வருகின்ற ஏப்ரல் 17 – மார்ச் 18 நிதியாண்டில், நிலக்கரியை வியாபார அடிப்படையில் வெட்டி எடுக்க கதவுகளைத் திறந்துவிட திட்டமிட்டிருப்பதாக மோடி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு 23 சுரங்கங்களை ஏலத்தில் விடும் திட்டமிருக்கிறது. வணிக ரீதியாக சுரங்கங்களை வாங்குபவர்கள், நிலக்கரியை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதற்காக நிலக்கரிச் சுரங்கங்கள் சிறப்பு சட்டம், 2015 கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலக்கரிச் சுரங்கங்களை வணிக ரீதியில் தனிப்பட்டவர்களுக்கு அரசாங்கம்  விற்க அனுமதிக்கப்படுகிறது.

வணிக ரீதியில் நிலக்கரி சுரங்கத்தைக் கொண்டு வருவதற்கு கூறப்படுகின்ற காரணம், “நிலக்கரி சுரங்கத்தை வணிக ரீதியாக நடத்துவதற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம், அரசு நடத்தும் கோல் இந்தியா லிமி (சிஐஎல்) நிறுவனத்திற்குப் போட்டியை அரசாங்கம் உருவாக்குகிறது” என்பதாகும். சிஐஎல்-னுடைய தொழிலாளர்களுடைய “உற்பத்தித் திறன் மிகக் குறைவாக” இருப்பதாக அரசாங்கம் கூறி வருகிறது. சிஐஎல்-ஐ போட்டி போடக்கூடியதாக மாற்றுவது என்ற பெயரில், வணிக நிலக்கரிச் சுரங்கங்களைப் பயன்படுத்தி சிஐஎல்-னுடைய தொழிலாளர்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும்.

தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தி வரும் மோடி அரசாங்கம், கடந்த மூன்றாண்டுகளாக இலாபம் ஈட்டிவரும் பொதுத் துறை நிறுவனங்களை பங்குச் சந்தைக்குக் கொண்டுவர வேண்டுமென்று கூறி வருகிறது. பங்குச்  சந்தையில் வெளியிட வேண்டுமானால், இந்த நிறுவனங்களுடைய பங்குகளில் குறைந்தபட்சமாக 25 சதவிகிதத்தை அரசாங்கம் விற்க வேண்டும், அல்லது புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய உடமையை அதிகபட்சமாக 75 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். முதல் கட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லா இலாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களை ஓரளவு தனியார்மயப்படுத்தும் முயற்சியின் துவக்கமாகும்.

ஓரளவு தனியார்மயப்படுத்துவதற்கு நிறுவனங்களைக் கண்டறிய வேண்டுமென எல்லா அரசாங்கத் துறைகளையும் மூதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (Dipam) அறிவுரை வழங்கியிருக்கிறது. பிப்ரவரி 1 அன்று மத்திய வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் படி, இந்திய இரயில்வேயின் மூன்று பொதுத் துறை நிறுவனங்களாகிய ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி மற்றும் ஐஆர்கான் ஆகியவற்றை எப்படிப் பங்குச் சந்தைக்குக் கொண்டுவருவது என்பது பற்றி வழிகாட்ட ஒரு அறிவுரையாளரை இந்திய இரயில்வே நியமித்திருக்கிறது.

வரும் நிதியாண்டில், ரூ 72,500 கோடி பொதுத் துறை முதலீடுகளை விற்க வேண்டுமென மத்திய வரவு-செலவு திட்டம் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. இதில் ஐந்து பொது காப்பீட்டு நிறுவனங்களை விற்பதும், சில நிறுவனங்களின் முக்கிய விற்பனையும் அடங்கும். முக்கிய விற்பனை என்றால், நிறுவனத்தை வாங்குபவர்களிடம் முழு பொறுப்பையும் விட்டுவிடுதல் அதாவது முழுவதுமாக தனியார்மயப்படுத்துதல் என்று பொருளாகும்.

இவை மட்டுமின்றி, அரசின் எண்ணெய் நிறுவனங்களையும், பாரத ஸ்டேட் வங்களின் துணை நிறுவனங்களையும் ஒன்றிணைக்க நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது.

 

Pin It