“பெண் குழந்தை பிறந்தால், உடனடியாகப் பெற்றோர் விம் கொடுத்து அந்தக் குழந்தையைக் கொன்று விட வேண்டும் ”
சொன்னது யாரோ ஒரு பாமரக் குடிமகன் இல்லை. இந்தியத் குடியரசுத் துணைத் தலைவரின் மனைவி சல்மா அன்சாரி உதிர்த்த முத்துதான் இது. இதைப் பேசிய இடம் எது தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும், அவற்றைக் களைவது பற்றிய வழிமுறைகள் பற்றி ஆராயவும், டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில்தான் இப்படித் தன் பொறுப்பை உணராமல் பேசியிருக்கிறார் சல்மா.
தற்காலத்தில் பெண்கள் போதிய பாதுகாப்பும், உதவியும் இல்லாமல் தவிக்கிறார்களாம். அவர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் சமுதாயம் தத்தளிக்கிறதாம், எனவே பெண் குழந்தை பிறந்த உடன் பெற்றோர் கொன்றுவிட வேண்டுமாம். எப்படி இருக்கிறது பாருங்கள்?
‘ வறுமையை ஒழிக்க முடியாமல் அரசாங்கம் திண்டாடுகிறது, எனவே வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களை எல்லாம் கொன்று விடலாம் ; வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது, அதனால் பட்டதாரிகளை எல்லாம் படுகொலை செய்துவிடலாம் ’ என்பதைப் போல இருக்கிறது இவரின் பேச்சு.
இதுபோன்ற முக்கியமான கருத்தரங்கங் களுக்குச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில், உயர் பொறுப்பில் இருக்கின்ற, உலகறிந்த மனிதர்களை அழைப்பது எதற்காக? அவர்கள் சொல்லுகின்ற கருத்துகளும், பேசுகின்ற பேச்சுகளும் உலகளவில் கூர்ந்து கவனிக் கப்படும், ஊடகங்களில் முக்கியத்துவம் பெறும், இவற்றின் மூலம் அப்பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதற் காகத்தானே ! அதை உணராமல், கொஞ்சமும் பொறுப்புணர்வின்றி சல்மா அன்சாரி பேசியிருப்பது கடுமையான கண்டனத் திற்குரியது மட்டுமல்ல இந்தியக் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரியதும்கூட.
ஒரு பெண், அதுவும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருந்து கொண்டு அவரால் எப்படி இப்படிப் பேசமுடிகிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரிடம் அடிப்படை மனிதநேயம் கூடவா இல்லாமல் போய்விட்டது. நாக்கூசாமல் கொலை செய்யச் சொல்லியிருக்கிறாரே !
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டால், அந்தக் குழந்தைகளின் பெயரில் 15,000 ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாகப் போடுகிறது தமிழ்நாடு அரசு. பெண்களின் பொருளாதார தற்சார்புக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக நிதி உதவிகளையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது கலைஞர் தலைமை யிலான தமிழக அரசு. அது மட்டுமன்று, நடப்புப் பத்தாண்டுகளை பெண் குழந்தைகள் ஆண்டாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
இப்படி மத்திய மாநில அரசுகள், பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும் சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் செய்திகள் எல்லாம் சாராசரி மனிதர்களுக்கும் தெரிந்திருக்கும் போது, நாட்டின் துணைக் குடியரசுத் தலைவரின் மனைவிக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. உயர்ந்த இடத்தில் இருப்பதால் வந்த அலட்சியமாகத்தான் நமக்குப் படுகிறது.
சல்மா அன்சாரி சிக்கலில் மாட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாக இவர் பேசியதும் இந்த வகைப்பட்டதுதான். மசோதாவைப் பற்றி பெண்களுக்கு அடிமட்ட அளவில் விழிப்புணர் ஏற்படுத்தாதவரை இந்த இடஒதுக்கீடு மசோதா எந்தப் பயனையும் தராது என்று சொல்லியிருக்கிறார். தங்களுக்கான உரிமைகளைக் கூட உணர முடியாத நிலையில் இருந்த பெண்கள், இட ஒதுக்கீடு கேட்கின்ற அளவுக்கு விழிப்புணர் வினைப் பெற்றிருக்கின்ற வரலாற்றை அவர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. மகாத்மா ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நடத்திய சமூக நீதிக்கான போராட்டம், இன்று பெண்களை அதிகார மட்டம், அரசியல் களம், சமூக தளங்களில் கொண்டு வந்து மிகப்பெரிய சக்தியாக நிறுத்தியிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாத கூறாகியிருக்கிறது.
பெண்கள் போராடுவதற்குச் சளைத்தவர் கள் அல்ல. கருவறையில் இருந்தே அவர்களின் போராட்டம் தொடங்கிவிடுவதால், இயல்பாகவே போராட்டக் குணம் கொண்ட வர்கள்தான் பெண்கள். சூழலும், தேவையும் ஏற்படும்போது போராடுவதற்கு அவர்கள் என்றுமே அச்சப்பட்டதில்லை. அதற்கு ஈழத்தின் பெண்புலிகள் ஒரு சிறந்த சான்றாவர். மணிப்பூர் பெண்களின் போராட்டம் நம் மனதில் இருந்து நீங்க மறுக்கிறதே! 11 ஆண்டுகளாக உண்ணாவிரதத்தைத் தொடரும் ஐரோம் ர்மிளாவை, சல்மா அன்சாரி அறிந்திருக்கவில்லை போலும். இதே பிரச்சினைக்காக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஓஜஸ் புனே என்னும் பெண் நாடு முழுவதும் நாடகத்தின் வழியாக மணிப்பூரின் சோகத்தைச் சொல்லி வருகிறார். தனியயாரு பெண்ணாக, கடந்த மே மாதம் தொடங்கிய இவரின் நாடகப் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நிலமற்ற ஏழை தலித் மக்களுக்கு விவசாய நிலங்களை மீட்டுத்தந்து, இன்றும் அவர்களுக் காகப் போராடி வரும் தமிழகத்தின் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உலகளவில் பல உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆந்திராவின் பழங்குடியினப் பெண் ஜானு, ஏகாதிபத்திய கைக்கூலிகளிடமிருந்து தன் இனத்தின் வாழ்வாதரங்களைக் காக்க பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர். ஐக்கிய நாடுகள் அவையில் பழங்குடியின மக்களின் குரலாக ஒலித்தவர். இத்தனைக்கும் இவர் கல்வியறிவில்லாதவர்.
அண்மையில் எகிப்தில் நடந்த மகத்தான மக்கள் புரட்சிக்கு முதல் அழைப்பு விடுத்தவர், 26 வயதே ஆன அஸ்மா மஹ்பூஸ் என்னும் பெண் என்பதை அறியும்போது வியப்பில் நம் விழிகள் விரிகின்றன.
இந்த உண்மைகளை எல்லாம் புறந்தள்ளி, மனிதத் தன்மையே இல்லாமல் சல்மா பேசியது சகித்துக்கொள்ள முடியாதது. எங்கெங்கோ இருக்கின்ற சாதனைப் பெண்கள்தான் இவரின் கண்களுக்குத் தெரியவில்லை என்றால், அருகிலேயே இருக்கின்ற குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தில்லி முதல்வர் Uலா திட்சித்தும் கூடவா அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ள சல்மா அன்சாரி போன்றவர்கள் பெண் சமூகத்திற்கு நஞ்சு போன்றவர்கள்.
யாராக இருந்தாலும் சரி, மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் நல்ல கருத்துகளை யோசித்துச் சொல்லட்டும். வரவேற்போம். இல்லையயன்றால் குத்து விளக்கு ஏற்றுவது, ரிப்பன் வெட்டுவதோடு நிறுத்திக் கொள்ளட்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களும் வெறும் விளம்பரத்திற்காக சல்மா போன்றவர்களை அழைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இனிமேலாவது மக்களுக்காக உழைப்பவர்களை முன்னிலைப் படுத்த முன்வரவேண்டும். அப்போதுதான் சரியான செய்திகளும், கருத்துகளும் மக்களிடம் சென்று சேரும்.