அரசுச் செலவினங்களை அறவே எதிர்த்து வந்த நவீன தாராளமய அமைப்புகள் கோவிட்-19 தாக்குதலுக்குப் பிறகு சந்தையை சரி செய்வதற்காகவாவது அரசு செலவினங்களை அதிகரிக்க வேண்டும், விளிம்பு நிலை மக்களுக்குப் பண உதவி அளிக்க வேண்டும் என்பதை அங்கீகரித்த போதும் பாஜக அரசு சிக்கன நடவடிக்கைகளையே அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வீண் செலவுகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
நாடாளுமன்றம் என்ன இடிந்து விழும் நிலையிலா உள்ளது? 2000 கோடிக்கு மத்திய விஸ்டா திட்டம் என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அப்படி என்ன அவசரம் வந்தது? பல நூறு கோடி செலவில் ராமர் கோயிலும் கட்டப்பட உள்ளது. சமீபத்தில் ரூ.8,722 கோடிக்கு இராணுவத் தளவாடம் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாஜக கூறும் இந்தியாவின் சுய சார்பானது பாதுகாப்புத் துறையில் ஆயுத உற்பத்தியை பெருக்குவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர் அளவுக்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக அரசு.
200 கோடிக்குக் குறைவான கொள்முதல்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கதே என்ற போதும் குறைகளில்லாமல் இல்லை. 200 கோடியளவிற்கு உள்நாட்டிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும், ஆனால் 2000 கோடி மதிப்புக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்பது இரட்டை நியதிதானே? வெறும் நிதியளவின் அடிப்படையில் வரம்பிடுவது பெருநிறுவனங்களுக்கே சாதகமாக அமையும், சிறு, குறு நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஒரு நிறுவனம் அதன் மொத்தக் கொள்முதலில் குறைந்தபட்சமாக எத்தனை சதவீதம் உள்நாட்டிலிருந்து பெற வேண்டும், என்னென்ன பொருட்களை உள்நாட்டிலிருந்து பெற வேண்டும் என்பது குறித்த விரிவான ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும்.
வரியமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சீர்கெட்டது பொருளாதாரம். 2017 முதல் 2022 வரை ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்யும் விதமாக 14% வருவாய் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நிவாரணத் தொகை அளிப்போம் என்று உத்தரவாதம் அளித்து, மாநிலங்களின் வரி உரிமைகளைப் பறித்த பாஜக அரசு, இரண்டாண்டுகளுக்கு முன்னதாகவே மாநிலங்களை நட்டாற்றில் விட்டு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளது. பக்தியில் சிறந்த பாஜக அரசின் நிதியமைச்சர் கடவுள் மீது பழி போட்டுள்ளார்.
ஆனால் எந்தக் கடவுளின் செயல் அது ராமரா அல்லாவா என்று குறிப்பிடவில்லை. ‘கடவுளிடமே நம்பகமாக நடக்காத பாஜக அரசா நம்மைப் போன்ற மனிதர்களுக்கு நம்பகமாக இருக்கப் போகிறது? தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடி. செஸ், கூடுதல் வரியின் மூலம் பெறும் வருவாயிலிருந்தே நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது.
இந்த ஆண்டு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடாக வழங்க வேண்டும் ஆனால் மத்திய அரசின் கூடுதல் வரி வருவாய் வெறும் ரூ.65 ஆயிரம் கோடி மட்டுமே; ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையை அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்பதால் மத்திய வங்கியின் மூலம் கடன் பெற்று மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் விதமாக மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகளை அளித்துள்ளது.
ஒன்று மாநிலங்கள் தலைமை வங்கியிடமிருந்து கடன் பெற வேண்டும், இந்தக் கடன் மத்திய அரசின் ஜிஎஸ்டி நிவாரணத் தொகையின் மூலம் பின்னர் அடைக்கப்படுமாம். இரண்டாவது வாய்ப்பு மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் பெற வேண்டும்.
மத்திய அரசால் தலைமை வங்கியின் மூலம் நிதிப் பற்றாக்குறையைப் பணமாக்க முடியும், மத்திய அரசைப் போல் மாநிலங்கள் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்க இயலாது. மத்திய அரசைக் காட்டிலும் 2 சதவீதம் அதிக வட்டிக்கே கடன் வாங்க முடியும் எனும் போது, ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவிக்கும் மாநிலங்களின் மீது மேலும் கடனைச் சுமத்துவதுதான் இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சிக் கூட்டுறவுக்கான இலக்கணமா?
2016இல் பாஜக அரசு சொத்து வரியை நீக்கியது, பிறகு கார்ப்பரேட் வரியையும் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, வருமான வரியிலும் விலக்கு அளித்தது.
இவ்வாறு நேரடி வரி வருவாயை அதிகரிப்பதற்கு பதில், செல்வம் இருப்பவரை விட்டு இல்லாதவரையே மேலும் வருத்தும் படி சமூக நீதிக்கு புறம்பான மறைமுக வரியையே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வரி வருவாயில் பெரும் பகுதி ஏழைகளின் சுமையை அதிகரிக்கும் மறைமுக வரியிலிருந்தே பெறப்படுகிறது.
வருமான வரி செலுத்துவோர் கண்ணியமாக நடத்தப் படுவதை உறுதி செய்யும் வித்த்தில் முகமற்ற மதிப்பீடு (’faceless assessment’), மேல்முறையீடு (’appeal’), வரி செலுத்துவோருக்கான சாசனம் (’Tax Payers’ Charter’) ஆகியவற்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதில் வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது மதிப்பீட்டு அதிகாரி (’Assessment Officer’) யாரென்று தெரியாது. இதே போல் தன்னுடைய அதிகார வரம்பு (jurisdiction) எது என்பதும் வருமான வரி அலுவலருக்குத் தெரியாது.
இதனால் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அணுக முடியாத மர்மமான அமைப்பைத்தான் வெளிப்படைத் தன்மையுடையது என்று வர்ணிக்கிறது பாஜக அரசு.
இதன் மிக முக்கியமான அம்சமாகக் கூறப்படுவது வருமான வரி செலுத்துவோர் நேர்மையாளராகப் பார்க்கப்படுவார். அவரின் தன்மானத்துக்கு இழுக்கு சேர்க்கும் விதமாக குற்றவாளி போல் நடத்தப்படமாட்டார்.
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் 1.6 சதவீதம் மட்டுமே. எப்படித் தனியார் அமைப்புகள் திறனுடையவை என்ற முன்முடிவு பரவலாக்கப்படுகிறதோ அது போலவே செல்வந்தர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்ற முன்முடிவுடனே ஆளும் வர்க்கம் செயல்படுகிறது என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு. 1.6 சதவீதத்தினர் மேல் காட்டப்படும் பரிவும் அக்கறையும் மறைமுக வரி செலுத்தும் 90 சதவீதத்திற்கும் மேலான எளிய மக்களின் மேல் காட்டப்படாதது இந்திய அரசின் வர்க்கத் தன்மையையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
வெளிநாட்டு வங்கிகள் உட்பட வணிக வங்கிகள் அனைத்தும் நிகர வங்கிக் கடனில் 40 சதவீதத்தை முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கும் பொருட்டுக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என்றும், மண்டல கிராமப்புற வங்கிகள் மற்றும் சிறுநிதி வங்கிகள் நிகர வங்கிக் கடனில் 75 சதவீதத்தை முன்னுரிமைப் பிரிவுக் கடனுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்தியத் தலைமை வங்கி விதிமுறை ஏற்படுத்தியது.
இந்த முன்னுரிமைப் பிரிவுப் பட்டியலில் விவசாயம், நலிந்த பிரிவினர், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீட்டு வசதி, சமூகக் கட்டமைப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டன.
வங்கிகள் இந்த முன்னுரிமைப் பிரிவில் விவசாயத்திற்கு 18 சதவீதக் கடனும், குறு நிறுவனங்களுக்கு 7.5 சதவீதக் கடனும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் போன்ற நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதக் கடனும் அளிக்க வேண்டும். 2015இல் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் துறையும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் தலைமை வங்கி வங்கியல்லாத நிதி நிறுவனங்களையும் பயனாளிகளாக முன்னுரிமைப் பிரிவுக் கடன் பட்டியலுக்குள் கொண்டுவந்தது.
தற்பொழுது தொடக்க நிறுவனங்கள், சூரிய ஆற்றல் நீரிறைக்கும் குழாய்கள் நிர்மாணம், சிறுகுறு நிறுவனங்கள், அழுத்தப்பட்ட உயிர் எரிவாயு உற்பத்தி அமைப்புகள், ஆயுஷ்மான் பாரத் போன்ற சுகாதாரம் சார்ந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவதையும் இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது.
தற்போது தலைமை வங்கி, வங்கிகள் முன்னுரிமைப் பிரிவுக் கடனுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிகர வங்கிக் கடன் அளவை 2024 மார்ச் 31ஆம் தேதிக்குள் 75 சதவீதத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது, ஆனால் இது எந்த அளவிற்கு முறையாக செயல்படுத்தப்படும் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது வங்கித்துறையில் முடுக்கிவிடப்படும் தனியார்மயப்போக்கு இந்த புதிய நெறிமுறையையும் நீர்த்துப்போகச் செய்யுமே ஒழிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் தலைமை வங்கியால் முன்னர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளே முன்னுரிமைப் பிரிவுக் கடன் சேவையில் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் தனியார் வங்கிகளும், வெளிநாட்டு வங்கிகளும் முதன்மைக் கடனளிக்க வேண்டிய துறைகளுக்குக் குறைவாகவே கடனளித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும் போது பொதுத்துறை வங்கிகளே சமூகநீதியைக் கடைப்பிடிப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை அறிய முடியும். தனியார்மயத்தைத் தடுக்காமல் வங்கித்துறையில் எந்தப் புதிய சீர்திருத்தமும் ஏற்பட போவதில்லை.
தற்பொழுது தலைமை வங்கி 6 பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 51சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. பிரதமர் அலுவலகமும், 4 முதன்மையான பொது வங்கிகளிலுள்ள அரசின் பங்குகளைக் குறைக்குமாறு கட்டளையிட்டுள்ளது. இது காலப்போக்கில் சமூகநீதிக்குப் புறம்பான முறையில் பொதுத்துறை வங்கிகளை முற்றிலும் தனியார்மயப்படுத்தும் நடைமுறைக்கே வழிவகுக்கும்.
தேசியப் பங்குச் சந்தையில் தனியார் நிறுவனங்களின் உடைமைப் பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 44.43 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அரசின் பங்குகள் இது வரை இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளன. 11 வருடங்களில் தனியார்மயத்தால் அரசின் பங்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
2009 ஜூனில் 22.71 சதவீதம் இருந்த அரசின் பங்குகள் தனியார்மயத்தால் தற்போதுகுறைந்து 6.36 சதவீதத்தில் உள்ளது. தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 2009 ஜூனில் 14.51 இலட்சம் கோடியாக இருந்தது 60.37 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் மதிப்பு 2 இலட்சம் கோடி அதிகரித்துள்ளது. உலகளவில் ரிலையன்ஸ் தொழிற்குழுமம் ஆப்பிளை அடுத்த இரண்டாவது பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரும் சூரிய ஆற்றல் உற்பத்தி உரிமையாளராக அதானி முதலாவது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கௌஹாத்தியில் உள்ள விமான நிலையங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது பாஜக அரசு. திருச்சி உட்பட மேலும் 6 விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதும் பரிசீலனையில் உள்ளதாம்.
இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கும் போதும் பங்குச் சந்தை நிலவரமானது பொருளாதாரத்துடன் சிறிதும் தொடர்பில்லாதது போல் ஏற்றம் பெறும் நிலை காணப்படுகிறது.
ஏனென்றால் உலகளவில் வங்கிகள் பணப் புழக்கத்தை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார மந்த நிலையின் காரணமாக இந்த நிதியில் பெருமளவு உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்யப்படாமல், ஊக நிதி முதலீடுகளாகவே செய்யப்படுகிறது. நிதித் துறையல்லாதவற்றுக்குக் கடனளிப்பு வீதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலவாணி இருப்புகள் 2.296 பில்லியன் டாலர் அதிகரித்து 537.548 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மத்திய வங்கி ஆசியாவிலுள்ள மற்ற வங்கிகளைக் காட்டிலும் வெளிச்சந்தையில் அதிகமாக டாலர் வாங்கி வருகிறது. எதற்காக? இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதால் ரூபாய் மதிப்பு அதிகம் ஏற்றம் பெறாமல் தடுப்பதற்கு இவ்வாறான திறந்த சந்தை நடவடிக்கைகள் (OMO) தலைமை வங்கியால் மேற்கொள்ளப்படுகின்றன.
ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றால் நல்லதுதானே என நாம் நினைக்கலாம். ஆனால் ரூபாய் மதிப்பேற்றம் பெற்றால் இந்தியாவின் ஏற்றுமதிக்கான போட்டித் திறனை அழித்து விடுமாம்.
நிச்சயமாக ரூபாயின் மதிப்பு அந்நிய முதலீடுகளால் டாலர் அல்லது யூரோவின் அளவுக்கு மதிப்பேற்றம் அடையப் போவதில்லை எனும் போது, இதற்காக மத்திய வங்கி இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டியது அவசியம் தானா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.
ஜெர்மனியின் ஏற்றுமதி அதன் மொத்த ஜிடிபி மதிப்பில் 46.97 சதவீதமாக உள்ளது, அது டாலரை விட அதிக மதிப்புடைய யூரோவில்தான் ஏற்றுமதி செய்கிறது, முதலாளித்துவத்தில் இந்தியாவை ஜெர்மனிக்கு இணையாக வைத்து ஒப்பிட முடியாதுதான். முதலாளித்துவ நியதி இரட்டைத் தன்மை உடையது அதில் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு நியதி, வளரும் நாடுகளுக்கு மற்றொரு நியதி.
நாணயத்தை மதிப்பிழக்கச் செய்வதன் மூலம் ஏற்றுமதிக்கான போட்டித் திறனை அதிகரித்து நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும் என்ற கோட்பாடே மறுபரிசீலனைக்குரியது.
நாணயத்தை மதிப்பிழக்கச் செய்வதால் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியையும் குறைமதிப்புக்குட்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகிலிருந்தே இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் ஏற்றுமதி அதிகபட்சமாக 2013ல் 25.43 சதவீதம் இருந்தது 2014ல் 22.97 சதவீதம் குறைந்தது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்றுமதி சரிந்து 2019இல் 18.7 சதவீதமானது. குறைந்துள்ளது.
பாஜக அரசு இந்தியாவை மொத்தமாக உலக சந்தைக்கே திறந்து விட்டதே ஒழிய, உள்நாட்டின் உற்பத்தித் திறனை, தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக முதலீடுகளை அதிகரிக்கவில்லை. கோவிட்-19 தாக்கத்துக்கு முன்பே உலக வர்த்தகம் குறைந்திருந்த நிலையில் தற்பொழுது ஏற்றுமதியை முன்னிறுத்தும் கொள்கைகள் இன்றைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்புடையதல்ல.
ரூபாயின் மதிப்பு அதிகமானால் கடன் பத்திரங்களிலான முதலீடுகளும், இறக்குமதிக்கான கட்டணமும் குறையும், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் மதிப்பு குறையும், பண வீக்கமும் குறையும்.
அந்நிய முதலீடுகளில் பெரும்பாலும் குறுகிய காலத்தில் இலாபம் பெறுவதற்கான நிதி மூலதனங்களே இருப்பதால், அவை திடீரென்று வெளியேறும் போது ரூபாயில் ஏற்படும் சரிவைத் தடுக்கவும் தலைமை வங்கியின் திறந்த சந்தை நடவடிக்கை தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 6.5 பில்லியன் டாலர் நிதிமுதலீடுகள் வெளியேறியுள்ளன.
இதற்கு மாற்று என்ன, ஊக முதலீடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அந்நிய நிதி முதலீடுகளை ஒழுங்குமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர காலம் முழுவதும் வெட்டித்தனமாக டாலரை வாங்குவதன் மூலம் அல்ல.
ஜூலையில் விலைவாசி:
ஜூலை மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான பணவீக்கமானது 6.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 9.62 சதவீதம் அதிகரித்துள்ளது. தானியப் பொருட்களின் விலையானது 6.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறத்தில் பணவீக்கம் 7.04 சதவீதமாகவும், உணவுப் பொருட்களில் விலைவாசி 9.89 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறத்தில் பணவீக்கம் 6.84 சதவீதமாகவும் உணவுப் பொருட்களில் விலைவாசி 9.05%ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 7.04 சதவீதமாக உள்ளது.
ஜூன் மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீடு:
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தொழில் உற்பத்திக் குறியீடானது ஜூனில் 16.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் 35.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. முதன்மைத் துறைகளில் உற்பத்தியின் வளர்ச்சியானது சுரங்கத் துறையில் 19.8 சதவீதமும், உற்பத்தித் துறையில் 17.1 சதவீதமும், மின்சாரத் துறையில் 10.0சதவீதமும் குறைந்துள்ளது.
பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் மூலதனப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி 36.9 சதவீதம் குறைந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 25.1 சதவீதமும், கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 21.3 சதவீதமும், நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 35 சதவீதமும் வீழ்ந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி மட்டுமே 14% அதிகரித்துள்ளது. புகையிலையைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் எதிர்க் குறியீட்டில் உள்ளது.
ஜூலையில் வளர்ச்சி நிலை:
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட தகவலின் படி எஃகு, சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் பெருமளவு சரிவு ஏற்பட்டதால், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஜூலையில், எட்டு முதன்மை உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 9.6 சதவீதம் குறைந்தது. 2019 ஜூலையில் எட்டு முதன்மைத் துறைகளின் உற்பத்தி 2.6 சதவீதம் அதிகரித்திருந்தது.
2019-20 ஏப்ரல்-ஜூலை காலப்பகுதியில், 3.2 சதவீத வளர்ச்சி கண்ட இந்த முதன்மைத் துறைகளின் உற்பத்தி 2020-21 ஆண்டின் அதே காலகட்டத்தில் 20.5 சதவீதம் குறைந்துள்ளது. உரத்தைத் தவிர, மற்ற ஏழு துறைகளும் –- எஃகு (16.5%), சுத்திகரிப்புப் பொருட்கள் (13.9%), சிமெண்ட் (13.5%), இயற்கை எரிவாயு (10.2%), நிலக்கரி (5.7%), கச்சா எண்ணெய் (4.9%) மற்றும் மின்சாரம் (2.3%) -- ஜூலை மாதத்தில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தன. 2019 ஜூலை மாதத்தில் 1.5 சதவீதம் இருந்த உர உற்பத்தியின் வளர்ச்சி 2020 ஜூலையில் 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதல் காலாண்டில் இந்திய பொருளாதார நிலை:
தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் படி 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பு - ஜிடிபி (-) 22.8 சதவீதமாகக் குறுக்கமடைந்துள்ளது.
முதல் காலாண்டு ஜிடிபி கணக்கீட்டில் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், அது முறைசாரா துறையின் தரவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை, ஜூன் காலாண்டின் மதிப்பானது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஜிடிபி குறுக்கம் குறைத்து மதிப்பிடப்பட்டுடுள்ளதாகவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முதல் காலாண்டில் எஃகின் நுகர்வு 56.8 சதவீதம் குறைந்துள்ளது, சிமெண்ட் உற்பத்தி 38.3 சதவீதம் குறைந்துள்ளது. சுரங்கத்துறை (23.3%), உற்பத்தித் துறை (39.3%), கட்டுமானத் துறை(50.3%), வர்த்தகம், போக்குவரத்து, தொலைத்தொடர்புத் துறை (47%) ஆகியவற்றின் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
பொது நிர்வாகம், பாதுகாப்பு, மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி 10.3% குறைந்துள்ளது, மொத்த நிலை மூலதன உருவாக்கம் 47.5% குறுக்கமடைந்துள்ளது. ஜி20 நாடுகளில் அதிகப் பொருளாதார சரிவடைந்த நாடு இந்தியாதான். முதல் காலாண்டில் இந்தியா விவசாயத் துறையில் மட்டுமே 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தப் பருவத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்பானது 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாராளமயச் சீர்திருத்தங்கள் இதன் பயன்பாட்டை எளிய விவசாயிகளுக்குச் செல்லாத வண்ணம் தடுக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்தியப் பொருளதாரக் கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டின் படி ஏப்ரலுக்கும் ஜூலைக்கும் இடையே 1.8 கோடி ஆட்கள் வேலையிழந்துள்ளனர். மற்றவர்களின் ஊதியமும் குறைந்துள்ளது.
மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை ஜூலையில் 7.43%ஆக இருந்தது, ஆகஸ்டில் 8.35%ஆக அதிகரித்துள்ளதாகவும் அவ்வமைப்பு கணக்கிட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது கோவிட்-19 நோய் 403 மில்லியன் இந்தியர்களை மேலும் வறுமைக்குள் தள்ளியுள்ளதாகவும், 121 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் பொது விநியோக முறையில் தானியங்கள் வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் உதவித் தொகையும் வந்து சேரவில்லை. வருமானக் குறைவினாலும், வேலையின்மையாலும், மக்கள் அடிமட்டக் கூலிகளாகத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, நுகர்வும் குறைந்துள்ளது.
செய்ய வேண்டியது என்ன? வேலைவாய்ப்பை அதிகரித்து, மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் விதத்தில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலமே மக்களின் துயரைத் தணிக்க முடியும். ஆனால் பாஜக அரசு சிக்கன நடவடிக்கைகளையே தொடர்கிறது. பாஜக தலைமை இந்தியாவை உலகளவில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவிய மூன்றாவது நாடாக உயர்த்தியுள்ளது. முதல் நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிதி அயோக் தலைவர் அர்விந்த் பனகரியா, கோவிட்-19 தாக்கத்தாலும், பொருளாதார முடக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் தணிக்க பாஜக அரசு அதிக நிதித் தொகுப்பு கொடுக்காததை வரவேற்றுள்ளார். நேரடிப் பண உதவி அளிக்கும் திட்டங்களை இதற்கு மேல் அளிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காப்பு வரியை உயர்த்தும் இந்தியாவின் முடிவை எதிர்க்கிறார். ஏனென்றால் அது உலக வர்த்தக மைய நியதிகளுக்குப் புறம்பானதாம், நவீன தாராளமயம் அவர் கண்களை மறைத்ததால் தடையற்ற வர்த்தகத்தால் பாதிக்கப்படும் உள்நாட்டினர் அவருக்கு ஒரு பொருட்டல்லர்.
புதிய கல்விக் கொள்கையை அவர் எதிர்க்கிறார், எதற்காக என்று பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற வெற்றெழுத்துகளைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கிறார்.
அவர் கூறியவற்றில் பெயரளவிற்காவது தேசபக்தி துளியேனும் உள்ளதா. பார்க்கப் போனால் அரவிந்த் பனகரியா ஒரு கடைந்தெடுத்த ‘ஆன்டி’ இந்தியராகவே இருக்கிறார். இப்படிப்பட்ட ‘ஆன்டி’ இந்தியர்களின் தலைமையால்தான் கோவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி என்னும் இரட்டை நோயால் மக்கள் துயருற்றுத் தவிக்கின்றனர்.
- சமந்தா