பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம் ரூ. 70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி.
பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி). பொதுவாக ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் சிவிசி இம்முறை வங்கிகளில் நிகழ்ந்த 100 மோசடி சம்பவங்களை ஆராய்ந்தது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவிசி அறிக்கை பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது. வங்கிகளில் இப்படியெல்லாமா மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்று வியப்பி லாழ்த்தும் வகையிலான மோசடிகளை பதிவு செய்துள்ளது டி.எம். பாசின் தலைமையிலான சிவிசி.
ஜூவல்லரி, உற்பத்தி, வேளாண்துறை, ஊடகம், விமான போக்குவரத்து, சேவைத் துறை, 13 துறைகளில் மோசடி எப்படி நிகழ்ந்துள்ளது என்பதை ஆராய்ந்துள்ளது. எந்தெந்த வங்கிக் கணக்குகளில் மோசடி நிகழ்ந்துள்ளன, கடன் பெற்று மோசடி செய்த நபர், அவர் சார்ந்த நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பாசின் குழு வெளியிட்டுள்ளது.
அதேசமயம் இத்தகைய மோசடிகளை நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதில் வங்கி அதிகாரிகளின் பங்கு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
ஜூவல்லரி துறையினர் வங்கிகளை எவ்விதம் ஏமாற்றுவர் என்பதற்கு நீரவ் மோடி, மெகுல் சோக்சி உதாரணம் என்றாலும், அது தவிர இத்துறையினர் இறக்குமதி செய்யப்படும் வைரங்களின் மதிப்பை மிக அதிகமாக காண்பித்து கடன் பெற்றுள்ளனர்.
ஏற்றுமதி ஆர்டர்களைக் காண்பித்து கடன் பெற்றுள்ளனர். ஆனால் ஏற்றுமதி செய்யும்போது உண்மையில் அவர்கள் கடன் பெற்ற அளவுக்குக் கூட ஏற்றுமதி இருக்காது. இது தவிர, ஒரு வங்கியில் கடன் பெறுவது பிறகு வைர ஏற்றுமதி செய்வோரிடம் மற்றொரு போலி ரசீது பெற்று அதற்கு கடன் பெறுவது என நூதன முறைகளைக் கையாண்டு ஏமாற்றி யுள்ளனர். நிறுவனங்களும் ஆவணங்களில் பெருமளவு தில்லுமுல்லு செய்து வங்கிகளை ஏமாற்றியுள்ளன.
இதேபோல உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஆண்டு நிதி அறிக்கையை தவறாக தயாரித்துள்ளது. ரூ. 23.74 கோடி லாபம் ஈட்டியது போன்று அறிக்கை தயாரித்து கடன் பெற்றுள்ளது. பின்னர் அந்நிறுவனம் உண்மையான நிதி அறிக்கையை தாக்கல் செய்தபோது நிறுவனத்தின் லாபம் வெறும் ரூ. 34 லட்சம் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஆனால் முந்தைய ஆண்டு தாக்கல் செய்த நிதி அறிக்கையையே அந்நிறுவனம் வங்கிக்கு தொடர்ந்து தாக்கல் செய்து ஏமாற்றியது பின்னர் தெரியவந்துள்ளது.
அடுத்தது நிரந்தர சேமிப்புக் கணக்கு மோசடி. பொதுவாக இத்தகைய மோசடி பேர்வழி நிறுவனங்களில் தன்னை வங்கி பிரதிநிதி என்றும், வங்கியில் தான் நிறுவனங்களின் நிதி ஆலோசகர் என்று கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளார். இந்த மோசடியில் மட்டும் 7 மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
வங்கிக்கு தம்மால் அதிக டெபாசிட் திரட்டித் தர முடியும் என்றும், நிறுவனங்களிடம் தம்மால் வங்கியில் கடன் பெற்றுத் தர முடியும் என்று கூறி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வகையில் ரூ. 604.33 கோடி அளவுக்கு மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது.
வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் உறுதியளிப்பு கடிதத்தை மட்டுமே வைத்து ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தது நீரவ் மோடி கோஷ்டி. இதன் பிறகுதான் ரிசர்வ் வங்கி இத்தகைய உறுதியளிப்பு கடிதம் அளிப்பதை ரத்து செய்துள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வங்கிகளில் மோசடி நிகழ்வதில் வங்கியாளர்களுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிவிசி, இத்தகைய மோசடிகளில் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களுக்கும் பொறுப்புள்ளது. எனவே அவர்களையும் பொறுப்பாளியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. போலியாக ஆவணம் தயாரித்து தரும் ஆடிட்டர்கள், அதற்கு சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் இனி தப்பிக்க முடியாது என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சிவிசி வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்களைக் கண்டறிந்து அவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அப்போதுதான் வங்கிகளை ஏமாற்றுவது குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மோசடி பேர்வழிகளுக்கு பயந்து கடன் வழங்காமல் போனால் வங்கிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாசின் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவராயிருந்த பாசினுக்கு வங்கியாளர்களின் பிரச்சினை நன்கு தெரியும். வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சவால்களும் அவர் அறிந்ததே.
தில்லுமுல்லுகளை தவிர்க்க, அதன் ஆரம்பத்தை அவர் கண்டுபிடித்து அறிக்கையாக அளித்துள்ளார். இதை ஒவ்வொரு வங்கிகளும் தனது அதிகாரிகளுக்கு அளித்து முன்னெச்சரிக்கையோடு இருக்கச் சொன்னால் பிரயோசனமாக இருக்கும். இந்த பரிந்துரைகளை வங்கியாளர்கள் பொருட்படுத்தாவிடில், வங்கி மோசடிகள் தொடர்கதையாகத்தான் இருக்கும்.
பார்ப்பன உயர்ஜாதிப் பிடியில் சிக்கியுள்ள அய்.சி.அய்.சி.அய். வங்கியின் மெகா ஊழல்
அய்.சி.அய்.சி.அய். வங்கி தலைமை பெண் அதிகாரி, சந்தா கோச்சார் ‘சிந்தி’ குடும்பத்தில் பிறந்தவர். பார்ப்பனருக்கு இணையான முன்னேறிய ஜாதி. அவர் நாள் ஒன்றுக்கு வாங்கிய சம்பளம் ரூ. 2.18 இலட்சம். பார்ப்பன உயர்ஜாதிக் கும்பலிடம் சிக்கியுள்ள அதிகாரத்தை எவ்வளவு முறைகேடாகப் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இவரது ஊழல் ஒரு உதாரணம். இவரைக் காப்பாற்ற அய்.சி.அய்.சி.அய். வங்கி பார்ப்பன நிர்வாகமே துணை போனதும் இப்போது அம்பலமாகி யிருக்கிறது. இதன் பின்னணி என்ன?
அய்.சி.அய்.சி.அய். வங்கி, நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கி. இந்த வங்கிக்கு இன் னொரு முகம் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். ஆனால், இன்று இரண்டுமே தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
2012ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட் டாளரான அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. 2017இல் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட கடன் வாராக் கடனான பிறகுதான் ஊடகத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச் சாட்டை வங்கியின் தலைவர் மகேந்திரகுமார் சர்மா மறுத்தார். சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் தூய்மையானவர். வங்கி அவரை 100 சதவீதம் நம்புகிறது என்று சான்றிதழ் வழங்கினார். ஒரு கட்டத்தில் நிலைமை தீவிரமானதைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை வங்கி நிர்வாகம் அமைத்தது. அப்போது, சந்தா கோச்சார் விடுமுறையில் அனுப்பப்பட்டார். விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், சந்தா கோச்சார், தனது விடுமுறைக் காலம் முடிந்த பிறகு பணியில் சேராமல், அக்டோபர் மாதத்தில் பதவியை ராஜினாமா செய்தார். வங்கியும் இவரது ராஜினாமாவை ஏற்று, அவருக்குப் பதிலாக சந்தீப் பாக்ஷியை அப் பொறுப்பில் அமர்த்தியது.
சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் வங்கி விதிகளை மீறி சந்தா கோச்சார் நடந்து கொண்டது உறுதியானது. வீடியோகான் நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
தணிக்கை முடிவுகளிலும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்துடன் தொடர்பிருப்பது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கும் பதிவானது.
பொதுவாக வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்கும்போது அதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் சம்பந்தப்பட்டவர் இடம்பெறக் கூடாது என்பது வங்கி விதி. ஆனால் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய போது சந்தா கோச்சாரும் இருந்துள்ளார். கணவருக்கு மறைமுகமாக பல ஆயிரம் கோடி கைமாற உதவியுள்ளார்.
மேலும், 2012ஆம் ஆண்டில் வழங்கப் பட்ட கடன், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் வங்கிக்கு அவர் ஏற்படுத்திய இழப்பு ரூ.1730 கோடி. ஆனால், இதற்கு பொறுப்பேற்க வேண்டியவருக்கு போனஸ் பங்குகள் வழங்கப் படுகின்றன. குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் அவரைப் பாதுகாக்கவே வங்கி நிர்வாகம் முயற்சித்தது. இதுதான் பார்ப்பன அதிகார வர்க்கத்தின் நிர்வாக ‘நேர்மை’.
ஆனால், இப்போது குற்றச்சாட்டு உறுதி யானதும், அவருக்கு வழங்கப்பட்ட போனஸ் பங்குகளை திரும்பப் பெறப் போவதாகவும், அவரது ராஜினாமாவை பதவி நீக்கமாகவும் அறிவித்துள்ள சந்தர்ப்பவாத நிகழ்வாகவே தெரிகிறது. பிரச்சினை கவனத்துக்கு வந்த போதே, விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க லாம். அவ்விதம் நியமித்திருந்தால் வங்கிப் பங்குகளை சரிவிலிருந்து தடுத்திருக்கலாம்.
முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப இந்த விஷயத்தில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு அய்.சி.அய்.சி.அய். வங்கி நிர்வாகத் துக்கு உள்ளது. கறை படிந்தவர்களை காக்க நினைப்பதும் வங்கிக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், பிரச்சினை வெளியான சமயத்திலிருந்து இதுவரை வாயே திறக்காத சந்தா கோச்சார், பங்குகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தவுடன் வங்கியின் முடிவு ஏமாற்றமளிக்கிறது, அதிர்ச்சியாக உள்ளது என்று குமுறுகிறார்.
- விடுதலை இராசேந்திரன்