பொய்களுக்குப் புனுகு பூசாதீர்கள்!    

மருத்துவர் ராமதாசின் பொய்முகங்கள் ஒவ்வொன்றாகக் கழன்றுவிழத் தொடங்கியிருக்கின்றன. அவர் அமைத்த சாதிக் கூட்டணியின் மீது அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. சமூகநீதி பூமியான தமிழ்நாட்டில் சாதிவெறியைத் தூண்டிவிட்டு யாரும் குளிர்காய முடியாது என்பதை இனியாவது இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மாமல்லபுர வன்னியர் மாநாட்டில், சிறுபிள்ளைகூட நம்ப மறுக்கும் ஒரு செய்தியை மேடையிலேயே சொன்னார் மருத்துவர் ராமதாசு. கழுகுமலை அருகிலுள்ள டி,வேலாயுதபுரம் என்னும் கிராமத்தில், 40 அருந்ததியர் குடும்பங்கள், 400 ரெட்டியார் குடும்பங்களை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 400 ரெட்டியார் குடும்பங்களும் அந்த 40 அருந்ததியர் குடும்பங்களால் அடக்கு முறைக்கு ஆளாகி, மிகவும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் மருத்துவர் சொன்ன செய்தி. சாதி அமைப்பின் கொடூர முகம் தெரிந்தவர்களுக்கு இது எத்தனை அப்பட்டமான பொய் எனப் புரிந்திருக்கும். இருப்பினும், ஒரு மாநாட்டு மேடையிலேயே கையில் பேப்பர் வைத்துக் கொண்டு, பகிரங்கமாகச் சொல்கிறாரே, ‘அப்படியானால் ஒருவேளை....’என்றுகூட பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.

அந்த ஒருவேளை....என்ன உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும் சிலருடன் வேலாயுதபுரம் கிராமத்திற்குச் சென்றோம். நாங்கள் சென்று நேரில் கண்டும், கேட்டும் தெரிந்துகொண்ட உண்மைகளை வன்னிஅரசு கட்டுரையாக எழுதி வெளியிட்டதன் தொடர்ச்சியாக, எங்கள் மீது வேலாயுதபுரம் மக்களால் அவதூறுகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன.

வேலாயுதபுரம் கிராமத்திற்குச் சென்ற விடுதலைச்சிறுத்தைகள் குழுவினரோடு போனவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில், சிலவற்றைத் தெளிவுடுத்த விரும்புகிறேன். என்னுடைய சொந்த ஊர் சிவகாசிக்கு அருகிலுள்ள தெற்கு ஆணைக்குட்டம் கிராமம். நான் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச்செயலாளராக இருக்கிறேன். மேலும் எங்களுடன், தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து, நாடார் சமூகத்தைச் சேர்ந்த தீபக் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் வேலாயுதபுரத்திற்கு வந்திருந்தனர். இதை சாதியைச் சொல்வதற்காகக் குறிப்பிடவில்லை. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய, சாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்ட ஒரு தமிழ்த் தேசியக் கட்சி என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டவே இந்த விவரங்களைச் சொல்கிறேன். இன்றும் விருதுநகர் மாவட்டத்தில், உழைக்கும் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளில், அனைத்து சமூகத்தினருடனும் இணைந்தே, விடுதலைச் சிறுத்தைகள் பணியாற்றி வருகிறது.

வேலாயுதபுரத்தில், ஊருக்கும் சேரிக்கும் நடுவில் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் இடைவெளி இருக்கிறது. அப்படியிருந்தும், சேரியைச் சுற்றி மூன்று திசைகளிலும் முள்வேலிகள் போடப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கின்ற ரெட்டியார் சமூகத்தில் பண்ணையார்கள் யாரும் இல்லை, வேலி கட்டி விவசாயம் பார்க்கின்ற அளவுக்கு பெரிய பரப்பில் நிலமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் 3 முதல் 4 ஏக்கர் அளவில் நிலம் இருக்கக்கூடும். அந்த நிலங்களும், அவற்றின் வரப்புக-ளும் ஒன்றோடொன்று நெருக்கியும், இடைவெளி இன்றியும் அமைந்திருக்கும் என்பது விவசாயத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அங்கே வேலி அமைக்கவேண்டுமென்றால், விவசாய நிலத்திற்கு உள்ளேதான் அமைக்கமுடியும். சேரிமக்களின் ஆடு மாடுகளிடமிருந்து பயிர்களைக் காக்க வேலி அமைத்ததாகச் சொல்கிறார்கள்-. உண்மை என்னவென்றால், சேரிக்குள் யாரும் ஆடு மாடுகளை வளர்க்கவில்லை. இந்நிலையில் முள்வேலிக்கு ரெட்டியார் சமூகத்தினர் சொல்லும் காரணம் உண்மையில்லாதது என்பதை அங்கு சென்று பார்க்கும் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு வெட்கக்கேடான செய்தியையும் சொல்லவேண்டும். சேரிக்குள் யாரும் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். பெண் நாய் மட்டும்தான் வளர்க்க வேண்டுமாம். அந்தப் பெண் நாயும் ஆண் குட்டியை ஈன்றால், அந்த ஆண் நாய்க்குட்டியை, ரெட்டியார் சமூகத்திடம் கொடுத்துவிட்டு, 500 ரூபாய் அபராதமும் கட்ட வேண்டுமாம். இணையத்தளம் போன்ற அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகின்ற அளவுக்குப் படிப்பறிவுகொண்ட, வேலாயுதபுரம் ரெட்டியார் சமூகத்து இளைய சகோதரர்கள், தங்கள் கிராமத்துப் பெரியவர்கள் செய்யும் இதுபோன்ற அசிங்கமான செயல்களுக்குச் சப்பைக் கட்டு கட்டுவது, படித்த படிப்புக்கு அழகாகுமா? வேதனையாக இருக்கிறது.

தன்மானத்தோடு, தலை நிமிர்ந்து வாழ நினைக்கும் பெண்களின் மீது, இந்த ஆணாதிக்கச் சமூகம் கடைசியாக ஏவும் ஆயுதம் & ஒழுக்கம்! சாதியை எதிர்த்து, தன்மானத்திற்காகப் போராடும் உண்மையான மனிதர்கள் மீதும் இதுபோன்ற சேறுகள் அள்ளி வீசப்படுவது வழக்கமான ஒன்றுதான். தங்கள் பக்கத்து தவறுகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கையறு நிலையில், வன்னிஅரசு உள்ளிட்ட அங்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகளின் மீது, பெண்களிடம் தவறாக நடந்துகொண்டனர் என்று வீண்பழி சுமத்தி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசுவின் அரசியல் செயல்பாடுகள், பேச்சுகள், போராட்டங்கள் மக்கள் நலம் சார்ந்தவை என்பதை அனைவரும் அறிவார்கள். தென்தமிழகத்தின் புகழ்மிக்க அரசியல் தலைவராக இருக்கின்ற, ம.தி.மு.க., பொதுச்செயலார் வைகோ அவர்கள் வன்னிஅரசுவின் மக்கள் நலன் சார்ந்த போராட்டக் குணங்கள் பற்றி நன்கு அறிவார்!-

வன்னிஅரசுவின் சொந்த ஊரான அயன் ரெட்டியாபட்டியில், கம்பளத்து நாயக்கர்கள்தான் பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அங்கிருக்கின்ற ஒருசில ரெட்டியார் சமூகத்துக் குடும்பங்கள் கம்பளத்து நாயக்கர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சி வாழ்கின்றன. அந்த ரெட்டியார் சமூகத்துக் குடும்பங்களை வன்னிஅரசுதான் தன்னுடைய சமூகத்து மக்களைக் கொண்டு பாதுகாத்து வருகிறார் என்கிற உண்மையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அப்படிப்பட்டவரின் மீதுதான் பெண்களை மிரட்டினார், ஆபாசமாகப் பேசினார் என்றெல்லாம் சேற்றை அள்ளி வீசுகின்றனர்.

நாங்கள் அங்கிருந்த ரெட்டியார் சமூகத்து ஆண்களையே நேருக்கு நேர் சந்தித்துப் பேசமுடியவில்லை என்னும்போது, அவர்களுடைய பெண்களைப் பார்த்து ஆபாச செய்கைகள் செய்தோம், ஆபாசமாகப் பேசினோம் என்று சொல்கிறார்களே, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. நாங்கள் சேரியிலும், அவர்கள் ஊர் மந்தையிலும் நின்றிருந்தோம். காவல்துறை அதிகாரிகள்தான் எங்களுக்கு ஊடகமாகச் செயல்பட்டனர். தலித் இளைஞர்களின் ஜீன்சையும், கூலிங்கிளாசையும் பார்த்து எங்கள் பெண்கள் மயங்கிவிடுகின்றனர் என்று அவர்கள் வீட்டுப் பெண்களை அவர்களே இழிவுபடுத்தி வருவதைப் போன்று, வேலாயுதபுர ரெட்டியார் சமூகத்து ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இழிவைத் தேடித்தருகின்றனரே என்பதை நினைக்கும் போது, வேதனையாக இருக்கிறது.

சாதியும், வர்ணாசிரமும் பெண்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரே தட்டில்தான் வைத்திருக்கிறது. சாதியை எதிர்க்கும் போராட்டத்தில், பெண் விடுதலையும் அடங்கி இருக்கிறது என்கிற கோட்பாட்டு உண்மையை உணர்ந்துதான், எங்களைப் போன்றவர்கள், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைவழியில் போராடி வருகின்றோம். எங்கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் அந்த வழியிலேயே எங்களை வழிநடத்தி வருகிறார் என்பதை, கொந்தளிப்பான இந்த நேரத்திலும், சிறுத்தைகளின் பண்பட்ட அமைதியான நடத்தைகளே உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் ஒன்றுபட்டுப் போராடினால்தான் அரசியல் விடுதலை பெற முடியும் என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்தை சிந்தனையில் நிறுத்தி,

“சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி”

என்னும் பகுத்தறிவோடு செயல்படுவோம்!

- சிவகாசி ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருதுநகர் மாவட்டம்.

Pin It