சமூகத்தில் பெண்கள் நிலையும், பெண் சார்ந்த சமூக மதிப்பீடுகளும் ஒரு ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டிருந்த அதே நிலையில் தற்போது இல்லை. இதில் பெருமளவு மாற்றங்கள், விழிப்புணர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது மெய்தான். ஆனால் இது பெண்ணுரிமைகளை போதுமான அளவு மீட்டிருக்கிறதா, ஆண், பெண் சமத்துவத்தை உரிய அளவில் நிலைநாட்டியிருக்கிறதா என்றால் பெருமளவும் இல்லை என்பதே பதில்.

சிலபேர் இதற்கு, பெண்கள் இன்று எல்லா நிலையிலும் ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றவில்லையா? ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லையா? சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவில்லையா? என்று கேட்கலாம். நியாயம். இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறையிலும் பணி புரிகிறார்கள். ஆண்களால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதாகக் கருதப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர், தானி ஓட்டுநர் பணிகளிலெல்லாம் கூட பெண்கள் ஈடுபடுகிறார்கள். சமூக நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படுகிறது. பல சிறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். நிர்வாகத் துறையிலும் அவர்கள் சிறப்பாகச் சேவை செய்கிறார்கள் என்ப தெல்லாமும் சரிதான். ஆனால் இதுபற்றியதானது அல்ல நாம் இங்குப் பேசுவது.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் தொடக்கத்தில் சுட்டிக்காட்டிய கருத்துகளை நினைவு கூர்ந்து இப்படி சிந்திக்கலாம். சமூக வாழ்க்கைக்குத் தேவையான உற்பத்தி இரண்டு. ஒன்று பொருள் உற்பத்தி. மற்றொன்று மனித உற்பத்தி.

மனிதன் வாழ அவன் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, வசதிகளைத் தேடிக்கொள்ள அவனுக்குப் பொருளுற்பத்தி தேவை. இந்தப் பொருளுற்பத்தி இல்லாமல் மனிதன் வாழ முடியாது.

அதேபோல, ஒரு தலைமுறை மட்டுமே வாழ்ந்து மடிவதல்ல மனித உயிரினம். அது காலம் காலமாகச் சந்ததி சந்ததியாகப் பல் லாண்டு காலமாய்த் தொடர்ந்து வருவது. இந்தத் தொடர்ச்சிக்குத் தேவை மனித உற்பத்தி. மனிதனும் ஒரு பொருள்தான். பொருளுற் பத்தியிலேயே இதையும் சேர்க்கலாம் என்றாலும் மனிதன் உயிரி, உயிருள்ள பொருள். இதை, இந்த மனிதனைத் தொழிற்சாலையிலே, தொழிற் கூடத்திலே வைத்து உற்பத்தி செய்யமுடியாது. பாலுறவு அடிப்படையிலேயே பெண்ணைக் கருவுறச் செய்து, சோதனைக் குழாய் முறையிலேயே கருத்தரிக்க வைப்பதானாலும், அதனைப் பெண்ணின் கருவறைக்குள் வைத்தே வளர்க்க முடியும் என்பதனால், இது பொருளுற்பத்தியுடன் சேர்க்கப்படாது தனித்து மனித உற்பத்தி எனக் குறிக்கப்படுகிறது.

ஆக, இந்த இருவகை உற்பத்தியும் சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை. இங்கு நமக்குக் கேள்வி, இதில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றால் எதில்?

இன்று பெண்ணுரிமை பேசுபவர்களில் பலர் அல்லது பெண் களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டதாகச் சிலாகிக்கும் பலர் சொல்வதெல்லாம் அவர்கள் எடுத்துக் காட்டி நியாயம் பேசுவது எல்லாம், பொருளுற்பத்தித் துறைகளில் தானே தவிர மனித உற்பத்தித் துறையில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது பொருளுற்பத்தித் துறையில் ஒரு பெண் தனக்கு, தான் விரும்பும், தான் தகுதி பெற்றிருக்கும் எந்தப் பணியையும் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். அதற்கான உரிமை சுதந்திரம் அப் பெண்ணுக்கு உண்டு.

ஆனால் அதே உரிமை மனித உற்பத்தியில் தான் விரும்பும், தன் தகுதிப்பாட்டிற்குப் பொருத்தமான ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் பெண்ணுக்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த இடத்தில் பெண்ணின் உரிமை சுதந்திரம் மறுக்கப் படுகிறது. அது வேறு பல சமூகக் காரணிகளால் தீர்மானிக்கப் படுகிறது.

இந்த இடத்தில் ஒரு செய்தியைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். ‘பாலுறவு’ என்பதை வெறும் மனித உற்பத்திக்கான நடவடிக்கையாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதாக, கொச்சைப் படுத்துவதாக யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

மனிதனுடைய எந்த ஒரு பொருள் தேவையும் மனத் தேவையோடு சம்பந்தப்பட்டதுதான். இப்படி மனம் சம்மந்தப்படாத பொருள் தேவை என்பது உலகில் இல்லை. அதேபோலவே பாலுறவுத் தேவையும் மனம் சம்மந்தப்பட்டதுதான். அதில் மனம் இலயிக்காமல் அதில் வசீகரம், கவர்ச்சி இல்லாமல் அந்தச் செயல் நிறைவேற முடியாது. என்றாலும் அதன் சாரம், அதன் பொருளியல் பலன் மனித உற்பத்திதான். சொல்லப் போனால் இந்த உற்பத்திக் காகவே, இந்தத் தேவைக்காகவே, மனிதன் இந்த உற்பத்தியை ஒரு சுமையாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இயற்கை இதில் ஒரு ஈர்ப்பை, கவர்ச்சியை, வசீகரத்தை வைத்திருக்கிறது என்கிற அளவில் இதைப் புரிந்து கொள்வோம்.

ஆக, பிற பொருளுற்பத்தியில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், மனித உற்பத்தியில் பாலுறவில் பெண்களுக்கு வழங்கப் பட்டிருக்கவில்லை. அதாவது தான் யாரோடு, எப்போது மனித உற்பத்தியில் ஈடுபடுவது, அதற்கான உறவு கொள்வது, எப்போது குழந்தை பெற்றுக் கொள்வது என்பதற்கான சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. இந்தச் சுதந்திரம் இல்லாமல், இந்தச் சுதந்திரம் பெண் களுக்கு வழங்கப்படாமல் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. பொருளுற்பத்தியில் மட்டுமே பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கி விட்டு, மனித உற்பத்தியில் அதை வழங்காமல், பெண்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கி விட்டதாகப் பேசுவதிலும் நியாயம் இல்லை.

இதை இன்னும் சற்று விரிவாக யோசிப்போம். ஒரு பெண் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்து கொள்ள முடிகிறதா? இல்லை. குடும்பத்தின் சமூகத் தகுநிலை, சாதி குறுக்கிடுகிறது. குடும்பத் தகுநிலையையும் விட சாதி, சாதியப் புனிதம் ஒரு முக்கியக் கூறாக இருக்கிறது. எனவே, சாதியப் புனிதம் காக்க சொந்த சாதிக்குள்ளேயே, அதுவும் பெற்றோர் பார்த்து வைக்கும் ஒரு ஆணையே திருமணம் செய்து கொள்ள பெண் வற்புறுத்தப்படுகிறாள். இங்குப் பெண்ணின் தேர்வுச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

இந்தச் சாதி, சமூகத் தகுநிலை போன்ற கட்டுத்திட்டங்கள் பெண்ணுக்கு மட்டும் இல்லையே, ஆணுக்கும் தானே இருக்கிறது என்று சிலர் வாதிடலாம். நியாயம். என்றாலும் இரு பாலருக்கும் இது வலியுறுத்தப் படுவதானாலும் அதிகம் கட்டாயப்படுத்தப்படுவது பெண்கள்தாம்.

காட்டாக, ஒரு ஆண் தன் சாதிக்கு அப்பாற்பட்டு ஒரு பெண்ணை நேசிப்பதாகக் கொள்வோம். ஆணின் பெற்றோர்கள், உறவினர்கள் அதை விரும்பவில்லையாயின், அவர்கள் அந்த உறவைத் துண்டித்து ஆணை மனம் மாற்றிக் கொண்டு வந்து தாங்கள் விரும்பும் வேறு ஒரு இடத்தில் மணமுடித்து வைத்து விடுவர். பாதிக்கப்படுவது பெண் தான். அவனுக்கு இப்படி வேறு பெண் பார்த்து மணம் முடிப்பது போல் பெண்ணுக்கு வேறு ஆண் பார்த்து முடிக்க இயலாது. நகர்ப்புற வாழ்க்கையில் வேண்டு மானால் இது கவனிக்கப்படாமல் மறைக்கப்படலாம். ஆனால் சிற்றூர் புற, சிறுநகர்ப்புற வாழ்க்கையில் இது முடியாது. சற்றுச் சிக்கலாகவே இருக்கும். வேறு ஒரு ஆடவனுடன் பழகிய பெண் என்கிற களங்கம் அவள்மீது இருந்து கொண்டே யிருக்கும்.

இதில் இந்த ஆண் தன் நேசிப்பில் உறுதியோடு நின்று, சாதியமைப்பை உடைத்துக் கொண்டு விரும்பிய பெண்ணையே மணமுடித்து வாழ்வதானாலும், சில குடும்பங்கள் இந்த மீறலைக் காணச் சகிக்காமல் தங்கள் குடும்ப கௌரவம், சாதிப் புனிதம் காக்க இருவரையும் தேடிப் பிடித்து அழிக்கும் கொடூரங்களும் நிகழ்கின்றன. என்றாலும் இதுபோன்று இருவருமே பாதிக்கப்படுகிற விதி விலக்கான சில சம்வங்களுக்கு அப்பால் இவ்வுறவுகளில் பெரும் பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பது அன்றாடம் செய்தித் தாள்களில் வரும் சம்பவங்களை நோக்கப் புரிந்துகொள்ளலாம்.

இப்படி மணமாகாத ஆண், பெண் உறவில் பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே என்றால், திருமணமான உறவுகளில் பாதிக்கப் படுவதும் அதிகம் பெண்களே.

காட்டாக, மணமான ஒரு ஆணுக்குப் பணியிடத்திலோ வேறு இடத்திலோ ஒரு பெண்ணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது என்றால், அது அவ்வளவு பெரிய செய்தியாகக் கருதப்படுவதில்லை. இது இயல்புதான் என்பது போல ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனைவியும் அவளுக்குத் தெரியாதவரை பிரச்சினை இல்லை. ஒருவேளை தெரியவே வந்தாலும் அவள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதேவேளை திருமணமான ஒரு பெண்ணுக்குப் பணியிடத்தில் அல்லது வேறு இடத்தில் ஒரு ஆணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது என்றால், அது “குய்யோ முறையோ” என்றும், “எங்கே அடுக்கும் இது? கட்டிய தாலிக்கு இப்படித் துரோகம் செய்யலாமா” என்றும் கூச்சல் எழுப்பப்படுகிறது. பெண் வசை பாடலுக்கும் இம்சைக்கும் உள்ளாக்கப்படுகிறாள்.

ஆக, திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கையோ, திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையோ எதுவானாலும் பெண்ணே அதிகம் பாதிக்கப்படுகிறாள். அதாவது சாதிப் புனிதம், கற்பு, ஒழுக்கம், நேர்மை, நியாயம், கட்டுப்பாடு என்பது இரு பாலருக்குமான நீதி, சமூக இயக்கத்துக்கான பொது நியதி என்பதாகச் சொல்லப்பட்ட போதிலும், இதில் பெண்ணே அதிகம் பாதிக்கப்படுகிறாள். பெண்ணுக்கே இது அதிகம் வலியுறுத்தப்படுகிறது. பெயரளவிலான நியாயம் இரு பாலருக்கும் பொதுவானதுதான் என்று சொல்லப் பட்ட போதிலும் இதில் ஆண் சலுகை பெறக்கூடிய உயிரியாகவும், பெண் சமத்துவம் மறுக்கப்பட்ட உயிரியாகவும் நடத்தப்படும் நிலை தொடர்கிறது.

ஆக, நவீன கால வாழ்க்கை முறை, நவீன காலச் சிந்தனை, பொருளுற்பத்தியில் பெண்களுக்கு எவ்வளவுதான் பங்கும், சுதந்திரமும் வழங்கியுள்ளதாகச் சொல்லப்பட்ட போதிலும் மனித உற்பத்தியில், பாலுறவில் பெண்ணுக்கு உரிய சுதந்திரம் வழங்காமலே இருக்கிறது. இதற்கான சுதந்திரம் வழங்கப்படாத வரை பெண் விடுதலை, பெண் உரிமை, பெண் சமத்துவம் என்பது வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.

பாலுறவு சுதந்திரம் என்று நாம் இங்கே குறிப்பிடுவதை வெறும் உடல் உறவுக்கான சுதந்திரம் என்பதாகக் குறுக்கிப் பார்க்காமல், பாலுறவு சார்ந்த மதிப்பீடுகள், அது சார்ந்த ஒழுக்க நெறிகள், கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்பதன் பேரால் பெண் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறாள், அதன் ஒவ்வொரு நிலையிலும் பெண் எப்படி ஒடுக்கப் படுகிறாள் என்பதை விரிவான அர்த்தத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண் குழந்தையாக, சிறுமியாக இருக்கும்போதே, விளையாட்டில், நடையுடை பாவனைகளில், பிறரோடான பழக்க வழக்கங்களில் அவள்மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பருவ மடைய மேலும் சுமத்தப்படும் இறுக்கங்கள், இயங்கு பரப்பின் வரம்புகள், ஆடை அலங்காரங்களில் விதிக்கப்படும் நெறிமுறைகள் இப்படிப் பலவேறுபட்ட நிலைகளை யோசித்துப் பார்க்க இது புரியும்.

திருமணத்திற்கு முந்தைய நிலைதான் இது என்றால், இது திருமணத்திற்குப் பிறகும் அப்படியே தொடர, திருமணத்திற்கு முன் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் பெண் மீதுகட்டுப்பாடுகள் விதித்தார்கள் என்றால் திருமணத்திற்குப் பின் கணவன், மாமனார், மாமியார், கணவனின் சகோதரர்கள், உறவினர்கள் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.

அதாவது எதை உடுத்துவது, உடுத்தாதிருப்பது, எங்குச் செல்வது, செல்லாதிருப்பது, யாரைச் சந்திப்பது, சந்திக்காது இருப்பது என இது சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் புகுந்த வீட்டார் தீர்மானிப்பது மட்டுமின்றி, எப்போது கருத்தரிப்பது, எப்போது குழந்தை பெற்றுக் கொள்வது என்பது உள்பட, அனைத்தையுமே பெண்ணின் விருப்பம் என்ன, அவள் கருத்து என்ன, அவள் உடல் நிலை எப்படி என்பது எதையும் பொருட் படுத்தாது கணவனும், கணவனது வீட்டாருமே தீர்மானித்துக் கொள்ளும் ஆதிக்கமும் பெண்ணின் மீது சுமத்தப் படுகிறது.

இப்படிச் சொல்வதால் குடும்பத்தில் உள்ள பிறர், பெண்ணுக்கு ஆலோசனைகளே நல்கக் கூடாது என்றோ, நற்கருத்துகளே வழங்கக் கூடாது என்றோ சொல்வதாகச் சிறுமைப்படுத்திப் புரிந்து கொள்ளக் கூடாது. மனிதர்களுக்குள் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள், நற்போதனைகள் நல்லதுதான். அது தேவையானதும்கூட.

ஆனால் அது பெண்ணின் மனமறிந்து, கருத்தறிந்து, அவளது விருப்பத்தோடு நிகழ வேண்டுமேயல்லாது, எதுவும் கட்டாயப் படுத்தலாக, திணிப்பாக அமைந்துவிடக்கூடாது. பெண்ணைத் தாம் எது சொன்னாலும் கேட்டு அடங்கி நடக்கக் கடமைப்பட்ட ஒரு ஜீவன் என்கிற நிலையில் வைத்து நோக்கக் கூடாது என்கிற பொருளிலேயே இது கூறப்படுகிறது.

ஆக, பொருளியல் உற்பத்தியில் மட்டுமே பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கிவிட்டு, அதையே பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்பதாகப் பறையறிவித்து, மனித உற்பத்தியில் அது சார்ந்த பாலுறவில் அதையொட்டிய பிறநடவடிக்கைகளில் பெண்களுக்கு உரிய சுதந்திரம் வழங்காமல் பெண்களை முன்னைப் போலவே அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி வருகிறது நவீன சமூகம்.

எனவே, பெண் விடுதலையை முழுமையாக்க மனித உற்பத்தியிலும் அது சார்ந்த பாலுறவிலும் அதையொட்டிய பிற நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த உரிமைச் சுதந்திரம் பிற சமூக இயக்கத் துக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எப்படிப்பட்டதாக அமையலாம், அமையவேண்டும், இதில் சமூகம் எப்படிப்பட்ட புரிதலை ஏற்படுத்திக் கெள்ளலாம். கொள்ள வேண்டும் என்பதை இனி அடுத்து ஆராய்வோம்.

Pin It