கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான்

கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னர்தான்

கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான்

பணத்தைச் சாப்பிட முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்!”

parithi bookஎன நூறாண்டுகளுக்கு முன்பே எச்சரித்த செவ்விந்தியர்களின் மேற்கோள் போதும், அறிவுள்ள எவரும் தாம் எதிர்கொள்ளும் ஆபத்தை புரிந்துகொள்ள.

நாம் ஒவ்வொரு நூறு அடிகளை கடப்பதற்குள்ளும் ஒரு பிச்சைக்காரரை சந்திக்க நேரிடுகிறது. வயதானவர், கைக்குழந்தையுடன் தாய்மார்கள், சிறுவர், சிறுமியர் என அவர்களை காண நேரும்போதெல்லாம் மனது குற்ற உணர்ச்சியில் குறுகுறுக்கிறது.

அவர்களுக்கு உதவணும், அவர்கள் உழைத்துப் பிழைக்கணும் என்கிற விவாதத்திற்குள் நுழையாமல் பட்டினிப் புரட்சி சொல்லும் ஒரு விவரத்தைப் பார்ப்போம்.

உலகில் 740 கோடி மக்கள் உள்ளனர். அதேநேரத்தில் 1400 கோடி பேருக்கான (இருக்கிற மக்கள் தொகையை விட கூடுதல் ஒரு மடங்கு அதிகம் பேருக்கு) உணவு உற்பத்தியாகிறது.

ஆனாலும், 90 கோடி பேர் பட்டினியிலும் 100 கோடி பேர் சத்து குறைவாலும் வாடுகின்றனர் என்றும்; ஆண்டிற்கு சராசரியாக 31 இலட்சம் குழந்தைகள் சத்து பற்றாக்குறையால் இறக்கின்றனர் என்றும்; இதே உலகத்தில்தான் அதிக சத்தின் காரணமாக கொழுத்து வளருகிற 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 4 கோடி பேர் உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்களால் நம்மை மிரள வைக்கிறது நூல்.

அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகியும் ஏன் இப்படி?

உற்பத்திக்கும் பகிர்ந்தளித்தலுக்குமான முரண்பாட்டை அவ்வளவு துல்லியமாக நூல் பேசுகிறது. ஊர்திகளுக்கான எண்ணெய் தயாரிப்பிற்கும் கால்நடைகளுக்க்கான உணவிற்கும் மட்டுமே 38% உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுகிறது.

நூறாண்டிற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மக்கள் தொகை 4 மடங்குதான் அதிகரித்துள்ளது. ஆனால் கார்களின் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. வசதி படைத்தோருடைய அளவுக்கு அதிகமான நுகர்வுக்கும் அவர்களுடைய ஆடம்பரத்திற்கும்தான் உணவு உட்பட அனைத்துமே வீணடிக்கப்படுகிறது.

மின்சாரம் கூட அப்படித்தான். இந்தியாவில் கிட்டதட்ட 320 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும், இன்னும் 18,000 கிராமங்கள் மின்சாரத்தை பார்க்கவேயில்லை.

ஏன் இப்படி?

மொத்த மின் உற்பத்தியில் வீடுகளுக்கான பயன்பாடு ஏறத்தாழ 18 %தான். அதிலும் முக்கால்பாக பயன்பாடு வசதிபடைத்தவர்களின் வீட்டிற்கு என்பது சொல்ல வேண்டியதில்லையே! விவசாயத்திற்கான பயன்பாடு கிட்டத்தட்ட 20%. இதுவும் பெரும் நிலவுடைமையாளர்களுக்குதான் அதிகம் சேரும். இதுபோக மீதியில் பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளுக்கு அதிகபட்சம் பயன்படுத்தப் படுகிறது.

இதில் வசதிபடைத்தவர்களின் வீடுகள் மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள், மால்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் என ஆடம்பர விளக்குகளுக்கும் குளிசாதனப் பயன்பாட்டிற்கும் ஆகிற மின் செலவுதான் அதிகம்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியபோது கோவை ஈஷா மையத்திற்கு தடையில்லா மின்சாரம் அதுவும் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டிருந்தது.

ஆக, எல்லாமே இருக்கிறது. ஆனால் எல்லோருக்குமானதாக இல்லை. பகிர்ந்தளித்தல்தான் பிரச்சினை என நூல் முழுவதும் காண கிடைக்கிற புள்ளி விவரங்கள், தரவுகள், ஆதாரங்கள் அனைத்தும் நம்மை கலங்கடிக்கின்றன. உற்பத்தியாகும் உணவுதானியத்தில் 33% எலிகள் தின்னும் அழுகியும் வீணாகும்போது போதிய உணவில்லாமல், சத்தில்லாமல் ஆண்டிற்கு 31 இலட்சம் குழந்தைகள் செத்துபோகின்றனர் என்பது எவ்வளவு கொடூரமானது?

உலகை முதலாளிகள் அழிவிற்கு இட்டுச்செல்கிறார்கள்!

இந்த அபாயத்தை நூல் ஒவ்வொரு பக்கத்திலும் உணர்த்துகிறது.

முதலாளித்துவம் எப்போதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற கட்டமைப்புதான் என்று இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். அதனால்தான் ‘உலகமயம் தவிர்க்க முடியாதது; தாராளமயம் தவிர்க்க முடியாதது; தனியார்மயம் தவிர்க்க முடியாதது’ என சட்டையை மடித்து விட்டுக்கொண்டு மல்லுக்கு நின்றனர். ‘நாங்கள் எல்லாவற்றையும் இழந்தாலும் கல்வியினால் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று பெருநகரங்களில் ஒரு சொர்க்கத்தை கண்டடைவோம்’ என்று கச்சைக்கட்டி ஆடினர்.

ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற முதலாளித்துவம் அநேகமாக 1970-களிலேயே காலாவதியாயிற்று. அதன் பின்பான முதலாளித்துவ கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பமேயாகும். ஆனாலும் தகவல் தொழில்நுட்பம் என்கிற கவர்ச்சிகரமான கண்டுபிடிப்பால் முதலாளித்துவம் சொர்க்கத்தையே உருவாக்கும் தேவதூதனாக காட்டிக்கொண்டது.

1990 சோவியத் யூனியன் தகர்விற்குப் பின் முதலாளித்துவம் அனைத்து அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டது. அது வெறிபிடித்த நுகர்வுப் பொருளாதாரத்தை ஊக்குவித்தது. அதற்காக இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதையே முதன்மையானதாக மாற்றியது.

இதன் விளைவுதான் இன்று உலகெங்கும் உள்ள எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட அனைத்து கனிமங்களையும் அடைவதற்கான முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதனால் உலகமே மாபெரும் ரியல் எஸ்டேட் பிசினஸை எதிர்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு 2000 – 2010-ற்குள் 20 கோடியே 30 இலட்ச ஹெக்டேர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 10 கோடியே 60 இலட்சம் அளவிலான நிலம் இந்தியா மாதிரியான வளரும் நாடுகளில்தான் வாங்கப்பட்டுள்ளன.

இந்த நிலங்கள் அனைத்தும் இயற்கை வளங்கள் நிறைந்தவை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இரண்டு வகையில்தான் முதலாளிகள் முதலீடு செய்கிறார்கள்.

  • ஏற்கனவே அரசுடமையாக இருப்பவை அனைத்தையும் தனியார் மயமாக்கலுக்கான முதலீடு.
  • இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கான முதலீடு.

இந்த இரண்டின் தேவையையொட்டி சாலைகள், பாலங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து மரணத்தின் பிடியில் தள்ளுவதேயாகும்.

தனியார்மயம் வேலையிழப்பை உருவாக்குவதாகும். இந்தியாவில் 2012 – 2013-இல் மட்டும் 4 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதென்பது விவசாயிகள் மற்றும் பழங்குடியினங்களை அவர்களின் நிலங்களை விட்டு விரட்டியடிப்பதாகும். 2007 – 2008 கணக்கின்படி மட்டும் இந்தியாவில் 43 இலட்ச மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்துள்ளனர்.

இதைத்தான் வளர்ச்சியென்றும் தொழில்நுட்பப் புரட்சி என்றும் ஆளும்வர்க்கம் கூச்சலிடுகிறது. ஆனால் இது மக்களை மேலும் வறுமையின் பிடிக்குள் தள்ள

ஆளும்வர்க்கம் மேற்கொள்ளும் பட்டினிப் புரட்சி என்கிறார் நூலாசிரியர்.

உலகமயமாக்கலும் இந்திய நெருக்கடியும்!

ஜி‌எஸ்‌டி வரி விதிப்பால் இந்திய மக்கள் கடுமையான துன்பத்தை அடைந்திருக்கிறார்கள். நாட்டின் நனமை கருதி இதை ஏற்றுக்கொள்வதாக வைப்போம். இதனால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்து விடுமா?

ஒரு நாட்டிற்கு வரியால் என்ன பயன்?

அதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதற்கான நிர்வாகத்தை நடத்த முடியும்.

இப்போது மக்கள் நலத்திட்டங்கள் நீடிக்கிறதா?

இதோ ரேஷன் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டாயிற்று.

ஏன்?

நிதி சிக்கனம்.

நிதியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நெருக்கடி எப்படி ஏற்பட்டது?

வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெரும் மூலதனத்தாலும் அதன் தொழில்களாலும் அரசிற்கு வருமானம் எதுவும் இல்லை. அரசுதான் அவர்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகை, வரி விலக்கு என அரசு அள்ளி கொடுக்கிறது.

உள்நாட்டு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, மானியம் என்கிற பேரில் அள்ளி வழங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் பெரும் பணக்காரர்களுக்கு அரசு வழங்கிய சலுகை 42 இலட்சம் கோடி ரூபாய். அதேபோல் 2004 முதல் 2015  வரை வாராக்கடனாக தள்ளுபடி செய்து பெரும்நிறுவனங்களின் கல்லாவில் போட்ட தொகை 2 இலட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்கள். 2016 கணக்கின்படி 50 பெரும்நிறுவனங்கள் இன்னமும் 5 இலட்சம் கோடி கடன் வைத்துள்ளன. அதில் முன்னணியான 14 நிறுவனங்கள் மட்டும் 4 இலட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளன.

இப்படி வருமானம் இல்லாத அரசு கடைபிடிக்கும் சிக்கனம் என்ன?

கல்வி, உணவு, குடிநீர் வழங்கல், மருத்துவம், பொது தூய்மை காத்தல், வேளாண்மை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அடிப்படை கடமைகளில் இருந்து விலகிக்கொள்வது.

அப்புறம் அரசு என்ன செய்யும்?

கட்டமைப்பை சீரமைக்கும். அதாவது சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணைகள் போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்.

இதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கும்?

உலக வங்கி முதல் கந்துவட்டிக்காரன் அனைவரிடமும் கடன் வாங்கும். 2016 மார்ச் 13 நிலவரப்படி இந்தியாவின் மொத்த (உள்நாட்டு, வெளிநாட்டு) கடன் 55 இலட்சத்து 60 ஆயிரத்து 775 கோடி ரூபாய். ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் 43,000 ரூபாய். இதன் வட்டி ஓராண்டிற்கு 3 இலட்சத்து 64 ஆயிரத்து 301 கோடியே 73 இலட்சத்து 24 ஆயிரத்து 969 (3,64,301,73,24,969) ரூபாய்.

இந்த விசச்சுழலில் இருந்து இந்தியா தப்பிக்க முடியாது. உலக மற்றும் உள்நாட்டு மூலதனத்தை நம்பியே வாழ்ந்தாக வேண்டும்; அதற்கு சலுகைகளை அள்ளி வழங்கியாக வேண்டும்; உலக வங்கியிடம் மேலும் மேலும் கடன் வாங்கியாக வேண்டும்; அரசு நிர்வாகத்திற்கு மக்களை வரிகள் மேல் வரிகள் போட்டு சாகடிக்க வேண்டும்.

மாநில அரசுகள் சாராயம் விற்க வேண்டும். இன்னும் நெருக்கடி அதிகரித்தால் விபச்சார விடுதிகள் நடத்த வேண்டும். தமிழக அரசின் 2014 – 2015 ஆண்டு வருமானத்தில் மதுவால் மட்டும் வருமானம் 26,188 கோடி ரூபாய். இது அரசின் மொத்த வருவாயில் 30%. தமிழகத்தில் 46.7% ஆண்கள் மது அருந்துகிறார்கள். ஒன்றைரை மணி நேரத்திற்கு ஒருவர் மது பிரச்சினையால் உயிரிழக்கிறார். குடியால் கணவனை இழப்போர் எண்ணிக்கை பெருகி 30 வயதிற்கு உட்பட்ட விதவைகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

வளர்ச்சி மாயையில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கு...

“நாங்கள் எல்லாவற்றையும் இழந்தாலும் கல்வியினால் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று பெருநகரங்களில் ஒரு சொர்க்கத்தை கண்டடைவோம்” என்று இப்போதும் கனவு காணுகிறார்கள்.

ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்பதை நிதி ஆயோக்கின் உறுப்பினரான பிபேக் டெப்ராய் கூறுவதைப் பார்த்தாலே தெரியும், “1 கோடியே 20 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு வேண்டி காத்திருக்கிறார்கள். ஆனால் 10 இலட்சம் பேருக்கு கூட இன்னமும் வாய்ப்புகள் உருவாகவில்லை”

இந்தியாவில் வேலைவாய்ப்பு உடைய துறைகளாக கூலி வேலை, காவல் வேலை, வீட்டு வேலை ஆகியத் துறைகளே உள்ளனவாம். முறைபடுத்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பு என்பது வெறும் 12% பேருக்குதான் வேலை கிடைக்கிறதாம். ஒரு பக்கம் இப்படி வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிற வேளையில் வேலையிழப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. 2012 – 2013-இல் மட்டும் 4 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

இப்படி உத்தரவாதமில்லாத வேலை வாய்ப்பை நம்பி கல்விக்கு நாம் இழப்பது கொஞ்சமல்ல. 2011 – 2012 இந்த ஓராண்டில் மட்டும் மொத்த இந்திய குடும்பங்கள் கல்விக்காக செலவிட்ட தொகை 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி. இது 2015-இல் 1 இலட்சத்து 71 ஆயிரத்து 78 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல்தான் மருத்துவச்செலவு. சராசரி ஒரு இந்திய குடும்பத்தின் ஓராண்டு மருத்துவ செலவு 9,373 ரூபாய். இது ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கிறது. இப்படி அதிகரித்து வரும் மருத்துவ செலவின் காரணமாக 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் 7% குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளன.

இவை மட்டுமில்லாது உலகமயமாக்கலால் இயற்கை சீரழிவையும் அதன் மூலமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறோம்.

வறட்சியின் தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம். 62% நிலம் வறட்சியின் பிடியில் உள்ளது. வெள்ள பாதிப்பில் 2-ஆவது இடம். இதனால் புயல், வெள்ளம், வெப்பம் அதிகரிப்பு, பருவம் தவறும் மழை, உயிரின பன்மயம் அழிதல் என பேராபத்தின் பிடியில் சிக்கியுள்ளோம்.

நூல் இவ்வளவு ஆபத்தையும் துல்லியமாக முன்வைக்கிறது. இந்தளவு முக்கியமான இந்நூலை முதலில் சமூக மாற்றத்திற்காக நல்ல ஊழியர்களை உருவாக்கும் அமைப்பாளர்களும் நல்ல மாணவர்களை உருவாக்க உழைக்கும் ஆசிரியர்களும் படிக்க வேண்டும்; மற்றவர்களிடத்து பரப்ப வேண்டும்.

நூல் பெயர்  : பட்டினிப் புரட்சி

ஆசிரியர்    : பரிதி

பக்கம்       : 556

விலை      : 450 ரூபாய்

வெளியீடு   : விடியல் பதிப்பகம், கோவை

தொடர்பிற்கு : 0422 2576772, 94434 68758