தோழர் கலியபெருமாள்
சிறையில் தோழர் கலியபெருமாளைச் சந்திக்க எஸ்.வி. ராஜதுரை போன்ற தோழர்கள் செல்லும் போதெல்லாம், தேசிய இனப் பிரச்சனையைப் பற்றி, கலியபெருமாள் விவாதிப்பார். இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனையைக் கையிலெடுக்காமல் புதிய சன நாயகப் புரட்சியைச் சாதிக்க முடியாது என்று புலவர் கலியபெருமாள் கருதினார். இந்தப் பிரச்சனையில் கட்சித் தலைமைக்கும், அவருக்கும் இடையே என்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. அதனால் கலியபெருமாளும், தமிழரசன் போன்றவர்களும் “மக்கள் யுத்தக் குழு”விலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
1988ஆம் ஆண்டு கோவையில் எஸ்.வி. ராஜதுரை அவரது தங்கையின் வீட்டிலிருந்தபோது, கியூ பிரிவு போலீசார், அவரை விசாரித்தனர். அப்போது காவல் துறையினர், “நாங்கள் கலியபெருமாளைத் தேடிவரு கிறோம்; அவரைக் கடைசியாகச் சந்தித்தது நீங்கள் தான்; அவர் அடுத்த முறை வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுப்பீர்களா?” எனக் கேட்டனர். “அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்” என்று கூறினார் ராஜதுரை.
உடனே அங்கிருந்த காவல்துறை அதிகாரி எஸ்.வி. ராஜ துரையை நோக்கி, “உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இருக்கிறதா?” என வினவினார். அதற்கு எஸ்.வி.ஆர்., “இந்தியாவில் சமூகப் புரட்சி ஏற்பட வேறு எந்த மார்க்கமும் இல்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்துக்கான காலம் கனிந்துவிட்டதாக நான் கருதவில்லை” என்று பதிலுரைத்தார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் கலியபெருமாள் படித்துக் கொண்டிருந்தபோது, தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் (1946-47களில்) விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய இரணியன், சிவராமன், களப்பால் குப்பு போன்றவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த இயக்கத்தின் தாக்கமும், அரசின் அடக்குமுறைக்கு எதிரான கருத்தியலும் கலிய பெருமாள் உள்ளத்தில் வேகமாக வளர்ந்து வந்தது.
அப்பொழுது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களின் தாக்கத்தால் கலியபெருமாளுக்குப் பெரியார் இயக்கத்தில் இருந்த ஈடுபாடு, பொதுவு டைமை இயக்கத்திற்கு மாறியது. அதனால் 1954ஆம் ஆண்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1960ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய விவசாய சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். விருத்தாசலம் பகுதியைச் சார்ந்தவர்களில் பலர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலையா னார்கள். அப்போது கலியபெருமாளின் துணைவியார் சிறைக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், “மற்றவர்களைப் போல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, வெளியில் வரக்கூடாது” என்று எழுதியிருந்தார். எனவே தண்டனை முடிந்துதான் கலியபெருமாள் விடுதலை யானார்.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தேர்தல் செலவுகளைக் கட்சி ஏற்றுக்கொள் வதாகக் கூறியது. பிறகு, அனைத்துச் செலவுகளையும் வேட்பாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்சி கூறிவிட்டது. எனவே பெரும் கடன் சுமை ஏற்பட்டு விட்டது. அதனால் கட்சி வேலையைக் குறைத்துக் கொண்டு விவசாயத்திலும், வணிகத்திலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை புலவர் கலியபெருமாளுக்கு ஏற்பட்டது. கடுமையான உழைப்பால் கடன்சுமை ஓரளவு குறைந்தது.
1964ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட நேரத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கலியபெருமாள் ஆதரித்ததால் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைத்தனர்.
1965ஆம் ஆண்டு பெண்ணாடம் சர்க்கரை ஆலைத் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும் அருணா சர்க்கரை ஆலை விவசாய சங்கப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காகவும் சர்க்கரை ஆலை நிர்வாகத் துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார். ஆலை நிர்வாகத்துக்கு எதிராக இருக்க வேண்டாமென்று அவரிடம் ஒரு தரகர் மூலம் பேரம் பேச முயற்சித் தார்கள். ஒருநாள் அந்தத் தரகர், கலியபெருமாளிடம், “நீங்கள் தொழிற்சங்கம் நடத்திக் கொள்ளுங்கள்; ஆனால் ஆலை நிர்வாகத்துக்கு எதிராகத் தொழிலாளர் களைக் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுத்தா தீர்கள்; உங்களுக்குச் சென்னையில் ஒரு வீடும், உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலையும் கொடுக்கின்றோம்” என்று கூறி சில இலட்சம் உருபாவும் அவரிடம் கொடுக்க முயன்றார். கலியபெருமாள் அந்தப் பணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, “தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, உங்கள் நிர்வாகத்துக்கு ஆதர வாகச் செயல்படுவேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்” என்று கடுமையாகப் பேசி அத்தரகரை விரட்டிவிட்டார்.
பணம் கொடுத்து அவரை விலைக்கு வாங்க முடியாது என்று புரிந்துகொண்ட ஆலை நிர்வாகம், அவரைக் கொலை செய்ய முடிவுசெய்தது. அதற்கான அடியாள்கள் சிலரை அமர்த்தி, அவர்களுக்குப் பணமும் கொடுத்து அனுப்பினார்கள். அப்படி அமர்த்தப்பட்ட ஆள்களில் சிலர் கலியபெருமாளிடம் வந்து நிர்வாகத் தின் சதித் திட்டத்தைச் சொல்லி. எச்சரிக்கையுடன் இருக்கும்படித் தெரிவித்துச் சென்றார்கள். எனவே ஆலை நிர்வாகம் அரசியல் ரீதியாக அடக்குமுறையை மேற்கொண்டு அழித்துவிடலாம் என்று முயற்சி செய்யத் தொடங்கியது.
இந்தக் காலகட்டத்தில் முதலாளி வர்க்கத்தின ரோடும், நிலப்பிரபுக்களோடும், சமரசமில்லாமல் போராடிய அனைவரும், தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப் பட்டனர். மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் மாவட்டத் தில், நக்சல்பாரி என்ற கிராமத்தில் நடைபெற்ற விவ சாயிகளின் போராட்டம், இந்திய நாடு முழுவதும் புயல்வேகத்தில் பரவிக்கொண்டிருந்த காலம் அது. எனவே கலியபெருமாளையும், அவரது போராட்டத் தையும் தீவிரவாதிகள் போராட்டம் என்று அன்றைய அரசு முத்திரைக் குத்தக் காரணமாக அமைந்துவிட்டது. பெண்ணாடம் விவசாயிகள் போராட்டம், நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம், அண்ணாமலைப் பல் கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என்று மூன்று போராட்டங்களாலும் கலியபெருமாள் பெருந் தொல் லைகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக நேரிட்டது.
பெண்ணாடம் பகுதியில் இருந்த எண்ணற்ற கிராமங்களிலும், நெய்வேலித் தொழிலாளர் இல்லங்களிலும் இரத்த ஆறு ஓடியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தடியடியிலும் துப்பாக் கிச்சூட்டிலும் எண்ணற்ற மாணவர்கள் படுகாயமடைந் தனர். சில உயிர்கள் பறிக்கப்பட்டன. இவ்வளவுக்கும் அன்றைய தி.மு.க. அரசின் தலைமையே காரணமாகும்.
1968இல் தோழர் தருமபுரி அப்பு, கலியபெரு மாளைச் சந்தித்தார். நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டார். அதற்குக் கலியபெரு மாள், அப்போதைய குடும்பச் சூழலைக் கூறி, இயக் கத்தில் முழுமையாகச் செயல்பட முடியாத நிலையை விளக்கினார். ஆயினும் நக்சல்பாரி இயக்க நடவடிக் கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்து வந்தார்.
1968இல் சாரு மஜும்தார் முதன்முதலில் நெய் வேலிக்கு வந்தார். அப்போது அப்பு மூலம் கலிய பெருமாள் சாரு மஜும்தாருக்கு அறிமுகமானார். நாடு முழுவதும் வீறுகொண்டு எழுந்த நக்சல்பாரி புரட்சி இயக்கத்தின் தாக்கம், தமிழகத்தில் கோவை, தென் னார்க்காடு, வடஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் எதிரொலித்தது.
1969 மார்ச்சு மாதத்தில் தஞ்சை மாவட்டம் குமணத்துறை கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அப்பு மாநிலச் செயலாளராகவும், கலியபெருமாள் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அம்மாநாட்டில், கம்யூனிஸ்ட் புரட்சியாளர் கள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தோற்றுவிக்கப்பட்டது. 1969 மே மாதத்தில் சாரு மஜும்தார் இரண்டாவது தடவையாகத் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது திருச்சி மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் முந்திரிக் காட்டில் நடைபெற்ற கூட்டத்தில், “கிராமங் களுக்குச் செல்வோம்” என்ற முழக்கம் முன்வைக்கப் பட்டது. கிராமங்களில் இரகசியக் குழுக்களை அமைத்து, ஏழை-எளிய மக்களிடம் அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து, சொத்தைப் பறிப்பவர்கள், மோசமான நிலப் பிரபுக்கள், பள்ளி, கோயில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்றும், அழித்தொழிப்பு நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் மஜும்தார் வலியுறுத்தினார். பிறகு சாரு மஜும்தார் தலைமையில், சென்னையில் மாநிலக் குழுக் கூட்டம் நடந்தது.
முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், மாணவர் கணேசன் முதன் மையாகப் பங்காற்றினார். அதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தி.மு.க. ஆதரவு மாணவர்களுக் கும், நக்சல்பாரி இயக்க ஆதரவு மாணவர்களுக்கும் மோதல் நிலை இருந்தது. அண்ணாமலைப் பல் கலைக்கழக நிர்வாகத்தாலும், தி.மு.க. ஆதரவு மாண வர்களாலும் கணேசனுக்கு இருந்த ஆபத்தையும், தற்காப்புக்காக வெடிகுண்டு தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சொல்லி, வெடிகுண்டு தயாரிப்பதற்கு கலியபெருமாளைச் சம்மதிக்கச் செய்தனர்.
1970 பிப்பிரவரி 22ஆம் நாள் கலியபெருமாளின் தென்னந்தோப்பில் தோழர்கள் சர்ச்சில் (தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆந்திர மாநிலம் நெல் லூர் சென்று, வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றி ருந்தார்) கணேசன் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் (இரசாயனம்) படித்துக் கொண்டி ருந்தார்). காணியப்பன் (உடுமலைப் பகுதியைச் சேர்ந்த இவர், கோவைப் பகுதியில் ஓர் அழித்தொழிப்புச் செயலில் ஈடுபட்டு, ஓராண்டாகத் தலைமறைவாக இருந்தவர்). மூவரும் வெடிகுண்டு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அங்கு வேறு எவரும் வந்து விடக்கூடாது என்பதற்காகப் புலவர் கலியபெருமாள் சற்றுத் தூரம் தள்ளி அமர்ந்திருந்தார். தொழில்நுட்பக் கேட்டால், வெடிவிபத்து நடந்துவிட்டது.
குண்டு வெடித்ததும் 2 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தில் கடுமையான அதிர்வு ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதும், உணவு எடுத்துவரச் சென்றிருந்த வள்ளுவன் அவசர மாகத் திரும்பிவந்து பார்த்த போது எல்லாமே நடந்து முடிந்துவிட்டிருந்தது. கணேசன், காணியப்பன் இருவரும் இறந்து கிடந்தனர். சர்ச்சில் மட்டும் கை, கால் எல்லாம் துண்டிக்கப்பட்டு முடமாக இரத்த வெள்ளத்தில் குற்று யிரும் குலையுயிருமாகத் துடித்துக் கொண்டிருந்தார். அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக் கானவர்கள், குண்டுவெடிப்பு நடந்த இடத்தைச் சுற்றி நின்று, தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு, உணர்ச்சிப்பெருக்கால் ஓவெனக் கதறி அழுதனர். நடந்தவற்றை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என்று வள்ளுவன் கேட்டுக் கொண்டார். அடுத்த சில நொடிகளில் சர்ச்சிலும் இறந்துவிட்டார். தோழர்கள் மூவரின் உடல்கள் கோணிப்பையில் கட்டப்பட்டு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தின் நடுப்பகுதியில் கரும்புகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, குழி தோண்டிப் புதைக்கப்பட்டன. நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் யாரும் தகவல் சொல்லவில்லை.
வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்து 40 நாள்கள் வரை தியாகிகளாகிவிட்ட மூவர் உடலையும், தலைமறை வாக இருந்த கலியபெருமாளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் கிராம மக்களுக்கு அளவுகடந்த தொல்லை கொடுத்தனர். அப்பொழுது மூன்று மாத காலத்திற்கு சௌந்தரசோழபுரம் கிராமத்தில் ஆண்கள் தங்க முடிய வில்லை. கலியபெருமாள் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, கடலைப் பயிர்களைக் காவல்துறையி னர் அழித்துவிட்டார்கள். அவருடைய வீடும் முத்திரை (சீல்) வைக்கப்பட்டது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த 40 நாள்கள் கழித்து மரணமடைந்த மூவரின் உடலைக் காவல்துறையி னர் கண்டுபிடித்தனர். கலியபெருமாள் பல மாவட்டங் களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அவரது துணைவியார் வாலாம்பாளும் உறவினர் வீடுகளில் மாறி மாறித் தங்கியிருந்தார்.
அதுசமயம், கொடியவனான அய்யம்பெருமாள் அழித்தொழிப்புச் செய்யப்பட்டார். அய்யம்பெருமாள் இறந்தவுடன் காவல்துறையினர் கலியபெருமாள், அவரது மகன்கள் வள்ளுவன், நம்பியார், அவரது துணைவியாரின் சகோதரி அனந்தநாயகி, தம்பி மாசிலாமணி, இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தார்கள்.
ஏற்கெனவே வெடிகுண்டு வெடிப்பில் கலியபெருமாள் மூத்த மகன் வள்ளுவன், துணைவியார் வாலாம்பாள், தம்பி மாசிலாமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் அவர்களைத் தேடிக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)