தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முகநூல் நேரலையில் தொடர்ந்து இணையவழிப் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது. 

  • கொரோனாவை வெல்வோம்! பொழிவுத் தொடரில் 2020 ஏப்ரல் 20 மாலை ஊரடங்கில் பெண்வதை என்ற தலைப்பில் தோழர் சுதா காந்தி பேசினார்,
  • ஏப்ரல் 25ஆம் நாள் மாலை கொரோனாவை வெல்ல பசியை வெல்ல என்ற தலைப்பில் தோழர் தியாகு பேசினார்.
  • மே 13ஆம் நாள் மாலை அல்லல்படும் அலைகுடிகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மணிகோ பன்னீர்செல்வம் பேசினார்.

ஆனந்த் தெல்தும்ப்தே, கவுதம் நவ்லேகா

இருவரையும் விடுதலை செய்யக் கூறி ஏப்ரல் 2௦ஆம் நாள் தோழர் அருள்மொழிவர்மன் தலைமையிலான மக்கள் அரசுக் கட்சி முன்னெடுத்த முகநூல் போராட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் தோழர் தியாகு கலந்து கொண்டார்.

கவன ஈர்ப்பு இயக்கம்:

கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களைக் காக்க… தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் மக்களதிகாரமும் முன்முயற்சி எடுத்து 20க்கு மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 26ஆம் நாள் மாலை நடத்திய கவன ஈர்ப்பு இயக்கம் கொரோனா காலத்திய கள முயற்சிகளுக்கு ஒரு தொடக்க்மாக அமைந்த்து.

கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்:

இந்திய அரசே! 

கொரோனா நெருக்கடியை வெல்ல - பசியிலிருந்து மக்களை காக்க,

1) உடனே 5 இலட்சம் கோடி நிதி ஒதுக்கு!  

2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து உணவு தானியங்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்கு! 

3) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கு!

4) மாநில அரசுக்குத் தேவையான நிதி வழங்கு!

5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் கொடு!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய அளவில் ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெற்றது. த தே வி இ சார்பில் சென்னை,சிதம்பரம், பொள்ளாச்சி, தஞ்சை, மதுரை, பேராவூரணி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுவை அமைப்பாளர்கள் தலைமையில் திரளான மக்கள் பங்கேற்றனர். வீட்டு வாசலில், மொட்டை மாடியில் அட்டை, தாள், சிலேட்டில் கோரிக்கைகளைச் சுமந்து சமூக இடைவெளியுடன் இந்த கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெற்றது.

 மே நாள்:

காலை 8 மணிக்கு புதுவையில் அமைப்பாளர் தோழர் செல்வமுருகன் தலைமையில் செங்கொடி ஏற்றி உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு முகநூல் நேரலையில் மே நாள் உரையாற்றினார்.

மே நாள் உறுதியேற்பு:

இந்த 2020ஆம் ஆண்டு மேநாளில் தமிழ்த் தேசியஇன மக்களாகிய நாம் சூளுரைப்போம்: 

1) கொரோனா நோய்க் கொடுமையாலும் ஏலா அரசுகளாலும் துயரப்படும் பன்னாட்டுலக மக்களுடன் தோழமை கொள்ள உறுதியேற்போம்! 

2) மக்களைக் காக்கத் தவறிய சுரண்டல் அரசுகளை வீழ்த்தி மக்கள்நல அரசுகள் அமைக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்! 

3) புதுத்தாராளிய முதலிய நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் ஆளும் வகுப்பு முயற்சிகளை முறியடிக்க சூளுரைப்போம்!

4) இயற்கை வளம், மாந்த வளம் காப்போம்! சூழலியல் நெருக்கடியை வென்று புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த உறுதியேற்போம்! 

5) பேரரசிய ஒடுக்குமுறையை முறியடித்துப் போரற்ற உலகம் காண உறுதியேற்போம்! 

6) தமிழீழ மக்கள் மீதான இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தில் உறுதி காப்போம்!

7) காசுமீர மக்கள் மீதான இந்தியப் பேரரசின் வன்கொடுமைப் போரை எதிர்ப்போம்! காசுமீரத் தேசத்தின் தன்தீர்வுரிமைக்குத் துணைநிற்போம்! 

8) பழங்குடி மக்கள் மீதான இந்தியப் பேரரசின் வன்பறிப்புப் போரை எதிர்ப்போம்! 

9) சாதியம், ஆணாதிக்கம், மதவாதம், மொழித் திணிப்பு எதிர்ப்போம்! சமூக நீதி காப்போம்!

10) சிறுகுறு உழவர்கள், சிறு வணிகர்கள், உழைப்பாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வோம்! 

11) அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்! 

12) குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்போம்! கடைநிலைப் பணியாளர்களின் நலனுக்கு முன்னுரிமையளித்துப் போராடுவோம்!

13) காவிரி உரிமை மீட்போம்! கல்வி உரிமை மீட்போம்! தமிழக உரிமைகள் காப்போம்! தமிழ்த் தேச இறைமை மீட்போம்!

14) தமிழர் விடுதலைப் போர் முழக்கம் சமூகநீதித் தமிழ்த் தேசம்!

 காவிரி உரிமைப் போராட்டம்:

 தோழர் பெ.மணியரசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட  காவிரி உரிமை மீட்புக் குழு  காவிரித் தீர உழவர்களைப் போராட அழைத்தது. இந்தப் போரட்டத்தில் தோழர் அருண் மாசிலாமணி தலைமையிலான உழவர் அரணும் பங்கேற்றது. கடந்த மே 7ஆம் நாள் மாலை 5 முதல் 5.30 வரை கோரிக்கை அட்டைகளோடும் கறுப்புக் கொடிகளோடும் அவரவர் வீட்டருகில் உரிய இடைவெளி விட்டு வரிசையாக நின்று இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உழவர் பெருமக்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 கோரிக்கை முழக்கங்கள்:

“காவிரி உரிமை மீட்போம்!”

“இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னதிகாரத்தைப் பறிக்காதே!”

“இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை முறைப்படி அமைத்திடு!”

காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து உழவர் அரண் அமைப்பாளர் தோழர் அருண் மாசிலாமணி அறிக்கை:

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கிடையே காவிரி ஆற்று நீர்ப் பங்கீட்டுச் சிக்கல் குறித்து 17 ஆண்டு காலத்துக்கு மேல் விசாரித்து வந்த காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5ஆம் நாள் இறுதித் தீர்ப்பை வழங்கி அதனைச் செயலாக்குவதற்கான நெறிமுறைகளையும் வகுத்தளித்தது.

காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வேண்டும்; பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த அமைப்புகளை இந்திய நடுவணரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் காலங்கடத்திய நடுவணரசு 6 ஆண்டுக் காலத்தாழ்வுக்குப் பின் 2013 பிப்ரவரி 19ஆம் நாள்தான் அரசிதழில் வெளியிட்டது. அப்போதும் அதனைச் செயலாக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16ஆம் நாள் வழங்கிய இறுதித்தீர்ப்பு பலவகையிலும் தமிழக நலனுக்குக் கேடானது என்றாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அப்போதும் கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காலங்கடத்திய மோதி அரசு 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைத்தது.

கடந்த ஈராண்டு காலத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடிய போதெல்லாம் தமிழக அரசு கோரிக்கை வைப்பதும், அதை ஏற்று மேலாண்மை ஆணையம் ஆணையிடுவதும், கர்நாடக மாநிலம் மறுத்து விடுவதுமே தொடர்ந்து நிகழ்ந்தன. இதற்கிடையில் இந்தியா முழுவதற்கும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைத்து, இந்திய அரசமைப்புக்குப் புறம்பாக ஆற்றுரிமை முழுவதையும் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வந்தது, இப்படி நடந்தால் அது தமிழகத்தின் காவிரி உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைப்பதாக அமையும் என்பதால் காவிரியை நம்பியிருக்கும் உழவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இப்போது கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தித் தன் வஞ்சக நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மோதி அரசு முற்பட்டுள்ளது.

இதற்காகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சியைப் பறித்து அதனை இந்திய அரசின் ஜல்சக்தித் துறைக்குக் கீழ்ப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.

மோதி அரசின் இந்த நடவடிக்கையைக் கைவிடக் கோரித் தோழர் பெ.மணியரசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட காவிரி உரிமை மீட்புக் குழு காவிரித் தீர உழவர்களைப் போராட அழைத்துள்ளது. இந்தப் போரட்டத்தில் உழவர் அரணும் பங்கேற்கும். வருகிற மே 7ஆம் நாள் மாலை 5 முதல் 5.30 வரை கோரிக்கை அட்டைகளோடும் கறுப்புக் கொடிகளோடும் அவரவர் வீட்டருகில் உரிய இடைவெளி விட்டு வரிசையாக நின்று இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உழவர் பெருமக்களின் எதிர்ப்பைக் காட்ட வாருங்கள் என்று உழவர் அரண் அழைக்கிறது.

தலித்துகள்,பெண்கள்,குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்கக் கோரி மே 13ஆம் நாள் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் முகநூலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கலந்து கொண்டது. இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு முகநூல் நேரலையில் கண்டன உரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் 

இனவழிப்புக்குப் பன்னாட்டுப் புலனாய்வு!

தமிழீழத்துக்குப் பொதுவாக்கெடுப்பு!

 மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நிகழ விட மாட்டோம்!

என்ற முப்பெரும் முழக்கத்தை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 2020 மே 18 திங்கள் பகல் 11 மணியளவில் 

முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரேற்றம்,

முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி, கோரிக்கை அட்டை, கறுப்புச் சின்னம்,மரக்கன்று நடுதல் போன்றவை நடைபெற்றன. மே 21ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு தோழர் தியாகு முகநூல் நேரலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவாற்றினார

அரசுத் திகிலியத்தால் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் ஈகியர்க்கு செவ்வணக்கம்

ஈராண்டு முன்பு ஸ்டெர்லைட்க்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேர் கொல்லப்பட்ட மே 22 நாளை நினைவு கூறும் விதமாக நினைவேந்தல் இணையக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்ட

தோழர் சே. வாஞ்சிநாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்) அந்தப் போராட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் விதமாக நினைவுரை வழங்கினார்.

Pin It