மக்களின் ஞாபக மறதியை முதலீடாகக் கொண்டு நிகழும் அரசியல் உலகில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கூடங்குளம் அணு உலை ஆதரவில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றாக நிற்கின்றன. இந்து முண்ணனியும் முஸ்லிம் லீக் கட்சியும் ஒரே கருத்தைக் கொண்டு இயங்குகின்றன. குஜராத்தில் சிறுபான்மை மக்களை படுகொலைகள் செய்த பாரதிய ஜனதா கட்சியும், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசும், மத இன எல்லைகளைக் கடந்து மக்களைக் கொல்லும் அணு உலையில் ஒன்று கூடுவதில் ஆச்சர்யம் இல்லை. இதில் இடதுசாரிகளும் இணைந்து நிற்பது வேதனையான வேடிக்கை. தலைவர்களும் கட்சிகளும் தடம் மாறும் வேளையில், மக்கள் தன்னெழுச்சியாக போராடுவதை முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டத்தில் கண்டோம். அதைப் போலவே, அணு உலை எதிர்ப்பில் மக்கள் திரள்வதைப் பார்க்க முடிகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வை அறிவித்த ஜெயலலிதா அணு உலைப் பிரச்னையில் தன் உண்மை முகத்தை இடைத்தேர்தல் முடிந்ததும் வெளிப்படுத்துவார். ஈழப்பிரச்னையை கருணாநிதியை வீழ்த்த ஆயுதமாகப் பயன்படுத்திய ஜெயலலிதா, தற்போது மத்திய அரசிற்கு தன்னை முதன்மையான எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்கிறார். இதன் பிண்னனியில் பிரதமர் கனவு இருக்கிறது. அதற்கு பாரதிய ஜனதாவின் பல்லக்கில் ஏறி அமர்ந்து, அரசியல் பயணத்தை மீண்டும் துவங்கி இருக்கிறார்.

கடந்த காலத்தில் ஜெயலலிதா பாரதிய ஜனதாக் கட்சி குறித்து விமர்சிக்கும்போது, அத்வானிக்கு ஞாபக மறதி நோயைக் குறிக்கிற அம்னீசியா இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதனால் தானோ என்னவோ, நரேந்திர மோடியின் அணியில் தலைமை வகிக்கிறார். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது; நண்பரும் கிடையாது என்கிற வாசகம், கொள்கையும் கிடையாது என்பதையே நடைமுறையில் காட்டுகிறது.

காங்கிரஸ் எதிர்ப்பில் மலர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைய சூழலில் காங்கிரசின் கால்களை கெட்டியாகப் பிடித்து கிடக்கிறது. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் ஆரிய மாயை ஜெயலலிதா, நரேந்திர மோடியின் ஆட்சியை தமிழகத்தில் நடத்துகிறார். சமீபத்தில் நடந்த போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்ட பீகார் இளைஞர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குஜராத்தின் ஆட்சியை நினைவூட்டியது. அநாகரிக அரசியல் கோமாளி துக்ளக் சோ போன்றவர்களின் ஆலோசனைப்படி, தமிழகம் இருண்ட காலத்தில் உள்ளது.

2014 -இல் நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. ஆனால், அதற்குள் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா திட்டமிட்டு நகர ஆரம்பித்து விட்டார். 1990 வரை இந்துத்துவ பாசிசக் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் அறிமுகம் இல்லாத கட்சி. கடந்த  1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க- பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து, திராவிட இயக்க கொள்கைக்கு, முதல் துரோக வரலாற்றைத் தொடங்கி வைத்தது. அன்றைய கால கட்டத்தில் கலைஞரின் மனசாட்சியென வர்ணிக்கப்பட்ட முரசொலி மாறன், பாரதீய ஜனதாக் கட்சியை ஆக்டோபஸ் என்றும், பண்டாரம், பரதேசிகளின் கட்சி என்றும் குறிப்பிட்டார். ஓராண்டு காலம் கூட ஆட்சி நீடிக்காத நிலையில், தி.மு.க பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் வென்றது.

அரசியல் ஆதாயத்திற்காக என்கிற நிலையைத் தாண்டி வைகோ, பாரதிய ஜனதாவின் அறிவிக்கப்படாத தலைவராகவே மாறி விடுவது வழக்கம். ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், தலித்துக்கள், இஸ்லாமியர்கள் குறித்து வைகோவின் பார்வை குழம்பிய குட்டையாகவே உள்ளது. பிற்போக்கு சக்திகளோடு இணைந்து நிற்பதில் வைகோ எப்போதும் பெருமிதம் கொள்கிறார். முத்துராமலிங்கத் தேவரையும் இம்மானுவேல் சேகரனையும் ஒன்றாகப் பார்க்கும் சீமானின் பார்வையைப் போன்றே வைகோவின் நிலைப்பாடும் உள்ளது.

திராவிட கட்சிகள் மாறி மாறி இந்துத்துவத்துடன் கைகுலுக்கிக் கொள்ளும்போது, அண்ணாவும் பெரியாரும் எதற்கு? சங்கராச்சாரியார் படம் போட்டு, வாக்குக் கேட்கலாமே? மதவாத சக்திகள் எப்போதும் இயங்கி வருகின்றன. மதச்சார்பின்மை சக்திகள் எப்போதாவது இயங்குகின்றன. தேர்தல் காலங்களில் மட்டுமே மதச்சார்பின்மை பேசுவது, வெற்றிக்கு வழிவகுக்காது. இடதுசாரிகள், தமிழ்த்தேசியவாதிகள், தலித்துக்கள், பெரியாரியவாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

Pin It