mahizanதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கடாட்சபுரம் கிராமத்தில் சின்னஞ் சிறு ஊர் ஆத்திக்காடு. பெரிய வரலாற்றுப் பின்னணி, அரசியல் பின்னணி இல்லாத ஒடுக்கப்பட்ட சாதிக் கிறித்தவர்கள் கணிசமாக வாழும் ஊர். வர்க்க அரசியல்,மத அரசியல் என்று பெரிய அளவில் கொடுமைகள் இருந்ததாக எனக்கு நினைவில்லை.

பெரும்பாலும் விவசாயக் கூலிகள், வெகு சிலர் நிலம் வைத்திருக்கிறார்கள். எனவே உயர் சாதியினர் நிலங்களில் வேலை செய்வது, அவர்களைச் சார்ந்து வாழ்வது என்ற நிலைதான். சாதி மனப்பான்மை வெளிப்படையாக இருக்கும், மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும் போக்கும் உண்டு.

இளைஞர்கள் எப்போதும் துணிந்து எதிர்ப்பதுண்டு. அதற்கு முக்கியக் காரணம் என் தாய் மாமா ஆத்திக்காடு M.A. சுந்தர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநிலக் கொள்கை பரப்பாளர், மாநிலப் பேச்சாளர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர்.

அவர் ஊருக்குத் தேவையான சில உரிமைகளைப் போராடிப் பெற்றுத் தந்தார். அதனாலேயே எங்கள் ஊருக்கு ஓர் அவப்பெயரும் உண்டு. சிறுத்தைகளைச் சிறுமைப்படுத்தும்  அந்த அவப்பெயர்!

சாதி ஒழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்த் தேசியம் போன்ற பல்வேறு அரசியலுக்கும் அண்ணன் திருமாதான் அறிமுகம். திருமா பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால்  ஊரே உட்கார்ந்து பார்க்கும். நானும் அவர் பேச்சுக்கு ரசிகன்தான்.

வீட்டில் மொத்தம் 5 பிள்ளைகளில் நான் இரண்டாம் பிள்ளை. ஏழ்மைக்கு நடுவிலும் என் அம்மா எங்கள் அத்தனை பேரையும் படிக்க வைத்தார்.

நான் சாத்தூர் புனித ஸ்தானிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பட்டம் பெற்றேன். அங்குதான் எனக்கு நூல்கள் படிக்கும் ஆர்வம் வந்தது. உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர்த் தலைவர்கள் வரை அங்குதான் அறிமுகமானார்கள்.

பிறகு 2009இல் சென்னைக்கு வேலை தேடி வந்தேன்.அப்போது ஈழப் போர் முடிவடைந்திருந்த காலம். அவ்வப்போது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் வந்து நின்று வேடிக்கை

பார்ப்பதுண்டு. தமிழகத்தின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். திராவிடம், கம்யூனிசம்,தமிழ்த் தேசியம் என்று உலகின் தத்துவங்களை அறிந்து கொள்ள முற்பட்டேன்.

கிடைத்த புத்தகங்கள், வலையொளி, தொலைக்காட்சி விவாதங்கள் என எங்கெல்லாம் அரசியல் சார்ந்து பேசினாலும் கேட்பேன், அது எனக்குள் அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது.

ஆனால் எந்தக் கட்சியிலும் இணைந்து செயல்பட விரும்பவில்லை. ஓட்டுக் கட்சிகளுக்குக் கொள்கை என்பது ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் ஆயுதம்தான், அது மக்களுக்கானதல்ல என்ற கருத்திற்கு வந்திருந்தேன்.

பிறகு ஓய்வு நாட்களில் நண்பர்களோடு இணைந்து சில சமூகப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். அது என்னை ஒரு நிறுவனத்தில் பணி புரிவதை விட்டு வெளியேறத் தூண்டியது. சற்று சிந்தித்து ஒரு மகிழுந்து வாங்கி உபேர் நிறுவனத்தில் இணைந்து கொண்டேன்.

இப்போது நான் எவருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. நான் நினைப்பதை எந்த நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். அப்போது என் நண்பர்கள் இணைத்து சிகரம் தொடுவோம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்த காலம்.

தோழர் தியாகுவின் அறிமுகம்:

ஒரு நாள் விவாத நிகழ்ச்சி ஒன்றில் தோழர் தியாகுவின் பேச்சைக் கேட்டேன். தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று நேர்நிறையாகப் பேசியதைக் கண்டு வியந்தேன். பிறகு யார் இவர் என்று தேடினேன். மார்க்சியம் என்றால் என்ன? என்ற அவருடைய 5 மணி நேர வகுப்பு ஒன்றை வலையொளியில் கண்டேன்.

அன்றிலிருந்து அவரைக் காண வேண்டும், அவரிடம் அரசியல் கற்க வேண்டும் என்று தேட ஆரம்பித்தேன். சில பத்திரிக்கைப் புகைப்படங்கள் கிடைத்தன. அதில் தெரிகின்ற  தெருக்களை அடையாளம் கண்டு சூளைமேடு என்று கண்டுபிடித்தேன்.

அப்போது நான் சூளைமேட்டில்தான் வசித்து வந்தேன். அருகில் பச்சையப்பன் கல்லூரியில் பிபிஏ பயின்று கொண்டிருந்தேன். சூளைமேட்டில் நான் தேடாத தெருக்கள் இல்லை. ஆனால் அவர் எப்போதோ அங்கிருந்து இடம் பெயர்ந்திருந்தார்.

எல்லா செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் அழைத்து கேட்டுப் பார்த்தேன். எவரும் எண், முகவரி தரத் தயாராக இல்லை.பிறகு முகநூலில் ஓர் ஆர்ப்பாட்டத் துண்டறிக்கை, அதில் ஓர் எண் இருந்தது.

தோழர் வணக்கம்! நான் பாரதி, நீங்க? தியாகு ஐயா இயக்கமா ? ஆமாம். உங்களை சந்திக்க முடியுமா, நான் தியாகு ஐயாவைச் சந்திக்க வேண்டும், முடியுமா? சந்திக்கலாம் தோழர் என்றார். பிறகு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் எனக்குத் தகவல் தருவார்.

நான் ஓய்வாக இருந்தால் சென்று வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் வேளச்சேரியில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வாங்க தோழர், ஐயாவை இன்று சந்திக்கலாம் என்றார். சென்றோம், தோழர் ஓர் அறைக்குள்ளிருந்து வந்தார்.

வணக்கம் ஐயா என்றேன். வணக்கம், வணக்கம், உட்காருங்க, பேசிட்டு இருங்க, நான் கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு என்று கூறி விட்டு அறைக்குள் மீண்டும் போய் விட்டார். அடப் போங்கய்யா இதற்கா இவ்வளவு நாள் தவித்துக் கிடந்தோம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பிறகு நானும் தோழர் பாரதியும்   அடிக்கடி சந்தித்தோம், அமைப்பு பற்றி, தமிழ்த் தேசியம் குறித்து விவாதிப்பேன். இதுதான் நாம் வேலை செய்யத் தகுந்த இடம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் முழு மனதாக அமைப்பின் பிரதிநிதியாக நான் முழுமையாகச் செயல்படவில்லை. என்னால் முடிந்த உதவியை ஓய்வு நேரங்களில் செய்து கொண்டிருந்தேன்.

புரட்சிகர அரசியலுக்கு இட்டுச்சென்ற காவிரி:

பொதுவாகவே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் முழு ஈடுபாடு இல்லாத மனநிலைதான் அப்போதிருந்தது. முழுமனோதோடு ஈடுபட்ட எனது போராட்டம் என்றால் அது சல்லிக்கட்டுப் போராட்டம்தான். முதல் நாளிலிருந்து இறுதி நாள் காலை வரை மெரினாவில் இருந்தேன்.

பிறகு காவிரித் தீர்ப்பு வந்தது, காவிரி மீது தமிழ்நாட்டிற்கு இருக்கும் உரிமையை அது முற்றிலுமாக மறுத்தது. நாங்கள் நால்வர் தோழர் பாரதி தலைமையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உயர்நீதி மன்ற வாசலில் வைத்துக் கொளுத்தினோம், அதுவே என்னைப் புரட்சிகர அரசியலுக்குக் கொண்டுவந்த முதல் போராட்டம்.

அப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. நான் வேலை முடிந்து வந்து இதைப் பற்றி தோழர் பாரதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நாம் ஏதாவது செய்யலாமா? என்று கேட்பேன். அவர் ”செய்யலாம் தோழர், ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் சில இருக்கு தோழர், கொஞ்சம் திட்டமிட்டுச் செய்வோம் என்பார்.” இப்படியே ஒரு மாதம் கடந்து விட்டது.

”தோழர் இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது, ஏதாவது செய்வோம்” என்றேன், நீங்களே கூட்டம் ஏற்பாடு பண்றீங்களா ? என்ன உதவி வேண்டுமோ நான் செய்து தருகிறேன் என்றார். சற்றும் தாமதிக்காமல் சரி என்றேன்.

எனது மாவட்டம், எம்மக்கள், இனியும் பொறுக்க முடியாது என்று மனம் உந்தித் தள்ளியது. அரசியல் என்பது தேவையின் அடிப்படையில் பிறக்கிறது என்ற மார்க்சின் வரிகளை நினைத்துக் கொண்டேன்.

ஸ்டெர்லைட் எதிர் -  தமிழ்நாடு:

என்னுடைய பழைய, புதிய நண்பர்கள் அத்தனை பேரையும் அழைத்தேன். இதன் தேவையை விளக்கினேன். எப்படி நடத்தப் போகிறோம், என்னென்ன செய்ய வேண்டும், எந்த அனுபவமும் இல்லை. அனைவரையும் தோழர் பாரதியோடு உட்கார வைத்தேன்.

இவர்கள் எல்லோரும் இணைந்துதான் நடத்தப் போகிறோம், எனவே அமைப்புப் பெயரைப் பயன்படுத்த வேண்டாம், பேச்சாளர்கள் என்று யாரும் இல்லை, துண்டறிக்கை விநியோகம் செய்து மக்களைத் திரட்ட நேரமில்லை, ஓய்வில்லை.

வார இறுதிநாளில் ஒரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நடத்த வேண்டும் என்றேன். எனது ’ஆர்வக்கோளாறு’ அத்தனைக்கும் தலையசைத்து நெறிப்படுத்தினார் தோழர் பாரதி.

2018  மார்ச் 30 மாலை 3 மணிக்கு சோழிங்கநல்லூரில் ஸ்டெர்லைட் – எதிர் - தமிழ்நாடு என்ற தலைப்பில் ஸ்டெர்லைட்டை  இழுத்து மூடு, காவிரி மேலாண்மை வாரியம் அமை! என்ற முழக்கத்தோடு கூட்டம் ஏற்பாடு செய்தோம். அது தூத்துக்குடி போராட்டத்தின் 47ஆவது நாள் என்று நினைக்கிறேன். கிட்டதட்ட 50க்கும் மேற்பட்டோர் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வள்ளுவர் கோட்டம் வாசம் அறியாதவர்கள். போராட்டங்களில் ஈடுபட்டிராத நண்பர்கள். இந்தக் கூட்டதித்திற்குப் பின் வள்ளுவர் கோட்டத் தேநீர்க் கடை வாடிக்கையாளர் ஆகிப் போனவர்கள். கலந்து கொண்டதில் ஆர்வமுள்ள அத்தனைப் பேரையும் பேச அனுமதித்தோம். அதுவரையில் தூத்துக்குடி தவிர வேறெங்கும் போராட்டங்கள் நடந்திருக்கவில்லை.

ஒரு சில அமைப்புகள் மட்டும் சிறு அளவில் விழிப்புணர்வுப் பரப்புரை செய்திருந்தன. அந்தக் கூட்டத்தில் ஊடகத்திற்குச் செய்தி கொடுத்த நான், இந்தப் போராட்டம் தொடக்கம் தான், இதனைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினேன்.

அது போலவே அதில் கலந்து கொண்ட பல்வேறு அமைப்பு நண்பர்கள் தூத்துக்குடிக்கு நேரடியாகச் சென்றனர். சென்னையில் அடுத்தடுத்துப் போராட்டங்கள் நடைபெற இந்தக் கூட்டம் காரணமாய் அமைந்தது.

2018 மே 22 துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கேள்விப்பட்டு உடனடியாகக் கூடினோம். 10 பேருக்கும் குறைவான ஆட்கள்தான், ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் நின்று சாலையை மறித்தோம்.

அகன்ற சாலையை இருபுறமும் தடுப்பதில் சிரமப்பட்ட போது தோழர்கள் சுதா காந்தியும், நிலவொளியும் சாலையின் குறுக்கே படுத்தனர். அப்போது சுதா தோழர் நிறைமாதக் கர்ப்பிணி.

அதைக் கண்ட நானும் தோழர்கள் பாரதி, தமிழ்க்கதிர் ஆகியோரும் மறுபுறம் படுத்துக் கொண்டோம். சிறுது நேரத்தில் பொதுமக்கள் கிட்டத்தட்ட இருநூறுக்கு மேற்பாட்டோர் திரண்டு எங்களோடு இணைந்து கொண்டனர். கிட்டத்தட்ட விமான நிலையம் தாண்டிப் பல்லாவரம் வரை இருபுறமும் 15- 20 கிலோமீட்டர் சாலை ஸ்தம்பித்தது.

1 1/2 மணி நேரத்திற்கு மேல் சாலையை மறித்து முழக்கங்கள் எழுப்பினோம். பின்பு காவல்துறை கைது செய்து இரவு பிணையில் விடுவித்தது. பிறகு பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனக் கூட்டம் நடத்தினோம். இப்படித்தான் நான் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து, இன்று அதன் தலைமைக் குழுவில் இடம்பெற்றுத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

இப்போதும் மீண்டும் ஒரு ஸ்டெர்லைட் போராட்டம் தேவைப்படும் சூழல் எழுமானால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அதில் ஒரு காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் என்ற முடிவில் தெளிவாக உள்ளோம்.

உயிர்வளியா? உயிர்ப் பலியா?

திமுக ஆட்சிப் பொறுப்பேற்குமுன்பே ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஒப்புதலளித்து விட்டது. இப்போது திமுக அரசு அதே காரணம் சொல்லி ஆலை தொடர்ந்து இயங்க அனுமதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் என்பது வெறும் கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல, அது சூழலியல் கேட்டினால் பல உயிர்களைப் பறித்துக்கொண்டிருந்த நச்சாலை.

அதன் மூடுவிழாவிற்கு 15 பேர் பலி கொடுக்கப் பட்டிருக்கிறார்கள்  என்பதை இந்த அரசு மறந்து விட வேண்டாம். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறந்து தொடர்ந்து இயக்கும் முயற்சி தமிழ் மக்களின் தன்மானத்துக்கு இழுக்குச் சேர்ப்பதாகும்.

இத்துணைப் படை பலமும், அதிகாரப் பரிவாரங்களும் உள்ள அரசுக்கு ஸ்டெர்லைட் தான் ஆக்சிஜன் தயாரிக்க ஒரே வழி என்று எங்கள் காதில் பூச்சுற்ற எண்ண வேண்டாம்! கொரோனா நெருக்கடி முடிந்த பிறகும் ஆலையை எக்காரணம் கொண்டாகிலும் தொடர முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதில் எங்கள் இன்னுயிரைத் தரவும் தயங்க மாட்டோம்.

ஸ்டெர்லைட் ஆலையை இடித்துத் தள்ளுஆலை இருக்கும் நிலத்தை  ஸ்டெர்லைட்டால் இது வரை உயிர் நீத்த மக்களுக்கே பகிர்ந்தளி!

- மகிழன்

Pin It