அண்மை வாரங்களில் அரசியல் வட்டாரங்களிலும் ஊடகங்களிலும் "கறுப்பு பணத்தை"ப் பற்றிய விவாதம் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.

நவம்பர் 2, 2014 அன்று தன் மாதாந்திர வானொலி ஒலிபரப்பில், தனது அரசாங்கம் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள பணத்தின் கடைசி பைசா வரை மீட்கும் என்று பிரதமர் நம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். அந்தப் பணம் நம் நாட்டு உழைக்கும் மக்களுக்கு சொந்தமானது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில், தன்னுடைய அரசாங்கத்திற்கோ அல்லது இதற்கு முன்னாலிருந்த அரசாங்கத்திற்கோ சுவிஸ் வங்கிகளில் எவ்வளவு "கறுப்பு பணம்" பதுக்கப்பட்டுள்ளது எனத் தெரியாது என்று அவர் கூறினார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் பரப்புரையின் போது, பாஜக 8.4 லட்சம் கோடி ரூபாய் அளவில் "கறுப்பு பணம்" சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறி வந்தது. கருப்பு பணத்தை மீட்பதில் காங்கிரசு கட்சி முனைப்புடன் இல்லை என்று அது குற்றம் சாட்டியது. தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் எல்லா பணத்தையும் மீட்பதாக வாக்குறுதியளித்தது. இப்பொழுது காங்கிரசு கட்சியும் மற்ற முதலாளி வர்க்கக் கட்சிகளும் தன்னுடைய வாக்குறுதியில் பாஜக முனைப்புடன் இல்லை என்று பரப்புரை செய்து வருகின்றன. இந்த பின்னணியிலேயே கருப்புப் பணத்தை மீட்கும் தங்கள் அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் நமது நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

"கறுப்பு" பணம் என்றால் என்ன?

"கறுப்பு" பணம் என்று கூறப்படுவது உண்மையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களுடைய உழைப்பையும், இயற்கை வளங்களையும் சுரண்டிப் பெறப்பட்டதாகும். முதலாளி வர்க்கம், தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து உபரி மதிப்பைப் பிழிந்து எடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்களின் ஊதியத்தை, உருவாக்கப்படும் தேசிய செல்வத்தின் (மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP) அளவோடு ஒப்பிடும் போது, அது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான தேசிய கணக்குப் புள்ளிவிவரங்களில் இருந்து, 2012-13ம் நிதியாண்டில் ரூபாய் 31 லட்சம் கோடி அளவிற்கு இலாபமாகவும் வட்டியாகவும் வாடகை வருமானமாகவும் முதலாளி வர்க்கம் இந்தியாவிலிருந்து சுருட்டியுள்ளது என்று ஊகிக்க முடிகிறது. இது அந்த ஆண்டில், மூலதனத்தால் சுரண்டி எடுக்கப்பட்ட உபரி மதிப்பில், சட்டப்படி கணக்கில் காட்டப்படும், "வெள்ளை" அளவாகும். ஒரு கூடுதல் பெரிய அளவு - "வெள்ளை" பகுதியில் பாதியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள "கருப்பு" பகுதி – அதிகாரபூர்வ கணக்குகளில் காண்பிக்கப்படாமல் சுருட்டப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு சுருட்டப்பட்டது! இது, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக பாஜக சொல்லி வந்த தொகையைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்!

கருப்புப் பணம் எப்படி உருவாக்கப்படுகிறது? தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களுடைய செலவினங்களை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலமும், இலாபத்தைக் குறைத்துக் காட்டுவதன் மூலமும் வழக்கமாக கணக்கில் வராத, “கருப்பு” வருவாயை உருவாக்குகின்றன. விற்கப்படும் பொருளின் விலையை, உண்மையான விலையைக் காட்டிலும் கூட்டியோ, குறைத்தோ காட்டுவது என்பது “கருப்புப்” பணத்தை நகர்த்துவதற்கான முக்கிய வழியாக கூறப்படுகிறது. கணக்கில் வராத இந்த வருவாயைச் சேர்த்து வைத்திருக்கும் முதலாளிகள், தங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கப்பட வேண்டுமென்பதற்காக அரசின் உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இலஞ்சம் கொடுப்பது, பல்வேறு முதலாளி வர்க்கக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய தேர்தல் பரப்புரைகளுக்காக நிதியளித்தல் போன்ற கணக்கில் வராத செலவினங்களுக்காக அதைப் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பகுதி நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதோடு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பணமாகவும் சேர்த்து வைக்கப்படுகிறது.

இந்த வங்கிகள் சுவிட்சர்லாந்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவற்றை சுவிஸ் வங்கிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இந்த வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைப்பவர்களிடம், அந்தப் பணத்தின் ஆதாரத்தைப் பற்றி வங்கிகள் கேட்பதில்லை. மேலும் அந்த வங்கிகள், எந்த வரியையும் இவர்கள் மீது போடுவதில்லை. இப்படிப்பட்ட வங்கி முறைகளைப் பின்பற்றி தங்களுடைய பொருளாதாரத்தை வளப்படுத்தும் நாடுகளோடு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்கள், அவர்களுடைய முதலாளிகளும் அமைச்சர்களும், இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து சேர்த்துவரும் கணக்கில்வராத செல்வத்தைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக, திட்டமிட்டு ஒப்பந்தங்களை செய்து வைத்துள்ளனர்.

ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மிகவும் இலாபகரமான ஆயுதங்களை வாங்குவதிலும், ஏர் இந்தியாவிற்கு விமானங்கள் வாங்குவது போன்ற மிகப் பெரிய தொகையில் வாங்குதலிலும், அரசு வணிக நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்யும் வாங்குதல்களிலும் திரட்டப்படும் இலஞ்சம், மிகப் பெரிய அளவில் “கருப்புப்” பணமாக பாரம்பரியமாகவே உருவாக்கப்படுகிறது.

தொகுத்துப் பார்க்கையில், “கருப்புப்” பணமென அழைக்கப்படும் பணமானது, முதலாளி வர்க்கத்தால் நேரடியாக சுரண்டப்பட்டதோ அல்லது அரசு கருவூலத்தைக் கொள்ளையடித்து உருவாக்கப்பட்டதோ ஆகும். இது, உழைப்பாளர்கள் மற்றும் உழவர்களுடைய பணமாகும். இது, தொழிலாளி வர்க்கத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பின் ஒரு கணிசமான தொகையாகும். இது நமது நாட்டின் தொழிலாளி வர்க்கத்திற்கும், மக்களுக்கும் சொந்தமானதாகும்.

நாட்டை இவ்வாறு கொள்ளையிட்டு வருவது குறித்து தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் மிகுதியாகக் கோபம் அடைந்திருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இந்தப் பணத்தை அரசாங்கம் மீட்டு, மக்களுடைய நல்வாழ்விற்காக அதை முதலீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நியாமானதாகும்.

விடுதலை பெற்றதிலிருந்தே ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்ட முறையில் “கருப்புப்” பணத்தை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகிறார்கள் என்பது நன்கு தெரிந்ததே. ஆண்டுக்கு ஆண்டு, “கருப்புப்” பணக் குவிப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இந்தக் “கருப்புப்” பணத்தைப் பற்றி ஆளும் வர்க்கம், அண்மை ஆண்டுகளில் ஏன் சத்தம் போட்டு வருகின்றனர் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

முதலாளி வர்க்கத்திற்கும் தங்களுக்கும் இடையில் செல்வத்திலும், வாழ்க்கை முறையிலும் தீவிரமாக அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வைக் கண்டு தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் உண்மையிலேயே மிகவும் கொதித்துப் போயிருக்கிறார்கள். பெருந் திரளான உழைப்பாளர்கள் மற்றும் உழவர்களுடைய வேலை நிலைமைகளும், வாழ்க்கைச் சூழ்நிலைகளும் மோசமடைந்து வருகையில், பெரு முதலாளிகளும், அரசின் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் மிகப் பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்து வருகின்றனர். இந்திய மற்றும் அன்னிய முதலாளிகளுக்கு சிறப்புச் சலுகைகளை அளிப்பதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு தங்களுடைய உயர் பதவிகளைப் பயன்படுத்தியும், அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதன் மூலமும் எப்படி பல்வேறு அரசியல்வாதிகளும், அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் அவர்களே முதலாளிகளாக ஆகி வருகிறார்கள் என்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

தொழிலாளி வர்க்கமும், மக்களும் சந்தித்துவரும் பிரச்சனைகளுடைய அடிப்படையான நோய் முதலாளித்துவ அமைப்பாகும். அதை அரசு பாதுகாக்கிறது. முதலாளித்துவம் நமது நாட்டிலும், உலகெங்கிலும் இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக இருக்கிறது. அது உழைக்கும் வர்க்கம் மற்றும் எல்லா உழைக்கும் மக்களுடைய உயிர்நாடியான இரத்தத்தை உறிஞ்சுகிறது. அரசு, ஏகபோகங்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த சமுதாயத்திலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக அரசு இருக்கிறது.

நமது மக்களுடைய உழைப்பும், வளங்களும் சுரண்டப்படுவதற்கும், கொள்ளையடிக்கப்படுவதற்கும் முடிவு கட்டுவதற்கு ஒரு சமூகப் புரட்சிக்கு தொழிலாளி வர்க்கம் உழவர்களையும், பிற சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும். அந்தப் புரட்சி முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டிவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய ஒரு புதிய அரசை நிறுவி, புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டும்.

உழைக்கும் மக்களுடைய கோபத்தை பிரச்சனையின் உண்மையான அடிப்படையாகிய – முதலாளித்துவ அமைப்பிலிருந்தும், இந்த அமைப்பைப் பாதுகாக்கும் அரசிலிருந்தும் திசை திருப்புவதற்காக, நோயின் ஏதாவதொரு அறிகுறி பற்றி ஆளும் வர்க்கம் அவ்வப்போது குரலெழுப்பி வருகிறது. அண்மை ஆண்டுகளில், அது ஊழல் மற்றும் “கருப்புப்” பணம் போன்ற இந்த நோயின் அறிகுறிகளைச் சுட்டிக் காட்டுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உட்பட எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் ஆளும் முதலாளி வர்க்கம், தங்கள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களுடைய உழைப்பிலிருந்தும், பொது மக்களுடைய வரிப் பணத்தைக் கொள்ளையடிப்பதிலிருந்தும் “கணக்கில் வராத” செல்வத்தை உருவாக்குகிறார்கள். போரிலிருந்தும், பிற நாடுகளைக் கொள்ளையடிப்பதன் மூலமும் முதலாளித்துவ நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பொது மக்களுடைய பணத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துகின்றனர். இந்த நாடுகளில் பல்வேறு கட்சிகளுடைய தேர்தல் பரப்புரைகளுக்கு இந்த முதலாளித்துவ நிறுவனங்கள்தான் நிதியளிக்கின்றன என்பது நன்கறிந்ததாகும்.

 “கருப்புப்” பணத்தின் மீது அண்மையில் முக்கியத்துவம் காட்டுவதற்கு ஒரு முக்கிய காரணமானது, அதை வலியுறுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியர்களுக்கு இருக்கும் பங்காகும். அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள சர்வதேச நிறுவனங்கள், கடந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருக்கும் “ஊழலை” வெளிச்சம் போட்டுக்காட்டி வந்துள்ளது நன்கறிந்ததாகும். இந்த நாடுகளில் உள்ள ஆளும் கும்பல்கள், பல்வேறு கேள்விகளில் அமெரிக்கவோடு ஒத்துப் போகவில்லையானால், அவர்களை வெட்ட வெளிச்சமாக்கி விடுவோமென்றும், சுவிஸ் வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றிக் கொள்வோமெனவும் இந்த ஆட்சியாளர்களை அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது. சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் “கருப்புப்” பணத்தின் அளவு பற்றி நமது நாட்டில் கூறப்படும் வதந்திகளுக்கு, விவரங்கள் இந்த ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்களிலிருந்து வெளிவருகின்றன.

மேற்கண்டவற்றைப் பார்க்கையில், இந்தக் “கருப்புப்” பணத்தை மீட்பது பற்றி அரசாங்கம் மும்முரமாக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரப்படி, 2001-2011 இல், இந்தியாவிலுள்ள மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 41.8 % மரூசியசிலிருந்து வந்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூரிலிருந்து 9.17 % வந்திருக்கிறது.

 “கருப்புப்” பணம் பற்றி 2012-இல் இந்திய அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை, “மரூசியஸ் மற்றும் சிங்கப்பூரின் சிறிய பொருளாதாரத்திலிருந்து இப்படிப்பட்ட பெரிய முதலீடுகள் வந்திருக்க முடியாது. வரிகளைத் தவிற்கவும், உண்மையில் முதலீடு செய்பவர்களுடைய விவரங்களை வருவாய்த் துறை அதிகாரிகளிடமிருந்து மறைப்பதற்காகவும் இந்த முதலீடுகள் இந்த நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. இப்படி முதலீடு செய்திருப்பவர்களில் பலரும், இந்தியாவில் வசிப்பவர்களாகவும், அவர்களுடைய சொந்த நிறுவனங்களிலேயே சுற்றுப் பயணம் (Round tripping) என்றழைக்கப்படும் முறையில் இவ்வாறு முதலீடு செய்திருக்கலாம்” என்று கூறுகிறது.

இவ்வாறு, “கருப்புப்” பணமாக உற்பத்தி செய்யப்படுவதில் பெருமளவு, நாட்டிற்கு வழக்கமாகவே மீண்டும் திரும்பி வருகிறது என்பதை அரசாங்கம் நன்கறிந்திருக்கிறது. உண்மையில் தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டம் மிகப் பெரிய அளவில் “கருப்புப்” பணத்தை உருவாக்கியும், அதை நாட்டிலேயே மூதலீடு செய்வதற்கான வழிகளையும் உருவாக்கியிருக்கிறது.

ஓராண்டில் உருவாக்கப்படும் “கருப்புப்” பணத்தின் அளவு ரூ 65 இலட்சம் கோடியென கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி, இலஞ்சம் கொடுப்பதற்கும், தேர்தல்களுக்கு இரகசியமாக நிதியுதவி அளிப்பதற்கும், மற்றும் பிறவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதம் சேமிக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதி மட்டுமே அவாலா பரிமாற்றம் (Hawala transactions)மூலம்  அனுப்பப்படுகிறது. (பெட்டியைப் பார்க்கவும்). உருவாக்கப்படும் “கருப்புப்” பணத்தில் பெருமளவு உண்மையில் இந்தியாவிலேயே உள்ளது, வெளிநாடுகளில் அல்ல.

வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நிதியில் ஒரு பங்கு, சுற்றுப் பயணம் என்ற வடிவில் திரும்புகிறது. (பெட்டியைப் பார்க்கவும்). இப்படி பணம் திரும்பி வருவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. இவ்வாறு நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்ட தொகையில் ஒரு பங்கு மட்டுமே அங்கு தங்குகிறது. வெளிநாட்டில் தங்கும் பணத்தில் ஒரு பங்கு, சொகுசான செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. மீதமுள்ள தொகை நிலம், வீடு போன்றவற்றிலும், பிற வாணிகங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணத்தில் ஒரு சிறு பங்கு மட்டுமே வங்கிக் கணக்குகளுக்குச் செல்கின்றது.

குறைந்தபட்சம் 80 நன்கறிந்த வரி ஏய்ப்பு இடங்கள் உள்ளன. ஆனால் இந்திய அரசின் கவனமெல்லாம், வெளிநாடுகளிலிருந்து கசிந்துவிட்ட பட்டியலில் உள்ள ஒரு சில நூறு கணக்குகள் மீது மட்டுமே இருக்கிறது. இந்தக் கணக்குகளெல்லாம் பல ஆண்டுகள் பழமையானவை. அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிலுள்ள தொகையை எடுத்து வேறு எங்கேயாவது கொண்டு செல்ல போதுமான முன்னறிவிப்பும் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான “கருப்புப்” பணமானது இந்தியாவிலேயே இருப்பதால், அதைக் கைப்பற்ற இந்திய அரசால் நிச்சயமாக முடியும். அவற்றில் ஒரு அதிரடி நடவடிக்கையானது, பெரிய பண நோட்டுக்களான 1000, 500 ரூபாய்களை செல்லாததாக ஆக்கிவிட்டு, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு வருவதாகும். பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை மாற்றுவதற்கு வங்கிகளில் கொண்டு வந்து அந்தத் தொகை எவ்வாறு கிடைத்தது என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டியது கட்டாயமாகும். இதன் மூலம் நாட்டிலேயே உள்ள “கருப்புப்” பணத்தில் ஒரு கணிசமான தொகை வெளியே வரும். ஆனால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள அல்லது நாட்டிற்குள்ளேயே பரிமாறப்பட்டு வரும் “கருப்புப்” பணத்தைப் பற்றி, ஆளும் வட்டங்களில் ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. “கருப்புப்” பணம் உருவாகுவதைக் களையும் நோக்கமோ, அல்லது அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்யும் நோக்கமோ இந்திய அரசுக்கும் அதனுடைய நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

“கருப்புப்” பணம் பற்றிய கேள்வியானது, நமது நாட்டின் தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இது நம்முடைய பணம், நம்முடைய உழைப்பிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பும், நமது நாட்டினுடைய இயற்கை வளங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதும் ஆகும். அது நியாயமாகவே நமக்குச் சொந்தமானதாகும். அது சமுதாயத்தின் நல்வாழ்விற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடையத் தேவைகளை நிறைவேற்றவும், சமூக உபரி மதிப்பைப் பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் நிச்சயமாக முடியும். இதைச் செய்ய, பொருளாதாரம் அல்லது சமுதாயத்தின் எந்தக் கோளத்திலும் தனிப்பட்ட சொத்துக் குவிக்கும் பேராசை ஆதிக்கம் செலுத்துவது தடுக்கப்பட வேண்டும். மனிதனை விழுங்கும் சுரண்டல் அமைப்பைத் தூக்கியெறியவும், அதற்கு மாற்றாக மனிதனை மனிதன் சுரண்டுதல் இல்லாத ஒரு அமைப்பிற்கு வழி வகுப்பதற்காகவும், தொழிலாளி வர்க்கம் அணிதிரண்டு, உழவர்களையும் பிற சுரண்டப்பட்ட பிரிவினரையும் ஐக்கியப்படுத்த வேண்டும். நம்முடைய உழைப்பையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதன் மூலம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமானது, கணக்கில் வந்தாகவோ அல்லது வராததாகவோ, “வெள்ளையோ” அல்லது “கருப்புப்” பணமோ, எதுவாக இருந்தாலும், அது உண்மையில் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே சொந்தமானதாகும்!

 “கருப்புப்” பணம் பற்றி சில தகவல்கள்

திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்வத்தை நகர்த்துவதற்கு போலி நிறுவனங்கள் சில பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரி ஊழலில் கொல்கத்தா-வில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மிகப் பெரிய தொகையை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்தத் தொகையானது அந்த நிறுவனங்களுடைய வழக்கமான தொழிலுக்கு தொடர்பற்றவையாகும். ஒரு கம்பெனி, (கருப்புப்) பணத்தை இன்னொரு கம்பெனிக்கு அனுப்ப விரும்பினால், அதை அது நேரடியாக அனுப்புவதில்லை. அது பணத்தை முதலில் ஒரு கம்பெனிக்கு அனுப்பும். அந்தக் கம்பெனி, அதை இரண்டாவது கம்பெனிக்கு மாற்றம் செய்யும்....... இப்படியாக இறுதியில் அந்தத் தொகை சேர வேண்டிய கம்பெனிக்கு வந்து சேரும். இப்படிப்பட்ட பரிவர்த்தனைச் சங்கிலியைப் பிரித்துக் காண்பது முடியாதது இல்லை என்றாலும், அது மிகவும் கடினமானதும், நேரமெடுக்கக் கூடியதும் ஆகும். கொல்கொத்தாவில் இப்படிப்பட்ட போலி நிறுவனங்களால் இடம் மாற்றப்பட்ட “கருப்புப்” பணமானது, 2010-11 இல் மட்டும் 36,000 இலிருந்து 72,000 கோடி ரூபாயாக இருக்குமென ஒரு கணிப்பு கூறுகிறது!

இன்றுள்ள வரி ஏய்ப்பு இடங்களில், நன்கு அறிந்ததாக இருக்கும் மெரூசியசில் பதிவு செய்யப்பட்டுள்ள 30,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கும் மிகச் சிலரே அவற்றின் இயக்குனர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பணம் எப்படி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது?

அவாலா

நிதி உண்மையில் நகராமல், சர்வதேச முகவர்களுடைய வலைப்பின்னல் மூலமாக பணம் அனுப்பப்படுகிறது.

ஏற்றுமதிகளின் மதிப்பைக் கூட்டிக் காட்டுவது

ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருளின் உண்மை மதிப்பு 3 இலட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்குமானால், அது 3.7 இலட்சம் டாலர்களாக காட்டப்படும். இதிலுள்ள வேறுபாடான 0.7 இலட்சம் டாலர்கள், இறக்குமதி செய்யும் நாட்டிலோ அல்லது அருகிலுள்ள நாட்டிலோ ஒருவருடைய கணக்கில் சேர்க்கப்படும்.

அறக்கட்டளைகள்

பெரும்பாலும், அறக்கட்டளைகளுக்கு, அன்னிய நாட்டின் குடிமக்களாக உள்ளவர்களை அறங்காவலர்களாக அமர்த்துவார்கள். ஆனால் அறக்கட்டளையின் பயனாளிகள் அந்த அறக் கட்டளையில் முதலீடு செய்துள்ள இந்திய குடிமக்களின் உறவினர்களாக இருப்பார்கள்.

பணம் இந்தியாவிற்கு எப்படி திருப்பிக் கொண்டு வரப்படுகிறது?

போலி நிறுவனங்கள் (Shell companies)

மரூசியஸ் போன்ற வரி ஏய்ப்பு இடங்கள் வழியாக பணத்தைக் கொண்டு வருவதற்கு, மிகக் குறைவான அல்லது சொத்துக்களோ, வணிக செயல்பாடுகளோ இல்லாத நிறுவனங்கள் அயல்நாடுகளில் உருவாக்கப்படுகின்றன.

ஜிடிஆர்-கள் GDRs (Global Depository Receipts)

குறிப்பிடும் அளவில் சொத்துகளோ, வணிக செயல்பாடுகளோ இல்லாத இந்திய நிறுவனங்கள், ஜிடிஆர் மூலம் மூலதனத்தை உருவாக்கி, அதன் மூலம் கருப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவரப் பயன்படுத்துகிறார்கள்.

பங்கேற்பாளர் பத்திரங்கள் (Participatory notes)

நிதி நிறுவனங்கள் வழங்கும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலுள்ள முதலீட்டாளர்கள், இந்திய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்து கொள்ளாமலேயே, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். கருப்புப் பணத்தை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவர இந்த முறையும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

Pin It