"எவன் கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடுறான்? எல்லாம் சப்பாணின்னு தான் கூப்பிடுறான்" என்ற பதினாறு வயதினிலே திரைப்படக் காட்சி போல, பாஜகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லையென்றாலும் நானும் பாஜக ஆதரவாளன் தான் என கெஞ்சாத குறையாக கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் தமிழருவி மணியன். காந்தி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அமைப்பை வைத்துக்கொண்டு இப்போது அதை மூட்டை கட்டி பாஜக கடையில் கொண்டு போய் வைத்துள்ள மணியன், பிரேக் பிடிக்காத ரயில் போல சமூகத்தை மோடி பக்கம் இழுத்துச்செல்ல வேண்டும் என்று படாதபாடு பட்டு கட்டுரைகளை அள்ளி விடுகிறார்.

tamilaruvi_maniyan_415தமிழருவி மணியனுக்கு இப்போது பிடிக்காத ஒரே சொல் மதச்சார்பின்மை தான். மதவாதிகளின் தோளில் கைபோட்ட பின், கொள்கையாவது, புடலங்காவது என கிளம்பி விட்ட தமிழருவி, மூன்றாவது அணி இந்தியாவில் வந்து விட்டால் நாடே அதள பாதாளத்திற்குள் சென்று விடும் போல கதறி துடித்துள்ளார். நரேந்திரமோடியை விட்டால் இந்தியாவிற்கு வெறுகதி மோட்சமேயில்லை என்பது போல துள்ளாட்டம் போட்டுள்ளார்.

இந்தியாவின் அரசியலமைப்பின் முகப்புரையிலேயே " இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம், பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆகவே,தான் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் பாஜக பரிவாரங்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று இடதுசாரிகள் மட்டுமின்றி முற்போக்கு சக்திகள் வலியுறுத்துகின்றன. இதனால் ஆத்திரமுற்று மதச்சார்பின்மை கொள்கைகள் மீது மண்வெட்டியால் ஒரே போடாகப் போடுகிறார் தமிழருவி மணியன்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான காங்கிரஸ், பாஜக கட்சிகளை எதிர்த்து மாற்றுக்கொள்கைகளைக் கொண்ட அணி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்படியான பணியை மேற்கொண்டுள்ளதைப் பார்த்தவுடன், இரத்தம் கொதித்து கட்டுரை என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திட்டித் தீர்த்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை அறிமுகப்படுத்தியது யார் என்ற கேள்வியை முன்வைக்கும் காந்தியவாதி தமிழருவி மணியன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தந்து களப்பணியாற்றினார்? அப்படியென்றால் அவர் காந்தி கொள்கைகளை விட்டு விட்டு காவிக்கொடியைப் பிடித்து விட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

தமிழருவி மணியன் விழுந்து விழுந்து ஆதரிக்கும் திருவாளர் மோடி என்ன சேற்றில் பூத்த செந்தாமரையா? அவர் சார்ந்த கட்சியான பாஜக ஊழல் நிழல் படியாத கற்பகத்தருவா? காந்தியவாதி என்று சொல்லிக்கொண்டு கோட்சேவின் சிஷ்ய கோடிகளின் நிழல் பிடித்துள்ள தமிழருவி மணியனுக்கு காந்தியவாதி அன்னா ஹஸாரே என்பவர் கூறிய கருத்துக்களை பதிய வைக்க முயற்சிப்போம்.

" நரேந்திர மோடியின் அரசு ஒரு இலட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளது என்றும், இந்த ஊழல் கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிபுரியில் வேளையில் நடந்ததாகும் என்று ஹஸாரே கூறியுள்ளார். அத்தோடு அவர் விடவில்லை. "சுஜ்லாம் சுஃப்லாம் யோஜ்னா திட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டாட்டாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதியளித்ததால் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிபபாவ் பவர் நிறுவனம் மற்றும் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கும் குஜராத் அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று மோடி ஆட்சியின் பராக்கிரம செயல்களை ஹஸாரே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

ஊழலைப் பற்றி பேசும் தமிழருவி மணியன், கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேட்க நெஞ்சுரம் இருக்கிறதா? லோக் ஆயுக்தாவை நியமித்தால் தனது ஆட்சியின் ஊழல் உலகம் அறிந்து விடும் என்பதால் தான் அதனை நடைமுறைப்படுத்தாமல் மோடி இன்னும் இழுத்தடித்து வருகிறார். இந்த யோக்கிய சிகாமணி குறித்து ஏன் தமிழருவி மணியனின் பேனா மை சிந்த மறுக்கிறது?

குடிக்கு எதிராக இயக்கம் நடத்தும் தமிழருவி மணியன் மகாத்மாவின் மண்ணில் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராயத்தைப் பற்றி கவலை கொண்டுள்ளாரா? அந்த குட்டையும் போட்டு அன்னா ஹஸாரே உடைத்துள்ளார். "மகாத்மா காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ, அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்..? ஒரு நாளைக்கு குஜராத்தில் 4.5 கோடி ரூபாய்க்கு பால் விற்பனையாகிறது. ஆனால், 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. குஜராத்தில் பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது. அஹ்மதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது. குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரணமதுவிலக்கு அமலில் உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச்சாராயத்துக்கும் பிரபலம் ஆகிவிட்டது" என்று ஹஸாரே நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். குஜராத்தைப் போல இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக நரேந்திர மோடி மாற்றுவார் என்று பாஜக பரிவார சேனைகளோடு பஜனை பாடும் தமிழருவி மணியன், கள்ளச்சாராயம் குறித்து கட்டுரை வரைவது தானே?

நவீன தாராளமயக் கொள்கைகளால் அனைத்துத் துறைகளிலும் பெருக்கெடுத்து ஓடும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினால், நீங்கள் திரட்டும் அணியில் உள்ள தேவகவுடா, ஜெகன்மோகன் ரெட்டி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் யோக்கியமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

இந்தியாவிலேயே அதிகமான ஊழலில் திளைக்கும் அதிகாரிகளைக் கொண்ட மாநிலம் குஜராத் தான். ஊழல் எதிர்ப்பு பிரிவின் டிஜிபி அமிதாப் பதக் என்பவர் தெரிவித்துள்ள கருத்துகள் மணியனின் கண்களுக்குத் தெரியவில்லையா? "குஜராத்தில் பெரும்பாலான உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவு காவல்துறை பதிவு செய்த வழக்குகளில், பெரும்பாலான உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஊழல் புகார்கள் அதிகம் என்று குற்றம்சாட்டி உள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்ற மாநிலங்களை விட குஜராத்திலேயே அதிகம். உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு தான் ஊழல் அதிகம் என்று அவர் கூறியுள்ளார். இது தான் குஜராத்தின் உண்மையான முகம். இந்த ஊழல் பெருச்சாளிகள் குறித்து மணியன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?

வளர்ச்சி நாயகன் போன்று மோடியை வரைந்து காட்டும் தமிழருவி மணியனுக்கு ஐக்கிய நாட்டு சபையின் குறிப்பை தருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. "குஜராத்தில் கர்ப்பிணிகள் இறப்பு, குழந்தைகள் இறப்பு, ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆகியோர் சுகாதாரமின்மையால் அதிக அளவில் இறக்கின்றனர்" என்று கூறியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் வறுமை ஒழிப்பு நாடுகளின் இயக்குநர் கெய்ட்ஸன் வைஸன் கூறியுள்ளதாவது "கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் விவசாய தொழிலாளர்களாகவும், 40 சதவீதம் பேர் மற்ற தொழிலாளர்களாகவும் மிகவும் வறுமையில் காணப்படுகின்றனர். வீடுகள் அடிப்படை அளவாகவும், குறைந்த கல்வியறிவு கொண்டு கடுமையான வறுமையில் இருக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"குஜராத் மாநிலத்தில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக எடை குறைவாக பிறக்கிறது. ஊட்டச்சத்து உணவு அளிக்கும் திட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை" என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்த தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில சட்டமன்றத்தில் சிஏஜி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் வருமாறு: "குஜராத் மாநிலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் பயனடைய 2 கோடியே 23 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், 63 லட்சம் பேரை இந்தத் திட்டம் போய்ச் சேரவில்லை. இத்திட்டத்தின்படி ஆண்டொன்றுக்கு 300 நாட்கள் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 96 நாள்களே அவை வழங்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக இருக்கிறது. அதே போன்று, வளர் இளம் பெண்களில், 48 சதவீதத்துக்குப் பதிலாக 27 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். மொத்தம் 75 ஆயிரத்து 480 அங்கன்வாடி மையங்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 52 ஆயிரத்து 137 மையங்களே உள்ளன. அதிலும், 50 ஆயிரத்து 225 மையங்களே செயல்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக ஒரு கோடியே 87 லட்சம் பேர் திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட ஓட்டை,உடைசலைக் கொண்ட குஜராத் மாநில முதல்வரைக் கொண்டு தான் இந்தியாவின் பிரதமர் கனவு நாற்காலியை பின்னிக்கொண்டிருக்கிறார் தமிழருவி மணியன். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் ஒரு காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. "இந்தியாவின் வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க" என்று ஒருவர் குரல் கொடுக்க, நடிகர் வடிவேலுவைப் பார்த்து லிவிங்ஸ்டன் சொல்வார் "கொடுத்த காசை விட கூடுதலாக கூவுறாண்டா" .

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It