cuba girls warஅர்ஜெண்டினாவில்:

தான்யாவின் இயற்பெயர் தமாரா புங்கே. அவர் 1937 நவம்பர் 19ஆம் நாள்  அர்ஜெண்டினாவில் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார். தானியாவின் தந்தை எரிக் ஓட்டோ ஹென்ரிச் பங்கே ஒரு ஜெர்மானியர். அவரது தாய் நாடியா பைடர் போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர். அவரது தந்தை, எரிச் பங்கே, 1928இல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவர்கள் இருவருமே ஆசிரியப் பணியில் ஈடுபட்டனர், கம்யூனிஸ்டுகளாகவும் செயல்பட்டனர்.

ஜெர்மனியின் மூன்றாம் ரெய்ச்சின் (நாடாளுமன்றம்) தலைவரான அடோல்ஃப் ஹிட்லர் யூதர்களையும் இடதுசாரிகளையும் அழிக்கத் தீர்மானித்த போது, ​​நாஜி துன்புறுத்தலில் இருந்து தப்புவதற்காக 1935இல் அவர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் முதலில் சோவியத் ஒன்றியத்தில் வசிக்கவே விரும்பிய போதும் அதற்கான ஆவணங்களைப் பெறுவதற்கு  நேரம் இல்லாததால், தமாராவின் தாய் நாடியா தன் மகன் ஓலாஃப் பிறந்த சிறிது நேரத்திலேயே, பிறந்த குழந்தையுடன் போலந்து பாஸ்போர்ட்டில், முதலில் வார்சாவுக்குத் தப்பி, பின்னர் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பிரான்ஸ் வழியாக இறுதியில் அர்ஜெண்டினாவை அடைந்தார்.

தம்பதிகள் இருவரும் அர்ஜெண்டினாவில் மீண்டும் ஒன்றிணைந்தனர். அர்ஜெண்டின கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகி அவர்கள் தலைமறைவு  வேலைகளை மேற்கொண்டனர், ஸ்பானிஷ் மொழியைக் கற்று அர்ஜெண்டினாவின் குடிமக்களாகினர். ஜெர்மன் தவிர, அவரது தாயார் ரஷ்ய மொழி பேசினார், அவரது தந்தை மொழிகளுடன் கூடுதலாக ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்புகளும் எடுத்தார். தமாரா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1937இல் பிறந்தார்.

தமாராவும், அவரது அண்ணன் ஓலாஃபும் சிறு வயதிலிருந்தே அரசியல் செறிந்த சூழலில் வளர்ந்தனர். பியூனஸ் அயர்ஸில் உள்ள அவர்களது வீடு அரசியல் கூட்டங்களுக்கும், அகதிகளுக்கு உதவுவதற்கும், வெளியீடுகளை மறைப்பதற்கும், அவ்வப்போது ஆயுதங்கள் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. தமாரா சிறு வயதிலிருந்தே நீந்தினார், குதிரை சவாரி செய்தார், சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். தென் அமெரிக்காவின் நாட்டுப்புற இசையில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஜெர்மனியில்:

1952இல், தமாராவுக்கு 14 வயதாக இருந்த போது, ​​அவரது பெற்றோர் கிழக்கு ஜெர்மனியில் சோசலிச அரசு ஆட்சியமைத்த பின் ஜெர்மனிக்குத் திரும்பினர். அவர்கள் போலந்தின் எல்லையில் உள்ள ஸ்டாலின்ஸ்டாட் (இப்போது ஐசென்ஹாட்டன்ஸ்டாட்) நகரில் குடியேறினர். அங்குதான், தமாரா ஐரோப்பா முழுவதிலும் பாசிசம் ஏற்படுத்திய வலி வேதனைகளை அறிந்து கொண்டார், தமாரா பதின்பருவத்தில்தான் ஜெர்மன் மொழியைக் கற்கத் தொடங்கினார்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க அவர் சுதந்தர ஜெர்மன் இளைஞர்களின் அமைப்பில் சேர்ந்தார். உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பிலும் சேர்ந்தார், தமாரா ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பயின்றார். விளையாட்டு வீர்ராகப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார்.

18 வயதிலேயே அவர் ஜெர்மனியின் ஒருங்கிணைந்த சோசலிஸ்ட் கட்சியின் அணிகளில் பணியாற்றத் தொடங்கினார். ஆனாலும் தமாரா அர்ஜெண்டினாவையோ இலத்தீன் அமெரிக்காவையோ மறக்கவேயில்லை. அவர் அக்கார்டியனையும், கிதாரையும் வாசித்தவாறே அர்ஜெண்டின மிலோங்காஸ், டேங்கோஸ் மரபுப் பாடல்களைப் பாடினார். இலத்தீன் அமெரிக்கர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

தான்யாவின் பன்மொழித் திறனாலும் (அவர் சரளமாக ரஷ்யன், பிரஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகள் பேசினார்), இலத்தீன் அமெரிக்கப் பின்னணியாலும் அவர் சுதந்திர ஜெர்மன் இளைஞர்களின் சர்வதேசத் துறையின் மொழிபெயர்ப்பாளரானார். வியன்னா, பிராக், மாஸ்கோ மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடந்த இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழாவில் கலந்து கொண்டார். 1959 கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கியூபாவிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு மொழிபெயர்க்கும் சேவையை மேற்கொண்டார்.

1960இல் சே குவேரா பணி நிமித்தமாக ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் லீப்ஜிக்கிற்கு ஒரு கியூப வர்த்தகக் குழுவுடன் வருகை தந்த போது தான்யா அவரது மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

கியூபாவில்:

1961ஆம் ஆண்டில், தமாரா பங்கே ஒரு மொழி பெயர்ப்பாளராக கியூபாவுக்கு வந்தார். அவர் முதலில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டார். கியூப எழுத்தறிவு இயக்கத்தில் பங்கேற்றார். அவர் கல்வி அமைச்சகத்திலும் கியூப மக்களின் நட்பமைப்பிலும், கியூப பெண்கள் கூட்டமைப்பிலும் பணியாற்றினார். தமாரா கியூபாவில் குடியேற முடிவு செய்து இலத்தீன் அமெரிக்காவின் முதல் சோசலிசப் புரட்சியைப் பாதுகாப்பதில் பங்களிக்க விரும்பினார். ஹவானா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்து பயின்றார்.

தமாரா வெளிநாட்டுக்குச் செல்வதைப் பற்றி அறிந்த ஜெர்மானிய சோசலிச ஒற்றுமைக் கட்சியின் முக்கிய அதிகாரி அவரிடம் "நாங்கள் உங்களை நன்கு அறிவோம்; நாங்கள் உங்களை முழுமையாக நம்புகிறோம், நீங்கள் எங்கு சென்றாலும், அது ஒரு சோசலிச நாடாகவோ அல்லது முதலாளித்துவ நாடாகவோ இருந்தாலும், நீங்கள் புரட்சிகர இயக்கத்தில் தொழிலாள வர்க்க அணியில் போராட்டத்தைத் தொடருவீர்கள்” என்று கூறியதாக அவரது தாயார் நினைவு கூர்ந்துள்ளார்.

1962இல் புரட்சி ஏகாதிபத்தியச் சக்திகளால் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான போது. தான்யா தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:

"ஆம், இது உண்மையில் மிகவும் கடுமையான சூழ்நிலை தான் ... ஆனாலும் புரட்சிகரப் போராட்டம் மிகவும் கடினமாக இருக்கும் இந்த இடர்மிக்க சூழலுக்கு நடுவில் இருப்பதை விட அழகானது எதுவும் இல்லை என்பதை மீண்டும் உங்களுக்கு என்னால் சொல்ல முடியும். கியூபப் புரட்சியைப் பாதுகாப்பதற்காக கியூபாவில் இருக்க எத்தனை பேர் விரும்பியிருப்பார்கள்! அவ்வாறு செய்யும் நல்வாய்ப்பைப் நான் பெற்றுள்ளேன். இதற்குத்தான் நான் இலத்தீன் அமெரிக்காவுக்குத் திரும்பினேன் நான் எல்லா வசதிகளுடன் நன்றாய் வாழ விரும்பியிருந்தால்,  பெர்லினிலேயே தங்கியிருப்பேன் அங்குதான் எனக்கு எல்லாம் கிடைத்ததே! இலத்தீன் அமெரிக்கப் புரட்சி படிப்படியாக ஒரு உயர் நிலையை நோக்கி முன்னேறி வருகிறது, அதில் பங்கேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன்! ... தாய்நாடு அல்லது இறப்பு! நாம் வெல்வோம்!"

தமாராவின் திறமையை அறிந்த சே குவேரா அமெரிக்க ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறும் விதமாக இலத்தீன் அமெரிக்கா முழுவதும் விடுதலைப் புரட்சி ஏற்படுத்தி "இரண்டு, மூன்று எனப் பல வியட்நாம்களை" உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு பொலிவியாவில் தொடங்கவிருக்கும் ஃபேண்டஸ்மா திட்டத்திற்கு  அவரையும் தேர்ந்தெடுத்தார்.

பொலிவியாவிற்கான சே குவேராவின் திட்டத்தின் முதன்மை அமைப்பாளராக உலிசஸ் எஸ்ட்ராடா இருந்தார். 1963இல், சே குவேராவுக்கு முன்பே பொலிவியாவிற்கு அனுப்பவிருந்த முக்கிய இரகசிய முகவராக தான்யாவைப் பயிற்றுவித்தார் உலிசஸ் எஸ்ட்ராடா. புலனாய்வுப் பணிகளுக்காக தான்யா கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார்.

தலைமறைவாக வாழவும், ஆபத்திற்குரிய சிக்கலான பணிகளை நிறைவேற்றவும், இரகசியமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், துன்பங்களை அமைதியாகச் சகித்துக் கொள்ளவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். வானொலி மூலம் எவ்வாறு இரகசியத் தகவல் தொடர்பு கொள்வது என்பதையும் கற்றுக் கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில்தான் தமாரா தான்யாவாகப் பிறந்தார். நாஜிக்களை எதிர்த்துப் போராடிய சோவியத் ரஷ்யாவின் வீரமகள் தான்யாவின் நினைவில் அப்பெயரையே தன் புனைபெயராகச் சூட்டிக் கொண்டார் தமாரா. உளவு நடவடிக்கை விதிமீறலாக இருந்த போதும், தான்யாவாலும், உலிசஸ் எஸ்ட்ராடாவாலும் ஒருவரை ஒருவர் நேசிக்காமல் இருக்க இயலவில்லை. அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு அது தடையாகவும் இருக்கவில்லை.

1964 மார்ச்சில் சே குவேரா தொழில்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் பொலிவியத்  திட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய இரகசியப் பணிகளை தான்யாவிடம் விவரித்தார். இலத்தீன் அமெரிக்கக் கண்டம் முழுவதும் புரட்சியை ஏற்படுவதை இலக்காக கொண்ட கெரில்லா இயக்கத்தின் நகர்ப்புற வலையமைப்பை தான்யாவே உருவாக்க வேண்டியிருந்தது.

எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் அங்குள்ள இடதுசாரி அரசியல் அமைப்புகளுடன் ஒன்றிணைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உண்மையான அடையாளத்தை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் சே குவேரா தான்யாவை எச்சரித்தார்.

கியூப அரசிற்காக (1961-1967) பணியாற்றிய ஆண்டுகளில், தான்யா பல்வேறு மாறுவேடங்களை ஏற்றார். மார்ட்டா இரியார்ட்டே என்ற செக் பெண்ணாக மாறினார். விட்டோரியா பான்சினி என்ற  இத்தாலியப் பெண்ணாகவும் மாறினார். 1964 ஏப்ரல் 9இல், ஹெய்டி பைடர் கோன்சலஸ் என்ற பெயரிலான கடவுச்சீட்டுடன் தான்யா மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றார். கியூப உள்துறைத் தொழில்நுட்பத் துணை அமைச்சகத்தின் மற்றொரு முகவரான ஜோஸ் கோமேஸ் அபாத்  தான்யாவுக்கு பிராக் நகரில் பயிற்சியளித்தார்.

1964ஆம் ஆண்டு ஏப்ரல் 11இல் பிராக் நகரிலிருந்த போது தனது தாய்க்கு அனுப்பிய கடிதத்தில் தன் புரட்சிப் பணியின் வெற்றி பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையையும், உலிசஸ் எஸ்ட்ராடாவுடனான காதலையும், தன் கனவுகளையும் பின்வருமாறு எழுதியுள்ளார். “சரி, இப்போது இன்னொரு விஷயம்: நான் திரும்பி வருவதற்கு முன்பு அவர்கள் என் சின்னக் கறுப்பரை திருடவில்லை என்றால், திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.

அவர் எப்படி இருப்பார்: ஒல்லியாக, உயரமாக, மிகவும் கறுப்பாக, மிகவும் பாசமுள்ள கியூபர், நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ??? ஆ, நான் மிக முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன்: அவர் மிகவும் புரட்சிகரமானவர், அவரும் மிகவும் புரட்சிகரமான பெண்ணையே விரும்புபவர்.”

அரசியல் ஆர்வமில்லாதவராக, கம்யூனிச எதிர்ப்பாளரைப் போல் இருக்கும் விதமாக தன் மொழியையும், பழக்கங்களையும் மாற்றிக் கொண்ட தான்யா, லாரா குட்டிரெஸ் பாயரின் என்ற புதிய அடையாளத்துடன் பொலிவியாவுக்குப் புறப்பட்டார்.

பொலிவியாவில் (1964-67):

தான்யாவை நேரடியாக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது சே குவேராவின் திட்டம் அல்ல. பொலிவிய அரசின் ஆளும் வர்க்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி உளவு வேலை செய்வது, அவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பது, கெரில்லாப் போராளிகளைத் தலைமறைவாக, பாதுகாப்பாக இருப்பதற்கான சூழ்நிலைகளை உறுதி செய்து ஆயுதப் போராட்டங்களுக்கான தயாரிப்பு மற்றும் அமைப்பாக்க வேலைகளை தான்யாவிடம் ஒப்படைத்தார்.

அக்டோபர் 1964இல் பொலிவியத் திட்டத்தின் உளவாளியாக லாரா குட்டிரெஸ் பாயர் என்ற பெயரில் ஒரு இனவியலாளராக பொலிவியாவின் லா பாஸை அடைந்தார். பொலிவிய ஆளும் வர்க்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களைப் பற்றியும் இராணுவத்தின் வலிமை பற்றியும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும், பொலிவியா முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் பயணம் செய்து  சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்.

இனவியலாளரும், தொல்லிசையியலாளருமான ஜூலியா எலெனா ஃபோர்டனுடன் நட்புக் கொண்ட தான்யா அவரது ஆய்வுக் குழுவில் இணைந்து பணியாற்றினார், இது கல்வி அமைச்சகத்தின் நாட்டுப்புறவியல் துறையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒரு வலதுசாரியாகவும் நாட்டுப்புறக் கலை நிபுணராகவும் நடித்து, பொலிவியாவின் கல்வி மற்றும் அதிகார வட்டங்களின் நட்பைப் பெற்றார்.

பொலிவியாவின் ஜனாதிபதி ரெனே பேரியெண்டோஸின் நட்பையும் பெற்றார். இவ்வாறு அரசியல் உயரடுக்கைப் பற்றியும், அதன் ஆயுதப் படைகளின் வலிமை பற்றியும் தகவல் சேகரித்தார். இராணுவத்துடனான அமெரிக்க உறவுகள் மற்றும் முக்கிய ஆயுதப் பிரிவுகளின் இருப்பிடம் பற்றிய தகவல்களையும் பெற்றார்.

தான்யா நாட்டுப்புறக் கலையை ஆர்வத்துடன் பயின்றார். பொலிவிய மலைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் போது நாட்டுப்புற பாடல்களை சேகரித்தார். பொலிவிய இசையின் அரிய தொகுப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளார். அர்ஜெண்டினாவின் சால்டா நகரில் நடைபெற்ற விழாவில் பொலிவியக் கல்வி அமைச்சகத்தின் நாட்டுப்புறவியல் துறை சார்பில் கலந்து கொண்டார்.

தான்யா அங்குள்ள குழந்தைகளுக்கு ஜெர்மன் மொழியைப் பயிற்றுவித்தார், இதன் மூலம் அவர்களின் வீடுகளுக்குச் செல்லவும், உறவினர்களுடன் உரையாடுவதற்குமான  வாய்ப்பைப் பெற்றார்.

தான்யா தனது குடியிருப்பில் சுவரின் பின்னால் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வானொலியின் மூலம், பெண்களுக்கு ஆலோசனை  என்ற நிகழ்ச்சியின் மூலமாக வானொலி ஒலிபரப்பாளராகப் பணியாற்றிக் கொண்டே, இடையிடையே குறியீடுகளின் மூலம் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும், சே குவேராவுக்கும் இரகசியத் தகவல்கள் அனுப்பியுள்ளார்.

1965இல், தான்யாவின் சிறந்த சேவைகளுக்காக கியூப கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியின் உறுப்பினராக்கிய போது பெருமகிழ்ச்சி அடைந்தார். 1966இல் தான்யா பொலிவியக் குடியுரிமையும், கடவுச் சீட்டும் பெறுவதற்காக ஒரு முக்கியமான சுரங்கப் பொறியாளரின் மகனும், மின்சாரப் பொறியியல் மாணவருமான மரியோ மார்டினெஸைத் திருமணம் செய்து கொண்டார்.

1966 ஜூலையில், தான்யா கெரில்லாப் போராளிகளின் வருகைக்கான தயாரிப்பு வேலைகளைத் தொடங்கினார்: அவர் கிடங்குகளாக பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான வீடுகளை வாடகைக்கு எடுத்தார். சே பொலிவியாவுக்கு வந்த போது, ​​மொரிசியோவையும், ஜோசாமியையும் கெரில்லா முகாமில் சந்திக்க அர்ஜெண்டினாவுக்குச் செல்லுமாறு தான்யாவுக்கு உத்தரவிட்டார். அர்ஜெண்டினாவில் கெரில்லா வலையமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் சே ஈடுபட்டார்.

பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியுற்றது. பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்திற்குத் தலைமையேற்க விரும்பியது, சே அதை மறுத்து விட்டார்.

1967 மார்ச்சில் கெரில்லாப் போராளிகளுக்கும் பொலிவிய இராணுவப் படைகளுக்கும் முதல் ஆயுத மோதல் ஏற்பட்டது. கெரில்லா போராளிகள் எதிரிகளை வென்று ஆயுதங்களையும், எதிரிகளின் செயல்பாட்டுத் திட்டங்களையும் கைப்பற்றினர்.

மார்ச்சில், அர்ஜெண்டினாவில் அனைத்துத் தடைகளையும் கடந்து, தனது பணியை முடித்த, தான்யா தனது வாகனத்தில் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ரெஜிஸ் டெப்ரே மற்றும் அர்ஜெண்டின சிரோ புஸ்டோஸ் ஆகியோருடன் கெரில்லாப் போராளிகளின் இடத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார். சே அங்கு இல்லை.

அவருக்காகக் காத்திருந்த போது, ​​விசென்டே ரோகாபாடோ டெர்ராசாஸ் மற்றும் பாஸ்டர் பரேரா குயின்டனா ஆகிய பொலிவியப் போராளிகள் அங்கிருந்து தப்பித்து வெளியேறினர், அவர்கள் ஆயுதங்களை விற்க முயன்ற போது அவர்களின் மூலம் பொலிவியா இராணுவமும் உளவுத்துறையும் கெரில்லா முகாமில் தான்யா இருப்பதையும், அவர் ஒரு வாகனத்தில் பயணம் செய்து காமிரிக்கு வந்ததையும் தெரிந்து கொண்டனர். அந்த வாகனத்தில் தவறுதலாக விடப்பட்டிருந்த அவரது ஆவணங்களிலிருந்து லாரா குட்டிரெஸ் பாயர் என்ற பெயரில் உள்ள தான்யா ஒரு கெரில்லாப் போராளி என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

அதன் பிறகு தான்யா நகர்ப்புறத்தில் இருப்பது உயிருக்கு ஆபத்து என்பதால் அவர் கெரில்லா போராளிகளின் ஆயுதப் படைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு சீருடையும், எம் -1 துப்பாக்கியும் தரப்பட்டது. சே குவேரா, தான்யாவை ஜோவாகின் (ஜுவான் விட்டாலியோ அக்குனா நீஸ் தலைமையிலான ஆயுதப் படையில் தான்யாவை இணைத்தார்.

தான்யாவும் ஆயுதப் போராளியாக ஆனதால் வெளி உலகுடன் தொடர்பில்லாமல், போராளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தான்யா உணவு விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றார், வானொலி ஒலிபரப்புகளை கண்காணித்து தகவல் அளித்தார். கரடுமுரடான நிலப்பரப்பில், பாறைகளில் கயிறுகளை கட்டி நடக்க வேண்டியிருந்தது. தான்யா காலில் கடுமையான புண்களுடன் நடந்து சென்றார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மற்ற போராளிகளும் சிகோ ஒட்டுண்ணியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அதனால் சே குவேரா  நோயுற்ற போராளிகளைக் கொண்ட குழுவை மலைகளுக்கு வெளியே அனுப்ப முடிவு செய்தார். சே போராட்டப் படைகளை இரண்டாக பிரித்தார்.

ஜோவாகின் தலைமையின் கீழ், கெரில்லா மறுசீரமைப்புப் படையை ரியோ கிராண்டே ஆற்றுப் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.  நாளடைவில் இரண்டு படைகளும் அறவே தொடர்பிழந்தன.

மரணம்:

ஆகஸ்ட் மாத இறுதியில், ஜோவாகின் தலைமையில் படையினர் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஹொனராடோ ரோஜாஸ் வீட்டை  அடைந்தனர். ரோஜாஸ், அவர்களுக்கு வாடோ டி யேசோவுக்குக் குறுக்கு வழியில் செல்ல வழிகாட்டுவதாக ஒப்புக் கொண்டார். அவர்கள் அதே வீட்டில் தூங்கினர்.

ஆகஸ்ட் 31 அன்று, ஒப்புக்கொண்ட நேரத்தில், கெரில்லாப் போராளிகளை துரோகி ரோஜாஸ், வாடோவுக்கு வழிகாட்டுவது போல் அவர்களைக் காட்டிக் கொடுத்தார். அவர்கள் நடந்து கொண்டே இருந்தனர், சூரியன் மறைவதற்கு முன்பு, ரோஜாஸ் அவர்களிடம் கைகுலுக்கி விடை பெற்றார். ஆற்றின் இரு மருங்கும், சுடுவதற்குத் தயாராகத் துப்பாக்கிகளுடன் பொலிவிய ராணுவத்தின் ரோந்துப் படையினர் சூழ்ந்திருந்தனர்.

இடுப்பு வரை தண்ணீர் சூழ நின்றிருந்த தான்யா தன் துப்பாக்கியின் விசையை அழுத்த முயலும் போது ஒரு தோட்டா அவர் நுரையீரலைக் கிழித்துச் சென்றது. அவர் நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்டார். அவருடன் இருந்த 7 கெரில்லாப் போராளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 6இல் அவரது உடல் பொலிவிய இராணுவத்தால் மீட்கப்பட்டது. அவரது சடலம் மற்ற கெரில்லா போராளிகளுடன் அடையாளமிடப்படாத கல்லறையில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆகஸ்ட் 31ஆம் தேதியும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் பூக்களால் நிறைகிறது. கெரில்லா தான்யா, ரியோ கிராண்டேவின் காட்டுப் பூவாக இலத்தீன் அமெரிக்கா எங்கும் விடுதலை வேட்கைக்குப் புத்துயிர் ஊட்டுகிறார்.

அவரது மரணம் வானொலியில் அறிவிக்கப்பட்ட போது, அருகில் காடுகளிலிருந்த சே குவேரா இச்செய்தியை முதலில் நம்ப மறுத்து விட்டார்; தன்னை மனச் சோர்வடையச் செய்வதற்காக இராணுவம் செய்யும் பிரசாரம் என்று சந்தேகித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ தான்யாவின் மறைவை அறிந்ததும், "கெரில்லா தான்யா கியூபப் புரட்சியின் நாயகர்” என்று அறிவித்தார்.

தான்யாவின் நினைவில்:

1995இல், ஓய்வுபெற்ற பொலிவிய இராணுவ அதிகாரி ஜெனரல் மரியோ வர்காஸ் சலினா, சே குவேராவின் வாழ்வை ஆய்வு செய்த வரலாற்றாசிரியரான ஜான் லீ ஆண்டர்சனிடம் கெரில்லாப் போராளிகள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தெரிவித்துள்ளார். ஜான் லீ ஆண்டர்சன் மூலம் 1997இல் சே குவேராவின் உடல் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு, தான்யா பங்கேயின் உடல் மீதங்கள் 1998 அக்டோபர் 13 அன்று வலேக்ராண்டே இராணுவத் தளத்தின் அடையாளமிடப்படாத கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டு கியூபாவுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது. சே குவேராவும் பொலிவியாவில் இறந்த போராளிகளும் அடக்கம் செய்யப்பட்ட சாண்டா கிளாரா கல்லறையில் தான்யா அடக்கம் செய்யப்பட்டார்.

1974ஆம் ஆண்டில் சிம்பியோனீஸ் விடுதலை இராணுவத்தை சேர்ந்த பாட்டி ஹியர்ஸ்ட் "தான்யா" என்று தன் பெயரைப் மாற்றிக் கொண்டார்.

1974இல் சோவியத் வானியலாளர் லியுட்மிலா ஜுராவ்லியோவாவால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கிரகத்திற்கு ”2283 தான்யா பங்கே” எனப் பெயரிடப்பட்டது.

வெனிசுலா நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் அலி பிரைமரா தான்யாவின் அர்ப்பணிப்பை நினைவுபடுத்தும் வகையில். தான்யா என்ற பாடலை எழுதினார்.

லூய்கி நோனோவின் 1972 இசை / நாடகப் படைப்பான அல் கிரான் சோல் கரிகோ டி அமோரின் முதல் பகுதியிலும் தான்யா பங்கே இடைவிடாது தோன்றுகிறார்.

ஹெய்டி ஸ்பெகோக்னா தான்யாவைப் பற்றிய ஒரு ஆவணப் படத்தை 1991இல் வெளியிட்டார்.

ஜெர்மனி ஒன்றுபடுவதற்கு முன்பு, கிழக்கு ஜெர்மனியில் தான்யாவின் பெயரில் 200 இளைஞர் கழகங்கள் செயல்பட்டன..

“ஒரு நாள் என் பெயர் மறக்கப்படுமா,

என்னைப் பற்றிய எதுவுமே இப்பூமியில் இருக்காதா?”

தான்யா பங்கே  1966ல் எழுதிய கடைசிக் கவிதையின் வரிகள் இவை.

இல்லை, வீரத் தான்யா! சர்வதேசியவாதியாய் அர்ஜெண்டினாவில் தொடங்கி, ஜெர்மனி, கியூபா, பொலிவியா என எங்கும் புரட்சியை விதைத்த உங்களை மறக்க முடியுமா தான்யா? உங்கள் நினைவாக உலகெங்கும் தான்யாக்கள் பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள், தான்யாக்கள் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்…. தான்யாக்கள் என்றென்றும் பிறப்பார்கள், போராடுவார்கள்…

(தொடரும்)

- சமந்தா

Pin It