எங்கும் மரண ஒலம்! “போலீஸ்காரங்க கண்டமேனிக்குச் சுட ஆரம்பிச்சுட்டாங்க …” என்ற அவலக்குரல் பரமக்குடி வீதிகளெங்கும் பரவி ஒலித்தது! காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1…2… என நீண்டு, மாலையில் '6' என ஊடகங்கள் கணக்குச் சொல்லின. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் சுமார் 60 பேர் இருக்கும்.

                 2011-மாவீரன் இமானுவேல் சேகரனின் 54-ஆவது வீரவணக்க நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிக்க மக்கள் தயாராகிக் கொண்டிருத்ததைப் போல, கலவரத்தை உருவாக்க காவல்துறை தயாராகிக் கொண்டிருந்ததோ என்ற நிலைமை சூழ்ந்திருந்தது. அன்றைய நாட்களில் காவல்துறையின் செயல்பாடுகளும், துப்பாக்கிகளை சுழற்றிய வேகமும் அப்படித் தோன்றின.

                                 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ.ஜான்பண்டியன், இரண்டு நாட்களுக்கு முன் அதாவது, 09.09.2011 அன்று சாதிவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மண்டலமணிக்கம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் வீட்டுக்கு, இறப்பு விசாரிக்க, “காவல்துறை அறிவுறுத்தலை மீறி தான் செல்லப்போவதில்லை” என்று வெளிப்படையாக அறிவித்த பின்னரும், அவரை தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்து, தான் திட்டமிட்ட கலவரத்துக்கு அச்சாரமிட்டது காவல்துறை. அவரை விடுதலை செய்யக் கோரி, பரமக்குடி ஜந்துமுனைச் சந்திப்பில் நின்றிருந்த இளைஞர்கள் சுமார் 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 காவல்துறையினர் நினைத்திருந்தால்…அங்கிருந்த இளைஞர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, துப்பாக்கிச்சூடுகளை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவர்களின் நேக்கம் அதுவல்ல என்பதைப் பிற்பாடு நாம் புரிந்துகொள்ள முடிந்தது. 2011-செப்டம்பர் 11 மாவீரனின் வீரவணக்க நாள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலுமொரு கருப்பு நாளாக முடிந்தது.

                 அடுத்தநாள் சட்டமன்றத்தில் அம்மையார் செயலலிதா, படுகொலை புரிந்த காவல்துறையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்கிற நோக்கில், எந்தக் குற்றமும் செய்யாத, எந்தக் குற்றச்சாட்டிலும் தொடர்பில்லாத, சாதிவெறிக் கோரப் பாசிக்கு இரையாகிப்போன அப்பாவிச் சிறுவன் பழனிக்குமார் மீது புழுதிவாரித் தூற்றியும், நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பு மக்களையே பலிகடாவாக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டு, தனது 'மேல் சாதிப்' பாசத்தை அம்பலப்படுத்திக் கொண்டார்.

 பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய 'காவல்துறை நிலை ஆணை' எதையும் பின்பற்றவில்லை காவல்துறை. கூட்டத்தைக் கலைந்து போகச் செய்ய, தண்ணீர் பீய்ச்சி அடிக்கவில்லை; இரப்பர் குண்டுகளைப் பயன்டுத்தவில்லை; முழங்காலுக்கு கீழேதான் சுட வேண்டும் என்ற காவல்நெறிமுறை விதிகளெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.

 இவ்வாறான அடுக்கடுக்கான குற்றச்செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்கள் 6 பேரின் உயிர்குடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி, சனநாயகவதிகள், மனிதநேயப் பற்றாளர்கள் பலர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

 அம்மையார் செயலலிதா, பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க ஒய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை நியமித்ததுடன், “விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க இயலாது' ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசிடம் பரிந்துரை செய்த பின் தவறிழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிக்கை வெளியிட்டு, அப்பிரச்சினை தொடர்பான அப்போதைய எழுச்சியை முனை மழுங்கச் செய்தார்.

 காலங்காலமாக விசாரணை ஆணையங்கள் அமைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் இழைத்த துரோகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

 1968-இல் கீழவெண்மணியில் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற கோர நிகழ்வை விசாரிக்க, அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களால் அமைக்கப்பட்ட கணபதி ஆணையம், “கொலையைச் செய்தவராகச் சொல்லப்படும் நபர் வசதி படைத்தவர். எனவே, அவ்வாறு செய்திருக்கமாட்டார்” என கொலையாளி கோபாலகிருஷ்ண நாயுடுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிட்டது.

 1989-இல் தேனி மாவட்டம், போடியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கக்கும்பலும், 'உயர் சாதியினரும்' கூட்டாக நடத்திய காலவரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டனர்! அக்கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட பாஸ்கரன் ஆணையம், ஆளும் கட்சி மற்றும் உயர்சாதியினருக்கு அரணாக நின்று அறிக்கை தாக்கல் செய்தது!

 1996-கொடியன்குளத்தில் சாதிவெறி-அதிகாரவர்க்கத் திமிரோடு தாக்குதல் நடத்திய காவல்துறை, மக்களின் சொத்துக்களையும் சூறையாடியது. இச்சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட‌ கோமதி நாயகம் ஆணையம், “கொடியன்குளம் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தவே இல்லை” என 'அந்தர் பல்ட்டி' அடித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதிவெறி கோரத்தாண்டவமாடிய காவல்துறைக்கு குற்றவேல் புரிந்தது!

 23.07.1999 அன்று கூலி உயர்வு கோரி போராடிய மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில், பாலகன் விக்னேசு உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடந்த இச்சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட மோகன் ஆணையம், “போராடிய மக்கள் தாமாக ஆற்றில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்” என போராடிய மக்களை இழிவு செய்து அவதூறு பரப்பும் விதமாக புளுகுணி அறிக்கை விடுத்தது.

 இவ்வாறாக 'ஆணையங்கள்' என்ன வேலையைச் செய்யும்? யாருடைய நலனுக்காகச் சேவகம் செய்யும்? என்பதை கடந்த கால வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள், சம்பத் ஆணையம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாய்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டதோடு, வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டி “சம்பத் கமிசனே திரும்பிப் போ” என்ற முழுக்கத்தையும் முன்வைத்தார்கள்!

 1999-இல் நடந்த தாமிரபரணி படுகொலையின் போது “காவல்துறை திட்டமிட்டே போராடிய மக்களை அடித்துக் கொன்று, ஆற்றில் வீசிவிட்டனர். அதற்கான தடயங்கள் இறந்தவர்களின் உடலில் உள்ளது. ஆனால் உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் அதை மறைத்துவிட்டார்கள். எனவே மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவுவிட வேண்டும்” என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதி, “அரசு ஊழியர்கள் மீது சந்தேகப்படக் கூடாது” என்ற புது 'லாஜிக்கைச்' சொல்லி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். அந்த நீதிபதி வேறுயாருமல்ல, பரமக்குடி படுகொலையை விசாரிக்க அரசால் நியமிக்கப்பட்ட 'நீதியரசர்' சம்பத் தான்!

 பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த மக்களனைவரும் சமபத் ஆணையத்தைப் புறக்கணித்துவிட்ட நிலையில், 'நீதியரசர்' சம்பத் யாரிடம் விசாரித்து, இப்படியொரு புளுகு அறிக்கையைத் தயாரித்தாரோ தெரியவில்லை!

 'நீதியரசர்' சம்பத் “துப்பாக்கிச் சூடு சரிதான்” என்கிற ரீதியில் தனது அறிக்கையை 07.05.2013 அன்றே சமர்ப்பித்து விட்டார்! எனினும் அதை வெளியிட அம்மையார் செயலலிதா தேர்ந்தெடுத்த நாள் (அக்டோபர்-30) 'யாரையோ' திருப்திப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார் என்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

 பரமக்குடி படுகொலைகள், காவல்துறை திட்டமிட்டு நடத்திய படுகொலைகள் என்றும், துப்பாக்கிச் சூட்டை கண்டிப்பாகத் தவிர்த்திருக்காலம் என்கிற செய்தியெல்லாம் சிறுபிள்ளைகூட அறியும். ஆனால் 'நீதியரசர்' சம்பத், “துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர போலிசார் தவறியிருந்தால் ... தென்மாவட்டம் முழுக்க சாதிக்கலவரம் பரவி இருக்கும்…” என்றும், “நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும் துப்பாக்கிச்சூடு அவசியம்” என்றும் “அது நியாயமானது” என்றும் துளியும் மனச்சாட்சியின்றி அம்மையார் செயலலிதா சட்டமன்றத்தில் சொன்னதையே அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார்!

 சனநாயக நாட்டில் காவல்துறை (அரசு) அடக்குமுறைகளுக்கு எதிரான, போராட்டங்கள் நாள்தோறும் நடந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவந்து 'அமைதியை' நிலைநாட்ட துப்பாக்கிச்சூடு அவசியமென்றால், இந்தியத் துணைக்கண்டத்தில் மனித சமூகமே இருந்திருக்காது!

 அநீதியான படுகொலைகளைச் சரியானது தான் என்று மனிதநேயமே இல்லாமல் நியாயம் கற்பிக்கிறார் என்றால், சம்பத்தை நீதியரசர் என்று சொல்வதா? கொலைகாரக் காவல்துறையின் 'ஏஜெண்ட்' என்று சொல்வதா?

 “கலவரம் செய்தவர்களின் நடத்தை விலங்கு நடத்தையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதுடன் பண்பாட்டிற்கு முரணாகவும், எல்லை கடந்ததாகவும் உள்ளது. இது முற்றிலும் மன்னிக்கத்தக்கது அல்ல” என்று சொல்லும் 'நீதியரசர்' சம்பத் அவர்களுக்கு, அன்றைய நாளில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மட்டும் நாகரீக சமூகத்தை எடுத்துக்காட்டியதா என்று தெரியவில்லை!

 மேலும், “இத்தகைய சூழ்நிலைகளில் காவல்துறையினர் நடந்து கொண்ட மெச்சத்தக்க முறையை இந்தக் கமிசன் பாராட்டுகிறது” என்று புளகாங்கிதம் அடையும் 'நீதியரசர்' சம்பத்துக்கு துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கொல்லப்ப‌‌ட்ட அந்த இளைஞர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக்கூட மனமில்லை.

 1500 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் ஒரிடத்தில், “இந்தக் கலவரத்தின் போது காவல்துறையினர் மிகவும் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலும், சில காவல்துறையினர் காவல்நிலை உத்தரவுகளுக்கு மாறாக, கலவரத்துக்குப் பிறகு சூழ்ந்து கொண்டவர்களை கொலைவெறியுடன் தாக்கியது மனதுக்கு உகந்ததாக இல்லை” என காட்டுவிலங்காண்டித்தனமாக நடந்துகொண்ட காவல்துறையினரை, மனம் கோனாத வகையில் மென்மையாகக் கண்டிக்கும் 'நீதியரசர்' சம்பத், அந்தக் கொடூரத் தாக்குதலில்தான், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் தீர்ப்புக்கனி கொல்லப்பட்டார் என்பதைச் சொல்ல மறுக்கிறார். தீர்ப்புக்கனி எப்படி இறந்தார் என்று 'நீதியரசர்' சம்பத்துக்குத் தெரியவில்லையாம்! மேல் விசாரணை வேண்டும் எனக்கூறி முடித்து விட்டார்.

 மேலேகண்ட, காவல்துறையை மென்மையாகக் கண்டிக்கும் சம்பத் ஆணையத்தின் அப்பகுதியை விசாரணை ஆணையத்தின் வரம்பை மீறி இருப்பதாகக்கூறி, மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் நிராகரித்துவிட்டார். ஒர் ஆணையம் செய்த பரிந்துரையை தலைமைச் செயலாளர் தன்னிச்சையாக நிராகரித்திருப்பது நீதிக்குப் புறம்பானது; கண்டிக்கத்தக்கது.

 படுகொலை தாண்டவமாடிய காவல்துறையை மென்மையாகக்கூட கண்டிக்கக் கூடாது என்கிற ரீதியில், ஆணையப் பரிந்துரையை எதிர்பார்க்கும் அரசு எப்படி நியாயமான அறிக்கையை வெளிக்கொணரும்?

 பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரும் சனாதன தர்மம்கூட அவ்வறிக்கையில் இல்லை என்பதுதான் அவலத்தின் உச்சம்.

 இழப்புக்களைத் தாங்கி வேதனையின் விளிம்பில் நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சம்பத் ஆணையத்தின் இந்த அறிக்கை, அவர்களின் இதயத்தில் ஈட்டியாய்க் குத்தியிருக்கிறது. மொத்தத்தில் சம்பத் ஆணையத்தின் அறிக்கை என்பது காவல்துறையினருக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்து, நற்சான்று வழங்கி, ஊக்குவிப்பதாக இருக்கிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதிய வன்மத்தை உமிழ்வதாக இருக்கிறது.

 'கமிஷன்' என்றாலே, ஆதிக்கச் சாதியினரால் - காவல்துறை ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களை கைகழுவி விடும் ஏமாற்று யுக்தியே என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது அரசு!

 மேலும் பரமக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு சி.பி.ஜ விசாரணை கோரி, பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 23.12.2011 அன்று சி.பி.ஜ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையும் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருப்பதால் ஆறுபேரின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா? என்ற ஜயம் மக்களிடையே வேர்விடத் தொடங்கி விட்டது.

 'நீதியரசர்' சம்பத் ஆணையத்தின் அநீதியான - ஒருதலைபட்சமான அறிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்க வேண்டும். அப்போராட்டங்கள் அரசின் இயங்குதலைக் கேள்விக்குறியாக்க வேண்டும்.

 அரசும்-அரசுத்துறைகளில் கோலோச்சியிருக்கின்ற ஆதிக்க சாதியும், அதிகார வர்க்கத் திமிரோடு, படுபயங்கரமான, மனிதநேயமன்ற கொடுஞ்செயலைச் செய்துவிட்டு அதையே சரி என்று சான்று பகரும் அற்பத்தனமான இந்த அரச கட்டமைப்பை நிர்மூலமாக்கி, பொதுவுடமை தமிழ்த்தேசம் படைக்க, உழைக்கும் மக்கள் அனைவரும் சாதி- மத- வர்க்க வேறுபாடுகளைக் கடந்து புத்துயிர்ப்போடு எழ வேண்டும். அந்த எழுச்சிதான் பரமக்குடி படுகொலை போன்ற அரசபயங்கரவாத வன்முறையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்.

- தங்க.செங்கதிர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It