இட ஒதுக்கீட்டுக்கு எதிராய் இன்று பொய் முகம் காட்டும் சில குழுக்களின் வினோதமான நிலைப்பாடுகளை நாம் இட ஒதுக்கீட்டு வரலாற்றினை சற்று திரும்பிப் பார்த்தால் உணர முடியும்.

ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியில் இருந்த மைசூர் மாநிலமானது மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கென சட்டமியற்றும் மன்றம் போன்றவையும் நாட்டிலேயே முதன்முறையாகத் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் மன்னருக்கு உதவுவதற்காக திவான் எனும் பதவி உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் திவான்களாக பெரும்பாலும் தமிழக மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த பிராமணர்களே நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் நீட்சி எப்படியாக இருந்திருக்கும். ஆம் .. மைசூர் அரசின் அரசுப் பணிகள், சேவைகள் , கல்வி என அனைத்துத் துறைகளிலும் இந்த தமிழக, ஆந்திரப் பிராமணர்கள் நீக்கமற நிறைந்து கிடந்தனர். நாமெல்லாம் இன்று நமது மத்திய அரசு, மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் தகுதி என கதையளந்து கொண்டு தங்கள் ஜாதீய உறவுகளைப் பயன்படுத்தி பதவிக்கு வந்தமரும் மேல்தட்டு மேதாவிகளையும் அவர்களை வால் வளர்த்துவிடும் ஊடகங்களையும் கண்டு பெரு மூச்சு விடுவது போல்தான் அன்றைய மைசூர் மாநிலப் பிராமணர்கள் இந்த அண்டை மாநிலப் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் கண்டு புழுங்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாகப் பிற மாநில பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்து கிடந்ததைக் கண்ட மைசூர் மாநில பிராமணர்கள் கவலையடைந்தனர். தங்களுக்கான பதவிகள் அனைத்தினையும் ஆக்கிரமித்துக் கொண்ட அண்டை மாநிலப் பிராமணர்களுக்கெதிராக இட ஒதுக்கீடு கோரினர். இப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் இட ஒதுக்கீடு ஆரம்பமானது. அன்றைய மைசூர் மகாராஜா இந்தப் பிரச்சனையின் ஆழத்தினை உணர்ந்ததனால் அவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு செவி சாய்த்தார். இதன் காரணமாக திவான் பதவியானது முதன்முதலாக மைசூரைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யாவிற்கு வழங்கப்பட்டது. அவரின் தகுதி வேறொன்றுமல்ல வேறு பல இருப்பினும் அடிப்படையாக "மைசூரைச் சேர்ந்த பிராமணர்" எனும் தகுதிதான் அவ்ருக்கு இந்தப் பதவியினைப் பெற்றுத் தந்தது.

இதனால் என்ன நடந்ததென்றால் இதுவரையிலும் அரசு வேலை மற்றும் சேவைகளில் நுழைய முடியாதிருந்த மைசூர் பிராமணர்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டு அந்தக் கதவுகள் இவர்கள் கிட்டத்தட்ட 100 சதவிகித உயர் அரசுப் பணியிடங்கள் மட்டுமன்றி அனைத்து அரசின் அனைத்து பணியிடங்களையும் கைப்பற்றுவதில் முடிந்தது. தகுதி, திறமையெல்லாம் இப்படி அடைந்ததுதான்.

வழக்கம்போல இவை நடக்கும் வரையில் ஒன்றும் தெரியாத லிங்காயத்,முஸ்லீம்,முதலியார், வீர சைவர்கள் மற்றும் வொக்கலிகர் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மைசூர் பிராமணர்களின் தனி மேலாதிக்கத்தினை முறியடிக்க போராடத் தொடங்கினர். ஏற்கெனவே மைசூர்ப் பிராமணர்களின் கோரிக்கையிலுள்ள நியாத்தினை உணர்ந்த மன்னரால், இந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நியாயத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. மக்களாட்சியின் மன்னர்களும், இளவரசர்களும் புரியாதது போல் பாசாங்கு செய்வதனைக் கண்டால் இந்த மக்களாட்சியை விடவும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்தமட்டில் மன்னராட்சியே பரவாயில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

மில்லர் குழு 1918

அன்றைய மைசூர் மாகாண உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாயிருந்த மில்லர் அவர்களின் தலைமையில் 1918 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு மன்னர் உத்தரவிட்டார். மன்னர் ஆணையிட்டால் போதும்தானே.. பொறுக்குமா திவானாயிருந்த விஸ்வேஸ்வரய்யா அவர்களுக்கு. தகுதியால் திவானான இந்த விஸ்வேஸ்வரய்யா துறந்தார் திவான் பதவியினை.. ஜாதீயம் போற்றாத விஸ்வேஸ்வரய்யா??

மில்லர் குழு பரிந்துரைகள்

1) 75 % இட ஒதுக்கீடு..

( அன்னாளைய தலைமை நீதிபதி அதனால் 50 சதவிகித விதி மீறல் தெரியாமலிருந்தார்.. அல்லது உண்மையை உணர்ந்தவராயிருந்தார்)

2) குறைந்த பட்சம் 50 சதவிகிதமாவது அடைய கால வரையறை செய்யப்பட வேண்டும்

( 27% சொல்லப்பட்டு 22 ஆண்டுகள், அமல்படுத்தப்பட்டு 18 ஆண்டுகள்.. மத்திய அரசை வெள்ளையறிக்கை கூட கோர இயலாத நிலையில்.. ஜன நாயக அரசுக்கு அடக்கு முறைகள் 5000 ஆண்டுகளென்றால் அதனைத் தீர்க்க 2500 ஆண்டுகளாவது நம்மைப் போன்ற ஜனநாயகத்தில் தேவைப்படாதா?)

3) பணியமர்த்தலானது மதிப்பெண் அடிப்படையிலல்லாமல் கடமை தவறாமை, வாய்மை,யோக்கியதை, துணிவு மற்றும் இரக்கம் போன்ற குணங்களினடிப்படையில் இருக்க வேண்டும்.( இதெல்லாம் நாங்கள்தான் மற்ற்வர்களுக்கு இருக்க வேண்டும் எனச் சொல்லி ஏமாற்றும் கல்யாண குணங்கள். அதனை எங்களுக்கு எதிராகவே உபயோகித்தால் எப்படி ?)

4) ஆதரவு ஊதியத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் படிப்பு உதவித் தொகை

5) பள்ளி மற்றும் விடுதிகள் கட்டிட இலவச மனைகள்

மஹாராஜா அவர்கள் மில்லர் குழு அறிக்கையினை ஏற்று நடைமுறைப்படுத்தினார். நாளாவட்டத்தில் இந்த இட ஒதுக்கீடானது பிராமணர்கள்,Anglo-Indians, ஆங்கிலேயர்கள் தவிர அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிராமணர்களின் மேலாதிக்கத்தினை இந்த இட ஒதுக்கீடானது முடிவுக்குக் கொண்டு வந்தது. இருப்பினும் இந்த இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில சமுதாயங்கள் குறிப்பாகச் சொல்லப் போனால் வொக்காலிகர்களும், பொருளாதார அளவினடிப்படையில் சில பிராமணர்களும் நாட்டின் திட்டமிட்ட வளர்ச்சிக்கான காலங்களில் அதிகமான பலன்களைக் கையகப்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட ஒரு சார்பு வளர்ச்சியினால் வெறுப்புற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

மாநில மறு சீரமைப்பின் காரணமாக பல புதிய அதாவது மில்லர் குழுவால் பரிசீலிக்கப்படாத பகுதிகள் கர்நாடகத்துடன் 1956 ஆம் ஆண்டு இணைந்ததன் காரணமாக இட ஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது. மேலும் பாலாஜி வழக்கின் நீதியாணையின் படி இட ஒதுக்கீடுக்கு உச்சவரம்பு ஆகியவற்றால் கர்நாடக இட ஒதுக்கீட்டு வரலாற்றில் சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு திரு நாகன் கவுடா அவர்கள் தலைமையில் 1960 ல் ஒரு குழு அமைக்கப்பெற்றது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என இரண்டு பிரிவுகளாக மாற்றப்பட்டது. மேலும் இட ஒதுக்கீடு 50 சதவிகித உச்சவரம்புக்குள் நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டு வருமானம் ரூ 1200/-க்குள் வரும் அனைவருக்கும் இலவச விடுதி மற்றும் கல்வியும், பத்தாண்டுகளுக்குப் பின் சாதிகளின் முன்னேற்றம் கணக்கிடப்பட்டு அந்த சமுதாயங்கள் இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவையா அல்லது இட ஒதுக்கீடு தேவையற்ற நிலையிலுள்ளதா என்பதனை ஆய்வு செய்யுமாறும் இந்தக் குழு பரிந்துரைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் பல சமுதாயங்களை பட்டியலில் சேர்க்காமால் விட்டதனால் இதன் பரிந்துரைகள் மீதான அரசாணைகள் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

1971 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் திரு தேவராஜ் அர்ஸ் அவர்கள் திரு L G ஹாவனூர் அவர்கள் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தினை அமைத்தார். இந்தக் குழுவானது 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி தனது அறிக்கையினை அரசுக்கு அளித்தது.அர்ஸ் அவர்கள் ஹாவனூரின் செயல்பாட்டினை உனர்ந்து அவரைத் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கினார். அறிக்கையினை அமல்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தார் ஹாவனூர்.

இந்த அறிக்கை ஹாவனூர் அறிக்கை என்றே கூறப்பட்டது. உச்ச நீதிமன்றமானது அந்த அறிக்கையினை அறிவியல் பூர்வமான ஆய்வு என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

அர்ஸ் அதிகம் படித்தவரல்ல. அவர் சார்ந்த ஜாதி பெரும்பான்மையானதுமல்ல. இருப்பினும் இன்றும் பேசப்படும் முதல்வராக, மக்களால் நினைவு கூரப்படும் முதல்வராக அர்ஸ் இருப்பதன் காரணம் ஹாவனூர் அவர்கள் என்றால் அது சிறிதும் மிகைபடுத்தப்படாத உண்மையாகும்.ஹாவனூர் அவர்களைத் தனது அமைச்சரவையிலும் சேர்த்து சட்ட அமைச்சராக்கி இந்த அறிக்கையினை முழுமையாக செயல்படுத்திடவும் அர்ஸ் அவர்கள் வழி வகை செய்தார்.

ஹாவனூர் அவர்களுடைய அறிக்கையினை நடைமுறைப்படுத்திய அர்ஸ் அவர்கள் அதனை 'பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வேதாகமப் புத்தகம்' என அதனை வர்ணித்தார். இன்றும் அது பெரும் ஆவணமாகத் திகழ்வதற்குக் காரணம் ஹாவனூர் அவர்கள் அரசியல்வாதியல்லாத சமூக அறிவியலாளராகவும், வழக்கறிஞராகவும் இந்தப் பிரச்னையின் தீவிரமுணர்ந்து செயல்பட்டதுதான் காரணம். ஹாவனூர் அவர்கள் தனது திறமையின் காரணமாக தென் ஆப்ரிக்காவின் அரசியலமைப்பு ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற ஒரே இந்திய வழக்கறிஞர் எனும் புகழினையும் அடைந்தார் .

இதன் காரணமாகத்தான் தேவே கவுடா, பங்காரப்பா,வீரப்ப மொய்லீ, எஸ் எம் கிருஷ்ணா போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர்கள் முதல்வர்களாக முடிந்தது. மத்திய அரசில் அமைச்சர்களாகவும், பிரதமராகவும் முடிந்தது. வரலாற்று வினோதமென்னவென்றால் இவர்கள் யாரால் இதனையெல்லாம் அடைய முடிந்ததோ அந்த ஹாவனூர் அவர்களை மறந்து போனதுதான்.ஆம் .. இன்னும் நாம் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பது இத்தகைய மறதிகளால்தான். மறதி எனும் இருளில் மறைந்த பெயர்களில் ஹாவனூரும் ஒருவர். ஏனென்றால் அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்பதால்தான்.

இதன் பின்னர் இரு ஆணையங்கள் அதாவது திரு வெங்கடசாமி மற்றும் நீதியரசர் ஓ சின்னப்ப ரெட்டி அவர்கள் தலைமையில் அமைந்தாலும் அந்த இரு குழுக்களின் அறிக்கைகளும் பல சமுதாய மக்களின் எதிர்ப்பின் காரணமாக நீதிமன்றத் தடையாணை மற்றும் அரசின் முடிவுகளாலும் நடைமுறைப்படுத்த இயலாமற் போனது குறிப்பிடத் தக்கது.

கர்நாடக மாநில இட ஒதுக்கீடானது ஹாவனூர் அவர்களின் அறிக்கை எனும் பலமான அடித்தளத்தின் மீது எழுப்பபட்ட கம்பீரமான சமூக நீதிச் சரித்திரமாக விளங்குகின்றது.

Pin It