இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மையக் குழுவின் அறிக்கை, ஆகஸ்டு 21, 2015

தோழர்களே,

நாட்டின் எல்லா மத்திய தொழிற் சங்கங்களும் கூட்டமைப்புக்களும் கூட்டாக செப் 2, 2015 அன்று அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென அறைகூவல் விடுத்திருக்கின்றன. தொழிலாளர்களும், உழவர்களும் தங்களுடைய வாழ்வாதாரம் மீதும், உரிமைகள் மீதும் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்குதல்களைச் சந்தித்து வருகின்ற வேளையில் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பொது வேலை நிறுத்தமானது, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக உழைக்கும் பெரும்பான்மையான மக்களுடைய எதிர்ப்பின் ஒரு அடையாளமாகும். (பெட்டியைப் பார்க்கவும்)

பொது வேலை நிறுத்தத்திற்கும், தொழிலாளி வகுப்பினருடைய வளர்ந்துவரும் ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் முழு ஆதரவளிக்குமாறு நாட்டின் எல்லாத் தொழிலாளர்களையும், உழவர்களையும், பெண்களையும் இளைஞர்களையும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மூலதனத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள்

உலக முதலாளிகளை இங்கு முதலீடு செய்து இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு அழைப்பதன் மூலம், தன்னுடைய அரசாங்கம் "வறுமைக்கு எதிராகப் போர்" நடத்தி வருவதாக ஆகஸ்டு 15, 2015 அன்று நாட்டிற்கு செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் மோடி அறிவித்தார். தொழிலாளர்கள் தொடர்பான 44 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக ஆக்க அவரது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் அறிவித்தார். 44 சட்டங்களுக்கு பதிலாக 4 சட்டங்களைப் புரிந்து கொள்வது தொழிலாளர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இது தொழிலாளி வகுப்பினருக்குப் பயன்படும் என்று அவர் கூறினார்.

பிரதமர்கள் கூறுவதை நம்பக் கூடாதென தொழிலாளி வகுப்பினருக்கு வாழ்க்கை அனுபவம் கற்றுத் தந்திருக்கிறது. அவர்கள் பொதுவாக கூறுவது ஒன்று, செய்வதோ அதற்கு நேரெதிராக இருக்கிறது.

மோடி அரசாங்கம் கொண்டுவரும் தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள், தங்கள் விருப்பம் போல தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதையும், தூக்கியெறிவதையும் எளிதாக்க வேண்டுமென்ற இந்திய மற்றும் அன்னிய முதலாளிகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்டுள்ளது. வேலை நேரத்தை நீடிப்பதன் மூலமும், மேலும் மேலும் அதிக அளவில் தற்காலிகத் தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் வேலைக்கு வைப்பதன் மூலமும், தொழிலாளர்கள் தங்களுக்கென போராட்ட சங்கங்களை அமைப்பதை மேலும் கடினமாக்குவதன் மூலமும் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதை எளிதாக ஆக்கும் நோக்கம் கொண்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், பல்லாண்டு காலமாகப் போராடி, தியாகங்கள் செய்து பெற்ற அடிப்படை உரிமைகளை தொழிலாளர்களுக்கு மறுக்கும் நோக்கத்தை அதிகாரபூர்வமான சீர்திருத்தத் திட்டம் கொண்டிருக்கிறது. (தொழிற் சட்ட சீர்திருத்தங்களுடைய தொழிலாளர் விரோத திட்டம் - பெட்டியைப் பார்க்கவும்)

"எங்களுடைய திறமை வாய்ந்த மலிவான தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்ட வாருங்கள்! இந்தியாவில் அதிக இலாபம் பெறுங்கள்!" என்று கூறி, உலக முதலாளிகளுக்கு நமது நாட்டின் இளம் தொழிலாளி வகுப்பினர் கொடுக்கப்படுகின்றனர்.

தில்லியில் உள்ள மத்திய அரசை பாஜக, காங்கிரசு அல்லது மூன்றாவது முன்னணி ஆட்சி செய்தாலும், பொருளாதாரம் மற்றும் நமது சமுதாயத்தின் போக்கு மூலதனத்தை மையமாகவே கொண்டிருக்கிறது. அது ஏகபோக முதலாளித்துவ குழுக்களின் நலன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதலாளி வகுப்பினரின் பேச்சாளர்கள், புதிய புதிய முழக்கங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால் உண்மையோ சுரண்டலும், கொள்ளையும் மேலும் மேலும் தீவிரமடைந்து பொறுக்க முடியாததாகி வருகின்றன.

இந்திரா காந்தியின் கீழ் "வறுமையை விரட்டுவோம்", இராஜீவ் காந்தியின் கீழ் "நவீன திறமை வாய்ந்த இந்தியா", வாஜ்பாயின் கீழ் "ஒளிரும் இந்தியா", மன்மோகன் சிங்கின் கீழ் "ஒரு மனித நேயத்தோடு கூடிய சீர்திருத்தங்கள்" என்பதையெல்லாம் நாம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது மோடியின் கீழ், "நல்ல நேரம்", "அனைவரோடும், அனைவரின் வளர்ச்சிக்கும்", "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்", தற்போது "இந்தியாவே துவங்கு, இந்தியாவே நிமிர்ந்து நில்" என்பன உட்பட புதிய முழக்கங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டு வரப்படுகின்றன. 

இந்தியாவிலும், உலக அளவிலும் வறுமை விரைவாகப் பெருகி வருவதற்கான அடிப்படை இந்த முதலாளித்துவ அமைப்பில் இருக்கிறது. சோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடர்ந்து, உழைப்பாளர்களுக்கு எதிராகவும், தேசங்களுடைய இறையாண்மைக்கு எதிராகவும், உலக அமைதிக்கு எதிராகவும் ஏகாதிபத்தியமும், முதலாளி வர்க்கமும் உலக அளவில் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதில் இதற்கான அடிப்படை இருக்கிறது. தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கலின் விளைவாக நமது நாட்டில் வறுமை முன்னைக் காட்டிலும் பல மடங்கு பெருகியிருக்கிறது. மூலதனத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரப் போக்கிற்கு முடிவு கட்டுவதற்காகப் போராடுவதால் மட்டுமே, சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியும்.

தனியார்மயம் மற்றும் முதலீட்டை தனியாரிடம் விற்பது என்ற பெயரில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள், மதிப்பு மிக்க பொதுச் சொத்துக்களை தனிப்பட்ட முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். கல்வி, சுகாதாரம், மருத்துவம், தண்ணீர், மின் வழங்கல், மற்றும் பிற அத்தியாவசிய அடிப்படைச் சேவைகள், தனியாரின் இலாப வேட்டைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. பொதுத் துறை - தனியார் பங்கேற்பு என்ற பெயரில், இலாபங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடைய பைகளுக்கும், இழப்புக்களும் கடன்களும் பொதுக் கணக்கில், அதாவது பொது மக்களுடைய முதுகிலும் ஏற்றி வைக்கப்படுகின்றன.

தாராளமயப்படுத்துவது என்ற பெயரில், பூதாகரமான உலக வணிக நிறுவனங்கள் அவர்களுடைய மேலாதிக்கத்தை வேளாண்மை வணிகத்தில் விரிவுபடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய உடும்புப் பிடியை நம்முடைய உழவர்கள் மீது இறுக்கியுள்ளனர். மேலும் மேலும் பல பொருளாதாரத் துறைகளில் அன்னிய முதலாளித்துவ ஏகபோகங்கள் ஊடுறுவுவதற்காக தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. இதில் இப்போது பாதுகாப்புத் துறை உற்பத்தி, இரயில்வே, வங்கி மற்றும் காப்பீடு போன்ற முக்கிய துறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

பொருளாதார சீர்திருத்தம் என்றழைக்கப்படும் இந்தத் திட்டங்களை, முந்தைய அரசாங்கம் விட்ட இடத்திலிருந்து, தற்போதைய அரசாங்கம் மேற் கொண்டு எடுத்துச் செல்கிறது.

"இந்திய அணி" என்றழைக்கப்படும் 125 கோடி மக்களைக் கொண்ட ஒரு அணிக்கு தான் தலைமை வகித்துக் கொண்டு செல்வது போல பிரதமர் மோடி பேசுகிறார். உண்மையோ, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்திய அணி என்பது இந்த நாட்டினுடைய மிகப் பெரிய முதலாளிகள் அன்றி வேறு யாருமில்லை. இந்திய மற்றும் அன்னிய ஏகபோக முதலாளிகளுடைய இலாபத்தைக் கூட்டுவதை உறுதி செய்வதற்காகவே இந்த முழு சீர்திருத்த திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. பெரு முதலாளிகள் தீர்மானித்திருக்கும் இந்தத் திட்டத்தை, எடுத்துக் கொண்டு சென்று அதை மக்களிடம் விற்பதற்காக மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகப் பெரிய ஏகபோக குடும்பங்களுடைய உலக ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவு செய்வதற்காக இத் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக போட்டி போடும் ஏகபோகங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுடைய வெறிபிடித்த நலன்களுக்கான வேட்டைக் காடாக நாடு மாற்றப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கே எதிரானதாகும். இது தொழிலாளர்கள், உழவர்கள், மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய நலன்களுக்கு முழுவதும் எதிரானதாகும். இது இயற்கைச் சூழலை அழிப்பதாகவும், சமுதாயத்தின் பொது நலன்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.

தொழிலாளி வகுப்பினரின் திட்டம்

மூலதனத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு பதிலாக, மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளி வகுப்பு போராடுகிறது. முதலாளித்துவ இலாபத்தை அதிகரிப்பதற்காக பொருளாதாரமும், அரசாங்கக் கொள்கையும் செயல்படுவதற்கு பதிலாக, அவை பொருளாதார மற்றும் பண்பாட்டு மனிதத் தேவைகளை அதிகபட்சமாக நிறைவேற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது நாடும், உழைப்பும் கொள்ளையடிக்கப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும். மனித மற்றும் பொருளாதார உற்பத்தி சக்திகளிலிருந்து வெளியே எடுக்கப்படுவதற்கும் அதிகமாக, அவற்றில் முதலீடு செய்யப்பட வேண்டும். சமூக உற்பத்திக் கருவிகள், ஒரு சிறுபான்மையினருடைய தனிப்பட்ட சொத்துக்களாக இருப்பதிலிருந்து, எல்லா மக்களுடைய சமூகச் சொத்தாக மாற்றப்பட வேண்டும். வேளாண்மை நிலங்கள், உழவர்கள் மற்றும் பிற உற்பத்தி குழுக்களுடைய கூட்டுச் சொத்தாக இருக்க வேண்டும்.

தொழிலாளி வகுப்பின் உடனடித் திட்டத்தில், ஒரு நவீன பொது வினியோக அமைப்பை உருவாக்குவதும் அடங்கும். இது அடிப்படையான நுகர் பொருட்களின் தேவைகளைக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் அனைவருக்கும் கிடைப்பதற்கான உத்திரவாதத்தை உறுதி செய்யும். வேளாண்மைக்கான இடுபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், எல்லா வேளாண்மை விளை பொருட்களையும் நிலையான இலாபகரமான விலைகளில் அரசே வாங்கும் என்ற உத்திரவாதத்தின் மூலமும், எல்லா உழவர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதன் பின்னர், தனிப்பட்ட ஏகபோகங்களுடைய உடும்புப் பிடியிலிருந்து உழவர்கள் விடுபெறவும், நகர்ப் புறங்களில் உள்ள உழைக்கும் மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலைகளில் உணவை உறுதி செய்யவும் முடியும். ஒரு நவீன பொது வினியோக அமைப்பு முறை வெற்றி பெறுவதை உறுதி செய்ய, அன்னிய வணிகம், உள்நாட்டு மொத்த வணிகம், பெரிய அளவில் நடைபெறும் சில்லறை வணிகம், வங்கிகள் மற்றும் காப்பீட்டை தேசியமயமாக்குவதும், அவற்றை சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் இன்றியமையாத அவசியமான நடவடிக்கைகளாகும்.

கல்வியும், மருத்துவ வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். வேலை செய்யத் தகுதியான அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் தரப்பட வேண்டும்.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தை பாஜக-வோ, காங்கிரசு கட்சியோ நடைமுறைப்படுத்த மாட்டார்கள். மூலதனத்தை மையமாகக் கொண்ட போக்கிற்கு முடிவு கட்டுவதற்கான ஆர்வமும், திறமையும் உழவர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவுகள் உட்பட்ட தொழிலாளி வகுப்பினரால் வழி நடத்தப்படும் அரசியல் முன்னணிக்கு மட்டுமே உண்டு.

இன்றுள்ள பிரதிநிதித்துவ சனநாயக அமைப்பு, உழைக்கும் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இந்த அமைப்பில், ஏகபோக முதலாளிகளைத் தலைமையாகக் கொண்ட ஒரு சிறுபான்மையான சுரண்டலதிபர்கள் வாக்குச் சீட்டுகள் மூலமும், தோட்டாக்கள் மூலமும் தன்னுடைய விருப்பத்தை முழு சமுதாயத்தின் மீதும் திணிக்கின்றனர். மக்களைப் பிளவுபடுத்தி வைப்பதற்கும், அவர்களுடைய எதிர்ப்புப் போராட்டங்களை இரத்தத்தில் மூழ்கடிக்கவும் அரசு பயங்கரவாதம், வகுப்புவாத, குறுங்குழுவாத வன்முறை மற்றும் பிற பாசிச முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பணபலம் கொண்ட கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் தொழிலாளர்களும், உழவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தவும், மிகப் பெரிய பணக்கார முதலாளிகளின் ஆதரவு பெற்றுள்ள ஏதாவதொரு கட்சியின் கைகளில் தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டு சேர்க்கவும் முழு அரசியல் வழிமுறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் ஒரு கட்சியை மாற்றி வேறொன்றினைக் கொண்டு வருவதால் தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் எந்தப் பயனும் இல்லையென வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது. தலைமையில் இருக்கும் ஒரு கட்சியை மாற்றுவது மட்டுமே போதுமானதல்ல. இந்த அமைப்பையே நாம் மாற்ற வேண்டும். அரசு மற்றும் அரசியல் வழி முறையின் தன்மையில் ஒரு மாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும்.

முதலாளித்துவ பேராசையை நிறைவு செய்வதற்கு பதிலாக, மக்களையும், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளையும், மீற முடியாத உரிமைகளையும் மையப்படுத்தும் ஒரு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முழுவதுமாக ஒரு மாற்று அமைப்பிற்காக நாம் போராட வேண்டும். இறையாண்மையை பாராளுமன்றத்திலோ, குடியரசுத் தலைவரிடமோ, அமைச்சர் குழுவிடமோ அல்லாமல், மக்களிடம் ஒப்படைக்கக் கூடிய ஒரு அரசியல் சட்டம் நமக்குத் தேவை. பின்வரும் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை.1. சமுதாயத்தின் பாதையைத் தீர்மானிக்கின்ற அதிகாரமான இறையாண்மையானது மக்களுக்கு உரியது, 2. சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடைய வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்ற கடமையும், அவர்களுடைய உரிமைகள் எப்போதும் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்ற கடமையும் அரசுக்கு இருக்க வேண்டும்.

வயது வந்த ஒவ்வொரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும், எந்தத் தேர்தலுக்கும் முன்னர் வேட்பாளர்களைத் தீர்மானப்பதில் ஒரு பங்காற்றவும், ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை எப்போது வேண்டுமானாலும் திருப்பியழைக்கவும், சட்ட முன்வரைவுகளை முன்வைக்கவும், முக்கிய கொள்கை முடிவுகளை வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கவும் உரிமையளிக்கும் ஒரு அரசியல் சட்டத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசு மட்டுமே தேர்தல் வழிமுறைக்கு நிதியளிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சிக்கும் அரசு நிதியுதவி செய்யக் கூடாது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்

செப் 2, பொது வேலை நிறுத்தத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கானத் தயாரிப்புகளில் நாம் ஈடுபட்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய மனதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்கின்ற கேள்வி எழுகிறது.

தற்போதைய மற்றும் இப்படிப்பட்ட பெருந்திரள் நடவடிக்கைகளின் வெற்றியானது, கட்சி, சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளிகளின் வகுப்பு ஒற்றுமையைக் கட்டுவதற்கான முயற்சிகளின் விளைவாகும். இப்படிப்பட்ட செயல் ரீதியான ஒற்றுமையானது, ஒவ்வொரு ஆலையிலும், தொழில் அல்லது துறை மட்டத்திலும் கட்டப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, முழு தொழிற்பேட்டைப் பகுதியிலும், முழு நகரங்களிலும், மாநிலங்களிலும், நாடெங்கிலும் தொழிலாளர்களிடையே செயல் அடிப்படையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவது நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் தொழிலாளர்களிடையே அரசியல் விவாதங்களை மேற்கொள்வதற்கான ஒரு பெரிய தேவை இருக்கிறது. ஒவ்வொரு மட்டத்திலும், தொழிலாளர்களாக நம்மை எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளையும், நமது வகுப்பின் திட்டம் குறித்தும் நம்மிடையே விவாதிப்பதற்கான வழி முறைகளை நாம் நிறுவ வேண்டும்.

தொழிலாளர்களுடைய உரிமைகளை வரையறுக்கும் சட்டங்கள் குறித்த கேள்வியானது மிகவும் முக்கியமானதாகும். 44 சட்டங்கள் இருக்கின்றனவா அல்லது 4 இருக்கின்றனவா என்பதல்ல பிரச்சனை. மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கும், வாழ்க்கை நடத்துவதற்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்று வாழ வேண்டியுள்ள அனைவருடைய உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரே ஒரு சட்டம் இருந்தாலே அதன் மூலம் தொழிலாளி வகுப்பு அதிகபட்ச பயன் பெற முடியும். எவ்வித விதிவிலக்குமின்றி, எல்லாக் கூலி மற்றும் சம்பளத் தொழிலாளர்களுடைய உரிமைகளை வரையறுக்கும் ஒரு தொழிற் சட்டத்தை உருவாக்குவதற்காக எல்லா தொழிலாளர்களுடைய அமைப்புக்களும் தீவிர விவாதங்களில் ஈடுபட வேண்டிய ஒரு உடனடித் தேவை இருக்கிறது.

வகுப்புவாத வன்முறைகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவது எப்படி என்பது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்.

சிறுபான்மையாக இருக்கும் சுரண்டல்காரர்கள் அல்ல, மக்களே முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்கு இந்த பிரதிநிதித்துவ சனநாயக அமைப்பிலும், அரசியல் வழிமுறையிலும் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் தொழிலாளர்களுடைய ஒற்றுமை பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். உள்ளூர், மாநில மட்டும் பாராளுமன்றத் தேர்தல்களில் தொழிலாளி வகுப்பின் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு நாம் தயாரிக்க வேண்டும். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த வேட்பாளர்கள், கட்சி. சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் நம்முடைய வகுப்பைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், நமக்கென ஒரு தனிப்பட்ட திட்டத்தோடு ஐக்கியமான ஒரு அரசியல் சக்தியாக நாம் எழ வேண்டும். இந்தத் திட்டமானது, இந்தியாவின் சனநாயக மறுமலர்ச்சிக்கான தொழிலாளி வகுப்பின் திட்டமாக இருக்க வேண்டும். இதையொட்டி எல்லா சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

முன்னேற்றத்திற்கும் வளமைக்குமான பாதையில் நமது 125 கோடி மக்களைக் கொண்டு செல்ல நம்முடைய தயாரிப்புக்களை நாம் தீவிரப்படுத்துவோம்!

தொழிலாளர், உழவர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் - நாமே இந்தியா, நாமே இதன் மன்னர்கள்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!

தொழிலாளர்களின் உடனடிக் கோரிக்கைகள்

விலைவாசியைக் குறைத்துக் கட்டுப்படுத்துதல்

தேசிய அளவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 15,000.

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற் சட்டத் திருத்தங்களைத் தடுத்து நிறுத்து. இன்றுள்ள தொழிற் சட்டங்களை நடைமுறைப்படுத்து

ஒப்பந்தத் தொழில் முறை, வெளியே வேலையை அனுப்புவது, தொழிலாளர்களை தினக்கூலியாக வேலைக்கு வைப்பது ஆகியவற்றிற்கு முடிவு கட்டுதல்

எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்

சம வேலைக்கு சமமான ஊதியம்

வேளாண்மை, பிற அமைப்பு சாரார் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு

தனியார்மயத்தை நிறுத்தி அதைப் பின்வாங்கச் செய்தல்

சாலைப் போக்குவரத்து, பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெறுதல்

அங்கன்வாடி, ஆஷா போன்ற திட்டத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல்

பாதுகாப்பு, இரயில்வே, வங்கி, சில்லரை வணிகம் ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அகற்று

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெறுதல் 

தொழிற் சட்டச் சீர்திருத்தங்களின் தொழிலாளர் விரோதம்

தாங்கள் விரும்பும் சங்கத்தை அமைக்க தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்.

ஒப்பந்தத் தொழில் முறை விரிவுபடுத்தப்படுகிறது. 50-க்கும் குறைவான தொழிலாளர்களை வைத்திருக்கும் ஒரு ஒப்பந்ததாரர் எந்த தொழிற் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தத் தேவையில்லை.

40-க்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் ஆலைகள் மற்றும் சேவைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. அவர்களுடைய வேலை நிலைமைகளைப் பற்றி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது.

பயிற்சித் தொழிலாளர்கள் (அப்ரன்டிஸ்) சட்டத்தின் கீழ், எந்த நிறுவனமும் அவர்கள் வேலைக்கு எடுக்கும் இளம் தொழிலாளர்களை பயிற்சித் தொழிலாளர்களென பெயரிட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது என்ற பெயரில் எவ்வித உரிமைகளும், வேலைக்கு உத்திரவாதமும் இன்றி கடுமையாகச் சுரண்டமுடியும்.

இந்த பயிற்சித் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியச் சட்டமோ, விடுமுறைகளோ, வேலை நாளுக்கான வரையறையோ கூட கிடையாது.

நிறுவனங்கள், தம் விருப்பம் போல தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கியெறிவதையும், ஆலைகளை மூடுவதையும், வேறு இடங்களுக்கு மாற்றுவதையும் சட்டத் திருத்தங்கள் எளிதாக்குகின்றன.

இந்த புதிய சட்டங்களின் படி, பெண்களை இரவு நேரப் பணிக்காக வேலைக்கு வைக்க முடியும்.

Pin It