தங்கத்தின் அன்றாட விலை உயர்வு, இப்போதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. காரணம், 'இருக்கப்பட்ட மகராசன்கள்' தங்களின் செல்வாக்கைக் காட்டுவதற்கான அதி விலையுயர் பொருளாய் மாறிவிட்டது. ஏழைகளும், நடுத்தர மக்களும் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாத எட்டாக் கனியாய் தங்கத்தின் விலையில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் ஏற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் முகமாக பெட்ரோல், டீசல், எரிவளி உயர்வு நடுத்தர மக்களை ஏழைகளாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது. தங்கத்திற்கும், பங்குச்சந்தையின் வணிகப் பங்குகளுக்கும் நிர்ணயிக்கப்படும் விலைக்குறியீட்டைப் போன்று இனி வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவளி ஆகியவற்றிற்கும் அன்றாட விலை நிர்ணயம் செய்யப்படுமோ என்ற அச்சம் ஏற்படுவதை இனி தவிர்க்க இயலாது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு நடுவண் அரசிடம் இருந்த நிலை மாறி, தற்போது எண்ணெய் நிறுவனங்களிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் கடந்த ஆறு மாதங்களுக்குள் ஒன்பது முறை இவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையேற்றம், பிற விலை உயர்வினைக் காட்டிலும் கூடுதல் கவலையோடு நோக்கப்படுவதற்கு காரணம், அனைத்துப் பொருட்களின் விலையில் இவற்றின் தாக்கம் இருக்கிறது என்பதற்காகத்தான். காஷ்மீர் தேசத்தின் ஆப்பிள் தமிழ்நாட்டு நகர்ப்பகுதிகளில் தடையின்றிக் கிடைக்கிறதென்றால், பெருகியுள்ள போக்குவரத்து இதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதே போன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, தானிய வகைகள், காய்கறி, பழங்கள் என எல்லாவற்றிற்குமே போக்குவரத்து இன்றியமையாதது. இந்தப் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டுமாயின் அவற்றை உந்திச் செலுத்தும் எரிபொருளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடு தவிர்க்கவியலாதது. ஆகையால் இயல்பாகவே எரிபொருள் விலையில் ஏற்படுகின்ற விலையேற்றத்தின் பலன் மக்களின் தலையில் விழுவதும் தவிர்க்கவியலாதது.

ஆனால் இதுவரை பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகித்து வந்த நடுவணரசு, தற்போது எண்ணெய் நிறுவனங்களிடம் அந்த உரிமையை வழங்கிவிட்டு, எனக்கென்ன என்பது போல் ஒதுங்கி நிற்கத் தொடங்கியிருக்கிறது. இது இந்திய மக்களாட்சி வரலாற்றின், மிகப் பெரிய அவமானம். 'உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அதற்கு இணையாக உள்நாட்டிலும் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அந்த நிறுவனங்களுக்கு பணம் வானத்திலிருந்து கொட்டவில்லை. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வின் ஒரு பகுதியை மக்கள் தலையில் தான் சுமத்தியாக வேண்டும். இதை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை' என்று எண்ணெய் நிறுவனங்களின் நிதி அமைச்சர் மன்னிக்கவும்... நூறு கோடி மக்களின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தருகிறார். இந்திய மக்களுக்கு மட்டும் பணம் ஸபெக்ட்ரமிலிருந்து (அய்யோ... வானத்திலிருந்து) கொட்டுகிறது போலும்!

இந்தியாவை ஆள்கின்ற காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்ற நொடியிலிருந்து இந்திய மண்ணின் வளங்களனைத்தும் பெரு முதலாளிகளின் கைகளுக்கு மாற்றித் தருகின்ற பணி விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அடிமையாகவே தன்னை தத்துக் கொடுத்திருக்கிற பொருளாதார அடியாளும், இந்திய தலைமை அமைச்சருமான மன்மோகன்சிங், முதலாளித்துவத்தின் இடைத்தரகராகவே மாறிவிட்டார். ஒருவேளை உலகச்சந்தையிலிருந்து பெறுகின்ற கச்சா எண்ணெய்க்கு வேண்டுமானால் விலையேற்றம் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கும். ஆனால், உள்ளூரில் தோண்டி எடுத்து, துரப்பணம் செய்யப்படுகின்ற எண்ணெய்க்கும் அதே விலை வைப்பது, என்ன விதமான பொருளியல் சிந்தனை? இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 74 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டாலும், மீதமுள்ள 26 விழுக்காடு உற்பத்தி இந்தியாவிற்குள்தானே நடைபெறுகிறது. உலகக் கச்சா எண்ணெயின் சந்தை விலையை உள்ளூர் கச்சா எண்ணெய்க்கும் நிர்ணயம் செய்வது மக்களை ஏமாற்றும் மோசடியல்லவா?

இந்திய எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், கடந்த 2009-2010ஆம் ஆண்டில் ரூபாய் 10 ஆயிரத்து 998 கோடியை இலாபமாக ஈட்டியுள்ளது. அதேபோன்று இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும், பாரத் பெட்ரோலியக் கழகமும் சேர்ந்து 2009 ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் வரை அடைந்துள்ள இலாபம் ஆயிரத்து 378 கோடி ரூபாயாகும். தங்கள் இலாபத்தின் ஒரு பகுதியை நடுவணரசுக்கும் இந்நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு என்று ஒப்பாரி வைக்கும் இந்திய நிதியமைச்சருக்கு, இந்த இலாபத் தொகையெல்லாம் கண்ணில்படவில்லையோ? அதே போன்று கடந்த 2008ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் உலகச் சந்தை விலை பீப்பாய் ஒன்றுக்கு 135 டாலர். அப்போது இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோலின் விலை ரூ.54. ஆனால் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 92 டாலர் மட்டுமே உலகச் சந்தை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் விலையாக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நிர்ணயம் செய்துள்ள விலை லிட்டருக்கு ரூ.63.45. ஆக, இந்த ஏமாற்று நாடகத்தின் கதை நாயகனாக இந்திய நடுவணரசும், துணைப்பாத்திரமாக எண்ணெய் நிறுவனங்களும் திகழ்கின்றன. பாவம் மக்கள் வழக்கம் போல வயிறெரிந்து அழும் அப்பாவியாக, ஏமாளியாக உழன்று கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசலின் மொத்த விற்பனை விலையில் 51.25 விழுக்காடு நடுவண், மாநில அரசுகளுக்கு வரியாகச் சென்றுவிடுகின்றது. மீதமுள்ள விழுக்காடே பெட்ரோலுக்காக நாம் வழங்குகின்ற உண்மையான தொகை. அதாவது தற்போதுள்ள விலையில் மாதம் 15 லிட்டர் வீதம் ஒரு நபர் ஓராண்டில் பெட்ரோலுக்காகச் செலவிடும் தொகை ரூ.951.75 ஆகும். இதில் பெட்ரோலுக்கான விலை ரூ.330 மட்டும்தான். மீதி அனைத்தும் நடுவண், மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே. அந்த வரி, இந்த வரி எனத் தீட்டிவிட்டு, மீண்டும் அடுத்த விலையேற்றத்திற்குத் தயாராகிவிடுகின்றனர் ஆளும் வர்க்கத்தினர். உற்பத்திப் பொருளின் மதிப்பில் பாதிக்கும் மேல் வரியாக பொதுமக்கள் செலுத்துவது அநேகமாக பெட்ரோலுக்காகத்தான் இருக்கும். ஆடம்பரப் பொருட்களின் மீதான வரிவிதிப்பு அப்பொருளைத் துய்க்கும் நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே இழப்பினை ஏற்படுத்தும். ஆனால் எரிபொருட்கள் மீதான வரிவிதிப்பும், விலையேற்றமும் அடித்தட்டு மக்களின் பொருளியலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?

'பெட்ரோலியத்துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் நடுவணரசுக்கு ரூ.1,11,779 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு பிரிக்கப்பட்டுள்ளது... அது மட்டுமன்றி கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23 ஆயிரத்து 325 கோடிதான். ஆனால் கிடைத்த வருமானமோ நடுவணரசுக்கு ரூ.4,10,842 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.2,63,766 கோடியுமாகும். பெட்«£லியப் பொருட்களுக்காக அரசு வழங்கும் மானியமோ கிடைக்கின்ற இலாபத்தில் வெறும் 3.45 விழுக்காடு மட்டுமே' (நன்றி பி.எஸ்.எம்.ராவ், தினமணி) பெட்ரோலியப் பொருட்களால் அரசுக்கு கிடைத்து வருகின்ற அபரிமிதமான வருமானத்தைப் பார்க்கும்போது, உலகச் சந்தையின் விலை உயர்வை மிக எளிதாகச் சமாளிக்க முடியும் என்பதுதான் உண்மை.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கக்கூடிய கமிசன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தங்கள் கூட்டமைப்பின் மூலமாகக் குரலுயர்த்தியுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் குதிப்பதைத் தடுப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் வருமானத்திலிருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கமிசன் வழங்குவதை விடுத்து, அதனையும் ஒட்டு மொத்தமாக மக்களின் தலையில் கட்டியுள்ளனர். அப்பட்டமான இந்த மோசடியைக் கண்டிப்பதற்கு இந்திய நடுவணரசுக்குத் துணிச்சலில்லை. எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காகப் போராடும் எண்ணத்திலில்லை போலும்! தமிழக அரசு, சொகுசுப் பேருந்துகள் என்ற பெயரில் மறைமுகமாக பேருந்துக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டது. அன்றாடத் தேவைப் பொருட்களின் விலையும் கடந்த சில மாதங்களில் பெருமளவு உயர்ந்து விட்டது. நடுவணில் ஆளுகின்ற காங்கிரசு அரசும், தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும் பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான பதிலை இதுவரை அளிக்கவில்லை. இந்திய மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு அதிக அளவில் வரி விதிக்கும் மாநிலமாகத் தமிழகமே திகழ்கிறது. மக்களின் குரல் வளையை நெறிக்கும் இவ்விலை உயர்வுக்கு, சப்பைக்கட்டு கட்டுகிறதே ஒழிய மாநில வரியைக் குறைத்து மக்களின் சுமையைப் பகிர்ந்து கொள்ள தமிழக அரசும் தயாரில்லை.

தங்கத்தின் விலையைப் போன்றே பெட்ரோல், டீசலும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் படும் இன்னலைத் துடைப்பதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன் வரவில்லை. அறிக்கைக்கு அறிக்கை, பேச்சுக்குப் பேச்சு என்றுதான் இந்திய அரசியல் களம், சூடு பிடிக்கிறதே ஒழிய, வீதியில் இறங்கிப் போராடத் துணியவில்லை. மக்களின் திரட்சியான போராட்டமே இது போன்ற மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வரும். இல்லாவிடில், தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அரசியல் முதலாளிகளுக்கு வாக்குகளை குத்திவிட்டு நம் சனநாயகக் கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கத்தான் வேண்டும்.

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It