இன்று
உன்
நினைவு நாள்...

ஆதிக்கப் போக்கை
அறுத்திடும் பணியில்
அண்ணலே உன்னை
நினைத்திடும் பொன்னாள்...

தாழ்த்தப்பட்ட
தலைவர்கள் பலருக்கும்
புனைவு நாளானது
இந்நாள்...

யானையைத் தழுவிய
குருடர்களாய்
உன்னைத் தழுவிடும்
கொள்கையிலிகள்...

அரசியல் அதிகாரம்
பெற்றிடச் சொன்னாய்... நீ...
இதோ...
ஆண்டைக் கட்சிகளிடம்
அடிசரிந்து கொண்டே
அதிகாரம் பெற்றதாய்
ஆர்ப்பரிக்கின்றனர்...

இழிவுபடுத்திய
இந்து மதத்தினைக்
கனலின் நெஞ்சொடு
காறித் துப்பினாய்... நீ...
ஆனால்..

உன் அறிவு படாத
உன் வழிமுறைகளோ
இந்து மதத்தின்
தொந்திக் கடவுள் முதல்
மந்திக் கடவுள் வரை
தூக்கி நடந்திடும்
தாங்கிகளாயினர்...

பொருளியல் உரிமைக்குப்
போரிடச் சொன்னாய்...
உன் மரபு மக்களோ...
அடியாள் கொண்டு
அரம்பத்தனத்தால்
நெடிய வரிசையில்
குடிவெறி நெடியொடு
வண்டிகளில் அடைந்து
வலம் வந்து சுழன்று
பொழுதுகள் கழிக்கும்
போக்கிலிகளாயினர்.

அண்ணலே
உனக்கு
நினைவுநாள்...

மலைகளாய்
உன்
சிலைகளுக்கு
மாலைகள்...
ஆனால்...
உன் எழுத்துகளில்
உயிர்க்கும்
புரட்சிப் பூக்களோ
இன்னும் சிலைகளாய்...

Pin It