ஒரு மானுட ஜீவி தூக்கிலிடப்படும் ஒவ்வொரு விடியல் பொழுதிலும் மானுட குலத்தின் கொடி அரைக்கம்பத்தில்தான் பறக்கும். - நீதியரசர் கிருஷ்ணய்யர்

நீதி அமைப்புகள் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவை என்ற கருத்து இப்போது மாறியிருக்கிறது. அண்மைக்காலமாக, குற்றங்கள், அவற்றிற்கான தண்டனைகள் பற்றியும், அவை மனித உரிமைகளின் மீது ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் பற்றியும் பேசப்பட்டுவருகின்றன. குறிப்பாக மரணதண்டனை பற்றிய மாற்றுப்பார்வையும், மரணதண்டனை கூடாது என்கிற கருத்தும் வலுவடைந்து வருகிறது. உலகளவில் இதற்கான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சமூகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கருத்தரங்குகள், எழுத்துகள், விவாத அரங்குகள் எனப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகப் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று மரணதண்டனைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் எழுந்துள்ள சூழலில், மரணதண்டனையின் தன்மை, விளைவுகள் குறித்துப் பேசுவது சரியானதாக இருக்கும்.

perarivalan_270முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தண்டனையே கூடாது என்பதன்று நம்முடைய வாதம். குற்றச்செயல்களுக்குத் தண்டனை கண்டிப்பாக வேண்டும். அந்தத் தண்டனை, குற்றம் செய்தவர் தன்னுடைய தவற்றை நினைத்து வருந்தி, மனம் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக இருக்க வேண்டுமேயயாழிய, அவனுடைய வாழ்க்கையை வலிந்து முடித்துவிடுவதாக இருக்கக் கூடாது. ஆனால் மரணதண்டனை அதைத்தான் செய்கிறது. அவனுடைய எஞ்சிய வாழ்நாளை வலுக்கட்டாயமாகப் பறித்து, குழியில் போட்டு புதைத்துவிடுகிறது. இந்த பூமிப்பந்தில் ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான உரிமையைத் தடுத்து, இயற்கை நியதியை மீறுகின்ற செயல் இது. எனவே, மரணதண்டனை என்பது தண்டனையன்று, அப்பட்டமான மனித உரிமை மீறல்.

எனவேதான், ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்துகின்ற மரண தண்டனையை, உலகில் 139 நாடுகள், சட்டத்தில் அல்லது நடைமுறையில் (Abolitionist in law or practice) ஒழித்துவிட்டன. இவற்றில், 96 நாடுகள் எல்லா வகையான குற்றங்களுக்கும் (Abolitionist for all crimes), 9 நாடுகள் சாதாரண குற்றங்களுக்கும் (Abolitionist for ordinary crimes only), 34 நாடுகள் நடைமுறையிலும் (Abolitionist in practice) மரணதண்டனையை ஒழித்துவிட்டன. 58 நாடுகள் இன்றைக்கும், மரணதண்டனையை, சட்டத்திலும், நடைமுறையிலும் தக்க வைத்துக் (Retentionist) கொண்டிருக்கின்றன. இந்த 58 நாடுகளில், அகிம்சை தேசமான இந்தியாவும் ஒன்று என்பது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையினால் அடிமை விலங்குடைத்ததாகப் பெருமை பீற்றிக்கொள்ளும் இந்தியாதான், மரணதண்டனையை ஒழித்த முதல் நாடாக வரலாற்றில் அறியப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது, இங்கே மனித நேயத்தைவிட, மனுநீதிதானே உச்சத்தில் இருக்கிறது.

மரண தண்டனையை நீக்கிவிட்டால், அச்சம் அற்றுப் போய்விடாதா, கொலைக்குற்றங்கள் பெருகிவிடாதா என்ற வினாக்கள் பொதுவாக எழுப்பப்படுகின்றன. 1971இல் 16 நாடுகள் மட்டுமே மரண தண்டனையை நீக்கியிருந்தன. 2010இல், மரண தண்டனையை ஒழித்த நாடுகளின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்தது. மரண தண்டனையை நீக்கிய 16 நாடுகளில் குற்றங்கள் பெருகியிருக்குமேயானால், மேலும் 80 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க எப்படி முன்வந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், மரண தண்டனையைப் பாதுகாத்து வைத்திருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்துவிடவில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள்.

நொய்டாவில், கால்வாயில் தோண்டத் தோண்டக் கிடைத்தனவே பிணங்கள், அவை என்ன குற்றங்கள் குறைந்துவிட்டதையா காட்டுகின்றன? ஒரு குற்றம் புரிந்தவனுக்குத் தண்டனையாக அதே குற்றத்தை எந்த நீதிமன்றமும் பரிந்துரைப்பதில்லை. கைக்குக் கை, அடிக்கு அடி என்று தீர்ப்பளிப்பதில்லை. அப்படியிருக்க, கொலைக்குக் கொலை என்ற தண்டனை மட்டும் எப்படி சரியாகும். ஒரு வேளை பிழையான நீதி வழங்கப்படுமானால், பறிக்கப்பட்ட உயிரைத் திருப்பித்தர முடியுமா அந்தச் சட்டத்தால்? இங்கே குற்றவாளி தண்டிக்கப்படுவதற்குப் பதிலாகப் கொல்லப்படுகிறார். அப்படியயன்றால் தண்டனை யாருக்கு? அவருடைய குடும்பத்தினருக்குத்தான் தண்டனை வழங்கப்படுகிறது. மகனை இழந்து பெற்றோரும், அண்ணனை இழந்து உடன்பிறந்தவர்களும், அப்பாவை இழந்து பிள்ளைகளும், கணவனை இழந்து மனைவியும் என குற்றமற்ற நிராபராதிகள்தான் இதன் மூலம் தண்டிக்கப்படுகின்றனர்.

தவறான நீதி வழங்கப்பட்டுத் தண்டனைக்கு ஆளான பலர் வெளியே வரும்போது, குடும்ப உறவுகள் காணாமல் போய்விட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. ஆறுமுகத்தின் குடும்பமும் அப்படித்தான் சிதறுண்டு போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மும்பை ஓசிவாரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டாள். குப்பைகளைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்திவந்த தமிழரான ஆறுமுகத்தை, அப்பகுதி காவல்நிலைய ஆய்வாளர் காதர்பார்கீர் கைது செய்து சிறையில் அடைத்தார். நீதிமன்றமும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 1995ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஆறுமுகம், 11ஆண்டுகளுக்குப் பிறகு, 2006இல் மும்பைச் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆயுள்தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே, எப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்ற வினாவிற்கான விடை, நீதி அமைப்பின் நேர்மையைக் கேள்விக் குள்ளாக்குகிறது. ஆறுமுகம் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர் நிரபராதி எனத் தெரிய வந்ததால், உண்மையை செரிக்க முடியாமல், சிறை அவரை வெளியில் துப்பிவிட்டது.

 மனச்சாட்சியின் உறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட ஆய்வாளர் காதர்பார்கீரின் கடிதம் உண்மையைச் சொன்னது. வழக்கை முடிக்கச் சொல்லி தன்னுடைய மேலதிகாரி கொடுத்தத் தொந்தரவினால், அப்பாவி ஆறுமுகம் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட விதத்தைத் தன்னுடைய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூருக்கு அருவிலுள்ள ராச்சமங்கலம்தான் ஆறுமுகத்தின் சொந்த ஊர். ஏழாண்டுகளுக்கு முன், நான் அந்த ஊருக்குச் சென்று விசாரித்த போது, அவருடைய மனைவி வேறுஒருவரைத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டது தெரிந்தது. அவருடைய மகன் உறவினர்களின் ஆதரவில் வளர்ந்து, கூலி வேலை செய்து வந்தார். இங்கே அச்சம் தரும் ஒரு வினாவை நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை ஆறுமுகத்திற்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்... தீர்ப்பு வழங்கிய நீதிபதி 'பாண்டியன் நெடுஞ்செழியன்' ஆகியிருப்பாரா?

எத்தனை அதிகாரிகளுக்கு மனச்சாட்சி உறுத்தும் என்று சொல்லமுடியுமா? அப்படியே உறுத்தி, உண்மையைச் சொன்னாலும், பறிக்கப்பட்ட உயிரை, சட்டமும், நீதிமன்றமும் திருப்பித்தருமா? 'எந்த ஒரு குற்றமும் நியாமான சந்தேகங்கள் எவற்றுக்கும் உட்படாத வகையில் நிரூபிக்கப்பட வேண்டும்' என்பது குற்றவியல் சட்டங்களின் அடிப்படை நெறி. இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 'இன்னும் தெளிவாக்கப்பட வேண்டிய பக்கங்கள் மீதம் இருக்கின்றன' என்று சொல்லியிருக்கிறது ஜெயின் கமிசன். அதைத் தொடர்ந்து மத்திய அரசினால் அமைக்கப்பட்ட, பல்நோக்கு விசாரணைக்குழு (MDMA) தன்னுடைய விசாரணையை முழுமையாக முடிக்காத நிலையில், அவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டைக்கு நாள் குறித்திருப்பது எந்த வகையில் நீதியாகும்? அதிலும், ஏற்கனவே 20 ஆண்டுகளைச் சிறையின் நெடுஞ்சுவர்களுக்கிடையில் கழித்துவிட்ட பின்னர், உடலின் ஆரோக்கியத்தையும், மனத்தின் இளமையையும் காலம் தின்று செரித்துவிட்டபிறகு, வெறும் கூடுகளைத் தூக்கிலிட்டு, அரசாங்கத்தார் நிலைநாட்டப் போகும் நீதி என்ன வகையான நீதி?

எந்த ஒரு நாட்டிலும், தண்டனைகள் என்பது, அரச நீதிக்கு உட்பட்டதாகவும், ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவகையிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்கிறார்கள் மனித உரிமையாளர்கள். அதை மெய்ப்பிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன் அவர்களின் கூற்று. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைவழக்கில் தூக்கிலிடப்பட்ட, கேஹர் சிங்கின் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமன்தான் நிராகரித்தார். இந்த தூக்கிலிடும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டிருந்தது (the decision to hang as being politically motivated) என்று அவர் விளக்குகிறார். அவர் தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

கேஹர்சிங்கின் வழக்குப் சில கேள்விகளை என்னுள் எழுப்புகிறது... நிலவிய அல்லது மாறிய சூழ்நிலையைக் கணக்கில் எடுத்து மற்றும் அரசாங்கத்தின் அறிவுரை இல்லாமல் மரணதண்டனையை மாற்றியமைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குக் கிடையாதா? பிறகெப்படி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நீதியை அல்லது கட்சி சார்பை தடுக்கமுடியும்? (“Kehar Singh’s case raised a few queries in my mind… should not the President have discretion to examine any extenuating circumstance and alter the death sentence without the advice of the government? How else can prejudice or partisanship be prevented?”)

இத்தனை கேள்விகளுக்குரிய, அரசுகளின் விருப்பு, வெறுப்பு சார்ந்த மரணதண்டனையை ஒழிக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகிறது. கண்ணுக்குக் கண், கொலைக்குக் கொலை என்ற காட்டுமிராண்டி காலத்திய மடமையை இன்னும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதில் பிடிவாதமாக இருக்கும் நாம் எப்படி நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும்? அரசியலில் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், ராஜவிசுவாசத்தைக் காட்ட முயற்சிப்பவர்களும், மனுவின் எச்சங்களும்தான் மரணதண்டனையை ஆதரிக்கின்றனர். கொலைக்குக் கொலைதான் சரி என்று சொல்லும் இந்த மெசபடோமிய ஹமுராபிகள் காட்டுக்குள் வாழக்கூடத் தகுதியற்றவர்கள்.

சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை
நமக்கெல்லாம் உயிர்வாதை

என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளை நினைவில் கொண்டு, மரண தண்டனைக்கு மரணத்தைப் பரிசளிப்போம். மானிட சமுதாயம் நாம் என்று சொல்லுவோம்.

- இரா.உமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

நன்றி: ஜனசக்தி நாளிதழ்

Pin It