பொதுவாக இப்படிப்பட்ட தலைப்புக்களில் பொதுக் கட்டுரை எழுதுவது என்பது மிக எளிதான வேலைதான். பெரியாரின் சிறப்புகளை எல்லாம் விதந்து கூறி, போற்றிப் பரவி “அய்யாவே தலைவர்!” என முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் ஒருவேளை அக்கட்டுரை விழா மலரின் பக்கங்களை நிரப்பப் பயன்படலாம். ஆனால் நம் முன்னே இன்று கனலும் நடப்புகளும் உண்மைகளும், கருகிச் சீரழியும் தமிழர் வாழ்வும், அழுகும் அரசியலும் இந்தத் தலைப்பை இப்படி லேசாக அணுக முடியாதபடிச் செய்துள்ளன. கல்வி நேர்மையும் சமுதாயப் பற்றுறுதியும் உடைய ஓர் உண்மையான பெரியாரியல்வாதிக்கு முன்னால், இந்தத் தலைப்பு ஒரு செய்தி வாக்கியமாக இல்லாமல், வினா வாக்கியமாக அமைகிறது. 1. பெரியாரா இன்றும் தேவைப்படுகிறார்? 2. பெரியார் இன்றுமா தேவைப்படுகிறார்? 3. பெரியார் இன்றும் தேவைப்படுகிறாரா?

periyaarஇந்த மூன்று வினாக்களும் இடைக்காலத் தமிழ்ப்புலவர்களின் சொல் விளையாட்டுக்கள் அல்ல; தத்துவம், காலம், நடைமுறை ஆகியவற்றின் இயங்கியல் விளைவுகள் ஆகும். “இன்றைய தேவைகளின்” தன்மையை உணர்ந்து கொண்ட ஒரு சமூக விஞ்ஞானி “பெரியாரா?” என்ற முதல் கேள்வியைக் கேட்கிறான்; இவன் ஓர் கறாரான அரசியல்வாதி! “இன்றுமா?” என்ற கேள்வியைக் கேட்பவன் ஓர் வரலாற்று ஆசிரியன்; இவனைப் பொருத்தவரை பெரியார் குறிப்பிட்ட காலத்தின் குறியீடு மட்டுமே! சமூக அக்கறை உள்ள, நடைமுறை அரசியலில் தவறாமல் பங்குபெறும் ஒரு சாதாரணக் கட்சி ஊழியன் “தேவைப்படுகிறாரா?” என்ற கேள்வியைக் கேட்கிறான்; இவனுக்குத் தேவை உடனடி விளைவுகள்! ஆக “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்ற தலைப்பு, புரட்சி நடவடிக்கையால் நடைமுறையில் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மான ஆவணத்தின் கருப்பொருளாக அமையும் விவாதமாகும். ஒரு மலருக்கான சிறு கட்டுரை ஒன்றில் இதை எழுதி முடித்துவிட முடியாது. எனவே, இத்தலைப்பைப் “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் - அரசியல் தீர்மான விவாதத்திற்கான சில முன்னுரைக் குறிப்புகள்” என்று மாற்றிப் படிக்கும்படி வேண்டுகிறேன்.

பெரியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே கூடச் சரியாக, உண்மையாக அடையாளப்படுத்தப்படவில்லை. இதில் பெரும் பங்கு ஏற்க வேண்டியவர்கள் பெரியாரியவாதிகளே ஆவர்! “கடவுள் இல்லை என்று சொன்ன நாஸ்திகர், பார்ப்பன துவேஷி, வயதான காலத்தில் சின்னப் பெண்ணைக் கலியாணம் செய்தவர்” என்ற மூன்றாக மட்டுமே பெரியார், அவர் எதிரிகளால், அடையாளம் செய்யப்பட்டார்; செதுக்கிக் காட்டப்பட்டார். எதிரியின் சூழ்ச்சியை அறியாத நாத்திக பஜனைக் கூட்டம், இந்த அடையாளத்தையே “அனுமன் பிடி”யாகப் பிடித்துத் தொங்கியது.

“பெரியார் அடிப்படையில் ஓர் கம்யூனிஸ்ட்; கம்யூனிச சமுதாயத்தைத் தன் இறுதி இலக்காகக் கொண்டவர்; இதற்கான வேலைத்திட்டங்களில் நிபந்தனைகளற்ற கலகக்காரராகவும் போராட்ட வீரராகவும் விளங்கியவர்” என்ற உண்மையை எதிரி - மேல்சாதிக்காரன் -அவன் வாழ்க்கைத் தேவையில் இருந்து மறைத்தான்; திராவிடத்தான் - பிற்படுத்தப்பட்ட மேல்சாதிக்காரன் தன் சொந்த நலன்களைக் கிராமங்களில் தக்க வைத்துக் கொள்வதற்காக மறைத்தான்; சாதாரண ஊழியன், இன்றுவரை அறியாமையில், இந்த உண்மையைச் சுகமாக உணராமல் இருக்கிறான்; உணர்ந்தவன் ஒதுக்கி வைத்து வருகிறான். ஆக, பெரியார் அவர் வாழ்நாளிலேயே உயிரோடு சமாதியாக்கப்பட்டார்; செத்த பின்பு “தர்கா” ஆக்கப்பட்டார். இந்தக் கண்ணோட்டத்தில் பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்ற தொடரைப் படிக்கும்போது நமது அறிவும் மனமும் சுயமரியாதையும் துன்புறுகின்றன; கனக்கின்றன!

பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்பதில் உள்ள “உம்”மை (பாமரனுக்கும் கூட) கீழ்க்கண்ட வினாக்களை எழுப்புகின்றன.

1.            பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்றால், “அன்று” பெரியார் ஏன் தேவைப்பட்டார்?

2.            அப்படியானால் அடிப்படையில் பெரியார் “அன்று” என்னவாக இருந்தார்?

3.            பெரியாரின் “அன்று” இன்னுமா தொடர்கிறது? தொடர்கிறது என்றால் ஏன்? எப்படி? (இந்த வினாவை நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரியம் அன்று, அன்றைய சமுதாயம் என்ற இரண்டாக இது பொருள்படும்).

4.            பெரியார் 50 ஆண்டுகள் குருதி கொட்டிப் பணி புரிந்த பின்பும் “அன்று” தொடர்கிறது என்றால் இதற்கான காரணங்கள் யாவை? காரணர்கள் யாவர்?

5.            அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் முதல் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் வரை பெரியார் நடத்திக் காட்டிய பின்பும் பெரியாரின் “அன்று” தொடர்கிறது என்றால், “பெரியார் அன்றே தேவைப்படவில்லை” என்று தானே பொருள் - என எதிரி கூறும் வாதத்தை எப்படி அறிவுசார்ந்து முறியடிப்பது?

இந்தக் கேள்விகள் நியாயமானவை, ஆராயத்தக்கவை - Relevant qestions to be probed properly  - என்ற அளவில் மனதில் வாங்கிக் கொள்ளப்படுகின்றன என்ற நம்பிக்கையிலும் அவ்வாறு வேண்டிக் கொண்டும் விடை காணும் முயற்சியைத் தொடர்கிறேன்.

பெரியாரின் அன்றைய காலகட்டத்தை வரலாற்று - சமூகவியலாளன் கண்ணோட்டத்தில் நான் படம் பிடிக்கப் போவதில்லை. இது தனி ஆய்வு. பெரியார் அடிப்படையில் “அன்று” என்னவாக இருந்தார் என அரசியற்படுத்த முடியுமா என்று முயல்கிறேன். பெரியாரின் எதிரிகளும், சுயநலமும் அறியாமையும் மிக்க தோழர்களும் அடையாளப்படுத்திய, முன்பே குறிப்பிடப்பட்டுள்ள, மூன்று கூறுகளும் தான் பெரியார் அல்ல; அப்படியானால் பெரியார் ”அன்று” என்ன?

1. பொருள்முதல்வாதி: கம்யூனிசத்தை இறுதி இலட்சியமாக அறிவித்தவர்; இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே தோன்றும் முரண்பாடுகளும் நடைபெறும் போராட்டங்களும் தொடர, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே தோற்றுவிக்கப்பட்டுள்ள சுரண்டலின் அனைத்து வடிவங்களையும் முற்றாக ஒழித்தல்.

2. நாத்திகர்: சரியான சொல் இயங்கியலாளர்; நாத்திகம் என்ற சொல்லைக் கடவுள் மறுப்பு என்ற சுருங்கிய பொருளில் மட்டும் பெரியார் பயன்படுத்தவில்லை; பெரியார் எங்கெல்லாம் நாத்திகத்தை ஒரு தத்துவமாகப் பயன்படுத்தியுள்ளாரோ அங்கெல்லாம் சோசலிசத்தைப் பற்றி மறக்காமல் பேசியுள்ளார்; நாத்திகத்தை அறிவுகொள் கருவியாகவும் “tool to seek knowledge”', அறிவுதேடு வழியாகவும் “tool to search knowledge” கொண்டவர்.

3. வருணதர்ம ஒழிப்பாளர் : சாதியை - அதன் நிறுவன வடிவத்தையும் அதன் தத்துவ மூலத்தையும் - ஒழிக்க முயன்றவர். மாசுடைப் பிறப்பு என்ற அடிப்படையில் தீண்டப்படுவோர், தீண்டப்படாதோர் என்ற பிரிவு; தீண்டப்படாதோர் வர்ணத்திற்கு வெளியே நிற்கும் அடிமைகள். தீண்டப்படுவோருள் குறிப்பாகத் தென்னிந்தியா - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடவுள் தன்மையர் “persons of priesthood”, பிறர் என்ற பிரிவு! இந்தப் பிறர் என்ற பிரிவுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்பிரிவுகளே வர்ணாசிரம ஒடுக்கு முறையின் அடிப்படை வன்மையாகும். இந்தப் பிறர் ஆகிய சூத்திரர்கள் சமூகப் படிநிலை ஒழிப்பில் யாரோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற கட்டங்களே இந்தியாவின் அரசியல் மற்றும் அரசியல் போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்கின்றன. பெரியாரோ பிறப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட பிரிவுகள் - பிளவுகளையும் அதன் தத்துவச் சூழ்ச்சிகளையும் ஒழிக்க முயன்றவர்.

சாதியைச் சுரண்டலின் நிறுவனமாகக் கண்டார். இந்த நிறுவனத்திற்குள் நுழைக்கப்பட்ட “தீண்டாமையை” அதைத் தாங்கிக் காப்பாற்றும் ஆதாரமாகக் கண்டார். எனவேதான் சாதிபேத மறுப்பு, சமபந்தி உணவு எனக் களியாட்டங்களில் இறங்காமல் வர்ண ஒடுக்குமுறை ஒழிப்பில் உழைத்தார்.

4. மத ஒழிப்பாளர் : பெரியார் பொதுவில் எல்லா மதங்களையும் எதிர்த்தவர்; மதங்கள் ஒழிந்த சமூகம் காண விழைந்தவர். இந்தியாவில் பெரும்பான்மையோர் இந்துவாக இருந்ததால் இந்துமத ஒழிப்பில் பெரிதும் ஈடுபட்டவர். வர்ண ஒடுக்குமுறை - இந்து மத ஒழிப்பு இந்தியாவில் அனைத்து மதங்களையும் ஒழித்துக் கட்டும் என நம்பியவர். கடவுளும் மதமும் மனிதகுல விடுதலையின் தடைக்கற்கள் எனக் கருதியவர். அரசியல் சமூகநிலையில் பொதுவாக அரசில் (State) இருந்தும் குறிப்பாகக் கல்வியில் இருந்தும் மதத்தை நீக்கி வைப்பதைத்தான் மதச்சார்பின்மை - “செக்யூலர்” எனக் கருதியவர். இந்துமதம் என்ற இரும்புப் போர்வைக்குள் இருந்த பார்ப்பனியத்தையும், இதற்கு விடாப்பிடியாகச் சேவகம் செய்த சற்சூத்திரர்களையும் தோலுரித்துக் காட்டியவர்.

5. பெண்ணுரிமைப் போராளி : சமுதாயப் போராட்டங்களின் வளர்ச்சியினூடே பெரியாரியலின் கூறுகள் பலவும் கடந்து செல்லப்படும் நிலையிலும் பெரியார் பெண்ணுரிமைப் போராளி என்ற கூறு நிற்கும். இதன் பொருள் பெண் விடுதலைப் போராட்டம் சோசலிச அரசு நிறுவிய பின்பும் நடக்கும்.

6. கூட்டுறவு இயக்க ஆதரவாளர் : உழைப்பின் விளைவு - உற்பத்தியின் பயன், உற்பத்தியாளனுக்கும் அதைத் துய்ப்போனுக்கும் மட்டுமே சென்றுசேர வேண்டும். இடைத் தரகர் ஒழிந்த கூட்டுறவு நிலையங்கள் சோசலிசக் கட்டுமானத்தின் பயிற்சி நிலையங்களாக அமையவேண்டும்.

7. இட ஒதுக்கீட்டு ஆதரவாளர் : பெரியார் வகுப்புரிமை வீரர் ஆவார். சாதியப் படிநிலைகளால் பிளவுண்ட ஒரு சமுதாயத்தில் அனைத்து வகுப்பு மக்களும் அரசு எந்திரத்தில் சமமாகப் பங்கேற்பதை ஜனநாயகத்தின் ஒரு கூறாக எடுத்துக்கொண்டு, “சாதி வகுப்பு அடிப்படையில் சமபங்கு” என்ற கோரிக்கையாக வகுப்புரிமையை முன்வைத்தார். சமுதாய - சாதி இறுக்க ஒழிப்பில் - போராட்டத்தில் வகுப்புரிமையையும் ஓர் உத்தியாகப் பயன்படுத்தினார். அரசியல் சொற்களில் சொல்வதென்றால் வகுப்புரிமை “தொழிற்சங்க உரிமை”யைப் போன்ற ஒன்றாகும்.

பெரியார் இட ஒதுக்கீட்டின் மூலம் சாதி ஒழிந்துவிடும் எனக் கனவு காணவில்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் உழைப்பாளர் வர்க்க ஆட்சி தோன்றிவிடும் எனப் பொய்யுரைக்கவும் இல்லை. இவை முக்கியம்.

8. கலை இலக்கியப் பர்வை : பகுத்தறிவு சான்ற, மானுட மேம்பாட்டை மையப்படுத்திய கலை இலக்கியப் பார்வையை உடைய படைப்புகளை வரவேற்றார். மொழியைக் கருத்தறி கருவியாகவும், கருத்தறிவிக்கும் ஊடகமாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் கண்டார். விஞ்ஞான வளர்ச்சியின் கூறுகளை உள்வாங்காத அடையாளங்களை எதிர்த்தும் உள்வாங்கிச் செழுமைப்பட்ட வளர்ச்சியை ஆதரித்தும் வந்தார். பெரியாரின் அழகியல் பயன்பாடு சார்ந்தது; அமைப்பு சார்ந்தது அல்ல.

9. இன விடுதலையாளர் : பெரியாரின் இனவிடுதலைக் கோட்பாடு இரண்டு வகைப்படும். அ) இந்தியாவின் போலி தேசியக் கட்டமைப்பைக் கடுமையாக இறுதிவரை எதிர்த்தவர்; ஆ) தமிழ் இன அடையாளத்தின் அளவுகோலாகப் பார்ப்பன - பனியா - இந்தி ஆதிக்க ஒழிப்பை முன்னிறுத்தியவர். இன அடையாளத்தில் ஆதிக்க என்ற இச்சொல் முக்கியமானது. பார்ப்பனர்களை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்றோ, நாட்டைவிட்டு விரட்டிவிட வேண்டும் என்றோ எங்கும் எந்தச் சமயத்திலும் கூறாதவர்.

10. சமாதானம் : கவலையற்ற மனச் சமாதானம் உடைய மனிதகுலத்தை - சமுதாயத்தை உருவாக்குவதே பெரியாரின் அடிமனக் கருத்தாக இருந்தது.

பொருள்களின் நிறைவால் கவலையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். மனச் சமாதானமுள்ள சமுதாயம் என்பது தனிமனித உள்துடிப்புகளின் நிறைவுக்கும் வளர்ச்சிக்கும் வழியேற்படுத்திக் கொடுக்கும் சமுதாய அமைப்பு முறையாகும். திறமைகளும் அதனடிப்படையில் பெறும் சமூக மரியாதையும் எல்லா நிலைகளிலும் சமம் என்பதாகும்.

பெரியார் “அன்று” இப்படியெல்லாம் இருந்தார் என்பது நம் ஆசைகளோ, அவர்க்கான புகழ்மொழிகளோ அல்ல; அறிவுவாதியான நாத்திகரான பெரியார், தன் சமூக ஆய்வின் முடிவுகளில் இருந்து மேற்கண்ட நிலைகளை மேற்கொண்டார்.

புத்தரைப் போல எங்கே தன்னையும் கடவுளாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் பெரியாருக்கு நிரந்தரமாக இருந்திருக்கக்கூடும். எனவேதான் “கடவுள் இல்லை” என்ற முழக்கத்தில் கடைசிவரை தெளிவாக இருந்தார். பெரியார் கடைசி வரை நாத்திகராக இருந்தார் என்பதன் உண்மைப் பொருளைப் பெரியாரியவாதிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். புத்தர் முதல் மார்க்சு வரை தோன்றிய அறிவுவாதிகளின் நோக்கம் “இல்லாத கடவுளோடு” சண்டையிடுவது அல்ல; மனிதகுலத்தின் விடுதலைக்கான தடைக்கற்களுள் ஒன்றாகக் கடவுள் இருந்தது என்பதுதான். திராவிடப் பெரியாரியவாதிகள் “கடவுள் ஒழிப்பில்” அதன் சமூக விடுதலைப் பண்பை ஒழித்துக் கட்டிவிட்டு, விடாப்படியாக நின்றனர். பெரியார் வீழ்ந்தார். ஆக, அன்றைய பெரியாரியம் - பெரியார் - என்பது அன்றைய சமூக மாற்றத் தேவைகளின் தத்துவமாகவும் நடைமுறையாகவும் இருந்தது. எனவே பெரியார் அன்று தேவைப்பட்டார்.

அன்று தேவைப்பட்ட பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்றால் பெரியாரின் “அன்று” (அன்றைய பெரியாரியம், அன்றைய சமுதாயம்) இன்னுமா தொடர்கிறது? தொடர்கிறது என்றால் ஏன்? எப்படி? இதற்கான காரணிகள் யாவை? அப்படியானால் பெரியாரியமே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டுமா? மிகக் கவனமாகப் பாசங்களுக்கு அப்பாற்பட்டு, அணுக வேண்டிய வினாக்கள்.

இதற்கு முன்னால் ஒரு கருத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும். பெரியார் சலனம் - சபலம் அற்ற போர் வீரராக இருந்தது உண்மை. அதே சமயம் இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பத்துக் கூறுகளையும் அதையொட்டிய பிறவற்றையும் உள்ளடக்கிய பெரியாரியத்தில் “அரசு எந்திரம்” பற்றிய எந்தக் கண்ணோட்டமும் இல்லை. அதே சமயத்தில் அவர் காலத்தில் நிலவிய அரசு எந்திரத்திற்குள்ளேயே அவர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். தமிழ்நாடு விடுதலை, சோசலிசம் வரை பேசிய பெரியார் அதற்கான கட்சி கட்டும் பணியில் இறங்கவே இல்லை.

இவையெல்லாம் பெரியாரியத்தின் உள்ளொட்டி இருந்த குறைபாடுகளாகும். பெரியார் தன் முழுச் சக்தியையும் தமிழரிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே போதும் என்ற அளவில் செலவிட வேண்டியதாயிற்று. தனிமனிதர் ஒருவரைத் தத்துவமாகவும் தலைவராகவும் நிறுவனமாகவும் வைத்து நடத்தப்பெறும் அரசியல் போராட்டங்கள் ஆசிய சமூகங்களில் ஒரு அடிக்கறையாகவே இன்றுவரை இருந்து வருகின்றன.

அன்றைய புரட்சிகரமான பெரியாரியத்தில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பெரியாரிஸ்ட்டுகளின் தன்மைதான் என்ன? இது மிக முக்கியம். பெரியார் இன்றும் ஏன் தேவைப்படுகிறார் என்பதன் ஊற்றுக் கண்ணாக இதை நான் அணுகுகின்றேன்.

சோசலிச விடுதலை வீரரான பெரியார், தன் அரசியல் முழக்கங்களின் வழி, பன்முகத்தன்மை வாய்ந்தவராக விளங்கினார். அவர் எந்தவொரு அரசியல் முழக்கத்தையும் அதற்கான முழு தத்துவ நடைமுறைப் பொருளில் அறிவித்தார்; கடைப்பிடித்தார்; போராடினார். ஆனால் பெரியாரிஸ்ட்டுகளும் சரி, பெரியார் அனுதாபிகளும் சரி பெரியாரியத்தின் எந்தவொரு கூறையும் அதன் முழுப்பொருளில் ஆதரித்தவர்கள் அல்லர். மூளைக்குள் கண்ணி வெடி சிதறுவதை என்னால் உணரமுடிகிறது. பெரியாரை ஆதரித்தவர்கள் எல்லோருமே நாத்திகர்கள் அல்லர்; இன்னும் சொல்லப்போனால் ஆத்திகத் தமிழர்கள்தான் அதிகம் ஆதரித்தனர். பெரியாரை ஆதரித்த நாத்திகர்கள்கூட, பெரியாரின் நாத்திக அர்த்தத்தில் அதைப் புரிந்துகொள்ளவில்லை. எப்படி?

பெரியாரின் நாத்திகம் வெறும் கடவுள் மறுப்பு அல்லவே அல்ல; அது அவர்க்குத் சோசலிசத்தின் போர்வாளாகவும், சாதி ஒழிப்பின் தத்துவமாகவும் பயன்பட்டது. ஆனால் பெரியாரின் நாத்திக ஆதரவாளர்கள், “இல்லாத ஒன்றை ஒழிப்பதில்” மட்டும் நிறுத்திக் கொண்டனர். அதாவது கடவுள் இல்லை என்று அலறுவது நகரத்திலும் கிராமத்து மேடைகளிலும் மரியாதைக்குரிய ஒன்றாகக் கூட இருந்தது. ஆனால் அதன் தொடர்ச்சியாகச் சாதி ஒழிப்பில் - தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதில் இருந்து விடுபடல் - அவர்களால் இறங்க முடியவில்லை. சாதியப் பெருமையும், உடைமைப் பெருமைகளும் அவர்களை வர்ண ஒழிப்பின் சோசலிசத்தின் முதற்படிக்கட்டு வரை கூட அனுமதிக்கவில்லை. பெரியார் நாத்திகச் சாட்டையால் கடவுள், வர்ணம், சாதி, முதலாளித்துவம், காலனித்துவம் என அனைத்தையும் வெளுத்தார். ஆனால், அவர் தொண்டர்கள் “கடவுளோடு” நிறுத்திக் கொண்டனர்; பெரியார்க்குத் துரோகமிழைத்தனர். பெரியார் “தர்கா” ஆனார். பெரியார் “அன்று” என்னவோ அது இன்றும் தொடர்கிறது; எனவே பெரியார் தேவைப்படுகிறார்.

இவ்வளவு எளிய செய்தியா இது? அல்ல! இது விளக்கத்தின் முதல் ஒளிக்கீற்று! பெரியாரை ஆதரித்தவர்கள் எல்லோருமே நாத்திகர்களோ, வர்ண ஒழிப்பாளர்களோ, சோசலிஸ்டுகளோ அல்ல என்பது வெளிப்படை. ஆனால் எல்லோரும், விதிவிலக்கே இன்றி, ஒன்றுபட்டுப் பெரியாரை ஆதரித்த ஒரு புள்ளி உண்டு. அதுதான் வகுப்புரிமை - இடஒதுக்கீடு உரிமையாகும். பெரியார் காலத்திலேயே மதவெறியர், பெண்ணடிமையாளர், முதலாளித்துவவாதிகள், இந்திய தேசியத் தமிழர் என அனைவர்க்கும் இது - வகுப்புரிமை - பொதுவானதாகத் தேவையானதாக இருந்தது. ஒன்றிணைந்தனர், பெரியாரைத் தூக்கிப் பிடித்தனர். போராடினர், வென்றனர், இடவொதுக்கீடு 75% மக்களுக்கு 69% வரை தமிழ்நாட்டில் சென்றது. பொதுப்பட்டியலின் முதல் ஏழு நிலைகளை அடையும் அளவிற்கு இவர்கள் முன்னேறியுள்ளனர். ஆனால் தங்கள் கோரிக்கை முடிந்ததும் வென்றதும் பெரியாரைத் “தொப்”பெனத் தூக்கிப் போட்டு விட்டு ஓடினர். எங்கே? சாதி (சங்கம்) வெறி, மதவெறி, ஊழல் வெறி, ஆங்கில வெறி, முதலாளித்துவ வெறி, பண்பாட்டுச் சீரழிவு வெறி என வெறியர் கூட்டம் தங்களுக்கான அரசியல் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டது. எனவே பெரியார் தோற்றார்; எனவே பெரியாரின் “அன்று” தொடர்கிறது; எனவே பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்.

பெரியார் 50 ஆண்டுக்காலம் இரத்தம் பாய்ச்சிப் பணியாற்றிய பின்பும் பெரியாரின் “அன்று” அப்படியே தொடர்கிறது என்றால், பெரியாரியமே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டாமா? எதிரி இந்தக் கேள்வியைக் கேட்கிறானோ இல்லையோ நாம் கேட்டே ஆக வேண்டும். அதுவே தத்துவத்தின் வெற்றியாகும்.

பெரியாரியத்தின் தர்க்க ரீதியான முடிவு, இன்றைய சீரழிந்த ஊழல் நிறைந்த திராவிடக் கட்சிகள் மற்றும் அவற்றின் கால்நக்கிகள், சாதிக்கட்சிகள், மதவெறி கொழுந்துவிடல், தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீது தொடுக்கப்படும் உடல்சார், பால்சார் கொடுமைகள், விநாயகர் ஊர்வலங்கள், தாமிரபரணியில் மூழ்கடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள், கட்சிக் கூட்டு உண்டென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்காத பிற்படுத்தப்பட்டோர் இவைதான் என்றால், பெரியாரியலில் எங்கே குறை இருக்கிறது? பெரியார் எங்கே இருந்தார்? எங்கே இருக்கிறார்? இவை ஆராயப்பட வேண்டாமா?

1.            காலனித்துவம் வேரோடு களையப்பட்டு, தூக்கியெறியப்பட்டு, காலனியவாதிகளின் சொத்துக்கள் அனைத்தும் நஷ்டஈடு கொடுக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அனைத்தும் தேசியச் சொத்தாக்கப்பட வேண்டும் என்று கூறிய பெரியாரியத்தின் தொடர்ச்சிச் செயல்பாடுகள் என்ன?

2.            1940 சனவரியில் பம்பாயில் நடைபெற்ற “அம்பேத்கர், ஜின்னா, பெரியார்” முத்தரப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? அதன் தொடர்ச்சி என்ன? இந்த முக்கூட்டின் தத்துவம்தான் என்ன? இதை வெறுமனே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் கூட்டு எனக் கொச்சையாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

3.            கிராமங்களில் இருந்து பெரியார் இயக்கம் ஏன் தீவிரமாக நகரங்களுக்கு (பிராமணாள் கபே ஒழிப்பு முதலியன) இடம் பெயர்ந்தது.

4.            1931க்கு முன்பிருந்தே “சமதர்மம்” பேசிய, “மாஒ”வை வரவேற்ற, ஸ்டாலினை ஆதரித்த பெரியார், இரஷ்யாவுக்குச் சென்று திரும்பிய பிறகு, மிகத் தீவிரமாக “தோழர்”, “இரஷியநீதி”, “கூட்டுறவு”, “பெண்ணுரிமை” முதலானவற்றையும் பேசியிருந்தும், பெரியார்ப் பணிகள் எதனால் வகுப்புரிமை, நாத்திகம் எனச் சுருக்கப்பட்டன?

5.            மாபெரும் பகுத்தறிவு மேதையாக இருந்த பெரியார், பைசா பைசாவாக உண்மையுடனும், நெறியுடனும் கட்சிக் கொள்கைக்காகப் பணம் சேர்த்த பெரியார், அதை நிறுவனப்படுத்துவதிலும், அது எப்படிச் செலவிடப்பட்ட வேண்டும் என்பதிலும் கவலையற்றும் அக்கறையற்றும் இருந்துவிட்டுப் போனாரே அதன் விளைவுகள் என்ன?

சுருங்கச் சொன்னால் பெரியாரின் புரட்சிகரத் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் கட்சிக்கும் இடையே நிலவிய பயங்கரமான இடைவெளியில் முளைத்த காளான்கள் அரசதிகாரம், சமூக அதிகாரம், அதிகார வர்க்க அதிகாரம் பெற்றன! பெரியார் வீழ்ந்தார். இனி என்ன?

பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் எனும்போது, குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர் காலத்திய அதே சமுதாய அரசியல் நிலைமைகளே இன்னும் நிலவுகின்றன என்றால் நாம் பொதுவாகவே வரலாற்றையும் அரசியலையும் பிறழ உணர்ந்தவர்களாவோம். எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அந்த மாற்றங்கள் யாவும் வளர்ச்சிக்குத் துணை செய்யும் மாற்றங்களாக அமைந்துள்ளனவா, வரலாற்றைப் பின்னுக்கு இழுப்பனவாக உள்ளனவா, பெரியாரின் ஆதரவு அல்லது எதிர்ப்புற எதிர்ச் சக்திகளுக்குத் தலைமை அளித்துள்ளனவா என்பவைதான் நாம் ஆராய வேண்டிய வினாக்கள்.

தமிழ்நாட்டில் கல்வி பெருகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும்தான் அதிகார வர்க்கத்தில் கணிசமாக உள்ளனர். காவல்துறை பிற்படுத்தப்பட்ட மக்கள் கையில்தான் உள்ளது. கிராமத்தின் ஆட்சி அதிகாரம் பிற்படுத்தப்பட்ட மக்களிடமே உள்ளது. நிலவுடைமை பார்ப்பனர் அல்லாத வேளாளர்களிடமும் பிற்படுத்தப்பட்டோரிடமுமே உள்ளது. தாழ்த்தப்பட்டோர் இன்னும் இவர்களைச் சார்ந்த உழைப்புக் கூலிகளாகவே உள்ளனர். ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ 1967 முதல் ஏறக்குறைய 34 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டில் பெரியார் பெயர் சொல்லும் திராவிடக் கட்சி ஆட்சிகளே உள்ளன. யாரும்இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசியலில் ஆதிக்கம் பெற்றுவிட முடியாது. பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி ஆசிரியர்களுள் பெரும்பாலோர் பார்ப்பனர் அல்லாதவர்களே! டி.வி.எஸ். போன்ற ஓரிரு பெரிய தொழிற்சாலைகளைத் தவிர சிமெண்ட் உற்பத்தி, சர்க்கரை ஆலைகள், பேருந்துக் குழுமங்கள், தோல் வணிகம், துணி உற்பத்தி, கட்டடத் தொழில் இப்படிப்பட்ட தொழில்களில் பார்ப்பனர் அல்லாதாரே அதிகம். இந்தப் பட்டியல் இன்னும் நீளக்கூடும்.

தமிழ்நாட்டின் பத்திரிகைகளும் தொடர்புச் சாதனங்களும் இன்னும் பார்ப்பனர்கள் கையில்தான் உள்ளன. பிற்படுத்தப்பட்டோரிடம் உள்ள இத்தகைய சாதனங்களோ, பார்ப்பனர்களைவிட மிக அதிகமாகச் சமுதாயத்திற்குக் கேடு செய்வனவாக உள்ளன. குடும்பம், வணிகம் என்ற இரண்டைத் தாண்டி இவை வெளியே வந்ததில்லை. அதிகார வர்க்கத்திற்கு வந்த பிற்படுத்தப்பட்டவர்களைப் போலவே தொடர்புச் சாதனத்தை வளர்த்துக்கொண்ட இவர்களும் எல்லா வகையிலும் பெரிய கம்பெனி முதலாளிகள் என்ற நிலையில் இருந்து மாறி உலக அளவிலான வணிகக் குடும்பங்களாகத் தங்களை உயர்த்திக் கொள்ளவே முயல்கின்றனர். நீதியும் கோயிலும் இன்னும் மேல்சாதியிடமே உள்ளன. மிகக் கேவலமான வளர்ச்சி ஒரு திராவிடக் கட்சி இந்து வெறியர் காலிலும், இன்னொரு பெரியார் கட்சி பார்ப்பனக் காலிலும் தங்கள் இனத்தின் சுயமரியாதையை அடகு வைத்து விட்டதுதான்.

சாதிக்கட்சிகளும் சங்கங்களும் வளர்ந்துள்ளன; பெருகியுள்ளன. திரு.வி.க. பாரதிதாசன் உள்படப் பலரும் சாதிக்குள் - சாதிப் பெருமைக்குள் அடக்கப்படுகின்றனர். இந்து வெறிச் சக்திகள் அனைத்தும் முனைப்பாய்ச் செயல்படுவதும், இவற்றை எதிர்த்து எந்தக் குழுவும் வீதிக்கு வந்து போராட முடியாமல் இருப்பதும் கண்கூடு. இந்தியாவில் “பிஜேபி” என்ற மதவெறி அரசியல் கட்சிக்கு, அரசியல் ரீதியில் எதிராகப் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் நாடு முழுக்க உள்ளன. ஆனால் “இந்துத்வா” என்ற அதன் பாசிசத் தத்துவ வெறியைத் தத்துவ ரீதியில் எதிர்த்துப் போரிட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இப்போது அந்தத் தமிழ்நாடும், தத்துவ ரீதியில் வீழ்ந்துவிட்டது. ஆக, பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி, பார்ப்பனரையும் உள்ளிட்ட தமிழர் ஐக்கியமாக உருப்பெறாமல், சாதிவெறியாகத் துண்டு துண்டாகச் சிதறிவிட்டது.

periyarதமிழர் ஓர் இனமாக இறுக்கமாகக் கெட்டிப்படாததால், தனிநாடு அல்லது உண்மையான கூட்டாட்சி என்பதன் அருகில் கூட வர முடியாததோடு ஒற்றையுறுப்பு மைய ஆட்சிக்கு வெளிப்படையாக அடிமைச் சேவகம் செய்துகொண்டுள்ளனர். இந்தியாவை, இராணுவம் - பொருளாதாரம் ஆகியவற்றில், ஓர் அலகாகக் கருதி அதன் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கையை எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் எந்தத் திராவிடத் தமிழ் அரசியல் கட்சிகளும், வகுத்துக் கொண்டதில்லை. இதன் விளைவாக உலக நாடுகளின் சுரண்டல், மைய அரசின் சுரண்டல், பனியா மார்வாரிகளின் சுரண்டல் ஆகிய இவற்றைத் தமிழகம் எதிர்க்க முடியாததோடு, தமிழ்நாட்டின் வாய்ப்புப் பெற்ற பணமுதலைகள் சாதி வேறுபாடு இன்றி இந்தப் பொருளாதார சுரண்டலின் கூட்டாளிகள் ஆனார்கள்.

மேலே கூறிய நிலைமைகளைத் தொகுத்துப் பொதுமைப் படுத்திக் கூறுவது என்றால், பார்ப்பனியம் + முதலாளித்துவம் என்ற கூட்டுச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் பல்வேறு தளங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், பிற்படுத்தப்பட்டோர் எனப் பலரும் இடம் பெற்றிருப்பதை வெளிப்படையாகக் காண முடியும் எனக் கூறலாம். இந்த நிலைமை விந்தையான ஒன்று அல்ல. பெரியாரை அவர் காலத்திலேயே வீழ்த்த முடியாத அவர் எதிரிகள் அவரை “மகான்” ஆக்கப் புற அளவில் முயன்றதும், அவருடைய தோழர்கள் என்போர் நுட்பமாக ஆங்கிலக் கல்வி பெற்ற அண்ணாத்துரை போன்றோர் பெரியாரியலைத் தத்துவப்படுத்தி அதற்கான புரட்சிகரக் கட்சி கட்டாததோடு, அவர்தம் தத்துவத்தில் இருந்து இழிந்து அவரை விட்டு ஓடியதும், தொடர்ந்து அவரைப் பின்பற்றியோர் தங்கள் நிலவுடைமைத் தத்துவ நலன்களைச் சிறிதளவும் விட்டுவிடாமல், அவருடைய நாத்திகக் கொள்கைகள் மற்றும் இடஒதுக்கீட்டு நலன்களில் மட்டும் காலூன்றியதும்தான் பெரியார் அவர் காலத்திலேயே வீழ்த்தப்பட்டதற்கான காரணங்கள் ஆகும்.

அப்படியானால் பெரியார் பெரியாரியம் என்பது “இன்று” என்ன? பெரியார் “அன்று” என்பதை விளங்கிக் கொண்டது போலவே பெரியார் “இன்று” என்பதையும் விளங்கிக் கொள்ள முயலவேண்டும்.

முதற்கண், இன்றைய பெரியாரியம் என்பது வெறுமனே ஒரு சமுதாயச் சீர்திருத்த - கடவுள், மதம், சாதி, பார்ப்பனர், புராணம் இவற்றைக் கிண்டல் செய்தல், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தல் - கோட்பாடு அல்ல என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன். பெரியாரியம் என்பது மையப்படுத்தப்பட்டுவிட்ட நவகாலனியச் சுரண்டலுக்கும், இந்துத்வ வெறி ஒடுக்குமுறைக்கும், கிராமங்களில் நிலவும் அனைத்து வகை ஆதிக்கச் சாதிகளின் ஒடுக்குமுறைக்கும் எதிரான சமரசமற்ற ஓர் அரசியல் போராட்டமாகும். அதாவது மையப்படுத்தப்பட்ட இராணுவத்திற்கும், இந்துத்துவ பாசிச அரசுக்கும் அனுமதிக்கப்பட்ட போராடிப் பெற்ற எல்லா ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட ஒடுக்குமுறை வடிவங்களுக்கும் எதிராக, குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளின் மீட்சிக்காக, அனைத்திந்திய அளவில் நடைபெற வேண்டிய அரசியலும் அதன் தத்துவமும் ஆகும். பெரியாரை அவருடைய அதே பழைய வடிவத்திலேயே பயன்படுத்த முயலாமல் - பயன்படுத்த முடியாது - கருத்தைக் கூர்மைப்படுத்தியும், தளத்தை (நேயச் சக்திகளை) விரிவுபடுத்தியும் நடத்த வேண்டிய அனைத்திந்திய அரசியலாகும்.

இங்கே நான் இன்றைய பெரியாரிஸ்டுகளின் வகை பற்றியும் நேயச் சக்திகள் பற்றியும் சிறு குறிப்பையாவது எழுதவேண்டும். மொழிநலச் சக்திகள், தமிழர் தேசியச் சக்திகள், தமிழின விடுதலைச் சக்திகள், வகுப்புரிமையை ஒப்புக்கொண்ட மார்க்சிய லெனியச் சக்திகள், வர்க்கப் போராட்டத்தை அரசியல் தலைமையாகக் கொண்ட சக்திகள் முதலியன பெரியாரிசத்திற்கு எதிராகப் போகாத, ஆதரவு தரக்கூடிய நேயச் சக்திகளாகும். ஆனால் ஒரு தத்துவம் அதற்கான நேசச் சக்திகளால் மட்டும் வெற்றி பெற்றுவிடக்கூடியது அன்று; அந்தத் தத்துவத்திற்கென்றே புரட்சிக்கரக் கட்சி ஒன்று வலுவாகக் கட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட கட்சி நேற்று முதல் - பெரியார் காலம் முதல் இன்றுவரை இல்லை, இல்லவே இல்லை என்பதுதான் கசப்பான, பெரியாரைப் போன்ற, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பது போன்ற உண்மையாகும்.

பெரியாரிஸ்டுகளில் பெரும்பாலோர் பெரியார் பக்தர்கள்; அவர் தும்மியது போலவே தாங்களும் தும்மவேண்டும் என்ற பரவச பக்தியில் மூக்கின் அழுக்கைக் குடைபவர்கள். இவர்கள் தும்பி ஓய்வர்! அடுத்த நிலையினர் பெரியார் வியாபாரிகளும் துரோகிகளும் ஆவர். உணர்வுபூர்வமாகக் காசை வழிபடுபவர்களும், தங்கள் உடைமை நலனில் இருந்து தத்துவத்தைத் திரிப்பவர்களும் ஆவர். ஆளும் கணத்தாரின் ஆதரவு பெற்ற இவர்கள் பெரியாரியத்தின் எதிரிகளுக்குப் பெரியார் பெயரில் ஆதரவளிப்பவர்கள், அபாயமானவர்கள்! மூன்றாவது நிலையினர் பெரியார் வீரர்கள். சுயநலமற்ற இந்தத் தோழர்கள் தங்கள் ஆர்வத்தாலும் அறியாமையாலும், சில சமயம் அறிவு அகம்பாவத்தாலும், பல சமயம் தலைமை மேட்டிமையாலும், பெரியாரைத் தங்கள் கால், அரை, முக்கால், ஒன்றரைக் கண்ணால் பார்த்து இன்றுவரை அழிந்துபோகிறார்கள். இவர்கள் பல பிரிவினர். இவர்களுடைய அனுகூலக் கூறு, இவர்கள் இழக்கக் துணிந்த சுயநலமற்ற தொண்டர்கள் என்பதுதான். முதலில் இவர்களைத் “தத்துவப்படுத்துவது” என்பதுதான் மிகப்பெரிய தேவையாகவும் நடைமுறையாகவும் இருக்கிறது.

1.            பெரியாருக்கு அரசு பற்றி எந்தக் கண்ணோட்டமும் இல்லை.

2.            பெரியார் “நாத்திகம்” என்ற சொல்லை எங்கெல்லாம் தத்துவப் பொருளில் பயன்படுத்தினாரோ அங்கெல்லாம் “சோசலிசம்” பற்றிப் பேசியுள்ளார்.

3.            பெரியார் பெண்விடுதலையைச் சோசலிசத்தின் உடன் நிபந்தனையாக வைத்தார்.

4.            “பார்ப்பான்” என்ற சொல்லை ஒடுக்குமுறை வடிவமாகக் கூறிய அனைத்து இடங்களிலும் “மேல்சாதி” என்ற சொல்லையும் பயன்படுத்தினார்.

5.            பெரியார் வகுப்புவாரி உரிமையைப் பற்றி மிகக் குறைவாகவே எழுதினார்; பேசினார்.

6.            கிராமங்களில் சாதி உரிமையைத் தகர்த்தெறிவதையும், பெண் விடுதலையையும் உடன் நிபந்தனையாகக் கொண்ட சோசலிசத்தை நோக்கிய ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களே இன்றைய பெரியாரியம்.

இந்தக் கருத்துக்களை எந்த அளவில் புரிந்து உள்வாங்கிக் கொண்டோம் என்பதைப் பொறுத்தே பெரியாரிஸ்டுகளின் பலமும் பலவீனமும் தீர்மானிக்கப்படும்.

இன்றைய பெரியாரியத்தை வரையறுத்தல் அல்லது புரிந்து கொள்ளுதல் வெறும் தத்துவ வேலை அன்று; அது நடைமுறை அரசியல் வேலைகளும் அதனூடே செய்யப்படவேண்டிய படிப்பு - விவாத வேலைகளும் ஆகும். பெரியாரியம் என்பது தனித்து இயங்கக்கூடிய கட்டளைகளின் தொகுப்பு அன்று; அது பலருடைய, அரசியல் போராட்ட முன்னோடிகளின் அனுபவங்களில் இருந்து செதுக்கி அமைக்கப்பட வேண்டிய வேலைத் திட்டமாகும். சோதிபா புலே, அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்ற இந்தியப் பேராளிகளின் அரசியல் நடைமுறைகள், வெற்றிகள், தோல்விகள், மார்க்சியத்தின் வெற்றிகள் தோல்விகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு இன்றைய பெரியாரியம் இயங்கும் என நாம் ஆசை கொண்டோமானால் கனவு கண்டோமானால், சந்தாக் கம்யூனிஸ்டுகள், வேதக் கம்யூனிஸ்டுகள், தரகுக் கம்யூனிஸ்டுகள் எனக் கம்யூனிசம் கம்யூனிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டதைப் போல, பெரியாரியம் தமிழ் விடுதலைப் பேராளிகள், தமிழ்நாட்டு விடுதலைப் போராளிகள், மூடநம்பிக்கை ஒழிப்பாளிகள், வகுப்புரிமை கம்யூனிஸ்டுகள் எனப் பலச் சறுக்கல்களாய்ச் சீரழியும். இந்த அபாயத்தை முன்னுணராமல் போனால் பெரியார் வீரர்களால் மீண்டும் ஒரு 50 ஆண்டுகள் பெரியாரியம் ஆராய்ச்சிக்குரிய பொருளாகவே நிறுத்தப்படும்.

இந்த முன்னுரையின் அடிப்படையில், பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்பதற்கான அரசியல் முழக்க இணைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். இன்று நாடு தழுவி இயக்கப்படும் மக்களுக்கான அரசியல் முழக்க இணைகள்:

1.            இந்துத்துவ எதிர்ப்பும் மதச்சார்பின்மை ஆதரவும் (Anti-Hinuttuva and pro-Secularism)

2.            மைய அரசு எதிர்ப்பும் தேசிய இனங்களுக்கான ஆதரவும் (Anti-Centre and pro-nationalities)

3.            நிலவுடைமை எதிர்ப்பும் சோசலிச ஆதரவும் (Anti-Feudal and Pro-Socialism)

4.            காலனிய எதிர்ப்பும் தேசங்களின் விடுதலை ஆதரவும் ( Anti-colonial and pro-liberation of Nations)

இப்படிச் சிலவற்றை அடுக்க முடியும். இவை நான்கும் இன்ன பிறவும் தனித்தனியே இயங்கக்கூடிய அரசியல் போராட்டங்கள் அல்ல என்பது வெளிப்படை. ஒவ்வொன்றும் அதனதன் தன்மையில் வெளிப்படையான தேவைகளையும் நடைமுறைகளையும் வகுப்பு நலன்களையும் கொண்டவை. இவை விரிவான விவாதத்திற்கும் செழுமைக்கும் உரியவை.

ஆனால், இன்றைய மதவெறி நவகாலனிய பாசிச அரசுக் கட்டமைப்புக்கு எதிராகவும், அனைத்து ஆதரவுக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எந்த அரசியல் முழக்க இணையின் மீது அதாவது எதைத் தலைமையாகக் கொண்டு, நடைமுறைகளை, வேலைத் திட்டங்களை தொடங்குவது - தொடர்வது என்றால் நான் “நிலவுடைமை எதிர்ப்பையும் சோசலிச ஆதரவையுமே” கொள்வேன்.

கிராமத்தில் சாதியுரிமைகளின் அடிப்படையிலான பெருமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிவது என்றாலும், ஏகாதிபத்திய காலனிய எதிர்ப்பு என்றாலும், தேசிய இனங்களின் விடுதலை என்றாலும், “நிலவுடைமை எதிர்ப்பு சோசலிச ஆதரவு” என்ற அரசியல் முழக்கமே - அதன் தலைமையே - முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.

இந்த வகையில் நாம் பெரியாரியலைப் புத்தாக்கம் செய்ய முனைகிறோம் என்றால் பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் எனப் பொருள்படும். இதை விடுத்து நாம் பெரியாரைச் சுருக்கிப் பார்க்க - நம் தேவைக்கும் வசதிக்கும் ஏற்பக் கீழிறக்கிப் பார்க்க முயன்றோமானால் அது எல்லைத் தெய்வங்களுக்குக் கொண்டாடும் பண்டிகையாக முடிந்துவிடும். அப்படித்தான் முடிந்துவிட்டது என்பதற்கான வாக்குச் சீட்டுச் சாட்சிகள்தான் திராவிடங்களின் ஆட்சிகளும், திராவிடத்தின் ஆதரவு பெற்ற இந்துவெறி மைய ஆட்சியும், அவ்வப்போது நாம் நடத்தும் பெரியார் ஊர்வலங்களும் ஆகும்.

பெரியாரைச் சரியாகப் புரிந்துகொண்டு அரசியல் வேலை செய்திருந்தோமானால், விநாயகர் ஊர்வலங்கள் நடைபெற்றிருக்க முடியாது; பாபர் மசூதி உடைக்கப்பட்டிருக்க முடியாது; இந்தியப் பொருளாதாரம் முழுக்க முழுக்கத் தனியார் மயப்பட முடியாது; மொழி, இனம், மதம், பண்பாடு என எதுவும் ஒற்றை (mono) எனத் திணிக்கப்படாமல், பல என நிறுவப்பட்டிருக்கும். இந்தியாவின் பன்முகத் தன்மைக்காக (multi, plural, many) நடத்தப்பெற்று அவ்வப்போது வெற்றியும் பெற்ற வளர்ச்சியின் அனைத்தும் ஒழிக்கப் பெற்று, ஒற்றைத் தன்மைக்கான ((Single, mono, unitary) அரசதிகாரம் நிறுவப்பட்டுவிட்டதே “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்?” என்பதற்கான அரசியலாகும்.

பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்பதைக் கூறும் நமது முழக்கங்கள்:

1. சாதி உரிமைப் பெருமைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வருணாசிரம ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்.

2. அரசிலிருந்தும், கல்வியில் இருந்தும் மதத்தை நீக்குவதற்கான “செக்யூலரிசத்”திற்காகப் பாடுபடுவோம்.

3. சோசலிச ஆட்சி நிறுவுதலுக்கான அறிவுகொள் கருவியாக நாத்திகத்தைப் பயன்படுத்துவோம்.

4. உலகமயமாக்கல் என்ற நாகரிக முகத்திரையோடு வந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருளாதாரச் சுரண்டலை முறியடிப்பதே தேசபக்தியின் முன் நிபந்தனை என ஆக்குவோம்.

5. தேச விடுதலைக்காகவும், விடுதலை பெற்ற தேசிய இனங்களின் இந்தியக் கூட்டாட்சிக்காவும் பாடுபடுவோம்.

(இந்தக் கட்டுரை 4.9.2001க்கும் 10.9.2001க்கும் இடைப்பட்ட நாள்களில் எழுதி முடிக்கப்பட்டது. 123ஆவது பெரியார் பிறந்தநாள் விழா மலர், தில்லி தமிழ்ச் சங்கம்)

- து.மூர்த்தி, தமிழ்ப் பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், அலிகர் 202002. உ.பி. (Mobile : 094566 18111, Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It