rally-on-6-dec2014-1

பாபரி மசூதி உடைத்து தகர்க்கப்பட்டதன் 22-ஆவது நினைவு நாளையொட்டி நாடெங்கிலும் கண்டனப் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. 22 ஆண்டுகளுக்கு முன்னர், பாபரி மசூதி உடைத்து தகர்க்கப்பட்ட குற்றச் செயலையும், அதைத் தொடர்ந்து அரசு நடத்திய வகுப்புவாத வன்முறைக்கும் எதிராக தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான மக்கள், கொல்கொத்தாவிலிருந்து மாலிகாவ் வரையிலும், தேராதூனிலிருந்து கோயம்பத்தூர் வரையிலும் வீதிகளில் திரண்டனர்.

தில்லியில் மண்டி அவுசிலிருந்து ஜன்தர் மன்தர் வரையில் ஒரு மாபெரும் பேரணியும் அதைத் தொடர்ந்து 3 மணிநேர பொதுக் கூட்டமும் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பங்கேற்ற இந்த முக்கிய நிகழ்ச்சியில் அதனுடைய பேச்சாளர்கள் அந்தக் கொடுங் குற்றத்தைக் கண்டித்ததோடு, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகவும் போராட உறுதியேற்றனர்.

காலை 10 மணி முதல் நூற்றுக் கணக்கான மக்கள் மண்டி அவுசில் திரளத் தொடங்கினர். வெள்ளம் போல் குவிந்த மக்கள், 11.30 மணியளவில் பேரணியைத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான ஆர்பாட்டத்தினர் மிகவும் ஒழுங்கான முறையில் முக்கிய முழக்கத் தட்டியின் பின்னே அணிவகுத்துச் சென்றனர். முக்கிய முழக்கத் தட்டியானது, “வகுப்புவாத வெறிக்கும், வன்முறைக்கும், அரசு பயங்கரத்திற்கும் எதிராகவும், ஒரு நியாயமான சமுதாயத்தை மீண்டும் கட்டியமைப்பதற்காகவும் ஒன்றுபடுவோம்” எனவும், “ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்” என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த முக்கிய முழக்கத் தட்டியை எல்லா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஏந்திவர, ஜன்தர் மன்தரை நோக்கி பேரணி சென்றது. அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் எழுப்பிய வீரமான முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.

rally-on-6-dec2014-3 1

ஜன்தர் மன்தரில் மக்களாட்சி இயக்கத்தின் தலைவர், கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, யூனைட்டெட் முஸ்லீம் பிரன்ட், ஜே.என்.யு. மாணவர் சங்கம், ஜமாத் இஸ்லாமி இ ஹிந், ஏஐஎஸ்ஏ, சிக்கிய இளைஞர் மன்றம், டிஎஸ்எப், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, சோசியல் டெமாகிரடிக் பார்டி ஆப் இந்தியா, சிபிஐ(எம்-எல்) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்டு), சோசலிஸ்டு பார்ட்டி ஆப் இந்தியா, சிட்டிஸன்ஸ் பார் டெமாகரசி, இடது கூட்டு, சீக்கிய மன்றம், சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கம், ஆல் இந்தியா முஸ்லீம் மஜ்லீஸ் இ முஷாவாராத், ஆல் இந்தியா இமாம் கவுன்சில், இந்திய இளைஞர் ஒற்றுமைக் கழகம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், யுஏபிஏ-விற்கு எதிரான மக்கள் இயக்கம், ஆல் இந்தியா சீக்கிய கருத்தரங்கு, ஆல் இந்தியா மதச் சார்பற்ற மன்றம், நல்லிணக்கத்திற்கும் அமைதிக்குமான மையம், கபீர் அமைதி மையம் மற்றும் நிஷாந்த் நாட்டிய மன்ச் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள் உரையாற்றினர்.

எல்லா பேச்சாளர்களும், அரசு திட்டமிட்டு நடத்திய மசூதியைத் தகர்க்கும் வன்முறையையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற குற்றவியலான படுகொலைகளையும் ஒரு மனதோடு கண்டித்தனர். இந்த எதிர்ப்புப் பேரணியை ஒன்றிணைந்து நடத்தியதில் காட்டிய ஒற்றுமையை அவர்கள் பாராட்டினர். ஒரு நவீன சனநாயக அரசைக் கட்டுவதற்கான போராட்டத்தில் இந்த ஒற்றுமையை வலுப்படுத்துவோமென அவர்கள் உறுதி கூறினர்.

இந்தப் பேரணியையும், கூட்டத்தையும் அதை நடத்துவதற்கு முயற்சி மேற் கொண்ட மக்களாட்சி இயக்கத்தையும், பங்கேற்ற அமைப்புக்களையும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது.

Pin It