தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மற்றும் அதன் திறப்புவிழா நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தமிழ்தேசப் பொதுஉடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தனது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழாவிற்கு பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினரை அழைத்திருக்கக்கூடாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அழைத்திருக்க வேண்டும்.

பெரியார் படம் இடம் பெறவில்லை.

போன்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்க முற்பட்ட அவர், தமிழீழம் விடுதலைப்புலிகள் குறித்த நிலைப்பாட்டில் காங்கிரசுக்கும், பாஜக வுக்கும் இடையே கருதத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. அத்துடன் பாஜக, இந்து மக்கள் கட்சி போன்றவை பார்ப்பன பாசறையான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குடும்ப உறுப்புகள். எனவே பாஜக, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை அழைத்திருக்க வேண்டியதில்லை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழாவில் உரையாற்ற திருமாவை அழைத்திருக்க வேண்டும் என்பது தமிழ்தேசப் பொதுஉடைமைக் கட்சியின் நிலைப்பாடு எனக் கூறிவிட்டு பெரியார் படம் வைக்கப்படாதது தொடர்பான கேள்விக்கு, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கப்பட்டிருப்பவை தமிழகத் தலைவர்களின் படங்கள் அல்ல. அவை மறைந்த தமிழறிஞர்களின் படங்கள். பெரியார் தமிழறிஞர் அல்லர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் தமிழறிஞரா? இல்லையா என்கிற வாதம் இருக்கட்டும். ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா? மொழி அழிப்பா? முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதன் நினைவாக நிறுவப்பட்டது? முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட முற்றமானால் தமிழினத்திற்காகப் போராடிய தலைவர்கள் படங்கள் இடம்பெறுவது தானே சரியாக இருக்க முடியும்?

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்கு பதிலாக நெடுங்கணக்காக, அகர வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தந்தை பெரியார் அவர்கள் 1939ல் கூறியதை சுட்டிக்காட்டி பெரியார் தமிழ்மொழி அழிப்பு வேலைத்திட்டத்தை வகுத்தவர் அவர் படத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எப்படி வைக்க முடியும் என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார் மணியரசன்.

மேற்படி அதே கருத்தை தமிழ் இந்து நாளிதழில் தனது கட்டுரையில் வெளியிட்ட ஜெயமோகனை கண்டித்தவர்கள், பெரியாரின் கருத்தும் பிழையானது. அதை நாங்கள் ஏற்கவில்லை என்று கூறிவிட்டு செயலாற்றியிருக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

மேலும் இக்கருத்தில் பெரியாரின் நோக்கம் வேறு. பார்ப்பனர்களின் நோக்கம் வேறு என்று தப்பித்துக் கொள்ள முடியாது என இவர் எழுதும்போதே இவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. மணியரசன் சொல்வது போன்று பெரியாரின் நோக்கமும் ஜெயமோகனின் நோக்கமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

தமிழனுக்கென்று ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் இல்லை. அதாவது ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிக்க அருமையாகத்தானிருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியதாக இருக்கலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவு என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத்தக்கதாகவும் இல்லை. அறிவுக்குத் தக்கபடி பலனளிக்க முடியவில்லை. தமிழ் மொழி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் இந்த விஞ்ஞான பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மூட நம்பிகை உள்ளவனாகவும், மான உணர்ச்சி என்பது 100 க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்து வருகிறான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மொழியானது மொழியிலாகட்டும், பொருளிலாகட்டும் வேறு முறையிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும், மாறுதலும் அடையவில்லை.

உலகத்திலேயே நீதி சிறந்த இலக்கியம் "குறள்" தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்துக்கு எட்டிய வகையில் உலகத்தில் சிறந்த துறை அறிவு, தமிழிலுள்ள கணக்கு முறை அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து தமிழன் தெரிந்துகொள்ளத்தக்கதோ, தமிழனுக்குப் பயன்படக்கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும், தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

தமிழனின் பேச்சுமொழி, தாய்மொழி தமிழ் என்பதைத்தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றபடி தமிழ்நாட்டிற்கு தமிழருக்கு வேறு எந்தமொழி தேவையானது-நல்லது? அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது-பயன்படக்கூடியது? என்று என்னைக் கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது எனத் தோன்றுகிறது.

- தந்தை பெரியார் (நூல்: மொழியும் அறிவும்)

தமிழ்நாட்டில் நம் தன்மையும் பார்ப்பானின் தன்மையையும் பார்த்தோமானால் இருவர் வாழ்வின் பேத அளவு விளங்குவதோடு, அந்தப்பேதத்துக்கு பெருங்காரணம் வேறு எதுஎதுவோ இருந்தாலும் பெரிதும் அந்த ஆங்கிலம் படிக்காதது என்பது விளங்கும்.

இன்றைய தினம் ஆட்சி நம்முடையது என்று சொல்லப்பட்டாலும், இதில் இங்கிலீஷ் படித்தாலொழிய அந்த இங்கிலீஷிலும் திறமையான படிப்பாளி என்கிற தகுதி இருந்தால் ஒழிய ஆட்சியில் பங்குபெந முடியாது என்கிற நிலை இருந்து வருவதை யாராவது மறுக்க முடியுமா?

மற்றும் இன்றைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப எந்தக் காரியத்தை எடுத்துகொண்டாலும் இங்கிலீஷைத்தவிர வேறு எந்த மொழியிலாவது நாடோ மனிதனோ முன்னேறுவதற்கு ஏற்ப வசதியோ வாய்ப்போ இருக்கிறதா என்று கேட்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வறட்டுக்கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்றனரா? சொல்கின்றனரா? அப்படிச் சொல்கின்றபடி சங்கராச்சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா?

இப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ்வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு இன்றியமையாத தேவைகளுக்கு மற்ற நாட்டானோடு தலைநிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?

மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தணையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும் செய்முறையும் வேண்டுமானால் நமது தமிழ்மொழியில் என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார் (நூல்: தாய்ப்பால் பைத்தியம்)

என்று கேட்ட பெரியார்தான் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்குப் பதிலாக நெடுங்கணக்காக, அகர வரிசையில் எடுத்துகொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயமோகன், சோ வகையறாக்கள் நோக்கம் அதுவா? ஜெயமோகன், சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில திணிப்புக் கருத்துகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பது ஏன்? எனக் கேட்கும் மணியரசன் அவர்களே அப்படி இருவரது கருத்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதாக உங்களுக்குத் தெரியுமானால் அது பார்வைக் கோளாறு!

ஜெயமோகனை சுட்டுகையில் ஆங்கில "ஆதரவு" என்று மென்மைப்படுத்தியும் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஆங்கிலத் "திணிப்பு" என்று கடுமைப்படுத்தியும் எழுதும் உங்கள் எழுதுகோல் முனையே உங்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது.

தமிழை ஆங்கில வடிவில் எழுதலாம் என்று கருத்து தெரிவித்த பெரியார்தான் எந்தத் தமிழ்த் தேசிய "திலக"ங்களும் செய்யாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தனது குடியரசுப் பத்திரிகையில் 1934 ம் ஆண்டிலேயே கொண்டுவந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான பெரியாரின் உரையை சற்று உற்றுநோக்கினாலே பெரியாரை கொச்சைப்படுத்த முயலும் "பெமா" க்களின் பித்தலாட்டம் தோலுரிந்து போகும்.

தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்த நாட்டில் இந்தியை புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன் எதற்காக? தமிழ் இந்நாட்டு சீதோஷ்ன நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டு பிற எம்மொழியையும்விட தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல், மற்ற வேற்று மொழிச்சொற்களை நீக்கிப்பேசுவதால் நம்மிடையே உள்ள இழிவு நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திகொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழி அமைப்பிலுள்ள நம் நலனுக்கு புறம்பான கருத்துக்கள், கேடுபயக்கும் கருத்துக்கள் நம்மிடைப்புகுந்து நம்மை இழிவடையச்செய்கின்றன என்பதால்தான்.

நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல,

நம்நாட்டு சீதோஷ்ன நிலைமையைப் பொறுத்தும், கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்கு தமிழ்தான் உயர்ந்த மொழியாகும்.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழை புதுமொழியாக்க முயற்சிகளும் எடுத்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள் குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்படவேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்படவேண்டும். மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.

- தந்தை பெரியார் (நூல்: "மொழி-எழுத்து")

தமிழன் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்க நினைப்பது தமிழின் மீது ஏற்பட்ட வெறுப்பாலா? அல்லது ஆங்கிலத்தின் மீதான பற்றாலா? தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்கிற ஒரே வேட்கையே அன்றி அதற்கு வேறு காரணம் இருக்க இயலுமா? பெரியாரின் மேற்கண்ட பேச்சை காண்போருக்கு ஒரு பெற்றோர் தன் குழந்தை மீது காட்டும் பரிவும், அக்கறையும் எப்படிப்பட்டதோ அப்படியே தமிழினத்தை முன்னேற்ற வேண்டிய அக்கறையில் அமைந்தவைதான் பெரியாரின் செயல்பாடுகள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அதைத் தமிழின அழிப்பு வேலை என்று ஒருவர் விமர்சிபபாரேயானால் அவர் புத்தியிலே கோளாறு இருப்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். அல்லது உண்மை அறிந்தே கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட விஷமப்பிரச்சாரமாகவே அது இருக்க முடியும்.

நீதிக்கட்சியின் தலைமையை ஏற்க பெரியார் தேர்ந்தெடுத்த போலிச் சொற்கட்டு "திராவிடம்" என்கிறார் மணியரசன்.

1927 லேயே நீதிக்கட்சியின் மாநிலத் தலைமைக் காப்பாளர் பொறுப்பை பெரியாருக்கு வழங்க அக்கட்சியின் செயற்குழு முன்வந்தபோது அதை ஒப்பாமல் தட்டிக்கழித்தவர் பெரியார். நீதிக்கட்சியால் நடத்தப்பட்ட திராவிடன் ஏட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடம் வந்தபோது கூட "குடிஅரசு" கொள்கைப்படித்தான் "திராவிட"னையும் நடத்த முடியும் என்கிற நிபந்தனையோடு ஏற்றுகொண்டவர் பெரியார்.

1938 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் இருந்ததோ சிறைகொட்டடியில்!. மாநாட்டுத்லைவராக வீற்றிருந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தன் தோளுக்கு இடப்பட்ட மாலையை, மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்தின் காலில் வைத்து மரியாதை செய்தார் என்பதுதான் வரலாறு. யாருக்காகவும், எதற்காகவும் தான் கொண்ட கொள்கையை விட்டுகொடுக்காத, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் பெரியார். அவரை கொச்சைப்படுத்த முயல்வோர் காலஓட்டத்தில் கரைந்து போவது உறுதி!

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி இதோ தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்!.

மறைமலைஅடிகள்:

சாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.

பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வராயினர்.

தேவநேயப் பாவாணர்:

எல்லா துறைகளிலும், பிராமணீயத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்த்து, தமிழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கறிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே!

இலக்குவனார்:

 பெரியார் தலைமையில் நமது நாடு, திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

நாவலர் சோமசுந்தரபாரதியார்.

 பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாகவும், தமிழருக்குச் சிறப்பாகவும் உரிமையும் பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர்.தமிழர் உரிமைக்கும், தமிழக நன்மைக்கும் ஓயாது உழைத்து,மாற்றார் யாரோடும் அஞ்சாமல் ஆற்றும் போராட்டத்தை பாராட்டாத தமிழரிரார் என்பதே என் கருத்து.

வ.ரா:

செய்யவேண்டும் என்று தோன்றியதை தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப்போல தமிழ்நாட்டில் வேறுயாரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்கால பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை!.தூதுவன்!.

கல்கி:

 உலக அனுபவம் எனும் கலாசாலையை முற்றும் உணர்ந்த பேராசிரியர்!

டாக்டர் மா.இராசமாணிக்கனார்:

 தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முன்னடியராக நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு. 1936 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் "தமிழ் வாழ்க!" என்ற முழக்கம் தமிழ்நாடு முழுதும் முழங்கச்செய்த பெருமை பெரியாருகே உரியது.

கா.அப்பாதுரையார்:

 தமிழர் உண்மையிலேயே தமிழராய், தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைகொள்ளத்துணிவர். தன்னாட்சி புரிவர். அறிவாட்சியில்,அன்புக்கலையாட்சியில் முனைவர் என்பதற்கு அவர் வாழ்கையின் வெற்றி ஓர் அரிய வழிகாட்டியும், நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதன்:

 தமிழர் இயக்கத்தின் தந்தையும், பகுத்தறிவு இயக்கத்தின் தலைவருமாகிய ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களின் வாழ்கை சரிதத்தை நன்கு கவனித்துப்பார்த்தால் வள்ளுவர் வாகைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்துகாட்டும் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே என்பது இனிது புலனாகும். பெரியார் அவர்கள் குறளைப்படித்தவர்கள் என்று கூறுவது மட்டுமல்ல நன்கு ஆராய்ச்சி செய்தவர்கள் என்றும் என்னால் கூற இயலும்.

புலவர் குழந்தை:

 பெரியார் பிறவாதிருப்பரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாகரீகம் என்னும் உணர்ச்சியெல்லாம் தமிழ்மக்களுக்கு தோன்றியிரா. தமிழ் வாழ்க எனும் நெஞ்சத்துனிவு ஒருகாலும் உருவாகியிருக்காது. தமிழ் முதன் மொழி ஆனதற்து மாறாக தன் பெயரை இழந்திருக்கும். தமிழ்ப்பண்பாட்டை ஆரியப்பண்பாடு விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்.

திருக்குறள் வீ.முனுசாமி:

 பெரியாரின் நுண்ணிய வாழ்கையினைத் துருவிக்கானுவோருக்கு வள்ளுவர் கூறும் வழியினிற் செல்வோர் இவர் ஒருவரே என்பது வெள்ளிடை மலையென வெளிப்படும்.

 "தமிழை சனியன் என்று சாடுகிறார் பெரியார்!.(தமிழைப்பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதிதாசன் பாடலை இந்த இடத்தில் மறந்து விடுங்கள்)" என்று அடைப்புக்குறியிட்டதன் மூலம் நமக்கு பாரதிதாசனையும் நினைவுபடுத்தியுருக்கிறார் மணியரசன். தமிழை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாவேந்தர் தான், பெரியாரின் "மண்டை சுரப்பை உலகு தொழும்" என்றதோடு தன் வாழ்நாள் முழுதும் பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்தார் என்பதையும் அறிவோம்

பெரியாரை கொச்சைப்படுத்தும் பார்ப்பன கைத்தடிகள் அவ்வப்போது தோன்றுவதும் முறியடிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. மா.பொ.சி களின் ஆரம்ப கால சவடால்களும் பின்னர் திராவிட இயக்கத்தை நக்கிப் பிழைத்ததையும் மக்கள் மறந்து விடவில்லை.

பார்ப்பன பாரதியை தூக்கி நிறுத்த வேண்டி

"மங்கை யொருத்தி தரும் சுகமும்
 மாந்தமிழுக்கு ஈடாகுமோ தோழி?"

எனும் பாடலை நக்கலடித்து மயிலாடுதுறையில் ம.பொ.சி நடத்திய தமிழக அரசு கழக மாநாட்டில் புரட்சிக்கவிஞரை அசிங்கப்படுத்த முயன்ற அனந்தநாயகி மற்றும் சின்னஅண்ணாமலை வகையறாக்கள் ஓடஓட அடித்து விரட்டப்பட்ட கதை தெரியுமா?

மொழியை வைத்தும் பத்திரிக்கையை வைத்தும் தாராளமாக பிழைப்பு நடத்துங்கள். பெரியாரைத் தீண்டினால் பொசுங்கிப் போவீர்கள்!.

- கி.தளபதிராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It