முதலாளித்துவத்தாலும், பார்ப்பனியத்தாலும் சீரழிந்து போன சமூக அமைப்பை பாய்ச்சல் வேகத்தில் மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடிகள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் தினம் நம்மை எதிர்நோக்கியும், கடந்தும் செல்லும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மனித உணர்வுகள் அற்ற, அறம் சிதைந்துபோன, குற்ற உணர்வுகளைத் தொலைத்த அகநிர்வாணிகளாகவே இருக்கின்றார்கள். நம்முன்னால் ஒரு பெரும் மலையாக அகற்றப்பட வேண்டிய குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் நாசித் துவாரங்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவசர அவசரமாக துர்நாற்றத்தின் மையப் பகுதியை விட்டு கடந்து செல்ல மூச்சிரைக்க ஓடுகின்றோம். மரணம் உறுதி செய்யப்பட்ட வாழ்க்கையை எப்படி எல்லாம் சொகுசாக, ஆடம்பரமாக, நோகாமல் வாழ்ந்து களிப்பது என்ற போட்டியிலேயே பிழைப்புவாதிகளும், புல்லுருவிகளும் தங்கள் காலத்தைக் கழிக்க, முடிந்தவரை தினம் தினம் வறுமையால் கொல்லும் இந்த வாழ்க்கையை விரைவாகக் கடந்துவிட வேண்டும் என்றே எளிய மக்கள் விரும்புகின்றார்கள்.

capitalist democracyஒரு பெரும் அசமத்துவம் இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்நிலையை தீர்மானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். போதிய உணவு கிடைக்காமலும், மருத்துவ சிகிச்சை கிடைக்காமலும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமலும், அசுத்தமான சுற்றுப்புறத்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நம்மை ஆட்டுவிக்கும் இந்த அழிவு சக்திகளுக்கு எதிராக குரலை உயர்த்தி கேள்வி கேட்கக் கூடத் திராணியற்ற கோழைகளாக, தன்னுடைய வயிறு, தன்னுடைய குடும்பம், தன்னுடைய உற்றார் உறவினர்கள் மட்டுமே நலமாக இருந்தால் போதும் என்ற இழிசிந்தனை கொண்டவர்களாக இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் வளரும்போதே அதற்கு எப்படி அதிகார வர்க்கத்தை நக்கிப் பிழைப்பது, பணம் படைத்தவனிடம் வலியச் சென்று பல்லிளித்து நட்பாக்கிக் கொள்வது, எளிய மனிதர்களை எப்படி எட்டி உதைப்பது என்ற அரிச்சுவடியை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர்களாகவும் தானே நாம் இருக்கின்றோம். அழுக்கு சட்டையும், வியர்வை வாடையும், கலைந்த தலையும் கொண்ட மனிதர்களை அருவருப்பு நிறைந்த ஜந்துவைக் கடப்பது போல கடந்து செல்லும் மனிதர்கள் இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள். இவை எல்லாம் முதலாளியமும், பார்ப்பனியமும் நமக்குள் விதைத்த நச்சு விதைகள் என்பதை அறியாமலேயே நம்மில் பலர் அதை இயல்பான ஒன்றாக கடைபிடித்துக் கொண்டுதானே இருக்கின்றோம். ஏன் நம்மால் நம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை? நீங்கள் கடைப்பிடிக்கும் அரசியல் ஏன் உங்களுக்கு அதைக் கற்பிக்கவில்லை? காரணம் நீங்கள் கார்ப்ரேட், சாதிய, மதவாத, இனவாதக் கட்சிகளின் அரசியலால் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அதனால்தான் நம் கண்முன்னாலேயே நமக்குச் சொந்தமான அனைத்தும் வளங்களும் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. காடுகள், மலைகள், ஆறுகள் என அனைத்தும் களவாடப்படுகின்றது. இவை எல்லாம் யாரோ ஒரு திருடனோ, ஊழல் பேர்வழியோ, ஒரு நயவஞ்சகனோ யாருக்கும் தெரியாமல் செய்யவில்லை. நன்கு திட்டமிடப்பட்டு அதிகார வர்க்கத்தாலும், அரசியல்வாதிகளாலும், கார்ப்ரேட் காலிகளாலும் இவை அரங்கேற்றப்படுகின்றன. எதிர்காலத் தலைமுறை இந்த மண்ணில் பிழைத்திருக்க எதையுமே விட்டு வைக்க விரும்பாத, மனித விழுமியங்களைத் தொலைத்த ஒரு சிறு கும்பல் இதை எல்லாம் எந்தவிதக் குற்றவுணர்வும், எதிர்ப்பும் இன்றி செய்து கொண்டிருகின்றது. ஆனால் இதற்கு எதிராகப் போராட வேண்டிய கல்வி விழிப்புணர்வு பெற்ற சமூகம் கார்ப்ரேட், சாதிய, மதவாத, இனவாத அரசியலால், அரசியல் விழிப்புணர்வு பெற முடியாமல் குட்டையைப் போல தேங்கிக் கிடக்கின்றது.

இவர்கள்தான் எப்பொழுதும் ‘இதை எல்லாம் மாற்ற யாராவது வருவார்கள்’, ‘இதை எல்லாம் மாற்ற முடியாது’, ‘நமக்கெதுக்கு வீண் வம்பு’, ‘நாம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதுமா மற்றவர்கள் அப்படி இல்லையே’, ‘எல்லோருமே திருட்டுப் பசங்க சார், இன்னைக்கு யோக்கியன் மாறி பேசுவான், நாளை ஆட்சிக்கு வந்தால் அவனும் இதையேதான் செய்வான்’ என்று புலம்புவதை மட்டுமே செய்யும் பிழைப்புவாதிகளாகவும், அற்பப் பிறவிகளாகவும், குறுகிய மனம் படைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் தன்வாழ்நாளில் சமூக மாற்றத்திற்காக ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப்போட முன்வராதவர்கள், நடைமுறைப் போராட்டங்கள் என்றாலே அதை வெறுப்பாக, கசப்பாகப் பார்க்கும் வக்கிர குணம் படைத்தவர்கள்.

நடைமுறையில் எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல், அதன் சித்தாந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், களப் பணிக்குச் செல்லாமல், மக்களை சந்திக்காமல் வெறும் வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் அரட்டைக் கச்சேரி நடத்துவதன் மூலம் மட்டுமே எந்தவித சமூக மாற்றத்தையும் நம்மால் கொண்டுவந்துவிட முடியாது. இருக்கும் சமூக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என நாம் முடிவு செய்துவிட்டால், நிலவும் சமூக அமைப்பிற்குப் பதிலீடாக எதை முன்வைக்கப் போகின்றோம் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அப்படியான தெளிவு என்பது சித்தாந்தங்களை கற்றுத் தேறுவதன் மூலமாகவும், ஏற்கெனவே களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் எந்த மாதிரியான சமூக அமைப்பை முன்னிலைப்படுத்துகின்றன என்று ஆராய்வதன் மூலமாகவும் மட்டுமே நம்மால் கண்டறிய முடியும். மக்களை ஒட்டச் சுரண்டி அவர்களின் உழைப்பைக் கொள்ளையிட்டும், அவர்களை சீரழிந்த நுகர்வுப் பண்பாட்டின் ஒரு கருவியாக மாற்றும் கார்ப்ரேட் அரசியலுக்கும், அதை எதிர்த்து மூலதனத்துக்கும் உழைப்புக்குமான போராட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் பின் நிற்கும் அரசியலுக்குமான வேறுபாட்டை யார் சரியாக இனம் காண்கின்றார்களோ அவர்களால்தான் உண்மையான சமூக மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க முடியும்.

கார்ப்ரேட் அரசியலும், இனவாத அரசியலும், சாதி, மதவாத பாசிச அரசியலும் கோலோச்சும் காலத்தில் சாமானிய எளிய மக்களுக்கான பாட்டாளி வர்க்க அரசியலை, அதன் சித்தாந்ததை சமூகத்தில் விதைப்பது இந்த மக்களின் மீதும், இந்த மண்ணின் மீதும் பற்று கொண்டவர்களின் கடமையாகும். ஒரு கார்ப்ரேட் கட்சியை அகற்றி அதன் இடத்தில் இன்னொரு கார்ப்ரேட் கட்சியை பதவியில் அமர வைப்பதற்குப் பெயர்தான் சமூக மாற்றம் என கொழுத்துப் போன பணக்காரப் பன்றிகளும், அந்தப் பன்றிகள் பெத்துப் போட்ட சித்தாந்த வாரிசுகளும் உங்களுக்கு உபதேசம் செய்வார்கள். இன்னும் சில முற்போக்கு மூஞ்சுறுகள் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை பெருமுதலாளிகளுக்காக கொன்றுபோட்ட, சாமானிய உழைக்கும் மக்களை கிள்ளுக்கீரைகள் போல நினைக்கும் நாசகார, பாசிச சக்திகளை வெட்கமே இல்லாமல் முற்போக்கு சக்திகள் என நம்மை நம்பச் சொல்வார்கள். இதை எல்லாம் பிரித்தறியவும், ஆய்வுக்கு உட்படுத்தவும் நமக்கு பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டம் தேவையாக உள்ளது.

ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் எதையும் தின்னத் தயாராக இருக்கும் இழிந்த பிறவிகள் ஒருநாளும் உழைப்புச் சுரண்டலை ஒழித்து, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்தி இந்தச் சமூகத்தில் உயர்ந்த பண்பாட்டோடு வாழ வழி சொல்ல மாட்டார்கள். எதையுமே எளிதாகப் பெற வேண்டும், போராட்டம் எல்லாம் கூடாது, அகிம்சை வழியில் நின்று ஓட்டு போடுவதன் மூலமே சமூக அமைப்பை மாற்றிவிட முடியும் என நினைக்கும் தக்கை மனிதர்கள் மட்டுமே எல்லாவித முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் எந்தவித விமர்சனத்துக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள்.

மக்களின் மனங்கள் புரட்சிகர சிந்தனைகளால் புடம் போடப்பட வேண்டும், தங்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் தங்களை ஆளும் கார்ப்ரேட்டுகளும், அவர்களை ஆதரிக்கும் அடிவருடிகளும்தான் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். கோடி கோடியாய் லாபமீட்டும் ஒரு பெரும் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சில சில்லரை சலுகைகள் கொடுப்பதன் மூலம் அவர்களின் மனதில் தன்னை தர்மகர்த்தா நிலைக்கு உயர்த்திக் கொள்வது போல, இந்த முதலாளித்துவக் கட்சிகள் சில எலும்புத் துண்டுகளை உங்கள் முன் காட்டி, நாட்டையும் அதன் வளங்களையும் கொள்ளையிட உங்களின் அனுமதியைக் கோருகின்றன என்பதைப் புரிய வைக்க வேண்டும். இது எல்லாம் செய்யக்கூடிய காரியமா என நினைக்கலாம், அப்படி செய்யத் தவறியதன் விளைவுதான் இன்று இந்தியாவில் 9 குடும்பங்கள் நாட்டின் சொத்தில் 50 சதவீதத்தைக் கையகப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணமாகும். இவை எல்லாம் ஒரே நாளில் நடந்தவை அல்ல; தாங்கள் தான் மாற்று என ஒவ்வொரு முறையும் இந்த மக்களை நம்ப வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய காங்கிரசு, பிஜேபி என அனைத்து கார்ப்ரேட் கட்சிகளின் ஆதரவால்தான் இது சாத்தியமானது.

சமூக மாற்றம் என்பது எந்தவித செயல்பாடுகளையும் களத்தில் செய்யாமல் சாதிக்கக்கூடிய ஒன்றல்ல. ஒரு கேடுகெட்ட கார்ப்ரேட் கட்சியின் பிரதிநிதி கூட தெருத் தெருவாய் மக்களை சந்தித்து, கூழைக் கும்பிடு போட்டு, தொண்டை கிழிய பரப்புரை செய்து, ஆட்களை வைத்து பணப்பட்டுவாடா செய்தே வெற்றிபெற வேண்டிய நிலை இருக்கும் போது, சுரண்டலில் இருந்து விடுபட்ட ஒரு மேம்பட்ட சமூக அமைப்பை ஏற்படுத்துவது என்பதற்கு நாம் இன்னும் அதிகப்படியான அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பைக் கொடுக்க வேண்டி இருக்கின்றது. அந்த உழைப்பு நமக்கானது மட்டுமல்ல, நம்முடைய எதிர்கால சந்ததிகளும் இந்த மண்ணில் பிழைத்திருப்பதற்கானது. ஒரு கார்ப்ரேட் கட்சிக்கு மாற்றாக இன்னொரு கார்ப்ரேட் கட்சியை முன்னிலைப்படுத்தும் அயோக்கியர்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் கம்யூனிச விரோதிகளாகவும், பெரு முதலாளிகளை நக்கிப் பிழைப்பவர்களாகவும், சுரண்டலும், நுகர்வு வெறியும், பண்பாட்டுச் சீரழிவும் நிறைந்த இந்த சமூக அமைப்பு அப்படியே கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். அது போன்றவர்களால் மட்டுமே இதுபோன்ற தீர்வுகளை முன்வைக்க முடியும். சமூக மாற்றத்திற்கான நெடும்பயணத்தில் அதை முன்னெடுக்கும் சக்திகள் தற்போதைக்கு இந்தக் கார்ப்ரேட், சாதிய,மதவாத, இனவாத அரசியலை அம்பலப்படுத்தி மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலை இருக்கின்றது. ஒட்டுமொத்த சமூகத்தில் கணிசமான மக்கள் பாட்டாளி வர்க்க அரசியலை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்போது ஒரு புரட்சிகரமான அரசியல் பிறப்பெடுக்கும், அது நிச்சயம் ஆயுதப் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, தேர்தல் பாதையாகக் கூட இருக்கலாம்.

- செ.கார்கி

Pin It