இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்காக இந்திய அரசியல் கட்சிகள் பிரதமர் வேட்பாளர்கள் அறிவிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு, பூத் கமிட்டிகள் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழுக்கள் அறிவிப்புகள், கட்சிகளின் தேர்தல் மாநாடுகள், தேர்தல் கால இலவச அறிவிப்புகள் போன்ற பல வகையான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்ற சூழலில், தமிழகத்தை ஆளும் அ.தி.முக அரசும் (கட்சியும்) சில அரசியல் ஆலோசர்களின் ஆலோசனைகளையும் பெற்று, தேர்தல் நேரப்பணிகளையும் முடுக்கி விட்டிருக்கிற சூழலில், தற்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவ மக்களின் ஓட்டுக்களைப் பெற, தமிழக அரசு பல அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

காவிரி பிரச்சனைக்கு தமிழக அரசே (அ.தி.முக அரசே) 1990களில் ஆட்சியில் இருக்கும் போது, மத்திய அரசிற்கு எதிராக களத்தில் இறங்கி போராடாடியது போல, இந்திய மீனவர்களை, சுண்டைக்காய் நாடான இலங்கை தொடர்ந்து அடித்து கொல்லுகின்றதை, துன்புறுத்துவதை, மீனவர்களின் உடைமைகளை பறிப்பதை கண்டித்து தெருவிற்கு வந்து போராடாமல், முந்தைய கருணாநிதி அரசு மீனவர்களை ஏமாற்ற பல ஆண்டுகளாய் மாதம்தோறும் பல கடிதங்களை எழுதியதுபோல, தற்போதைய அ.தி.மு.க அரசும் வாரம்தோறும் கடிதம் எழுதி அதை ஒரு அரசின் ஒரு சடங்கு நடவடிக்கையாக, தமிழக முதல்வரின் கூடுதல் பணியாக மாற்றியுள்ளது .

இந்தச் சூழலில், தமிழக அரசு, தமிழக கடலோரங்களில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளின், காவல்துறையின் துணையோடு நடந்து வந்த கனிம மணல் கொள்ளையை, அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திய ஆய்வின் அடிப்படையில் முறைகேடுகள் இருப்பதாகக் கண்டறிந்து கனிம மணல் அள்ள தற்காலிகத் தடை விதித்து ஆணை பிறப்பித்து இருக்கிறது.

தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தற்காலிக மகிழ்ச்சியாகத்தான் தெரிகிறது. கனிம மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு இருப்பதை உயர்திரு. திரு. ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உறுதி செய்த பிறகும், அந்த ஆய்வு அறிக்கையை இதுவரை வெளியிடாமல், மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் அதிபர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல், அவர்களின் சட்டவிரோதமான, குறுக்கு வழியில் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்யாமல், அவர்களின் மணல் நிறுவனங்களுக்கு சீல் வைக்காமல், தமிழக அரசு கனிம மணல் எடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்பது வெறும் கண்துடைப்பு வேலையாக, தேர்தல்கால, ஓட்டுவாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்கிற உணர்வு மீனவ மக்கள் மத்தியில் மேலோங்கி எழுந்துள்ளது.

கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில், போராடும் மக்களில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும், மக்களின் அச்சம் தீரும் வரையிலும் அணுஉலைப் பணிகளை சில மாதங்கள் நிறுத்தி வைத்துவிட்டு, சங்கரன்கோவில் சட்டமன்றத் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த மறுநாளே, மக்களின் அச்சங்கள் நீங்கிவிட்டன என்று தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிய அமைத்த, தமிழக முதல்வரின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள, அதை நம்ப, ஏற்றுக் கொள்ள மீனவர்கள் நடுவில் பெரும் தயக்கம் இருக்கிறது. ஏனெனில், அணுஉலை பிரச்சனை போல கனிம வளப்பிரச்சனையிலும், நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை எடுக்கப்படும் நடவடிக்கையாக இந்தச் செயல்பாடு இருக்குமோ, தமிழக முதல்வர் அவர்களின் இந்த நிலைப்பாடு என்று எண்ணத் தோன்றுகிறது.

விவசாயிகளின் பிரச்சனைகளான, கெயில் பிரச்னை, மீத்தேன் வாயு எடுக்கும் பிரச்சனைகளுக்கு, விளைநிலங்களில் நிலக்கரி எடுக்கும் பிரச்சனை போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு தற்காலிகமாக ஆய்வுக் குழுக்களை ஏற்படுத்தி, அந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காணாமல், அவைகளை ஒத்திப் போட்டிருப்பது போல கனிம வளப்பிரச்சனையும் அமைந்து விடுமோ, நாடாளுமன்றத் தேர்தலில், மீனவர்களின் வாக்குகளைப் பெற்ற பிறகு, தமிழக முதல்வர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வரோ என்கிற ஐயப்பாடு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் அவ்வப்போது மேடைகளில் சொல்லுவது போல, எனது அரசு மக்களுக்காகத் தான் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையை கொண்ட அரசாக இருக்கமானால், இந்தத் தாரக மந்திரத்தின் அடிப்படையில் உறுதியாக இயங்குமானால்...,

தமிழக அரசு! உடனடியாக

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கனிம வள கொள்ளை குறித்த, கனிம சட்ட விதி மீறல்கள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த திரு. ககன்தீப்சிங் பேடி இ.ஆ..ப. அவர்களின் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.

சட்ட விரோதமாக கனிம மணலை கொள்ளை அடித்து, நாட்டிற்கு பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திய கனிம ஆலை அதிபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் செய்த பொருளாதார குற்றத்திற்காக அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அவர்களிடம் இரு மடங்கு அபதாரம் (தண்டம்) விதிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத கனிம மணல் கொள்ளைக்கு துணையாக நின்று, அரசிற்கு அவப்பெயரையும், நாட்டிற்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளையும் கைது செய்து அவர்களின், சொத்துக்கள் குறித்த ஆய்வையும், தணிகையையும் மேற்கொள்ளவேண்டும்.

கனிம மணல் நிறுவனங்கள் தங்கள் குடோன்களில் பதுக்கி வைத்துள்ள சட்ட விரோத கனிம மணல் இருப்புகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு அமைத்திருக்கிற ஆய்வுக் குழுக்களில் மீனவ மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவர்களும் அந்தக் குழுவில் இடம்பெறச் செய்யவேண்டும்.

இந்தக் கனிம மணல் கொள்ளையினால் இயற்கைக்கு, (LOSS OF ECOSYSTEM SERVICE) விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மணல் நிறுவனங்களிடம் (அவர்களிடம்) இருந்தே அரசு பெற்றுத் தர வேண்டும்.

கனிம மணல் குறித்து இதுவரையிலும் முப்பது ஆண்டுகளாக பொதுவிசாரணையே நடத்தாமல் ,சுற்றுச்சூழல் சட்டங்களின் அடிப்படையில், அறிவியல் ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கனிம மணல் கொள்ளையினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சுகாதாரச் சீர்கேடு குறித்த ஒரு நல ஆய்வு அறிக்கையை (HEALTH IMPACT STUDY) பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட நம்பத்தகுந்த நடவடிக்கைகள் தான் மீனவர்கள் மத்தியில் உங்களின் அரசு குறித்த எண்ணங்களை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும்.

- ம.புஷ்பராயன், அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு. தமிழ்நாடு

Pin It