கிரிக்கெட் பார்ப்பவர்களில் பல வகை உண்டு. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள், இறுதிப் போட்டிகளை மட்டும் பார்ப்பவர்கள், இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் பார்ப்பவர்கள், இந்திய பேட்டிங்கை மட்டும் பார்ப்பவர்கள் என்று பல வகைகள் உண்டு. இன்னும் சிலர் உலக கோப்பை போட்டியை மட்டும் பார்ப்பார்கள். கடந்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் என்ற பெயரில் “விளையாடப்படும்” ஒரு வகை உடனடி ஆட்டத்தை பார்ப்பவர்களும் பெருகி இருக்கிறார்கள்.

நான் இதில் கொஞ்சம் தீவிர ரகம். தீவிரம் என்றால் ஐந்து நாள் டெஸ்டு போட்டியை முதல் நாள், முதல் பந்தில் இருந்து, இறுதி நாள் இறுதிப் பந்து வரை ஒன்றுவிடாமல் பார்க்கும் ரகம். அந்தப் போட்டியில் இந்தியா ஆடினாலும் சரி, சிம்பாபெ ஆடினாலும் சரி, டிராவானாலும் சரி, மேற்கு இந்தியத் தீவுகளில் இந்திய நேரப்படி முன்னிரவு துவங்கி பின்னிரவு வரை நடக்கும் போட்டி ஆனாலும் சரி, நியுசிலாந்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு துவங்கி நடக்கும் போட்டியானாலும் சரி, அதே தீவிரம் தான். என்னைப் போன்று நாட்டில் பல்லாயிர‌ம் பேர்கள் இருப்பார்கள் என்ற உண்மை என்னைப் போன்றவர்களை உற்சாகப்படுத்துகிற‌யது.

நான் முதலில் கிரிக்கெட்டை அதன் தன்மைகளை ஓரளவு உணர்ந்து பார்த்தது 1986ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில்தான். அப்போது நான் உயர்நிலைப் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். அக்காலத்தில் கவாஸ்கரும், கபில் தேவும் இந்திய கிரிக்கெட்டின் அடையாளங்கள். உலக அளவில் ரிச்சட்ஸ், ஆலன் பார்டர், போத்தம், இம்ரான் கான், போன்ற மூத்த அனுபவ விரர்கள் பவனி வந்தார்கள். அதன் பிறகு படிப்படியாக கிரிக்கெட்டின் நுட்பங்களை தெரிந்துகொண்டு 90களில் அதிக முனைப்புடன் பார்க்கத் துவங்கினேன்.

என் காலத்தில் இன்றைய 20-20 போட்டியை விட இந்திய-பாக்கிஸ்தான், இந்திய-ஆஸ்திரேலிய போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன. குறிப்பாக சார்ஜாவில் நடக்கும் தொடர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய, பாக்கிஸ்தான் நாடுகளின் கவுரவம் கிரிக்கெட்டில் இருப்பதாக மாணவர்களும், இளைஞர்களும் கருதிய காலம் அது. இது ஒரு பக்கம் இருக்க 90களில் இலங்கை ஜெயசுரிய, கலுவித்தரன போன்றவர்களைக் கொண்டு முதல் ஒவர்களில் விளாசித் தள்ளும் முறையை முன்னெடுத்தது. அதன் வளர்ச்சியே இன்றைய 20-20 போட்டிகள் என்று தோன்றுகிறது. 90களில் இலங்கை அணி முன்னேறி உலக கோப்பையை வென்றது. அதே 90களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தேய்ந்து போனது.

உலக பேட்ஸ்சுமென்களில் தெண்டுல்கர், லாரா, மார்க் வாக் ஆகியோருக்கிடையே முதலிடத்திற்கான போட்டி இருந்த்து. பந்து வீச்சாளர்களில் மெக்கிராத், வால்ஸ், வசிம் அக்ரம், வக்கார் யுனுஸ், வார்னே, சக்குலின் முஸ்தாக், முரளிதாரன் போன்றோருக்கிடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஹிலி, மொங்கியா போன்ற தரமான கீப்பர்கள் இருந்தனர். ஆனால் இப்படிப்பட்ட அந்த 90களிலும் கூட, 80களில் இருந்த உலகத் தரம் வாய்ந்த ஆல் ரவுன்டர்கள் இல்லை என்பது எங்களைப் போன்றோரின் விவாதப் பொருளாக இருந்தது.

இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், இன்றைய கிரிக்கெட் ரசிகனுக்கு இது போன்ற விரர்களோ, ஒப்பீடுகளோ தேவைப்படுவதில்லை என்பதினால் தான். இன்றைய கிரிக்கெட் ரசிகனுக்கு பவுன்டிரிகளும் சிக்சர்களும் தான் தேவை. 300, 350 ரன்கள் எடுப்பதும், அதை எதிர் அணி சேசிங் செய்து முறியடிப்பது என்பதெல்லாம் இன்றைய கிரிக்கெட் ரசிகனுக்கு ஒரு பொருட்டே இல்லை. பந்து வீச்சாளர்கள் என்ற இனம் காணாமல் போய்க்கொன்டிருப்பதை பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. இன்றைய கிரிக்கெட் ரசிகனுக்கு கிரிக்கெட் ஒரு மசாலாப் படம் போன்றுதான். கிரிக்கெட் பார்க்கும் அந்த நேரம் முழுவதும் அவர்களுக்கு விறுவிறுப்புதான் தேவைப்ப‌டுகிறது. கிரிக்கெட்டில் சிறிது விளம்பரம் போயி, விளம்பரத்தில் கிரிக்கெட் என்றாகி, இன்று கிரிக்கெட்டே ஒரு விளம்பரக் கருவியாகிவிட்டது.

இந்தச் சுழலில் சச்சின் தெண்டுல்கரின் ஓய்வை அந்த தனிப்பட்ட வீரரின் ஓய்வாக என்னால் பார்க்க முடியவில்லை. கடந்த நூற்றாண்டின் இலக்கணம் மீறா கிரிக்கெட்டின் ஓய்வாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. தெண்டுல்கர் ஓர் ஒப்பற்ற வீரராக திகழ்ந்ததிற்கு உண்மைக் காரணம் அவரது திறமையை விட அவரது கிரிக்கெட்டின் மீதான காதல் தான். அவர் கிரிக்கெட்டின் ஒரு முழுமையான ரசிகன். அதற்கு பின்பு தான் ஆட்டக்காரர் என்பது என் கருத்து. இத்தகைய அர்பணிப்பை இனி காண்பதென்பது அரிது. சற்று உயர்தட்டு வர்க்க குடும்பப் பின்னணி, மும்பாய் நகர சூழல், அவரது விளம்பர சம்பாத்தியம் போன்ற விமர்சனங்கள் தெண்டுல்கர் மீது இருந்தாலும், அவரது தனி மனித ஒழுக்கம், விடா முயற்சி, தொடர் பயிற்சி, பொறுப்பு, தன்னடக்கம் என்னும் பண்புகளை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

கிரிக்கெட்டின் மாபெரும் மாணவரான தெண்டுல்கரின் ஓய்வு எங்களைப் போன்றோரின் கிரிக்கெட்டிற்கும் ஓய்வு. பிராட்மென், கேரி சோபர்ஸ், ரிச்சட்ஸ், கவாஸ்கர், ஆலன் பார்டர் ஆகியோரிடம் இருந்து கிரிக்கெட்டை வாங்கிய தெண்டுல்கர் அதை தன்னிடம் இருந்து வாங்க ஆளில்லாமல் அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறார். இனிவரும் கிரிக்கெட்டில் கூட்டம் இருக்கும், கூச்சல் இருக்கும், கூத்து இருக்கும். ஆனால் கிரிக்கெட் இருக்குமா என்று தெரியவில்லை.

- இரா.சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It