ஊழலை எளிதாக்குவதில் வரிப் புகலிடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாடுகடந்த நிதியமைப்பின் வளர்ச்சி அதோடு தொடர்புடைய ஊழல் கேடுகளைக் கொண்டுவந்துள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் மோசடி செய்ய விரும்புபவர்களால் உருவாக்கப்பட்ட அதே அமைப்புகள், வழிமுறைகளை ஊழல் நடைமுறைகள் பயன்படுத்துகின்றன.

ஊழலை எளிதாக்குவதில். கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், பிற நிதி இடைத்தரகர்களின் பங்கு ஆய்வுகளை அடிக்கடி தவிர்ப்பதே ஆகும். நிதி கமுக்க சட்டங்கள், கொள்கைகள், கமுக்க ஆட்சிப் பிரதேசங்களின் பரந்த வலையமைப்பு ஆகியவை ஊழலைத் தடுக்காமல், மேலும் மோசமாக்குவதில் பங்கு வகுக்கின்றன. மனிதக் கடத்தல், ஊழல் தொடர்புடைய குற்றங்கள் கமுக்கத்தின் மூலமே வளர்ந்த பரவலான மனித அத்துமீறல்களையும், துயரத்தையும் உருவாக்குகிறது. கடத்தல்காரர்களின் இலக்குகளாக பெண்களும் சிறுமிகளும் அதிக விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். பெருநிறுவன சக்தியும்; அரசாங்கங்களும்; வரிக் கொள்கை, கமுக்கச் சட்டங்களின் வடிவமைப்பு, வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தி தேவையான சீர்திருத்தங்களை எதிர்க்கும், அரசுகளுக்கு இடையேயான அமைப்புகளும், ஊழலை நிலைநிறுத்துவதில் உடந்தையாக உள்ளன.

Corruption perceptions Index 2021நிதிக் கமுக்கம் இல்லாமல் ஊழல் செய்ய முடியாது. நிதிக் கமுக்கத்தின் மையமாக நாடுகடந்த வரிப்புகலிடங்கள் செயல்படுகின்றன.

கருப்புப் பணம் பெருமளவில் வெளியேறுவதால் உண்மையில் பாதிக்கப்பட்டவை நைஜீரியா, பங்களாதேஷ் போன்ற உலகின் "மிகவும் ஊழல் நிறைந்த" நாடுகளா? அல்லது சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, லக்சம்பர்க், அமெரிக்கா போன்ற அனைத்துக் கொள்ளைகளையும் கையாளும் நாடுகளா?

ஊழலின் பாரம்பரிய வரையறைகள் மிகவும் குறுகியவை. உலக வங்கி அல்லது சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான நிறுவனங்கள் ஊழலற்ற நாடுகள் மற்றும் தொழில்துறைகளின் குறியீடுகளை உருவாக்கியுள்ளன, அவை பொதுவாக ஏழை ஆப்பிரிக்க நாடுகளை 'மிகவும் ஊழல் நிறைந்தவை' என்று அடையாளம் காட்டுகின்றன, அதே நேரத்தில் மூலதனம் பறக்கவும், பெரும் கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு வரி மோசடிகளையும் எளிதாக்குவதில் வரிபுகலிடங்களில் உள்ள நிதி அமைப்பின் பங்கைப் புறக்கணிக்கின்றன. நைஜீரியர்களிடம் உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றாகத் உங்கள் நாடும் உள்ளது என்று கூறுவது அவர்களுக்கு அதிகம் உதவுவதில்லை. அவர்கள் தங்களுடைய பணம் எங்கே போனது என்று தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மில்லியன் டாலர்களை ஒரு சூட்கேஸில் அடைத்து நாடுகடந்து செல்வதெல்லாம் பழையகாலம், நவீன வங்கியில் திருடப்படக்கூடிய தொகைகளுக்கு வரம்பு இல்லை. ஆனால் நிதி கமுக்கம் இல்லாமல் அங்கு ஊழல் செய்யமுடியாது; வரி புகலிடங்களும் கமுக்க ஆட்சிப் பிரதேசங்களும் அவற்றின் மையத்தில் உள்ளன.

வரி நீதிக்கான வலையமைப்பு வெளியிடும் நிதி கமுக்கக் குறியீடு இதன் மறுபக்கத்தைக் காட்டுகிறது. இந்த குறியீட்டின் மூலம் அடையாளம் காணப்படும் மிக முக்கியமான கறுப்புப் பண மையங்கள் மிகவும் பாரம்பரியமான குறியீடுகளில் 'சுத்தமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் என்பது பொதுநலனை ஊக்குவிக்கும் விதிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் அந்த விதிகளின் மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஊழல் என்பது ஓர் அமைப்பு ரீதியான பிரச்சனை. ஆனால் சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பு (Transparency International) ஊழலுக்குத் "தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்" என்றும், உலக வங்கி "தனிப்பட்ட இலாபத்திற்காக பொதுப் பதவியை தவறாகப் பயன்படுத்துதல்" என்றும் வரையறை செய்து ஊழல் என்பதன் வரையறையைக் குறுக்கியுள்ளன. இத்தகைய வரையறை அமைப்பு அடிப்படையில் இல்லாமல் தனிநபர்களின் பரிவர்த்தனைகளிலேயே அதிகக் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. ஊழலால் முழுச் சமூகமும் சிதைந்து விடும். உண்மையில், நாடுகடந்த நடவடிக்கைகளால் உலக நிதி அமைப்பு முழுவதும் சீர்கெட்டுள்ளது.

இருப்பினும், இந்த மறுபக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில், சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பு, உலகளாவிய ஊழலைப் பற்றிய முழுச் சித்திரத்தைப் பெற, நிதிக் கமுக்கக் குறியீட்டை அவர்களின் ஊழல் புலனாய்வுக் குறியீட்டுடன் ஒப்பிடுவதற்கு கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

பலர் ஊழலை இலஞ்சத்துடன் நெருக்கமாகத் தொடர்புபடுத்துகிறார்கள், ஆனால் அதன் அமைப்புவழித் தன்மை ஊழலை மிகப் பெரிய பிரச்சனையாக்குகிறது. ரேமண்ட் பேக்கர் ”இலஞ்சம் என்பது எல்லைதாண்டிய சட்டவிரோத ஊழல் பாய்ச்சல்களில் வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே” என்கிறார். ஊழலின் பாரம்பரிய வரையறைகள் தனியார் துறையைப் புறக்கணிக்கும் அதே வேளையில், பொதுத் துறையில் அதிகக் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கின்றன. சந்தை மோசடி போன்ற சட்டவிரோதமான அல்லது முறைகேடான நிதிச் செயல்பாடுகள் என நாம் அடையாளம் காணும் பெரும்பாலானவை தனியார் துறையில் கமுக்கமாகப் பாதுகாக்கப்படுகிற ஊழல் நடத்தைகளைக் குறிக்கின்றன. பொதுவாக. இந்த ஊழல் ஓட்டங்களை வரவேற்று, எளிதாக்கி, தீவிரமாக ஊக்குவிக்கும் வெளிநாட்டு வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்களின் "நுட்பமான உள்கட்டமைப்பு" ஊழல் பிரச்சனையின் மையப் பகுதியாகும். 

ஊழலின் சிறந்த வரையறை:

"ஊழல் என்பது பொதுநலனை மோசடி செய்வது மற்றும் பொதுநலனை ஊக்குவிக்கும் விதிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நேர்மையின் மீதான பொது நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்." 

வரி நீதிக்கான வலையமைப்பின் முன்னாள் தலைவர் ஜான் கிறிஸ்டென்சன், கிரீஸின் ஊழல் கதையை “Grace’s corruption story” என்ற பெயரில் அம்பலப்படுத்திய காணொளி நாடுகடந்த வரிப் புகலிடங்கள் ஊழலை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பதை விளக்குகிறது: https://youtu.be/autlpiy2kE8

ஜிம்பாப்வே பத்திரிக்கையாளர் ஸ்டான்லி குவெண்டா அல் ஜசீரா பத்திரிகைக்காக மேற்கொண்ட “ஆப்பிரிக்காவை எப்படிக் கொள்ளையடிப்பது”-“How to Rob Africa” என்ற விசாரணையை நீங்கள் பார்க்க வேண்டும்: https://youtu.be/VVN3N3mWa2E

- சமந்தா

Pin It