மே 22 அன்று ஐமுகூ - 2 அரசாங்கம் தன்னுடைய நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடியிருக்கிறது. அது மக்களுக்கு சேவைகளை அளிப்பதில் தன்னுடைய செயல்பாடு குறித்து தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது. நம் மக்களுக்கு உணவை உறுதி செய்வதற்கான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோமென ஐமுகூ தந்த வாக்குறுதியை அது இன்னமும் நிறைவேற்றவில்லை. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச உணவையும், ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கு முடியாதவர்களாகவும், அதிலே ஆர்வமில்லாதவர்களாகவும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும், முக்கிய அரசியல் கட்சிகளும் இருப்பது கடுமையான கண்டனத்திற்குறியது. நாட்டின் பல்வேறு பாகங்களில் பட்டினிச் சாவுகளும், ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக குழந்தைகளின் சாவும், மகப்பேறு பெண்களின் சாவும் இடம் பெற்று வருகின்றன. பசியின் காரணமாகவும், ஊட்டச்சத்துக் குறைவாலும், அது தொடர்பான நோய்களாலும் உழைப்பாளர்களும், குடியானவர்களும் முன்கூட்டியே மடிந்து வருகிறார்கள்.

இந்த முக்கியப் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்லப்படும் தேசிய உணவுப் பாதுகாப்பு மசேதா 2013 இந்த மக்களவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படுவதாக இருந்தது. இந்த மசோதா, வரைவுக் கட்டத்தில் வெகு காலமாக இருந்து பல்வேறு திருத்தங்கள் அடைந்திருக்கிறது. இறுதியில் இது ஐமுகூ அரசாங்கத்தின் அமைச்சர் குழுவால் ஒப்புக் கொள்ளப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா பற்றி தேசிய அறிவுரைக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக உணவு பற்றிய வல்லுனர் குழு 2010-இல் கூடியதிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஆகியிருக்கிறது. 2009-இல் மக்களவைத் தேர்தல்களுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகையில், கட்டுப்படியாகாத உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக எழுந்த மக்களுடைய கோபத்தின் பின்னணியில், இப் பிரச்சனைக்கு ஒவ்வொரு கட்சியும் பேச்சுக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருந்தது. வாக்களித்து ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வருவீர்களானால், இந்தப் பிரச்சனையை "போர்க்கால அடிப்படையில்" தீர்ப்போமென காங்கிரசு கட்சி அப்போது வாக்குறுதியளித்திருந்தது. மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐமுகூ அரசாங்கம் பதவியேற்று நான்காண்டுகள் முடிந்து விட்டன!

நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்திற்கு முன்னர், இந்த மசோதாவானது இதனுடைய இப்போதைய வடிவில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய அமைப்புக்கள், அனைவருக்கும் பொதுவானதாகவும், கோதுமை, அரிசி மட்டுமின்றி எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டதாக ஒரு பொது வினியாக அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பி வந்திருக்கின்றனர். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மாறாக, இந்த மசோதாவின் நோக்கமானது, ஐமுகூ அரசாங்கம் பசியையும், ஊட்டச்சத்துக் குறைவையும் பற்றி கவலை கொண்டிருப்பதாக மக்களுக்கு ஒரு மாயையை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். அதே நேரத்தில் இந்த மசோதா, நகர்ப்புறத்திலும் கிராமப்புறங்களிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு உண்மையில் எதற்கும் உத்திரவாதமளிக்கவில்லை.

இந்த மசோதா, உணவிற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதை மறுப்பது மட்டுமின்றி, இது மக்களையும் பிளவுபடுத்துகின்றது. இதன் காரணமாக, உணவுக்கான உரிமை அனைவருக்குமான ஒரு அரசியல் சட்ட உரிமையாகவும், நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமையாகவும் கேட்டுப் போராடுவதற்கான அவர்களுடைய ஒற்றுமை பிளவுபடுத்தப்படுகிறது. மக்களை "முன்னுரிமை" பெற்றவர்களென்றும், பெறாதவர்களென்றும் பிரிப்பதானது, இப்போதுள்ள வருமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்றும், மேலுள்ளவர்கள் என்றும், அட்டையே இல்லாதவர்களென்றும் பிரிப்பதிலிருந்து வேறுபட்டதல்ல. இப் பிரிவுகள் அடிப்படையற்றதாக இருக்கின்றன. வாக்கு வங்கி அரசியலை நடத்துவதற்கு, இப் பிரிவுகள், சிலருக்கு சலுகைகள் அளிக்கவும், மற்றவர்களுக்கு அதை மறுக்கவும் அரசாலும், ஆளும் வர்க்கக் கட்சிகளாலும் பயன்படுத்தப்படும்.

இரண்டாவதாக, இந்த மசோதா, அது "முன்னுமை" என அறிவித்திருக்கும் வீட்டு உறுப்பினர்களுக்கு மட்டும் கோதுமை அல்லது அரிசி வடிவத்தில் குறைந்த பட்ச கலோரியை அளிப்பது என்ற அளவிற்கு உணவுப் பாதுகாப்பு பற்றிய கருத்தை, சிறுமைப்படுத்தியிருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளைக் கொடுப்பது பற்றிய கேள்வியே அதற்கு இல்லை. சுருக்கமாகச் சொன்னால், அது உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி அவர்கள் மீதே நடத்தப்படும் வெட்ட வெளிச்சமான தாக்குதலாகும்.

இந்த மசோதா இப்போதுள்ள மக்கள் பெற்றுவரும் பல்வேறு பயன்பாடுகளைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது. சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு அநோயதயா அன்னா யோஜனா வின் கீழ் பொது வினியோக அமைப்பில் குறைந்த விலையில் தானியங்கள் போன்றவை உட்பட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 35 கிலோ உணவு தானியங்களை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கும் இளம் சிறார்களுக்கும் கூடுதல் ஊட்டச்சத்து, தேசிய மகப்பேறு நலத் திட்டம் மற்றும் ஜனனி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உரிய மகப்பேறு பயன்கள், பள்ளி மதிய உணவு, வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம், வீடற்றவர்கள், நகர்ப்புற ஏழை மக்கள், தெருவீதி குழந்தைகள், ஆதரவற்ற பெண்கள், ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகள் ஆகியோருடைய தேவைகளை நிறைவு செய்தல் போன்றனவற்றைக் குறைக்கவும், அவற்றை ஒரே திட்டத்தின் கீழ் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேற் கூறப்பட்ட பயன்பாடுகளையும், தேவைகளையும் மீண்டும் புதிதாக எடுத்து அவற்றின் அளவை விரிவுபடுத்தி எல்லா நலிவுற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றியமைப்பதற்காக அல்ல இந்தத் திட்டம்.

ஒரு நவீன - அனைவருக்கும் பொதுவான பொது வினியோக அமைப்பு முறை மட்டுமே ஒரே தீர்வு

2007-இல் குறியிட்ட பொது வினியோக அமைப்பு முறையை அரசாங்கம் கொண்டுவந்த போது, அப்போது இருந்த பொது வினியோக அமைப்பு முறையில் பல ஓட்டைகள் இருப்பதாகவும், அது யாருக்கு பயன்பட வேண்டுமோ அவர்களுக்குச் சென்றடைவதில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இன்று இந்த குறியிட்ட பொது வினியோக அமைப்பு, அது யாருக்கு பயன்பட வேண்டுமோ அவர்களில் பெரும்பான்மையோரை திட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அரசாங்கம் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் பற்றிப் பேசுகிறது. அனைவருக்கும் பொதுவான ஒரு திட்டமானது நிதி நிலைப் பற்றாக்குறையை அதிகரிக்குமென்றும், பொருளாதாரத்தில் பணவீக்க நெருக்குதலை அதிகரிக்கும் என்றும் கூறி அது, தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கத்தை குறைக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான பணமில்லை என்ற பல்லவியை ஒவ்வொரு முதலாளி வர்க்க அரசாங்கமும் பாடி வருகின்றன. அதே நேரத்தில், பொது மக்களுடைய பணத்தை முதலாளி வர்க்கம் கொள்ளையடிப்பதும், ஆயுத வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதும், மிக அதிகமான முன்னுரிமை என்று கருதப்பட்டு பொதுப் பணத்தில் மிகப் பெரிய பங்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கையானது, பசியிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பை அரசாங்கம் வழங்கிட வேண்டுமென்பதாகும். அதாவது எல்லாருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் போதுமான அளவு உணவு வழங்குதலை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். இந்த உரிமையானது, ஒரு நவீன நாகரிக சமுதாயத்தின் அங்கத்தினர்கள் என்ற காரணத்தாலேயே எல்லா மனிதர்களுக்கும் அது உரியதாகும். இந்த உரிமையை செயல்படுத்துவதற்கு, உணவின் மொத்த வழங்குதலை தேசியமயமாக்க வேண்டும், மேலும் ஒரு நவீன மற்றும் பொது வினியோக அமைப்பு முறையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு நேரெதிராக, உற்பத்தியிலும், வழங்குதலிலும் ஏற்றுமதியிலும் தனிப்பட்ட இலாபத்தை அறுவடை செய்வதற்காக அதிகபட்ச இடத்தை வழங்கும் நோக்கத்தோடு முதலாளி வர்க்கம் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. நமது நாட்டில் உணவு மற்றும் பிற பொருட்களின் வாணிகத்தை படிப்படியாக தாராளமயப்படுத்தி வருவதன் நோக்கம் இதுவாகும். இதன் காரணமாகவே, கடந்த ஆண்டு உலகத்திலேயே அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்த நாடாக இந்தியா வந்திருக்கிறது. உணவுக்கான பொதுச் செலவினைக் குறைப்பது, மிகவும் திறம்பட செயல்படுத்துவது  என்ற பெயரிலும், "மிகவும் ஏழை மக்களைக் குறிவைப்பது" என்ற பெயரிலும், பொது வினியோக அமைப்பில் பயன்பெறுவதற்கான தகுதியை வெட்டிக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியே தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவாகும். உலகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களாலும் இலாபமடிக்கும் வணிகர்களாலும் தீவிர நெருக்கடிக்கு தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளாகி வரும் இன்றைய அவல நிலைக்கு பொது வினியோக முறை அழிக்கப்பட்டதே பெருமளவில் காரணமாகும். இதை ஆளும் வர்க்கமும், அதனுடைய பொருளாதார நிபுணர்களும் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

உணவைப் பொது நலனுக்கு அத்தியாவசியமான ஒன்றாக கருதப்பட வேண்டுமென்றால், அதை வாங்குவதும், வினியோகிப்பதும் ஒரு பொதுவான திட்டப்படி செயல்படுத்தப்பட வேண்டும். அது உணவை உற்பத்தி செய்தும், அதை பயன்படுத்தியும் வருகின்ற தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுடைய கட்டுப்பாட்டின் கீழும், தனிப்பட்ட இலாபமடிப்பவர்களுக்கும், இடைத் தரகர்களுக்கும் எவ்வித பங்குமில்லாதவாறு செயல்படுத்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் பொதுவானதாகவும், பொது மக்கள் பயன்படுத்தும் எல்லா அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் கொண்டதாகவும் உள்ள ஒரு நவீன பொது வினியோக அமைப்பு முறைக்கும் குறைவானதாக எதையும் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒப்புக்கொள்ள முடியாது. பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதற்கும், உணவிற்கான உரிமையை அனைவருக்கும் வழங்குவதற்கு அரசியல் சட்ட ரீதியான உத்திரவாதத்தையும், அதை நடைமுறைப்படுத்தும் வழி முறைகளையும் தரக்கூடிய ஒரு அரசை நிறுவும், திட்டத்தையொட்டி விவசாயிகளை திரட்டுவதற்கு தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்ட இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தொடர்ந்து வேலை செய்யும். 

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா

கிராமப் புறங்களில் அதிகபட்சமாக 75% வரையிலும், நகர்புறங்களில் அதிகபட்சமாக 50% வரையிலும் என மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மட்டுமே இதன் கீழ் பயன்பெற முடியும். அவர்களுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் என்ற அடிப்படையில் அரிசி, கோதுமை பிற தானியங்கள் கிலோவிற்கு முறையே ரூ 3, 2 மற்றும் 1 என்ற ஆதரவு விலையில் கிடைக்குமென கூறப்படுகிறது.

கிராமப் புறங்களில் 75% த்தையும், நகர்புறங்களில் 50% த்தையும் தகுதியானவர்களை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்கும். அனைத்திந்திய அளவில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு எவ்வளவு என்பதைத் திட்டக் குழு தீர்மானிக்கும. மாநிலங்களில் தகுதியான குடும்பங்களைத் தீர்மானிப்பதற்கு மாநிலங்கள் தங்களுக்கென வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம் அல்லது சமூகப் பொருளாதார மற்றும் சாதி புள்ளி விவரங்களைப் பயன்படுத்தலாம்.

மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு அன்னாதயா அன்னா யோஜனா திட்டத்தின் குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியங்கள், ரூ 3, 2 மற்றும் 1 என்ற ஆதரவு விலையில் தொடர்ந்து கிடைக்கும். மேலும் தற்போது மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உணவு தானிய அளவு குறைந்துவிடாமல் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Pin It