அண்மையில் காலஞ்சென்ற தமிழறிஞரும் தமிழினப் போராளியு மான பாவலர் மு.வ.பரணர் அவர்களின் மகன் செல்வன் தமிழ்ப்பரிதிக்கும், செல்வி கவிதாவுக்கும் திருவெறும்பூரில் 15.05.2013 அன்று பேராசிரியர் கு.திருமாறன் அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது.

தமிழ் முறைப்படி திருமண நிகழ்வுகளை “செந்தமிழ் அந்தணர்” முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்கள். உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன், சொல்லாய்வறிஞர் அருளியார், தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், திருவாட்டி இறை.பொற்கொடி, திருவாட்டி தேன்மொழி அருளியார், தமிழினச் செயல்பாட்டாளரும், பாவலர் பரணரின் வாழ்நாள் நண்பருமான திரு. செல்லத்துரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, ம.தி.மு.க. தேர்தல் குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்க்கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் இராசா ரகுநாதன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பேராசிரியர் க.நெடுஞ்செழியன், திருவாட்டி சக்குபாய் நெடுஞ்செழியன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ.இராசேந்திரன், திறனாய்வாளர் வீ.நா.சோமசுந்தரம், வழக்கறிஞர் த.பானுமதி, புலவர் இரத்தினவேலவர், த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, தோழர் கவிபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கும் போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பின்வருமாறு பேசினார்:

பாவலர் மு.வ.பரணர் அவர்கள் காலமாகிவிட்டார், இத்தருணத்தில் அவர் நம்மோடு இல்லையே என்று கவலை வருவது இயல்பு. ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டியதில்லை. நம் அனைவர் வடிவிலும் அவர் இருக்கிறார். அவர் போய்விட்டார் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, அவர் கருத்துகள், அவர் வழிகாட்டல்கள், நமக்கு அப்படியே இருக்கின்றன; அவற்றை நாம் செயல்படுத்தும் போது அவர் அச்செயல்பாடுகள் அனைத்திலும் இருப்பார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?” என்று கேட்டார். அதே போல் தான், தமிழுக்கும், தமிழினத்திற்கும் தொண்டு செய்த, பரணருக்குச் சாவில்லை.

திருவெறும்பூர் மிகுமின் தொழிலகத்தில் (BHEL) சிறந்த பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், பல மாநிலங்களிலும், லிபியாவிலும் கொதிகலன்களை உருவாக்கும் போது பரணரை அழைத்து அவர் அறிவுரைப்படி செய்து வந்தார்கள். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், மொழிக்கும் இனத்துக்குமான போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1968ஆம் ஆண்டு, பாவாணர் அவர்களும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் திருச்சி தேவர் மன்றத்தில் நடத்திய, உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாட்டில் – அந்த அமைப்பின் நிறுவன மாநாட்டில் முக்கியக் களப்பணியாற்றியவர்களுள் பரணரும் ஒருவர் என்ற செய்தியை பிற்காலத்தில் அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். நான் அம்மாநாட்டில் மாணவர் பேராளராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன் என்ற செய்தியையும் அவரிடம் சொன்னேன்.

1968இல் ஒருவர்க்கு ஒருவர் அறிமுகம் இல்லாமலே ஓர் இலட்சியத்தின் கீழ் ஒன்றாகச் சேர்ந்திருந்த நாங்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு அந்த இலட்சியத்திற்கான அமைப்பிலும் ஒருங்கிணைந்தோம். இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார் பாவலர் பரணர்.

தமிழுக்காக, வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய பாவலர் பரணர் இல்லத் திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கும் போது, இப்பொழுது தமிழுக்கு ஏற்பட்டிருக்கின்ற தீங்குகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசின் தொடக்கப் பள்ளியில் இருந்து, மேல்நிலைப் பள்ளி வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி வகுப்புகளில்தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள். தமிழ்வழி வகுப்புகள் தாமாகவே காணமல் போய்விடும் அதாவது, தமிழைப் புறக்கணிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை, மக்கள் வரிப்பணத்திலிருந்து தமிழக அரசே தொடங்க இருக்கிறது.

இதற்கு, தமிழ்வழி வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் மறுக்கிறார்கள், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் பள்ளிக் கூடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று ஆட்சியாளர்கள் காரணம் சொல்கிறார்கள். இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குத் தமிழக அரசு, முயல வேண்டுமே தவிர, நம் தாய்மொழியாம் தமிழையே நீக்கிவிடும் திட்டத்தைத் தீட்டக் கூடாது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர் களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியில் பயில சேர்ப்பார்கள். கேரளா இப்படி ஒரு சட்டத்தை அண்மையில் கேரள அரசு இயற்றியுள்ளது. அதைப் போல் ஒரு சட்டத்தைத் தமிழ்நாட்டில் தமிழக அரசு, தமிழக சட்டப் பேரவையில் இயற்ற வேண்டும்.

அடுத்ததாக, பள்ளிகளின் உள்கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். தரமாகப் பாடம் சொல்லித் தருவதற்கான உறுதிப்பாட்டை உருவாக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் தமிழ்வழி வகுப்புகளைக் கைவிட்டுவிட்டு, ஆங்கில மயமாக்கும் கல்வி முறைக்குத் தாவக்கூடாது. இவ்வாறான தமிழ்மொழியை நீக்கிடும் கல்வி முறை பிரித்தானிய ஆட்சியில் கூட இல்லை.

100 கோடி ரூபாய் செலவில், தமிழன்னைக்குச் சிலையும் பூங்காவும் அமைக்கப் போவதாக, முதலமைச்சர் சட்ட ப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழன்னைக்குச் சிலைக்கு அமைப்பதை நாம் வரவேற்கிறோம். ஆனால் பள்ளிகளில் தமிழை நீக்கி புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்குச் சிலை அமைப்பது இனிமேல் கண்காட்சியில் தான் தமிழைப் பார்க்க முடியும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது. தமிழன்னைக்கு சிலை, தமிழுக்குச் சிறை என்றல்லவா இப்போக்கு மாறிவிடும்.

 தமிழக அரசின் பள்ளிகளில் தமிழைப் புறக்கணிக்கும் வகையில் ஆங்கில பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஒன்றாம் வகுப்பிலிருந்து, பன்னிரெண்டாம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் ஆக்கிடும் திட்டத்தைச் செயல் படுத்துமாறும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றுமாறும் பாவலர் பரணர் இல்லத் திருமண விழா வாயிலாக தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் வழியில் படித்ததற்கான அடிப்படை அளவு கோலாக ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழைப் பாடமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் கொண்டு படித்ததை நிபந்தனையாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”

Pin It