முந்தைய பகுதியில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணத்துக்கு முந்தைய பாலுறவையும், திரு மணத்துக்குப் பின் மண உறவுக்கு அப்பால் ஏற்படும் பாலுறவையும் சமூகம் அனுமதித்து விட்டால், இதன் மூலம் இவையெல்லாம் ஒன்றும் பெரிய சேதியில்லை. அது இயல்பானதுதான், சாதாரணமானதுதான் என்று கருதுகிற அளவுக்கான மதிப்பீடுகளை உருவாக்கி விட்டால், அப்படிப்பட்ட மதிப்பீடுகளுக்கு உகந்தவாறு சமூகத்தைப் பழக்கி விட்டால், பாலியல் சார்ந்த குற்றச் செயல்களில் தொண்ணூறு விழுக் காட்டிற்கு மேல் இல்லாமல் போய்விடும். அப்புறம் இருப்பது வெறும் பாலியல் வக்கிரம் சார்ந்த குற்றங்கள்தான். அந்த வக்கிரங் களுக்குக் காரணம் என்ன? அதைப் போக்குவது எப்படி? என்பதைப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டுவது இந்த இரண்டு பிரச்சினைகள்தான்.

இதில் முதல் பிரிவையாவது, அது திருமணத்திற்கு முற்பட்டது, அறியாமல் அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று பலரும் மன்னித்து விட்டு விடுவார்கள். ஆனால் திருமணத்துக்குப் பின்னும், மண உறவுக்கு அப்பாலும் என்றால்தான் பலருக்கும் துடிதுடிக்கிறது, கொதி கொதிக்கிறது. அல்லாது கட்டிய கணவன் இருக்க அவனைவிட்டு இன்னொரு வனுடன் எப்படி என்று கேள்வி கேட்க, முகம் சுளிக்க, அருவருக்க வைக்கிறது.

சரி, இந்த உணர்வுகளுக்கு எது காரணம்? எது இப்படி நினைக்க வைக்கிறது? பாலுறவு சார்ந்த சமூக மதிப்பீடுகள்தான். இதில் சம்பந்தப் பட்டவர்கள் இம்மாதிரி நிகழ்வுகளைத் தாங்களே ஏற்றுக் கொள் வதானாலும் அனுமதிப்பதானாலும், கண்டும் காணாமல் விடுவ தானாலும் நாலுபேர் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்கிற தயக்கம். சமூக நோக்கில் தான் எங்கே இழிவாக நோக்கப்பட்டு விடுவோமோ என்கிற அச்சம். இதுதானே இப்படி நினைக்க, இதுசார்ந்து செயல்பட வைக்கிறது?

பாலியல் சார்ந்து நிகழும் குற்றச் செயல்களை, அதாவது இந்த உறவின் புற விளைவாக நிகழும், நிகழ்த்தப்படும் குற்றச் செயல்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நிதானமாகச் சிந்தித்து நன்கு திட்டமிட்டு பொறி வைத்து அதற்குள் ஈர்த்து தண்டிப்பது, கொலை செய்வது. மற்றொன்று ஆத்திரத்தில் அறிவிழந்து அந்தக் கணத்தின் மூர்க்கத்தனத்துக்கு, வெறிக்கு, பலியாகி, நிதானமிழந்து அந்த நேரத்தில் தோன்றுகிற எதையாவது செய்து குற்றச் செயலுக்கு ஆளாவது, மனைவியை அல்லது மனைவியோடு சேர்பவனை அல்லது இருவரை யுமே வெட்டிக் கொல்வது. சில சந்தர்ப்பங்களில் குழந்தைகளையும் சேர்த்துப் பழி தீர்ப்பது. இப்படி இவையெல்லாமே ஆத்திரத்தில் நிகழ்வது.

இப்படி ஆத்திரத்தில் விளையும் கொலைகளே கூட சம்பவம் நடந்து முடிந்துவிட்ட பிறகு அதை மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட முயற்சிகள், நிதானமான நடவடிக்கைகள் என்பவை வேறு செய்திகள்.

ஆக, பாலுறவு சார்ந்த குற்றச் செயல்கள் ஒன்று ஆத்திரத்தில் அந்தந்தத் தருணத்தில் ஏற்படுகிற மூர்க்கத்தனத்தில் அல்லது நிதானமான திட்டமிட்ட ஏற்பாட்டில் ஆக இந்த இரண்டு வகைகளில் ஏதோ ஒரு வகையிலேயே நடைபெற்று வருகிறது.

சரி. இப்படிப்பட்ட மூர்க்கத்தனத்தை அல்லது நிதானமான திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தூண்டுவது எது? எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் ஒரு மனநிலை தேவைப்படுகிறது. இந்த மனநிலை உந்துதல் இல்லாமல் யாரும் எந்தச் செயலையும் செய்ய முடியாது. இதில் இப்படிப்பட்ட மனநிலையைக் கட்டமைப்பது, இதற்கு உந்துவது எது?

எல்லாமும் இந்த சமூக மதிப்பீடுகள்தான். அதுசார்ந்த சிந்தனை கள்தான். இப்படி ஒரு சமூக மதிப்பீடு இல்லாமல் அதுசார்ந்த சிந்தனைகள், உணர்வுகள் எழாது. இப்படிப்பட்ட சிந்தனைகள், உணர்வுகள் இல்லாமல் அது சார்ந்த செயல்பாடுகளும் எழாது.

சரி. அப்படியானால், இப்படிப்பட்ட எல்லாம் வல்ல, மனிதனைப் பேய்போல் பிடித்தாட்டி வைக்கிற இந்தச் சமூக மதிப் பீடுகளை உருவாக்கியது யார்? ஆதிக்க சக்திகள். இந்த ஆதிக்க சக்திகள் தங்கள் நலனுக்கு வேண்டியே, தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவே, இப்படிப்பட்ட மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துள்ளன. இவை தங்கள் நலனுக்கான மதிப்பீடுகள் என்று வெளிப்படையாகச் சொன்னால், சமூகத்தில் யாரும் அதை ஏற்கமாட்டார்கள் என்பதற்காக, இதையே அனைத்துச் சமூக நலனுக்குமான மதிப்பீடுகளாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி உருவாக்கி வைக்கப்பட் டிருக்கும் இந்த மதிப்பீடுகளுக்குத் தர்க்க பூர்வ நியாயங்கள் அறிவியல் கோட்பாடுகள் என்ன?

எதுவும் கிடையாது. அப்படி ஏதாவது இருப்பதானால் அது ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருக்கும். சாமான்யனுக்கு அதில் எந்தப் பலனும் இருக்காது. மாறாக இடையூறே இருக்கும்.

காட்டாக, சாதிக்குள் திருமணம், சாதிக்குள் மண உறவு என்பது யாருக்கு உகந்ததாக இருக்கும்.? சாதி வெறி பிடித்தவர்களுக்கு, சாதி ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புபவர்களுக்கு, சாதியமைப்பைக் கட்டிக் காக்க, பாதுகாக்க விரும்புபவர்களுக்கு உகந்ததாக இருக்கும். சாதியே வேண்டாம் என்பவனுக்கு எங்குப் போனால் என்ன? யாரோடு சேர்ந்தால் என்ன? எந்த இடையூறும் இல்லை. ஆனால் இப்படிச் சேரக்கூடாது என்பதுதான் சாமான்யனுக்கு இடையூறு.

அதேபோல மேல் சாதிக்காரர்கள், மேட்டுக் குடியினர் தங்கள் புனிதம் காக்க, சமூக இருப்பு, மேட்டிமைத் தனத்தைக் காக்க தங்கள் பெண்களுக்கு ‘கற்பு’க் கவசம் பூட்டி வேறு ஆண்கள் யாரும் தொடாமல் பார்த்துக் கொண்டார்கள். அதற்கான நியாயங்களையும் கற்பித்து, இதே ‘கற்பு’ நெறியை மற்றவர்களுக்கும் பூட்டி, இதையே பிரச்சினையாக்கி ஒருவருக் கொருவர் மோத, வெட்டி மடியக் கற்பித்தார்கள். ஆனால் இவர்கள் மட்டும் தாராளமாக வெளிப் பெண்களை மேய்ந்தார்கள்.

நிகழும் சம்பவங்களை ஒன்று ஒன்றாக எடுத்து ஆராய, இதில் பல விடயங்கள் புரியும். இப்போதும் கூட ஊன்றிப் பார்த்தீர்களானால், அடித்தட்டு, கடைநிலை மக்களிடம் இந்த மதிப்பீடுகள் மீறப்படுவதும், தவிடுபொடியாவதும், அலட்சியப்படுத்தப்படுவதும் மிகச் சாதா ரணமாக நிகழும். ஆனால் மேட்டுக்குடி மக்களே ஊருக்கும் உலகத்துக்கும் ஒழுக்கத்தைப் போதித்துத் திரை மறைவில் சந்தடி யில்லாமல் அதை மீறிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த இரண்டுக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு மேட்டுக்குடி மக்கள் போல் எதையும் மூடி மறைக்கத் திரைகள் இல்லாமலும், அடித்தட்டுக் கடைநிலை மக்கள்போல் எதையும் மீறும் வகையில் சமூக இருப்பு பற்றிய பொருட்பாடு மற்றும் அச்சமற்று இருக்க முடியா மலும், இரண்டுமற்ற தடுமாற்றத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நடுத்தட்டு மக்கள்.

ஆக, சுருக்கமாக நடுத்தட்டு மக்கள், மேல் தட்டு மக்களது ஆதிக்க நலன் சார்ந்த மதிப்பீடுகளைத் தங்களுக்கான மதிப்பீடுகள் போல் மயங்கி அதைப் பின்பற்றி ஒழுக முயல்வதும், மேல்தட்டு மக்கள் போல் ஆக முயல்வதும், அடித்தட்டுக் கடைநிலை மக்கள், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை மதிப்பீடுகளை நகல் செய்ய முயல்வதினாலுமேயே பல சிக்கல்கள் நேர்கின்றன.

இப்படிச் சொல்வதை வைத்து இதன் பொருள் புரியாமல் சிலர், அப்படியானால் யாரும் யாராகவும் மாறாமல் அவரவரும் அவரவர் நிலையிலேயே அப்படியே இருக்கவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்கலாம். இப்படி எதுவும் நாம் சொல்லவில்லை. எல்லாரும் எல்லாமுமாக மாறிச் சமத்துவ நிலையை அடையவேண்டும். சகவாழ்வு வாழ வேண்டும் என்றே சொல்கிறோம்.

ஆனால் அதேவேளை சமூக மதிப்பீடுகளைப் பொறுத்தமட்டில் அறிவியல் நோக்கிற்குப் பொருத்தமானதும் தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டதும் அனைவருக்கும் பொதுவானதுமான சனநாயக சமத்துவ மதிப்பீடுகளை உருவாக்கி வாழ முயலவேண்டுமேயல்லாது ஆதிக் கங்கள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய மதிப்பீடுகளை நம்பி அதைக் காப்பியடித்து வாழ முயலக் கூடாது. இதனாலேயே பண்பாட்டுத் தளத்தில் பல சிக்கல்கள் எழுகின்றன என்கிறோம். அதாவது நடுத்தட்டு மக்கள் மேல்தட்டு மக்களது ஆதிக்க மதிப்பீடுகளைப் பின்பற்ற முயல்வதும், கடைநிலை, அடித்தட்டு மக்கள், நடுத்தட்டு மேல்தட்டுப் பிரிவினரின் மதிப்பீடுகளைப் பின்பற்ற முயல்வதுமே பல இடர்ப் பாடுகளுக்குக் காரணமாகின்றன. ஆகவே இவற்றைப் புறந்தள்ளி, அனைத்து மக்களுக்கும் பொதுவான அறிவியல் நோக்கிற்குப் பொருத்தமான மதிப்பீடுகளை நாம் உருவாக்கவேண்டும் என்கிறோம்.

இப்படிப்பட்ட உருவாக்கம் என்பது இதோ இப்படி எழுதி வெளிப்படுத்துவது போல் அவ்வளவு இலகுவில் உருவாகி விடுவது அல்ல. காரணம் ஆதிக்க மதிப்பீடுகளைத் தாங்கிப் பிடிக்க அதை மகோன்னதப் படுத்தி, அதுதான் உண்மையானது, நியாயமானது என்று நம்ப வைக்க ஆதிக்க சக்திகளிடம் ஆயிரம் பொறியமைவுகள் இருக்கின்றன. ஆதிக்க நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், நாளேடுகள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என இலட்சக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் சென்றடையக் கூடிய வலிமை மிக்க பல ஊடகங்கள் இருக்கின்றன. அதன்வழி இவை இடைவிடாது இந்த மதிப்பீடுகள் பற்றிய “மேன்மைகளை”ப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

அதாவது, பெண், கற்பு, இல்வாழ்க்கை, மங்கலநாண், ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன், பற்றியதான கற்பிதங்களை இவை நாள்தோறும் இடைவிடாது எல்லாவகையிலும் பரப்பி வருகின்றன.

தவிரவும் இத்தகைய மதிப்பீடுகள் காலம் காலமாகப் பலநூறு ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்படவும், கடைப்பிடிக்கப்படவும் பழக்கப்படுத்தப்பட்டு, நிர்ப்பந்தப்படுத்தப்பட்டும் வந்திருப்பதால் அவை மக்களிடையே நன்கு இறுகியும் கெட்டி தட்டிப் போயும் உள்ளன.

எனவே, நீண்ட நெடுங்காலமாகவும், அனைத்து வகை புராதன மற்றும் நவீன ஊடகங்கள் வாயிலாகவும் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த ஆதிக்க, போலி மதிப்பீடுகளை ஒரு நாளில் அல்லது ஓர் ஆண்டில் தகர்த்துவிடமுடியும் என்பது சாத்தியமல்ல. மாறாக இது ஒரு தொடர் போராட்டம். நீண்ட, நெடிய, கடுமையான போராட்டம். பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் இடையே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய போராட்டம் என்பதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தவிரவும், மனித மூளை எந்த நாளிலும் வெற்றிடமாயிருந்து விட முடியாது. அது எப்போதும் எண்ணற்ற சிந்தனைகளின் கருவூலமாகவே இருந்து கொண்டிருக்கும்.

இதில் ஆதிக்க சிந்தனைகளும் உண்டு. ஆதிக்க எதிர்ப்புச் சிந்தனை களும் உண்டு. ஆனால் தன்னுள் பொதிந்து கிடக்கும் சிந்தனைகளில் ஆதிக்கச் சிந்தனை எது, ஆதிக்க எதிர்ப்புச் சிந்தனை எது என்று அறிய முடியாதவாறு ஆதிக்க சக்திகளால் மனிதன் இறுக்கப் பட்டிருப்பதால், அப்படிப்பட்ட குழப்பத்தோடு அவனது சிந்தனை கட்டமைக்கப் பட்டிருப்பதால், இது சார்ந்த போதுமான தெளிவு விழிப்பற்ற ஒரு மனிதனுக்குச் சாத்தியமற்றுப் போகிறது. இதனால் மனிதன் ஒன்றை வேறொன்றாக எண்ணி மயங்கும் போக்கே நீடித்து வருகிறது.

எனவே, இந்நிலையில் நாம் செய்ய வேண்டுவது எல்லாம் மனித மூளையில் காலம் காலமாக படிந்து போயிருக்கிற, கட்டமைக்கப் பட்டிருக்கிற ஆதிக்க சார்பு மதிப்பீடுகளைக் களைந்து, அந்த இடத்தில் சனநாயக சமத்துவ மதிப்பீடுகளைப் புகுத்த வேண்டுவதுதான். அதை உருவாக்க வேண்டுவதுதான்.

இது ஏதோ ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களை ஒழித்து அப்புறப்படுத்தி விட்டு துடைத்துச் சுத்தம் செய்து புதிய பொருள்களை அடுக்குவது போன்ற யந்திர மயமான செயல் அல்ல.

மாறாக, புதிய சிந்தனைகள், புதிய மதிப்பீடுகள் புகப்புக, அது சார்ந்த தெளிவு ஏற்பட, ஏற்பட பழைய சிந்தனைகள், பழைய மதிப் பீடுகள் எல்லாம் தானாய் இற்று உதிரும், மறையும். இப்படிப்பட்ட இயக்க இயல் போக்கிலான மாற்றம் இது. எனவே இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் புதிய மதிப்பீடுகளை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதிக்கங்கள் எப்போதும் தங்கள் நலன் சார்ந்த எந்தக் கருத்தையும், இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, பண்பாடு, பழக்க வழக்கம், இதை மீற முடியாது என்று சொல்லியே தங்கள் ஆதிக்க மதிப்பீடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.

ஒவ்வொரு இனத்துக்கும் காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் எனப் பல இருப்பது சரிதான். ஆனால் இவை எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றி விடமுடியாது. அதேபோல இவை எல்லாமே காலாவதி யானவை என்று முற்றாகப் புறம் தள்ளிவிடவும் முடியாது. ஆகவே, இதில் எந்தெந்த மரபு, எந்தெந்தப் பண்பாடு, எந்தெந்தப் பழக்கவழக்கம், யார் யாருக்குச் சாதகமாய் இருக்கின்றன? யாரை மேன்மைப்படுத்துகின்றன? யாரை இழிவுபடுத்து கின்றன? என இவற்றை கேள்விக்குட்படுத்த வேண்டும். இப்படிக் கேள்விக்குட் படுத்தி இவற்றுள் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி நிராகரிக்க வேண்டும்.

காட்டாக, சாதியக் கட்டமைப்புகள், கோயில் திருவிழாக்களில் அதன் பாத்திரம், சிற்றூர்ப் புறப் பொது நிகழ்வுகளில், களங்களில் சாதிய ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் இவை எல்லாமும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, பண்பாடு, பழக்கவழக்கம் என்பதன் பேராலேயே நியாயப்படுத்தப்படுகின்றன. இதற்காக இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது.

ஆகவே, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, பண்பாடு, பழக்க வழக்கம் என்று எதுவானாலும் அது சனநாயக நோக்கில் சமத்துவ நோக்கில் நியாயமானதா, ஏற்புடையதா, மனித உரிமைகளை மதிப்பதா, பாதுகாப்பதா என்கிற நோக்கில் ஆராய்ந்தே அவற்றைக் கொள்ளவோ நிராகரிக்கவோ வேண்டும். இந்த அடிப்படையிலேயே பாலியல் சார்ந்த மதிப்பீடுகள் பற்றியும் நாம் சிந்தித்துப் புதிய மதிப்பீடுகளையும் உருவாக்க வேண்டும்.

Pin It