தோழர் சுபவீ அவர்களுக்குப் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திராவிட இயக்க எதிர்ப்பு நஞ்சை விதைப்பதின் மூலம் நீங்கள் யார் என்பதை உணர்த்தி விட்டீர்கள்.

உங்களைப் போன்றோருடைய நோக்கத்தில், சமீபகாலங்களில் திராவிட இயக்கத்திற்கு எதிராகத் தலித் அமைப்புகளைக் கட்டமைக்கக் கூடிய முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளது.

அதே சமயம் பெரியார், அம்பேத்கரை நேர் எதிர்த் திசையில் சிண்டு முடியும் பார்ப்பனப் புத்தி இவையெல்லாம் அறிஜீவிகள் மத்தியில் பல்லிளிக்கிறது.

ஆதி திராவிடர் பெயர்க் காரணம்!

பறையர், பள்ளர் போன்ற தமிழ்க் குடிகளை ஆதித்தமிழர் என அழைக்காமல் 'ஆதி திராவிடர்' என ஏன் அழைக்கிறார்கள்? இதுதான் திராவிடம் செய்த சதி எனச் சிலர் வரலாற்றைத் திரித்துக் கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன?

பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் மதராஸ் மாகாணச், சட்டசபையில் 20 ஜனவரி 1922 இல் M.C.ராசா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின்படி, பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு ஆதிதிராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924 இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

இந்தக் காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார்.

நீதிக்கட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும், பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

1892இல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையைப் பதிவு செய்தவர் அயோத்திதாசர்.

 1.12.1891 இல் பண்டிதர் அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பி வைத்தார்.

1892இல் அதை, "ஆதிதிராவிட மகாசன சபை" எனப் பெயர் மாற்றிப் பதிவும் செய்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில் 1922 இல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டியது.

M.C.ராஜா பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார். அதற்கு உறுதுணையாக இருந்தது தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.

எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர் கழகம் பிறக்கும் என்ற ‘ஜோசியத்தை’ M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை

வரலாற்றைத் திரிக்கும் சிலர் சொல்வதுபோல ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை. 1891 இல் அயோத்திதாசரால் கொடுக்கப்பட்ட பெயர்.

அப்போது பெரியாருக்கு வயது 12.

‘ஆதி திராவிடர்' எனப் பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு மாநிலமும் அப்போது இல்லை. திராவிடக் கட்சிகள் அப்போது பிறக்கவே இல்லை.

அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து, அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் எனப் பெயர் சூட்டியதாகப் பொய்யைச் சொல்லி வரலாற்றைத் திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.

Pin It