"மீடியாக்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன, அவை குறித்து என்னிடம் நல்ல அபிப்ராயம் இல்லை, மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டிய மீடியாக்கள், அப்படி செய்யாமல் பல நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன" என்ற கடினமான வார்த்தைகளை நாட்டின் ஏதோ மூளையிலிருக்கும் சராசரி குடிமகன் கூறியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, இப்படி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருப்பது வேறு யாருமல்ல முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய ப்ரஸ் கவுன்சில் தலைவருமான ஜஸ்டிஸ் மார்க்கண்டேய கட்ஜூ தான்.

இந்தியாவில் தற்போது ஊடகத்துறை செயல்பட்டுவரும் விதம் குறித்து அவர் கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளார். ஆனால் ஊடகங்கள் இன்று செயல்படும் விதம் கடுமையான விமர்சனத்திற்குரியவை. அச்சு ஊடகங்கள் கிட்டத்தட்ட ஒரு செய்தியை வெளியிடுவதால் நிர்வாகத்திற்கு என்ன லாபம் என்று கணக்கிடத் துவங்கியுள்ளன. இது ஜனநாயகத்தை மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் பிரபலமாக மக்கள் பணியாற்றிவரும் அச்சு ஊடகங்களின் இன்றைய நிலை குறித்து மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை விளம்பர வருவாயை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட்டுவருகின்றன. இந்த ஊடகங்கள், சில நேரங்களில் குற்றச் செயல்களின் போக்கையே மாற்றும் அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

பள்ளி, கல்லூரி மற்றும் பெரும் நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர விளம்பர வாடிக்கையாளர் என்பதால் அங்கு நிகழும் குற்றங்களையும், மக்கள் விரோத செயல்களையும், மாணவர் போராட்டங்களையும் இந்த 4ஆவது தூண்கள் சுட்டிக்காட்டத் தவறிவிடுகின்றன. கல்வி நிறுவனங்களில் நடக்கும் போராட்டங்களையும், குற்ற நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்கின்றன. சிலர் எந்த கல்லூரி, எந்த நிறுவனம் என்ற விபரங்கள் இல்லாமல் வெறுமனே ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு அங்குள்ள ஒரு கல்லூரி என செய்திகள் வெளியிடுகின்றன. ஏனெனில் விளம்பர வருவாய் பாதித்துவிடும் என்பதால். சிலர் நாட்டில் மக்கள் நலன் பயக்கும் விசயங்களுக்காக நடக்கும் போராட்டங்கள் குறித்த செய்தியின் பக்கமே தலை காட்டுவதில்லை. மாறாக சாதி மற்றும் மதத் தலைவர்கள் யாரென்றெ தெரியாதவர்களாக இருந்தாலும், லெட்டர் பேடு அரசியல் நடத்துபவர்கள் குறித்து செய்தியினை பெரிய அளவில் வெளியிட்டு மக்களிடம் ஒற்றுமையை வளர்த்து வருகின்றன விளம்பர வருவாய்க்காக. இன்னும் சிலர் பெண்கள் மற்றும் பாலியல் குறித்த குற்றச் செய்திகளில் ஏதோ தங்களின் செய்தியாளர் நேரில் இருந்து குற்றச் செயல்களை பார்த்தவர் போல, கிரிக்கெட் போட்டியின் நேர்முக வர்ணனையாளரைப் போல செய்திகளை படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் சூடாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வளவு தூரத்திற்கு அவர்களுக்கு சமுதாய சிந்தனை உள்ளது.

இதேபோல் தற்போதுள்ள அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் investigation journalism என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டன போலும். ஏனெனில் காவல் துறையினரால் தரப்படும் செய்திகளை அப்படியே வெளியிடும் நிலைக்கு வந்துவிட்டன. செய்தியின் உண்மைத் தன்மை, நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கத் தயாராய் இல்லை. காவல்துறையினர் பெரும்பாலும் தற்கொலை வழக்குகளில் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பைலை மூடி முத்திரையிட்டு விடுகின்றனர். இது போன்று காவல் துறையினரின் வரிகளிலேயே செய்தியை வெளியிட்டு முடித்து விடுகின்றனர். இதேபோல் மிகப்பெரிய குற்றச் செயல்களில் காவல்துறையினர் தீவிர புலனாய்வில் இருக்கும்போது ஊடகங்கள் தங்களுக்குள் உள்ள தொழில் போட்டியில் அது குறித்து செய்திகளை தங்களுக்கு விருப்பப்பட்டபடி வெளியிட்டு காவல் துறையினரின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டும் வருகின்றன. இதனால் அவர்கள் அரைகுறையாக விசாரணையை முடிக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி தலைமறைவாகிவிட்ட நிலையில் எந்தத் தவறும் செய்யாத அவர்களது குடும்பத்தினரை வைத்து இந்த ஊடகங்கள் கூறு போட்டு விற்பனை செய்து மனரீதியாக குடும்பத்தினரை சிறைக்கு அனுப்பி வருகின்றன. இவையெல்லாம் ஒரு புறமென்றால் தற்போது தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி ஊடகங்கள் ஊடகத்துறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஏனெனில் எந்த விதமான அடிப்படை ஊதியமும் இல்லாமல் மாவட்டந்தோறும், தாலுக்கா அளவிலும் செய்தியாளர்களை நியமித்து மக்கள் சேவையாற்றி வருகின்றன. ஒரு தொலைக்காட்சிக்கு ஒரு செய்தியாளர், ஒரு ஒளிப்பதிவாளர் என இருவர் பணியாற்றும் நிலையில் ஒரு செய்தியினை தனது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க 3 நிமிட கவி க்கு குறைந்தது 50 ரூபாயும், ஒரு பக்க பேக்ஸ் அனுப்ப குறைந்தது 15 ரூபாய், நாளொன்றுக்கு பெட்ரோல் என ஒருவருக்கு குறைந்தது 150 ரூபாய் வரையில் செலவாகிறது. ஊதியமே இல்லாமல் இவ்வளவு தூரம் பணியாற்றுபவர் எந்தளவிற்கு நேர்மையாக செயல்படமுடியும். தமிழகத்தில் சில மீடியாக்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன.

பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், பிலாசபி போன்ற விசயங்களில் ஆழ்ந்த அறிவில்லாதவர்கள் பலர் இருப்பதாக நீதியரசர் வருத்தப்பட்டுள்ளார். அவர் கொஞ்சம் உயர்வாக செய்தியாளர்களை மதிப்பிட்டுள்ளார். இன்று தமிழகத்திலுள்ள செய்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்தபட்ச கல்வியைக் கூட நிறைவு செய்யாதவர்கள் என்பது மட்டுமே உண்மை. பெரும்பாலான செய்தியாளர்கள் ஜாதி மற்றும் மத அடிப்படிப்படையிலும், முதலாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விசுவாசமாக நடந்து கொள்வாரா என்ற அடிப்படையிலும், கொஞ்சம் தங்களுக்காக செலவு செய்பவராக இருப்பாரா என்றும் கணக்கிட்டே தெரிவு செய்யப்படுகின்றனர். இன்னும் சிலரோ அறிவுக்கான சோதனை, எழுத்துத் திறன், தகுதி என அனைத்திலும் தெரிவு செய்தாலும் தங்களின் ராசி பொருத்தத்திற்கு பொருந்தவில்லை எனக் கூறி திறமையானவர்களை கழித்துவிட்டு, சிபாரிசுகளுக்குட்பட்டவர்களை திறமையற்றவர்களை நியமனம் செய்கின்றனர். இது போன்ற செய்தியாளர்களால் எந்த அளவிற்கு உண்மையோடும், நேர்மையோடும் செயல்படமுடியும். இப்படிப்பட்டவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு வளைத்து, நெளித்து கோடிகளில் கோபுரம் கட்டுகின்றனர். இன்னும் சிலரோ, அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் பாலமாக இருந்து சில, பல காரியங்களை சாதித்து பலருக்கு சேவையாற்றி வருகின்றனர்.

மக்களின் தேவை குறித்தோ, அரசின் செயல்பாடு குறித்தோ, கார்ப்பரேட் நிறுவன கொள்ளை குறித்தோ, மக்களின் அன்றாட பொருளாதார சிக்கல் குறித்தோ, வெளியிட தயாராய் இல்லை. “மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்” என்ற நீரோ மன்னனின் கூற்றினை இன்றைய இந்திய ஊடங்கள் பிரமாதமாய் செய்து வருகின்றன. ஈழத் தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது அங்குள்ள உண்மை நிலையினை எடுத்துக் கூற இங்குள்ள ஊடகங்கள் தவறிவிட்டன (சிலர் விலை போய்விட்டதாக கூறுகின்றனர்). அதேபோல் வெடிகுண்டு, குண்டு வெடிப்புகள் என்றாகி விட்டால் போதும் இஸ்லாமியர்களை குறிவைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன.

2007 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிசாலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி உம்லேஷ் யாதவ், அமர் உஜாலா மற்றும் டைனிக் ஜக்ரான் ஆகிய நாளிதழில்களில் செய்தி போன்று விளம்பரம் வெளியானதை மறைத்து தேர்தல் செலவு கணக்கு காட்டியிருப்பது கண்டறியப்பட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி 10 ஏ பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் அசோக் சவாண், மதுகோடா ஆகியோர் மீதும் வழக்கு நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் உதாரணமாக இருந்தும் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இங்குள்ள வாரமிருமுறை இதழ்கள் பணத்திற்கு செய்தி வெளியிடும் புதுவித உத்தியை கையாளத் தொடங்கின. இதில் கோடிக்கணக்கில் லாபம் பெற்றன. ஏனெனில் ஒரே தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பெரும் வாய்ப்பு பிரகாசம் என்ற நிலையில், வாரமிருமுறை இதழ்களின் கொள்ளை லாபம் உள்ளாட்சித் தேர்தலின்போது தினசரி நாளிதழ்களின் கொள்கைகளாகி விட்டன. ஒரு சில நாளிதழ்களைத் தவிர அனைத்து இதழ்களும் செய்திகளை (விளம்பரங்களை) வெளியிட்டு தள்ளி விட்டன. இந்த விளம்பர கணக்கை முறையாக பார்த்தாலே பலரும் தகுதி இழந்து விடுவர். பல மேயர்களும், பல கவுன்சிலர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல் தகுதி இழக்க வேண்டிவரும்.

நாட்டின் விடுதலைக்காக துணிச்சலுடன் தடை செய்யப்பட்ட நிலையிலும் மக்கள் பணியாற்றிய பத்திரிகைகளும், மக்களின் வளர்ச்சிக்கும், ஊழலுக்கு எதிராகவும் துணிச்சலாகவும் பணியாற்றிய பல செய்தியாளர்களையும் நம் நாட்டிலேயே உதாரணங்களாகக் கூறலாம். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாய் இருக்கும் இந்த ஊடகத்துறை நாளடைவில் ஊழல்களுக்கான காரணியாக இருப்பதை இனிமேலாவது உணர்ந்து ஊடகத்துறையினர் பணியாற்ற வேண்டும். தங்களுக்குக் கிடைத்த எல்லையற்ற சுதந்திரத்தை சாமானிய மக்களும் பெற வழிவகை செய்ய வேண்டும்.

- ‍மு.ஆனந்தகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It