திமுக தலைவருக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கண்டனம்

அண்மையில் இந்தியத் தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் கோவையில் ஊடகர்களைச் சந்தித்த போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக இருந்து வரும் எழுவர் விடுதலை தொடர்பான வழக்கு பற்றிய கேள்விக்கு விடையளித்தார். வழக்கில் என்ன தீர்ப்பு வரும் என்பதை முன்கூட்டிச் சொல்ல முடியாது என்றும், தாம் ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதால், ஒரு வாரத்துக்குள் தீர்ப்புச் சொல்லப்படும் என்றும் தலைமை நீதிபதி தெளிவாகச் சொன்னார்.

karunanidhi 200சென்னையில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமை நீதிபதியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்துத் தலைமை நீதிபதியைக் குறைகூறிப் பேசினார். 23 ஆண்டு காலமாகச் சிறையில் வாடும் எழுவர் விடுதலைக்குத் தடைபோடும் இந்திய அரசைக் கண்டிக்க வேண்டிய திமுக தலைவர்… எழுவர் விடுதலைக்கு வழிபிறந்து விடுமோ என்ற தவிப்போடு தலைமை நீதிபதிக்கு எதிராக நஞ்சு கக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

நல்ல தீர்ப்பு வரும் என்று சதாசிவம் பேசியதாகக் கலைஞர் சொல்வது உண்மையன்று. சதாசிவம் கோவையில் ஒரு நிகழ்வில் இப்படிப் பேசியதாகச் சொல்லியிருப்பதும் உண்மையன்று. நிகழ்வு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கள் கேட்ட கேள்விக்குத்தான் அவர் விடையிறுத்தார். நல்ல தீர்ப்பு வரும் என்று அவர் சொல்லவே இல்லை. ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என்றுதான் அவர் சொன்னார். கோவையில் திரு சதாசிவம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சிப் பதிவைக் கலைஞர் மீண்டும் பார்த்துத் தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா? தமிழக அரசியலின் மூத்த தலைவரிடம் இந்த நேர்மைப் பண்பை எதிபார்க்கிறோம்.

ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என்று சொன்னதற்கும் தேர்தல் வாக்குப்பதிவுத் தேதிக்கும் தொடர்பே கிடையாது. திரு சதாசிவம் ஓய்வு பெறும் தேதிதான் இதில் தொடர்புடையது.

தீர்ப்பு வந்தாலும், அது இந்திய அரசின் கருத்துக்கெதிராக வந்தாலும், எழுவரும் உடனே விடுதலையாகி, அதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு கெட்டுப் போகும் என்று கலைஞர் அச்ச்சப்படுவதற்குக் காரணம் இல்லை. ஏனென்றால் வழக்கு நேரடியாக எழுவரை விடுதலை செய்யலாமா கூடாதா என்பது பற்றியதன்று.

எழுவரை விடுதலை செய்ய குற்ற நடைமுறைச் சட்டம் 432ஆம் பிரிவின் படி தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற கேள்விக்குத்தான் நீதிமன்றம் விடை காண வேண்டும். அதாவது இந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்படும் ‘உரிய அரசாங்கம்’ (appropriate government) என்ற தொடர் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் தமிழக அரசைக் குறிக்குமா? தமிழக அரசையே குறிக்கும் என்ற தீர்ப்பு வந்தாலும் உடனே விடுதலை வந்து விடாது. கலைஞர் கருணாநிதிக்கு உண்மையிலேயே மாநில சுயாட்சிக் கொள்கையில் நம்பிக்கை இருக்குமானால் உச்ச நீதிமன்றம் இந்திய அரசின் வழக்கை மறுதலித்து நல்ல தீர்ப்பு வழங்குவதை விரும்ப வேண்டும். மனித உரிமைகளிலும் தமிழர் உரிமைகளிலும் அவருக்கு நம்பிக்கை இருக்குமானால் இந்திய அரசின் முட்டுக்கட்டையைக் கண்டிக்கவும் செயலலிதா அரசின் முயற்சியை மேலும் விரைவுபடுத்துமாறு கோரவும் வேண்டும். மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலியறுக்க வேண்டும் என்பதுதான் மாமியார் கருணாநிதியின் ஆசை போலும்.

நீதிமன்ற வழக்குகளை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் கருணாநிதி அவர்களின் நிலைப்பாடு என்றால் திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிப் பேசலாமா? தேர்தலில் வாக்குப் பதிவு நாள் நெருங்கும் போது திமுக தலைவர்களில் ஒருவரான செல்வகணபதிக்கு சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் சிபிஐ தனி நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்திருப்பதையும் கலைஞர் கண்டிப்பாரா? தேர்தல் முடியும் வரை நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் ஒத்தி வைத்து விடலாமா? கலைஞர் அவர்களே!

எழுவர் விடுதலை தொடர்பான நீதிமன்ற வழக்கை அற்பத்தனமான வாக்கு வேட்டை அரசியலாக மாற்றும் திமுக தலைவரின் முயற்சியை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It