கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் எச்சரிக்கைக்கும், எதிர்ப்புக்கும் அஞ்சி இப்படி ஒரு கலைப் படைப்பை தடை செய்யும் அளவுக்கு அரசு செல்லலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக அரசின் தடை என்பது, 'கருத்துரிமைக்கு விடப்பட்டிருக்கும் சவால்' என்ற கருத்தும் நிலவுகிறது.
 
சென்சார் போர்டு எனும் அரசின் தணிக்கைத் துறை சான்றளித்த ஒரு திரைப்படத்தை தடுத்து நிறுத்துவது என்பது தவறான முன்னுதாரணம் என்றும், இனி முஸ்லிம்களைப்  போலவே ஒவ்வொரு சாதி மத அமைப்புகளும் தங்களுக்குப் பிடிக்காத கலைப்படைப்புகளுக்கு எதிராக படைதிரட்டி கிளம்புவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
kamal_347ஒரு படம் வெளியான பிறகு, அதில் முரண்பாடான கருத்துக்கள் இருந்தால் எதிர்க்கவோ, மறுப்பு சொல்லவோ, மாற்றி அமைக்கவோ போராடலாமே தவிர, இப்படி அதை வரவே விடாமல் தடுப்பது வன்முறையாகும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
 
தங்கள் சமூகம் பற்றியோ, மார்க்கம் பற்றியோ முன்வைக்கப்படும் எந்தக் கருத்துக்களையும், காட்சிகளையும் சகித்துக் கொள்ள முடியாமல், முஸ்லிம்கள் மூர்க்கம் கொள்வதாக விமர்சிக்கப்படுகிறது.
 
முஸ்லிம்களின் இத்தகைய இறுக்கமான அணுகுமுறைகள், அவர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழிவகுக்கும் என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.
 
விஸ்வரூபம் மீதான தடையைத் தொடர்ந்து எழுந்துள்ள இத்தகைய கருத்துகள், கேள்விகள், வாதங்கள், விமர்சனங்கள், எச்சரிக்கைகள் அனைத்தும் அர்த்தமற்றவையாகவும், அறமற்றவையாகவும், ஆபத்தானவையாகவும் உள்ளன.
 
ஏற்கெனவே மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த கார்டூனை நீக்கச் சொல்லி தலித் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதும், கருத்துரிமைக் காவலர்களிடமிருந்து இதே வகையான விமர்சனம் எழுந்தன. தலித்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்றும், ஒரு கார்டூனைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத இறுகிய மனமாக தலித்களின் மனம் உள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டது.
 
தலித்கள் அம்பேத்கர் கார்டூனை எதிர்த்தது ஏன்? முஸ்லிம்கள் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்ப்பது ஏன்? என்பதற்கான காரணத்தையும், பின்னணியையும், நியாயத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாததனால் எழுகின்ற விமர்சனங்கள் இவை.
 
மோதிலால் நேரு போன்ற 'பாரட் லா' பட்டம் பெற்றவர்களால் கூட எழுத முடியாத இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, மூன்றே ஆண்டுகளில் எழுதி முடித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். தமது அறிவாலும், ஆளுமையாலும் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை வடிவமைத்துத் தந்தவர். எட்டு மணிநேர வேலைத் திட்டத்தை சட்டமாக்கியவர். சர்வீஸ் கமிசன், எம்ளாய்மென்ட் எக்சேஞ் என்றெல்லாம் இன்று செயல்படும் பல்வேறு அரசுத் துறைகளின் முகவரி அவர். சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒருங்கிணைந்த ஒரே நாடாக உருவாக்கியவர். காஷ்மீர் பிரச்னை தீரவேண்டுமெனில் அம்மக்களின் விருப்பப்படி முடிவு எடுக்க வேண்டும் என முன்னறிவித்தவர். உலகத்தின் மிகச்சிறந்த ஆறு படிப்பாளிகளில் முதல் மனிதராய் அடையாளப்பட்டவர்.
 
இத்தகைய சிறப்புக்குரிய ஒரு பெருந்தலைவரை, இந்த நாட்டின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவரை, இம்மண்ணின் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாய்த் திகழ்ந்தவரை, இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவே சாட்டையை சுழற்றி முதுகில் அடிப்பது போல சித்தரித்து, இழிவுபடுத்தி கார்டூன் போட்டால் யாரால்தான் அதை சகிக்க முடியும்? அந்தக் கார்டூனை பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடமாக்கினால் எவரால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்?
 
எனவேதான், ஒரு வரலாற்று மோசடிக்கு எதிராக, திரிபு வாதத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினர் தலித்துகள். உடனே அம்மக்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக சித்தரிக்கப்பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும் சகித்துக்கொண்டு ஊருக்கு வெளியே சேரியில் ஒடுங்கி வாழும் மக்களை சகிப்புத்தன்மை அற்றவர்களாக சித்தரிப்பது என்பது மிகப்பெரும் கருத்தியல் வன்முறை ஆகும். அந்த வன்முறைதான் இப்போது முஸ்லிம்கள் மீதும் திரும்பியுள்ளது.
 
மணிரத்னம் எடுத்த பம்பாய் படத்தை, 'என்னிடம் போட்டுக் காட்டாமல் திரையிடக்கூடாது' என்று பால்தாக்கரே கட்டளையிட்ட போதும், 'தெய்வத் திருமகன்' என்ற பெயரை மாற்றியே ஆக வேண்டுமென அடம்பிடித்து விக்ரம் வீட்டை முக்குலத்தோர் அமைப்புகள் முற்றுகையிட்ட போதும், 'மாட்டுக்கறி சாப்பிடுகிறார் ஜெயலலிதா' என எழுதியதற்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கியபோதும், கருத்துரிமைக் காவலர்களின் குரல்கள் ஏனோ ஒலிக்கவில்லை. பால்தாக்கரேவும், முக்குலத்தோரும், ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், தலித்களும் முஸ்லிம்களும் தம்மைப் பற்றிய அவதூறுகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும் அதை எவராலும் சகிக்க முடியவில்லை.
 
முஸ்லிம்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுப்பது என்பது, தமிழ் சினிமாக்காரர்களுக்கோ, குறிப்பாக கமல் போன்றவர்களுக்கோ புதிய அனுபவம் அல்ல. முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு 1992லிருந்து இன்றுவரை 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரோஜாவில் தொடங்கிய பயணம் விஸ்வரூபம் வரை வந்திருக்கிறது. இந்த 20 ஆண்டுகளும் முஸ்லிம்கள் மிகப்பெரும் சகிப்புத்தன்மையுடனேயே இருந்து வந்தனர்.
 
ரோஜாவில் முஸ்லிம் வேடமிட்ட தீவிரவாதி ஒருவர் இந்திய தேசியக் கொடியை தீயிட்டுக் கொழுத்துவதுபோல காட்சியமைத்திருந்தார் மணிரத்னம். 1992களில் இந்தியாவில் எந்தக் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றதில்லை; எந்தவொரு முஸ்லிமும் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்படவுமில்லை; தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப் பட்டதுமில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் பங்காற்றிய சமூகமாகவே முஸ்லிம்கள் அறியப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் ரோஜாவில் மோசமான சித்தரிப்பை செய்திருந்தார் மணிரத்னம். அதை முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
பம்பாய் படத்தில் அதே மணிரத்னம், மும்பை மாநகரில் பால்தாக்கரே நடத்திய பயங்கரவாதங்களையெல்லாம் முஸ்லிம்கள் நடத்தியதாக திரித்துக் காட்டியிருந்தார். இந்துத்துவ மதவெறிக்கு பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்திருந்த போதும், பல கோடி உடைமைகளை பறிகொடுத்திருந்த போதும், வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட போதும் ஆத்திரம் அடையாமல் முஸ்லிம்கள் 'பம்பாய்' படத்தை சகித்துக் கொண்டார்கள்.
 
ஹேராமிலும், உன்னைப்போல் ஒருவனிலும் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி காட்சியமைத்திருந்தார் கமல்ஹாசன். முற்போக்கு முகமூடி அணிந்துகொண்டு மிகவும் வன்மத்துடன் கூடிய  கருத்தாக்கங்களுடன் கமல் அவ்வாறு படமெடுத்த போதும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
ஒற்றன், வானம், பயணம் என எத்தனையோ படங்களை அவ்வாறு பட்டியலிட முடியும். விஜயாகாந்தின் பல படங்களை அந்தப் பட்டியலில் இணைக்க முடியும். அப்படி வந்த அனைத்துப் படங்களையும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
இத்தகைய நிலையில்தான் உலகம் தழுவிய அளவில் 'இன்னொசென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படமும், தமிழகத்தில் 'துப்பாக்கி' என்ற படமும் புயலைக் கிளப்பின. அமெரிக்கர்களை எதிர்த்து உலகெங்கிலும் வெடித்த போராட்டங்கள் தமிழக வீதிகளிலும் எதிரொலித்தன. சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு நிலைமை சென்றது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த 'துப்பாக்கி' திரைப்படம் முஸ்லிம்களின் கோபத்தை மேலும் கிளறியது. போராட்டங்கள் தீவிரம் பெற்றன. படக்குழுவின் அணுகுமுறையால் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
 
'துப்பாக்கி' படப் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே, 'விஸ்வரூபம்' பற்றிய விவாதமும் தொடங்கி விட்டது. ஏற்கெனவே உன்னைப்போல் ஒருவன் தந்த அனுபவமும், விஸ்வரூபத்தின் வடிவமைப்பில் உள்ள இஸ்லாமிய அடையாளங்களும் அத்தகைய விவாதத்திற்கு வழிவகுத்தன. சர்ச்சைகளும் சந்தேகங்களும் வலுக்கவே, முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசிடம் முறையீடு செய்யப்பட்டது. அரசு கமல்ஹாசனுக்கு அறிவுறுத்தியதன் பேரில், முஸ்லிம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியில் படத்தையும் போட்டுக் காட்டினார் கமல். முரண்பட்ட காட்சிகள் இருப்பதால் படத்தை தடை செய்யச் சொல்லி அரசை வலியுறுத்தினர் முஸ்லிம் அமைப்பினர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு விஸ்வரூபத்திற்கு தற்காலிக தடை விதித்தது தமிழக அரசு.
 
தம்மைப் பற்றிய அவதூறுகளையும், இழிவான சித்தரிப்புகளையும், மோசமான பரப்புரைகளையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம், சகிப்பின்மையின் எல்லைக்கே சென்ற பிறகுதான் இத்தகைய போராட்ட உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது. 1992 இலிருந்து இன்றுவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தீவிரவாதிகளாகவே சித்தரித்துவரும் சினிமாக்காரர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டியவர்கள், ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பைக் காட்டிவரும் முஸ்லிம்களை நோக்கிப் பாய்கின்றனர்.
 
இவ்வளவு நாளாக எதிர்க்காமல் இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வளவு காலமும் சகித்துக் கொண்டார்கள் என்றுதான் நாம் சொல்கிறோமே ஒழிய, ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லவில்லை. சகிப்புத் தன்மைக்கு எப்போதுமே ஒரு எல்லை உண்டு. மனதளவில் கனன்று கொண்டிருக்கும் எதிர்ப்பு எண்ணம் என்றோ ஒருநாள் வெடித்துக் கிளம்பி விடும். அதற்கான சந்தர்ப்ப சூழல்கள் வாய்க்க வேண்டும்.
 
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தை இதோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். 1988களில் அணுஉலைக்கு அடிக்கல் நாட்டும்போதே அங்கு எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அரசு அணுஉலை அமைக்கும் பணியைத் தொடர்ந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு எண்ணம், ஃபுக்குசிமா விபத்துக்குப் பிறகு மக்கள் இயக்கமாக உருமாறியது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையே ஈர்க்கும் அளவுக்கு போராட்டம் தீவிரம் பெற்றது. இந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் பொதுப்புத்தி, ‘ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என திரும்பத் திரும்ப கேள்வி எழுப்புகிறது. இடிந்தகரை மக்களை நோக்கி எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கும், இஸ்லாமியர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.
 
கமலின் படைப்புச் சுதந்திரம் பற்றி இங்கே பலரும் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே அவர் ஹேராம் எடுத்தபோது அதில் காந்தியைப் பற்றி தவறான காட்சிகள் இருப்பதாகக் கருதி காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தார்கள் என்றும், அன்பே சிவம் படத்தை இந்துத்துவ சக்திகள் எதிர்த்தார்கள் என்றும், இப்போது விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் ஒப்பீடு செய்யப்படுகிறது. முஸ்லிம்களுக்கு படத்தை போட்டுக்காட்டியது தவறான முன்னுதாரணம் என்றும், இனி ஒவ்வொரு சாதி, மத அமைப்புகளும் இதைப்போல படைகட்டி கிளம்புவார்கள் என்றும் கருத்து சொல்லப்படுகிறது.
 
காங்கிரஸ்காரர்களுடனும், இந்துத்துவ சக்திகளுடனும், ஏனைய சாதி, மத அமைப்புகளுடனும் முஸ்லிம்களை ஒப்பிடுவதே அடிப்படையில் தவறாகும். காங்கிரஸ்காரர்களுக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும், ஏனைய சாதி மத அமைப்புகளுக்கும் மிகப்பெரும் ஊடக வலிமை உள்ளது; அதிகாரப் பின்னணி உள்ளது; தாம் நினைப்பதை நினைக்கும் இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் ’லாபி’ உள்ளது. ஆனால், இவற்றில் முஸ்லிம்களிடம் என்ன உள்ளது?
 
ஆதிக்க சக்திகள் தமக்கு எதிரான கருத்துக்களை அதே வடிவத்தில் எதிர்கொண்டு விடுவார்கள். தம் தரப்புக் கருத்துக்களை வலுவாக பதிவு செய்தும் விடுவார்கள். அவதூறோ, இழிவோ எதையும் எளிதில் துடைத்தெறியும் வல்லமை அவர்களிடம் உள்ளது. ஆனால், முஸ்லிம்கள் தமக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள என்ன செய்வார்கள்? எங்கே போய் நிற்பார்கள்? தம் தரப்பு நியாயத்தை எதில் சொல்வார்கள்? நாளிதலோ, வானொலியோ, தொலைக்காட்சியோ, சினிமாவோ எதுவுமே அவர்களின் கைகளில் இல்லை.
 
கமல்ஹாசன் உன்னைப்போல் ஒருவன் எடுத்தபோது அதை எந்த முஸ்லிமும் போராடித் தடுக்கவில்லை. படம் வந்தது; முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற கருத்தை விதைத்தது; குற்றச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு விசாரணைகள் அற்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என வாதிட்டது; என்கவுண்டரில் சுட்டுத்தள்ளி அதை செய்தும் காட்டியது. அப்படத்தின் வழியே முஸ்லிம்களுக்கு எதிராக கமல் செய்த கருத்துருவாக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 2009 இல் வெளியான அப்படம் அன்றோடு சென்றுவிடவில்லை. இன்றைக்கும் விடுமுறை நாட்களில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கட்டற்ற அந்தக் கருத்துருவாக்கத்தை முஸ்லிம்களால் தடுக்கவும் முடியவில்லை; தகர்க்கவும் முடியவில்லை.
 
உன்னைப்போல் ஒருவன் ஏற்படுத்திய சமூக விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கமல் கல்லாக்கட்டியதோடு கடமை முடிந்தது என்று அடுத்தடுத்த படங்களை எடுக்கச் சென்றுவிட்டார். அவருக்காக குரலெழுப்பும் கலைத்துறையினரும், கருத்துரிமைக் காவலர்களும் அடுத்த வேலைக்குச் சென்று விட்டனர். ஆனால், முஸ்லிம்களால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை. மாநகரங்களில் குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. தகுதி இருந்தும், திறமை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திணற வேண்டியதாயிற்று. ஒரு ரயில் பயணத்தைக் கூட நிம்மதியாக நிகழ்த்த முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று. பாஸ்போர்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், வில்லேஜ் ஆபீஸ் என எல்லா அரசு அலுவலகங்களிலும் சந்தேகப் பார்வைகளையும், சில பிரத்யேக கேள்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
 
சென்சார் போர்டு பற்றி இங்கே ஏராளமான குரல்கள் ஒலிக்கின்றன. சென்சார் செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஒரு படத்தை அநியாயமாக இந்த முஸ்லிம்கள் தடுத்து விட்டார்களே என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். அரசு, நீதிமன்றம், காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்களில் நடக்கும் திரைமறைவு அரசியலையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் சாதியவாத, மதவாத முகங்களையும் பற்றி அறிந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழ வாய்ப்பில்லை.
 
பாபர் மஸ்ஜித் இடிப்பையும், மும்பை கலவர பயங்கரங்களையும், குஜராத்தில் மோடி முன்னின்று நிகழ்த்திய இன அழிப்பையும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் நடத்திய குண்டு வெடிப்புகளையும் அம்பலப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டால் அவற்றை இந்த சென்ஸார் போர்டு என்ன செய்யும் என்பதே நமது கேள்வி? இந்துத்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் நேரடியான காட்சியமைப்புகள் இல்லாமல், போகிற போக்கில் ஏதேனும் வசனமோ, பாடலோ இருந்தால்கூட சென்ஸார் போர்டு அதை அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. சென்ஸார் போர்டு போன்ற உயரதிகாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள், தமக்கு எதிரான சித்தரிப்புகளை வேர் மட்டத்திலேயே தடுத்து விடுகின்றனர். அதேநேரம் முஸ்லிம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான சித்திரங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே துப்பாக்கிக்கும், விஸ்வரூபம் எனும் முஸ்லிம் விரோத பீரங்கிங்கும் நற்சான்றிதள் கிடைக்கிறது.
 
சென்ஸார் போர்டு உறுப்பினர்களாய் இருப்பவர்கள் சமூக ஆர்வலர்களாகவும், எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படைப்பாளிகளாகவும், அடக்குமுறைகளையும், அநீதிகளையும் கண்டு கொந்தளிக்கும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்களேயானால், அவர்களின் தணிக்கையையும், அவர்கள் அளிக்கும் சான்றிதளையும் ஏற்றுக்கொள்வதில் நமக்கு மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், கறைபடிந்த கரங்களுடையோரும், பாரபட்ச போக்குகளை கடைப்பிடிப்போரும், இந்துத்துவ சிந்தனையுடையோரும் நிறைந்திருக்கின்ற ஒரு அவையின் மதிப்பீடை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்வது? எனவே, சென்ஸார் போர்டை ஒரு அளவுகோலாகக் கொண்டு, முஸ்லிம்களின் பிரச்சனைகளை அணுக முடியாது.
 
‘படம் வந்தபிறகு அதில் நமக்குள்ள மாற்றுக்கருத்துக்களை எடுத்துக்கூறி, இழிவான சித்தரிப்புகளை நீக்கச் சொல்லலாமே?’ என்பதும் பலரின் வாதம். சினிமா குறித்த அடிப்படை புரிதலின்மையால் வரும் வாதம் இது. சினிமா என்பது ஒரு கட்டற்ற ஊடகம். சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தும் ஆற்றல் சினிமாவுக்கு உண்டு. திரையரங்குகளோடு முடிந்து விடுகிற, முடங்கி விடுகிற மீடியம் அல்ல சினிமா. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையதளம் என அனைத்து ஊடகங்களிலும் சினிமாவின் கரங்கள் நீள்கின்றன. சினிமா இல்லாமல் இவற்றில் எதுவுமே இயங்குவதில்லை. எனவே, ஒரே ஒருநாள் திரையில் ஒருபடம் ஓடினால்கூட, அது மற்ற ஊடகங்கள் அனைத்துக்கும் மறுநொடியே வந்து சேர்ந்து விடுகிறது. அப்படம் முன்வைக்கும் கருத்துகள் முழுவீச்சுடன் மக்களை சென்றடைகின்றன. திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்கு, வீட்டு வரவேற்பறையிலேயே தொலைக்காட்சி அதை கொண்டுவந்து கொடுக்கிறது.

படம் வரும்போது பிறக்காதவர்கள்கூட பின்னாளில் ஏதோ ஒரு விடுமுறை நாளில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சியில் அதைக் காண வாய்ப்பிருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணையத்தின் வழியாக அப்படத்தைப் பார்க்கவும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதைப் பகிரவும் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. எனவே, மிகமோசமான சித்தரிப்புகளுடன் உருவாகும் படங்களை கருவிலேயே அழிப்பதைத் தவிர, விளிம்புநிலை மக்களுக்கு வேறு வழி இல்லை.

- ஆளூர் ஷாநவாஸ்

Pin It