சமீபத்தில் வெளியான ‘மாவீரன் கிட்டு’ படம் பார்த்தேன். தற்போதும் தினமும் தமிழ்நாட்டில் தனிச்சுடுகாடு, தனிக்குடியிருப்பு, தேனீர்க்கடைகளில் தனிக்குவளை, கோவில் சடங்குகளில் வித்தியாசம், முடிதிருத்தும் நிலைங்களில் அனுமதி இன்மை போன்றவை பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் உள்ளவைதான். இதை வெளிப்படையாகச் செயல்படுத்துபவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களே. எனவே அன்றாட வாழ்வு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் தாழ்த்தப்பட்டோரைக் கொடுமைப்படுத்துவது பிற்படுத்தப்பட்டவரே. இதுவே நடைமுறை உண்மை. இந்தப் பார்வையிலேயே தொடங்கும் படம் இறுதி வரை இதே பார்வையில் செல்கிறது.

maaveeran kittuஇப்படத்தில் வரும் கிராமியச் சூழல் ‘அமைதியற்ற’ சூழலாகவே உள்ளது. தலித்துகளின் வளர்ச்சியைப் பிடிக்காத பிற்படுத்தப்பட்டவர் அதற்கு எதிராகக் காவல் மற்ரும் அரசியலைப் பயன்படுத்துகின்றனர். அதில் கருப்புச்சட்டையோடும் வார்த்தைகளில் சாட்டையோடும் வரும் சின்ராசு என்ற பார்த்திபன் தலித் இளைஞனின் கல்வி உயர்வு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாக்கி, கதையின் நாயகனை சரியாகச் செம்மைப்படுத்துகிறார்.

அதே சமயம் அவனுள் இருக்கும் போர்குணத்தைத் தன் சமூக வளர்ச்சி என்ற நோக்கில் கொண்டு செல்கிறார். கற்பி! சமூக முன்னேற்றத்திற்காக போராடு! என்ற நோக்கில் இப்படம் சரியாகச் செல்கிறது. ஆணவப் படுகொலை, பொதுப் பாதை மறுப்பு போன்றவறை கண் முன் நிறுத்தி வைக்கிறது. கல்வி கற்ற தலித்துகள் சம உரிமைக்காகத் தவிப்பதும், அந்தக் கல்விதான் இவற்றுக்குக் காரணம் என்று பிற்படுத்தப்பட்டவர் கொதிப்பதும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் விட ஒரு சமூக உணர்வுள்ள பிற்படுத்தப்பட்டவர் தன் பெண்ணை தலித் இளைஞனுக்கு மணமுடிக்க முடிவெடுப்பது வரவேற்க வேண்டிய காட்சி அமைப்பு. இவை எல்லாம் உடன்பாடானவை.

கல்வி கற்பதுதான் SC க்குத் திமிர் என்றும், அது காமராசர் செய்த வேலை என சொல்லப்படும் காட்சி ஒன்று வருகிறது. அந்த ஒற்றைவரிக்குள் இட ஒதுக்கீட்டின் வரலாற்றையே காணாமற் போகச் செய்ததாகத்தான்படுகிறது. தமிழகத்தில் ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளி, தெருதோரும் தொடக்கப் பள்ளி என்ற குறிக்கோளோடு தன்னால் இயன்றவரை கல்விக்கூடங்களை தமிழகத்தில் தொடங்கினார் கர்மவீரர் கல்வி வள்ளல் காமராசர் என்பதில் அய்யமில்லை. அதைக் குறைத்தும் சொல்ல வில்லை.

மாறாக ஆதிக்க உணர்வுள்ள சாதி வெறியுள்ள எந்தப் பிற்படுத்தப்பட்டவரும் காமராசரை வெறுப்பதில்லை. .மாறாக இட ஒதுக்கீட்டைத்தான் வெறுக்கிறான். எது தன் சமூக முன்னேற்றத்திற்கு ஏணியோ அதையே எட்டி உதைக்கப் பார்கிறான் காரணம். இட ஒதுக்கீடு தலித்துகளின் வளர்ச்சி மற்றும் சுயமரியாதைக்குக் காரணம் என நினைப்பதால்தான்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படத்தைப் பார்க்கும் யாருக்கும் இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூக விளைவு என்ன என்பதை அறிய வாய்ப்பே தரவில்லை. மேலும் இக்கதைக் களம் 1987 என்பதை விட 1995 - 96 களில் என்றால்தான் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனென்றால் 87களில் ஈழச்சிக்கலே சமூக இயக்கங்களைக் கவ்வி இருந்தது. 1995 - 96களில்தான் தலித்துகளின் சுயமரியாதைப் போராட்டங்கள் பெரிதாக நடக்கிறது. எனவேதான் அக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி பிற்படுத்தப்பட்டோரா? பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரி தாழ்த்தப்பட்டவரா? என்ற இரு வெளியீடுகள் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது,(பெரியார் மய்ய வெளியீடுகள்)

இடஒதுக்கீடுதான் சாதிய நடைமுறை இறுக்கத்தைத் தளர்த்தும். உதாரணமாக, சாதிக் கலவரங்களில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் அதிகாரிகள், ஊழியர்கள் எத்தனை பேர்? என்ற கேள்வியே இச்சமூகச் சூழலுக்கு விடை. மேலும் இப்படத்தில் போராட்டத்தின் கூர்மையை ஒரு தந்திரத்தால் கொண்டு செல்லப்படுவது என்பது நெருடுகிறது.

அது திரைப்படம் என்கிற அளவில் சரி ஆனால் சமூகச் சிக்கலைப் படமாக எடுக்கும்போது அது நெருடலாகத்தான் உள்ளது. படம் முழுவதுமே தாழ்த்தப்பட்டவருக்கு எதிரி பிற்படுத்தப்பட்டவர் என்றே கொண்டு செல்லப்படுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு பிற்படுத்தப்பட்டோர் எதிரியா? பிற்படுத்தபட்டோருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோரா?அல்லது இருவருக்குமே யார் எதிரி? இப்படம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் படம் பார்க்கும் சராசரித் தமிழன் எதை உணர்வான்?

அப்படியானால் இந்தக் கொடுமையை சொல்லவே கூடாதா? என்ற கேள்வி பிறக்கும். சொல்ல வேண்டிய விசயம்தான். மாறாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அடிமைதான். BC க்கு உள்ள சமூக இழிவு என்பது SC க்களை கீழே வைத்திருக்கும் இன்பத்தில் மிதந்து கொண்டிருக்கிறான் என்பதையும் அல்லவா கோடிட்டாவது காட்டி இருக்க வேண்டும்?

கோவில்களில் தலித்துகளுக்கு மரியாதை மறுக்கப்படும்போது தலித்துக்கு ஆதரவு நிலை எடுத்துக் கொண்டு அதே சமயம் எஸ்.சி யும் பி.சி யும் கோவிலுக்கு வெளியில்தானே சண்டை செய்து கொள்கிறார்கள்! கருவறை என்பது இருவருமே நுழையக்கூடாத இடம் என்பதையும் சொல்வதுதானே சமூகப் பார்வை? கருப்புச் சட்டையிடமிருந்து இந்தக் கோணம் இப்படத்தில் காண முடியவில்லையே?

1981 ல் குஜராத்தில் தாழ்த்தப்பட்டோருக்குரிய வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் துணையுடன் பார்ப்பன உயர் சாதியினர் போராடியபோது தலித்துகளுடன் பிற்படுத்தப்பட்டவர்கள் இணைந்து போராடாமல் ஒதுங்கி இருந்தனர்.

அதேபோல 1985 ல் அதே குஜராத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 10 சதத்திலிருந்து 25 சதமாக அரசால் உயர்த்தப்பட்டது. உடனே இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். துணையுடன் பார்ப்பனர்கள் போராடி வெற்றி பெற்றனர். இதில் தலித்துகள் பிற்படுத்தப் பட்டோருக்காகக் குரல் கொடுக்கவில்லை.

இதை உணர்ந்து தற்போது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டணி உருவாகி வருகிறது. என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இப்படம் இதையும் கணக்கில் எடுத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

Pin It