயால் கெடும் . . . ! 

- விவசாயிகள் விடுதலைப் பேரவை,தமிழ்நாடு. தொடர்பு எண்:9842529188, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

Pin It