பிரதமர் என்றால் யார்? அவருக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பன போன்ற கேள்விகளை கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டால் தெளிவாக சொல்லிவிடுவார்கள். அந்த வாய்பேச முடியாத ஊமைத் தாத்தாவை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சிறப்பான மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பேச்சு வர மாங்காடு அம்மன் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை தோறும் என் அம்மாவுடன் சென்று வழிபாடு செய்கிறேன் என்று மனம் நோகக் கூறுவார்கள்.

பிரதமரும் இப்பொழுது பேசுவார், அப்பொழுது பேசுவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஒருவழியாக பேசிவிட்டார்.  

அம்மன் ஒருவழியாக கண் திறந்து அருள் புரிந்துவிட்டார். பிரதமருக்கு பேச்சு வந்ததில் கடவுளின் பங்கு மகத்தானது என்பது யாருக்கும் தெரியாது என்றாலும் ஆத்திகர்கள் தாராளமாக நம்பலாம். இது நடந்து விட்டது. பிரதமர் பேசிவிட்டார். அது உண்மை. சில உண்மைகளை நம்பித்தான் ஆக வேண்டும். நான் நம்பமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க வேண்டாம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகள் அனைத்தும் உண்மையே. நான் நம்பமாட்டேன் அதில் ஏதோ கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் சொல்லத் தேவையில்லை. அதிசயங்கள் இந்த உலகில் நடக்கத்தான் செய்யும். கலங்கக் கூடாது. மிரளக் கூடாது.  

அவர் கூறிய வார்த்தைகள்: 
 
2ஜி அலைக்கற்றை உரிமம் யாருக்கு வழங்குவது எந்த அடிப்படையில் வழங்குவது என்பதை முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாதான் முடிவு செய்தார். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு எடுத்தது குறித்து எனக்கோ அல்லது மத்திய அமைச்சரவைக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இனிமேல் இப்படி கூட சொல்லலாம் நம் பிரதமர். "என்ன? கோஹினூர் வைரத்தை லண்டனுக்கு எடுத்துச் சென்று விட்டார்களா? என்னிடம் சொல்லவே இல்லையே, எனக்குத் தெரியவே தெரியாதே? யாரைக் கேட்டு எடுத்துப் போனார்கள். ஏன் என்னிடம் சொல்லவில்லை. (அப்படி சொன்னால் தான் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்பது வேறு விஷயம்) நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது எடுத்துச் சென்றுவிட்டார்களா? ஏன் என்னை எழுப்பிவிடவில்லை. இது என்னை அறியாமல் நிகழ்ந்துவிட்டது. இதற்கு நான் பொறுப்பில்லை. (மிக முக்கியமாக) நான் இதற்காகவெல்லாம் பதவி விலகமாட்டேன்" என்றெல்லாம் கூட கூறலாம். (இந்த ஷர்க்தான் பிரதமரிடம் மிகவும் பிடித்த விஷயம்) எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும் சாம்பாரில் உப்பு இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி கவலைப்படக்கூடாது என்று உறுதிமொழியேற்றிருக்கும் இந்திய பாமர மக்கள் எவ்வளவு பெரிய அரசியல் அதிர்ச்சி அறிக்கைகளையும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மானாட மயிலாட பார்த்து இன்புற்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.  

வருடங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 60 வருடங்களுக்கு முன் கோஹினூர் வைரத்தை எடுத்துக் கொண்டு சென்றால் என்ன, அல்லது 4 வருடங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடியை அடித்துக் கொண்டு சென்றால் தான் என்ன? ஒரே பதில்தான் எனக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையே? 

இப்படி ஒரு இயக்குனர் கூறினால் யாராவது ஒத்துக்கொள்வார்களா? படம் சரியாக வரவில்லை என்றால் நான் பொறுப்பில்லை. அந்த கேமராமேன் தான் கேமராவில் ஃபிலிம் போட மறந்துவிட்டார். இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. நான் அவரிடம் கேட்‍டேன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். அதனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன்.  

இதுபோன்ற அபத்த பதில்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள உலகிலேயே இந்தியர்களுக்கு மட்டும் தான் தகுதி உண்டு. இந்தியர்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. இனிமேல் பதில் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கூறலாம். கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.  

இனி உலக அரசியல் மேதைகள் எல்லாம் இந்த தேர்தல் வெற்றி கண்டுபிடிப்பை பற்றி இந்தியா வந்து பயின்று தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்தல் வெற்றி கண்டுபிடிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பெயரில் பேடண்ட் உரிமை வாங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி.  

மருத்துவ உலகில் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. "வருமுன் காப்போம்" என்ற அந்த வாக்கியம் உடலுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் மிகப்பொருந்தும். சில நோய்கள் குணப்படுத்தப்பட முடியாத அளவுக்கு உடலில் பரவி விடுவது உண்டு. அவ்வாறு பரவிய பின் நீ மருத்துவர்கள் முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவாய் என்று கூறினால் எப்படி உணருவான் அந்த நோயாளி. கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போல இந்தியா இன்றோ, நாளையோ என ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மிக மோசமாக ஒரு மனசாட்சியே இல்லாமல் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருடுபவன் கண்ணுக்கு முன் திருடிச் செல்வதைப் போல, அது தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கோமா நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்தசூழ்நிலையில், ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என கிச்சு கிச்சு மூட்டினால் சிரித்து விட முடியுமா? என்ன?  

இங்கு 80 சதவீதம் பேருக்கு தினசரி சராசரி வருமானமே 40 ரூபாய்தான் அந்த வருமானத்திற்குள் தான் ஒரு இந்தியன் 3 வேலை சாப்பிட வேண்டும். உடை உடுத்தி மானம் காத்துக் கொள்ள வேண்டும். இவர்களிடம் போய் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்தால், இந்த மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் அதற்கு எத்தனை பூஜ்ஜியம் போடுவது என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இங்கு வறுமையை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதன் பெயர் விதி. ஆனால், இந்திய மக்களை பொறுத்த வரை இத்தனை பூஜ்ஜியத்திற்கு மதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். தாங்கள் எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறோம் என்று அவர்களால் விளங்கிக் கொள்ளவே முடியாது. தாங்கள் அடைந்த பாதிப்பு என்ன என்றும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள். 

இங்கு விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. வருமானம் குறைந்து கொண்டே போகிறது. இந்த நிலையில், யோகிகளைப் போல் தினசரி ஒருவேலை உணவு உண்டு வாழ்ந்து மடிவது என்ற ஆன்மீக கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மக்கள் வலியுறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எதற்கு உடை உடுத்த ‍வேண்டும் காந்தி மகான் சட்டை கூட போடாமல் தானே வாழ்ந்தார். அவரையே பின்பற்றுங்கள் என்று கூறினாலும் கூறலாம். ஆனால் கட்டியிருக்கும் கோவணத்தை கழற்றி விடுவார்களா? அல்லது மாட்டார்களா? என்று எனக்குத் சத்தியமாகத் தெரியாது. 

யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் நான் சில கருத்துக்களைக் கூறலாமே தவிர, இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணிக் கட்சி தலைவரே. அந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது.  

இனிமேல் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தவறாக அச்சிடப்பட்ட சில வார்த்தைகளை நீக்கி விடலாம். ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவின் உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் என ஏன் பொய் சொல்ல வேண்டும். உண்மை என்ன என்று இந்தியப் பிரதமர் தன் வாய் மொழியாகவே கூறிவிட்டார். பிரதமரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இனிமேல் அதையெல்லாம் மாற்றி எழுத் வேண்டும். இனிவரும் எதிர்கால இளைய சமுதாயத்தினர் பிரதமரைவிட அதிகாரமிக்க அந்தத் தலைவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?.  

பிரதமரை விட அதிகாரம் மிக்கவர் அவர் சார்ந்த கட்சியின் தலைவர் என்கிற பகிரங்க உண்மையை பிரகடனப்படுத்திய பிரதமர் உண்மையிலேயே தைரியம் மிக்கவர்தான் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. இந்திய அரசியலமைப்பில் இத்தகைய அதிகாரப் பகிர்வுகள் பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இல்லையா எனத் தெரியவில்லை. எனினும், நடைமுறையில் உள்ள உண்மைகளை புறக்கணித்துவிட முடியாது அல்லவா? பிரதமர் தனக்கிருக்கும் அதிகாரம் பற்றி தானே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தை பற்றி என்ன கவலை. இனிமேல் பிரதமரின் வாய்மொழி வார்த்தைகளையே ஒப்புக்​ கொள்ளலாம். நில் என்றால் நிற்கவும், உட்கார் என்றால் உட்காரவும், செல் என்றால் செல்லவும், தெரிந்தவர்கள் பிரதமராகக் கூடிய தகுதி படைத்தவர்கள் என்பதை இந்நாட்டு மக்கள் உணர வேண்டும். 

யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் தான் சில கருத்துக்களை கூறுவதற்கான உரிமையை மட்டும் ஏன்? தன்னகத்தே பிரதமர் வைத்துக் கொள்ள வேண்டும். ‌அதையும் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டால், நிம்மதியாகப் போய்விடுமே.  

ராசா மீண்டும் அமைச்சராக அனுமதிக்கப்பட்ட போது அவர் துளியும் தவறிழைக்காதவர் என்கிற உன்னதமான மனநிலையுடன், தான் இருந்ததாக பிரதமர் ஒத்துக் கொள்வாரா? நான் அப்போது நினைக்கவே இல்லை, ராசா தவறிழைத்திருப்பார் என்று, என பிரதமரால் தைரியமாக கூற முடியுமா? இரண்டாம் முறையும் ராசா அமைச்சராக்கப்படும் போது, தனக்கு அனைத்தும் தெரிந்தே இருந்தது என்கிற உண்மையை பிரதமர் ஒத்துக்கொண்டாலே தான் சீசரின் மனைவியைப் போல, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கூறிக் கொள்ளும் தகுதியைப் பெறுவார் பிரதமர். 

ஸ்பெக்ட்ரம் உட்பட எந்த பிரச்னைகள் குறித்தும் விளக்கமான பதில்களை அளிக்க தயாராக உள்ளேன்.

இந்த நகைச்சுவை சற்று கடினமானது தான் என்றாலும் யாரும் சிரிக்கக் கூடாது. ஜன்னலுக்கு (மர) சட்டம் என்று மற்றொரு பெயர் உண்டு. அதன் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்களா? என யாரும் கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் ஜாக்கிரதை. வாயில் விரல் வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்.   

இந்த வார்த்தைகளை கவனிக்கும்போது, கேஸ்ட் அவே என்கிற திரைப்படத்தில் வரும் டாம்ஹேங்ஸ் கதாபாத்திரம் போல பிரதமர் இவ்வளவு நாளும் ஏதேனும் ஒரு தீவில் மாட்டிக்கொண்டிருந்தாரோ என்கிற சந்தேகம் தான் வருகிறது. இவ்வளவு நாளும் சி.என்.என்., ​ஹெட்லைன்ஸ் டுடே, ‌‌டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. என ஒவ்வொரு ஆங்கில சானல்களிலும் ஸ்பெக்ட்ரம் விஷயத்தை பற்றி கிழித்து நாறடித்து, தோரணம் கட்டி தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிரதமரால் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் சொல்லிவிட முடியாது. நான் இதுவரை மௌண விரதம் பூண்டிருந்தேன் என்றும் சொன்னாலும் கேவலமாக இருக்கும். என்ன சொல்வது. நான் ஒரு தீவில் மாட்டிக்கொண்டேன். இப்பொழுதுதான் தப்பித்து வந்தேன் என்ற காதுகொடுத்தும் கேட்க முடியாத பொய்யை கூறினால் மிகக் கேவலமாக இருக்கும். வேறு என்னதான் சொல்வது. இதுநாள் வரை நாடே பற்றி எரிந்து கொண்டிருந்த வேலைகளில் எல்லாம் பதில்அளிக்காமல் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, இத்தனை வருடங்களுக்குப் பிறகு விளக்கமான பதில் அளிக்க நான் தயார் எனக் கூறுவது காதில் பூ சுற்றுவது என்பதை விட பூக்குவியலுக்குள் காதை நுழைப்பது என்று கூறுவது தான் சரியாகப் பொருந்தும்.  

ஏன் இப்பொழுது மட்டும் விளக்கம் அளிக்க முன்வர‍ வேண்டும். இப்பொழும் விளக்கமளிக்க முன்வரவில்லை என்றால். தனது நேர்மைக்கு பங்கம் வந்து விடுமோ என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம். இப்பொழுது ஒவ்வொரு கட்டுக்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள பார்க்கிறார். தான் தூய்மையாக இருந்ததாகவும், தன்னை சுற்றியிருந்தவர்கள் தான் நம்பியாரைப் போல் சதி வலைகளை பின்னிவிட்டார்கள் என்று நிரூபிக்கவும் முயல்வதாகக் கூட இருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஏதோ ஒன்று மோசமாக நடந்திருக்கிறது என்பதை சுற்றி வளைத்து ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர்.

கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராசாவுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராசாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. 

 ஏன் புறா மூலமாக தூது விட்டிருக்க ‍வேண்டியது தானே? நான் நம் நாட்டின் பழைய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காகத்தான் புறாத் தூது விட்டேன் என்றாவது கூறியிருக்கலாம். இத்தனை வருடத்தில் ஒரு கடிதம். ஒரே ஒரு கடிதம். நல்லவேலை அதற்கு பதில் வந்து விட்டது. இல்லையெனில் அவர் மனம் புண்பட்டிருக்கும். பதில் என்ற ஒன்று வந்துவிட்டதல்லவா? பின் எதற்காக மெனக்கெட வேண்டும் என நினைத்தோ என்னவோ? அது குறித்து 2011ம் ஆண்டு வரை கவலைப்படவே இல்லை. ஒன்று பின்னிருந்து இயக்குபவரை கையை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை தான் முழு பொறுப்பேற்றுக் கொண்டு அனைத்து விஷயங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். ஏன் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என பாதி என் பொறுப்பு, மீதிக்கு கட்சித் தலைவர் தான் பொறுப்பு என் பாகம் பிரிக்க வேண்டும். உண்மையில் கடிதம் எழுதியதன் மூலம் தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்திருந்த பிரதமர், நடைபெற்ற அத்துனை தவறுகளிலும் தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டுமல்லவா? இந்த நான்காண்டுகளில் நடைபெற்ற அத்தனை ஊழல்களிலும் தனக்கிருக்கும் பொறுப்பை நிரூபித்திருக்க வேண்டுமல்லவா? பிரதமர் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று நான் தான் பொறுப்பற்று இருந்தேன். அல்லது தான் பொறுப்புடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பிரதமருடையது.  

இந்தியாவின் 50 சதவீத பொருளாதாரம் வெறும் 50 தொழிலதிபர்கள் கையில் சிக்குண்டு கிடக்கிறது. அவர்கள் தான் அரசாங்கத்தை மறைமுகமாக நிர்மாணிப்பவர்களாக இருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் செயல்படும் போதைப்பொருள் மாஃப்பியா கும்பல் வருடக்கணக்கில் முயன்று சேர்க்கும் பணத்தை சில மாதங்களில் எளிதாக கொள்ளையடித்து விடும் அரசியல் வாதிகள் வேறு இங்கு உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். இதில் நூறு கோடியை தாண்டி விட்ட இந்தியாவில் பிச்சைக்காரர்களை ஒளிக்கும் திட்டங்கள் வேறு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகடியின் எல்லையிலேயே எப்பொழும் இந்தியர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.  

இன்றும் நகரங்களில் மாதம் 300 ரூபாய் என வங்கிகளிலோ, இன்சூரன்ஸ் திட்டங்களிலே சேர்த்து வருகிறார்கள் பாமர மக்கள். 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்றரை லட்சமோ, 2 லட்சமோ கிடைக்கும் என்கிற நற்பாசையில் அவர்கள் இந்த சேமிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். பணவீக்கம் இப்படியே செல்லுமானால், 20 வருடங்களுக்குப் பின் 2 லட்சம் என்பது இப்பொழுதைய 2 ஆயிரம் ரூபாய்க்கு சமமாகி விடும் என்பது நிச்சயம். பின் இப்பொழுது உயிரைக் கொடுத்து சேமித்து வருபவன் 20 வருடங்கள் கழித்து முட்டாளாக்கப்படுவான் என்பது தின்னம். அவர்களுடைய சேமிப்பு அவர்களுக்கு உதவப் போவதில்லை. 2020ல் ஒரு பவுன் விலை லட்சத்தை தாண்டி விடும் என இப்பொழுதே கணிக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் 20 வருடம் கழித்து நிலைமைய என்னவென்று சொல்வது. மூன்றாம் உலகப் போர் என்பது பொருளாதார வீழ்ச்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பதை எத்தனை பேர் உணரப் போகிறார்கள். நாளையை கருத்தில் கொண்டு இன்றே தனது சந்ததியை முடித்துக் கொள்பவன் புத்திசாலியாக இருக்கப் போகிறான் என்பது மட்டுமே உண்மையாகப் போகிறது.

Pin It