மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் ஒதுக்கீடு சட்ட முன்வரைவு மக்களவைக்கு வராமல் தேங்கி நிற்கிறது. மக்களவையில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது மாநிலங்களவையைப் போல் எளிதாக இருக்காது. எதிர்ப்போர் எண்ணிக்கை இங்கு அதிகம்.
எதிர்ப்பவர்களின் கருத்தென்ன? இப்பொழுதுள்ள படி 33 விழுக்காடு இடஒதுக்கீடு நாடாளுமன்றத்திற்கும் மற்றும் மாநில சட்டமன்றங் களுக்கும் வழங்கினால் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்கள் பொதுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியாது. முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த, மேட்டுக் குடிப் பெண்கள்தாம் பெரும்பாலும் வெற்றிபெறுவர். பின்தங்கிய வகுப்புப் பெண்களில் படிக்காதவர்கள், வறுமை நிலையில் உள்ளோர், பொது வாழ்க்கைக்குப் பழக்கமில்லாதோர் அதிகம். எனவே மேட்டுக் குடிப் பெண்களே 33 விழுக்காட்டுப் பலனை அடைவார்கள். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
“மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. 33 விழுக்காட்டிற்குள் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும். அவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்கவில்லை எனில், இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முறியடிப்போம்,” என்பதே முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, லல்லுவின் ராஸ்ட்ரிய சனதாதளம், சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம், பஸ்வானின் லோக் சனசக்தி ஆகிய கட்சிகளின் நிலைபாடு
பகுசன் சமாஜ் கட்சி வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ததற்குத் தக்க காரணத்தைச் சொல்ல முடியவில்லை. தலித்துகளுக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்றார்கள். தலித்துகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டவிதியில் ஏற்கெனவே உள்ள கட்டாயத் தேவையாகும் என்று ஆளுங்கட்சித் தரப்பில் விடையிறுக்கப்பட்டது. பிறகு முஸ்லிம் இடஒதுக்கீடு வேண்டும் என்றார்கள்.
அதே போல் திரிணமூல் காங்கிரசு - உரியவாறு தங்கள் கட்சித் தலைமையை அணுகி ஆதரவு கேட்கவில்லை என்று கூறி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
காங்கிரசு, பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்தன. ஐக்கிய ஜனதா தளத் தலைமையின் நிலைபாட்டை மீறி அக்கட்சியைச் சேர்ந்தவரும் ஆதரித்து வாக்களித்தார்.
இந்த 108-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற வேண்டுமானால் மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறினால் மட்டும் போதாது. குறைந்தது 15 மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். மொத்த மாநில சட்டப் பேரவைகளில் (28) பாதிக்கு மேற்பட்டவை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களவையில் நிறைவேறிவிட்டால் மாநில சட்டப்பேரவைகளில்; எளிதில் நிறைவேறி விடும். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள், தி.மு.க., அகாலிதளம், பிஜு சனதாதளம், காஷ்மீர் தேசிய மாநாடு ஆகியவை ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகம்.
மக்களவையில் இந்தச் சட்ட முன்வரைவை முன்வைக்காமல் தாமதப்படுத்துகிறது காங்கிரசுக் கட்சி. இந்தத் தாமதம், கூடுதல் வலுச் சேர்க்கவில்லை. இருந்த வலுவையும் குறைத்துள்ளது. காங்கிரசு அமைச்சரவையிலுள்ள கூட்டணிக் கட்சித் தலைவரான சரத்பவார் முதல் கட்டமாக 15 விழுக்காடு மகளிர்க்கு வழங்கலாம் என்று ‘சமரசக்’ கருத்து தெரிவித்துள்ளார். வேறு சிலர் 20 விழுக்காடு வழங்கலாம் என்று கூறுகின்றனர். காங்கிரசுக்குள்ளேயே ஒரு சாராரிடம் இக்கருத்து உள்ளது.
மேலும் தாமதப்படுத்தினால் மாநிலங்களவையில் நிறைவேறிய முன்வரைவு, மக்களவையைச் சந்திக்காமலே மடிந்து விடும் ஆபத்தும் உள்ளது. பகுசன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, ராஸ்டிரிய சனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ஒதுக்கீடு இல்லாமல் மக்களவையில் நிறைவேற்ற முன்வந்தால் அரசுக்குக் கொடுக்கும் ஆதரவைத் திரும்பப் பெற்று விடுவோம் என்று எச்சரித்துள்ளன. முலாயம் சிங் குடியரசுத் தலைவரிடம் அவ்வாறான கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டார். எனவே பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று காங்கிரசு அஞ்சுகிறது.
உள்ஒதுக்கீடு வழங்கவில்லை எனில் முன்னேறிய வகுப்புகளின் மேட்டுக் குடிப் பெண்களே மிக அதிக இடங்களைக் கைப்பற்று வார்கள் என்ற கருத்து நடை முறைக்குப் பொருத்தமாக இல்லை. இப்பொழுது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல்களில் இடஒதுக்கீடு இல்லை. ஆனால் தங்கள் விகிதத்தையும் தாண்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஆண்கள்) வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் உறுப்பு வகிக்கிறார்கள். இதற்குக் காரணங்கள் பின்வருமாறு உள்ளன.
1. அனைவர்க்கும் வாக்குரிமை இருப்பது.
2. பார்ப்பனிய மற்றும் மேல்தட்டு வர்ண - சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு நூற்றாண்டு காலமாக நடந்து வரும் போராட்டங்களின் தாக்கம். மண்டல்குழுப் பரிந்துரை மூட்டிவிட்ட சமூகநீதி நெருப்பு
3. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி அமைப்புகளின் தோற்றமும் வலிமையும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் இப்போதுள்ள மகளிர் ஒதுக்கீட்டுக்கான பொதுத் தொகுதிகளில் தேர்தலில் நின்றால் மேற்கண்ட காரணங்களால் அவர்களே பெரிதும் வெற்றி பெறுவர். ஆதிக்க வகுப்புப் பெண்கள் தோல்வியுறுவர். அவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் பேச்சாற்றல் பெற்றிருந்தாலும் தோல்வியுறும் வாய்ப்பே அதிகம். காரணம் அவர்கள் வகுப்பு மக்கள் தொகை மிகவும் குறைவு.
பாரதிய சனதா போன்ற பார்ப்பனியத் தலைமையில் இயங்கும் கட்சி கூட மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான தொகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களை நிறுத்தினால்தான் வெற்றி பெறுவர். பார்ப்பனியத்தை நுட்பமாகச் செயல்படுத்தும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த செயலலிதா கூட பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த, தகுதி இல்லாத இராமநாதனைக் குடந்தைத் தொகுதியில் நிறுத்தினார். அவரும் முதலில் வெற்றி பெற்றார். பின்னர் தோல்வி அடைந்தார். மற்ற தொகுதிகளுக்கு இவ்வாறு பார்ப்பனர்களை நிறுத்துவதில் இனி செயலலிதா எச்சரிக்கையோடு செயல்படுவார் என்று கருதலாம். அதை விடுத்துப் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வைப் போலவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த சாதி வாக்கு எந்தத் தொகுதியில் அடர்த்தியாக உள்ளதோ அந்த சாதி வேட்பாளரைத்தான் நிறுத்துகிறது.
எனவே, பொது ஒதுக்கீடாக 33 விழுக்காடு மகளிருக்கு வழங்கினால், ஆதிக்க வர்ண சாதிப் பெண்கள் அதிக இடத்தைக் கைப்பற்றுவார்கள் என்ற வாதம் வலுவற்றது.
முலாயம் சிங், லல்லு, சரத்யாதவ் போன்றவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது. அவர்கள் குறி வைப்பது அவர்கள் மாநிலங்களில் உள்ள முஸ்லிம் வாக்குகள் ஆகும். உ.பி., பீகார் மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகைக் கணிசமாக உள்ளது. முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் தங்கள் பெண்களை பொதுவாழ்க்கையில் கலக்க விடுவதில்லை. இப்போக்கு கைவிடப் படவேண்டிய பெண்ணடிமைத் தனம். ஆனால் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இதில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. முஸ்லீம் இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்களது போராட்டங் களிலும் முஸ்லீம் பெண்கள் கைதா கின்றனர். ஆயினும் வடநாட்டில் பழைய நிலையே தொடர்கிறது. இந்த அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் முலாயம்; முதலான வர்களின் அரசியல் உத்தி உள்ளது. முஸ்லிம்களிடையே பெண் ணுரிமைக்குத் தடங்கலாக உள்ள சில பழக்க வழக்கங்களைப் பாதுகாக்க முனைந்து, முஸ்லிம் வாக்குகளைக் கவருவதுதான் இவர்களின் உத்தி.
தாம் முதலமைச்சராக நீடிக்க முடியாது என்ற நெருக்கடி வந்தபோது, அரசியலில் ஆனா ஆவன்னா தெரியாத, பத்தாம்பசலிக் குடும்பப் பெண்ணாக இருந்துவந்த தம் மனைவி ராப்ரி தேவியைப் பீகாரின் முதலமைச்சராக்கினார் இதே லல்லு பிரசாத். அந்த அம்மையாரும் சமாளித்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பு களில் பெண்கல்வி வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே ஊராட்சித் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சித் தலைவர், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் என தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். உள்ளாட்சி மகளிர் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவற்றில் ஆதிக்க வகுப்புப் பெண்கள் கூடுதலாக இடம்பிடித்து விடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இப்பொழுது முலாயம் முதலானோரின் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு நாம் விவாதிப்போம்.
ஆதிக்க வகுப்புப் பெண்கள் கூடுதலான இடங்களில் வென்று விடுவார்கள் என்று வைத்துக் கொண்டாலும், பெண்களுக்கு இன்றுள்ள நிலையிலிருந்து அது ஒரு படி முன்னேற்றமே! ஆதிக்க வகுப்புப் பெண்களும் அடிமைப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். பெண்ணுரிமை என்ற வரம்புக்குள் அவர்கள் உரிமை பெறுவதும் அடங்கும்.
‘பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு கூடவே கூடாது’ என்று சிலர் கூறுவது போல் நாம் கூறவில்லை. இந்த 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் போது ஆதிக்க வகுப்புப் பெண்களே அதிகம் பயனடைகிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் தோற்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டால் - அப்போது உள் ஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுக்கலாம்; போராடலாம்.
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறை வேற்றுவதா அல்லது உள் ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி எதையும் நிறைவேற்றாமல் நடப் பிலுள்ள ஆணாதிக்க நிலை நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் நீடிக்க அனு மதிப்பதா என்பதே இப் பொழுது நம்முன் உள்ள வினா. நடப்பு ஆணாதிக்க நிலை நீடிப்பதை விட 33 விழுக்காடு பெண்களுக்கு கிடைப்பதையே நாம் ஆதரிக்கி றோம். ஏற்கெனவே 40 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு இருக்கிறது.
மகளிர் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்குப் பிற் படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் முஸ்லிம் பெண்கள் மீதுள்ள அக்கறை மட்டுமே காரணம் என்று கருத முடியாது. ஆண்கள் அனுபவித்து வந்த அதிகார ஏகபோகத்தைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. பெண்களுக்கு விட்டுக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லை.
சில தொகுதிகளைச் சிலர் தங்களின் நிரந்தர குத்தகை உரிமையாகக் கருதுகிறார்கள். தங்களுக்கு மட்டுமின்றி தங்கள் பரம்பரைக்கும் (ஆண்களுக்குத் தான்) உரியதாகக் கருதுகிறார்கள். பெண்கள் ஒதுக்கீடு வந்தால் அந்த “உரிமை” பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார்கள். இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் தங்களின் “உரிமைத்” தொகுதிகளை இழக்க நேரிடும். எனவே அவர்கள் கடைசி வரைப் போராடுவார்கள்.
அவர்களின் கட்சிகளில் உள்ள பெண்கள் தங்கள் கட்சித் தலைமையின் ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
இப்பொழுது மக்களவையில் உள்ள நிலை என்ன? 543 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 59 (10.8%) பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேறினால் இந்த எண்ணிக்கை 181 (33%) அக உயர்ந்துவிடும். இப்பொழுது இருப்பதைப் போல் இன்னும் இரண்டு பங்கு கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கும். மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தம் பின்னர் வந்தாலும் கட்சிகள் 33 விழுக்காட்டு அடிப்படையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற கருத்து 2009 மக்களவைத் தேர்தலில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. தேர்தல் ஆணையம் தெரிவித்த விவரப்படி, மொத்தம் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 556 பேர் (6.9%) மட்டுமே பெண்கள்.
எனவே சட்ட ஏற்பாடு இருந்தால் தவிர 33 விழுக்காடு பங்கு கூடப் பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் கிடைக்காது.
33 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு இடஒதுக்கீடு அதிகார மன்றங்களில் பெண்களுக்குக் கிடைப்பது பெண்ணுரிமை மீட்பில் ஒரு படி முன்னேற்றமாகும். அதுவே முழு உரிமை மீட்பையும் கொண்டு வந்து சேர்க்காது.
பெண்களுக்கு தொழில் மற்றும் வேளாண் உற்பத்தியிலும் வழங்கலிலும் உரிய பங்கு கிடைக்க வேண்டும். ஆணாதிக்கத்தை முறியடிக்கும் பெண்களின் போராட்டம் வளர வேண்டும். ஆணாதிக்கத்தை அருவருக்கும் மனப்பாங்கு ஆண்களிடம் வளர வேண்டும். இந்த வளர்ச்சிகள் அக்கம் பக்கமாக ஏற்படாமல், ஆட்சி மன்றங்களில் ஒதுக்கீடு வழங்குவது மட்டும் பெண்ணுரிமையை மீட்டு விடாது.
பாகிஸ்தான் பிரதமராக பெனசிர் பூட்டோ இருந்தார். ஆனால் அப்போது அந்நாட்டில் பெண்ணுரிமைக்கெதிரான கொடிய சட்டம் ஒன்று இருந்தது. அதை அவரால் திருத்தவே முடியவில்லை. ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாகப் புகார் கூறினால், அப்பெண் அதற்கு ஆதாரமாக நான்கு ஆண் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அவ்வாறு நான்கு ஆண் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தத் தவறினால் புகார் கூறிய அப்பெண் பாலியல் ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவள் மீது கல்லெறிந்து தண்டிக்க வேண்டும் என்பதே அக்கொடுஞ்சட்டம். அதைத் திருத்திட அன்றைய பாகிஸ்தான் ஆணாதிக்க சமூகமும், இஸ்லாமியச் சட்டமும் பெண் பிரதமரை அனுமதிக்கவில்லை என்பதை சுகாசினி ஹைதர் சுட்டிக் காட்டுகிறார். (தி இந்து 12.03.2010)
இரும்புப் பெண் பிரதமர் என்று வர்ணிக்கப்பட்டார் இந்திராகாந்தி. அவர் ஆட்சிக் காலத்தில் இன்றுள்ள அளவுக்குக் கூட பெண்ணுரிமைச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. எடுத்துக் காட்டாக, மனைவியைத் துன்புறுத்துவதற்கு எதிரான சட்டம் அண்மைக் காலத்தில்தான் வந்தது. இந்த 33 விழுக்காடு கருத்தியலே இந்திராவின் மறைவிற்குப் பிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில்தான் வந்தது. சமூக வளர்ச்சிக்கு ஏற்பவே மேற்கண்ட கருத்தியல்கள் வளர்ந்துள்ளன.
உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றில் தனியார் ஏகபோகம் கட்டுப்படுத்தப்பட்டு சமூக மயம் வளர வளரத்தான் பெண்ணுரிமை மீட்பு முழுமையை நோக்கி முன்னேறும். அதுவரை உருவாகும் சின்னச் சின்ன முன்னேற்றங்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். அதே வேளை இதையே மகளிர் உரிமைப் புரட்சியாகக் காட்டும் தேர்தல் கட்சிகளின் மிகை விளம்பரங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசிய வாழ்வியலுக்கான ஆக்கத் திட்டங்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வகுத்துள்ளது. அந்த ஆக்கத் திட்டங்களுள் பெண் விடுதலையும் ஒன்று.
பெண்ணுரிமைச் சட்டங்கள் ஒரு பக்கம் வரட்டும். தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் ஆண்கள் பெண்ணுரிமைக்கான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தம் வீட்டுப் பெண்கள் சம உரிமைகளை நுகர வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். சமைத்தல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், குறிப்பாக குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு உதவியாக இருந்தல் என்பன போன்றவற்றை ஆண்கள் கடைப்பிடித்து பெண்ணுரிமைக்குப் பாடுபட வேண்டும்.
பெண் விடுதலைக்கு பெண்களே முன்முயற்சி யாளர்களாகவும் போராட்டங்களை முன்னெடுப்பவர் களாகவும் இருப்பது தவிர்க்க முடியாதத் தேவையாகும். அம்முயற்சிகள் மற்றும் போராட்டங்களில் ஆண்களும் உணர்வோடு பங்கெடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலில் பெண்களைப் பங்கு பெறச் செய்ய வேண்டும். உடலுழைப்பு, மூளை உழைப்பு, தமிழ்த் தேசிய அரசியல் ஆகியவற்றில் ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் பங்கெடுக்கும் நிலையே பெண்விடுதலையை விரைவுபடுத்தும்.
-பெ.மணியரசன்