கீற்றில் தேட...

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த இலாவண்யா என்ற மாணவி சென்ற சனவரி 9ஆம் நாள் நஞ்சுண்டு தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப் பெற்று 19ஆம் நாள் உயிரிழந்தார். வருத்துக்குரிய இந்த உயிரிழப்பின் காரணம் என்ன? என்பது அரசியல் களத்தில் பெரிய விவாதப் பொருள் ஆகியுள்ளது, பாசகவால் அப்படி ஆக்கப்பட்டுள்ளது.

இலாவண்யா தஞ்சாவூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதே அவரது தற்கொலை முயற்சி பற்றிய காவல்துறைப் புலனாய்வு தொடங்கி, முறைப்படி மரண வாக்குமூலமும் நீதித்துறை நடுவரால் பதிவு செய்யப்பட்டது. இலாவண்யா இறந்த பின் திடீரென்று அவரது மரண வாக்குமூலம் என்று ஒரு சிறு காணொலியை பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் விடுதிக் காப்பாளர் அருட்சகோதரி சகாய மேரி தன்னையும் தன் குடும்பத்தினரையும் கிறித்துவ மதத்தில் சேர்க்க விரும்பியிருக்கக் கூடும் என்று இலாவண்யாவைப் பேச வைத்திருந்தனர். இதைத் தவிர முன்னும் பின்னும் அவரிடம் என்ன கேட்கப்பட்டது, என்ன விடை சொன்னார் என்பதெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது.

michaelpatti christian schoolமுறையாக நீதித்துறை நடுவர் பதிவு செய்த மரண வாக்குமூலத்தில் இப்படி எந்தக் குறிப்பும் இல்லை. இலாவண்யா தற்கொலைக்கு மாற்றாந்தாய் கொடுமையே காரணமாக இருக்க வாய்ப்புண்டு. விடுமுறை நாட்களிலும் கூட அவர் வீடு செல்லாமல் விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார். எது காரணமானாலும் மதமாற்ற முயற்சி ஏதும் காரணமில்லை. புலனாய்வு செய்த காவல்துறையும் இவ்வாறு அறிவித்து விட்டது.

ஆனால், பாசகவினரோ கிறித்துவப் பள்ளி மேலாண்மை மதமாற்றம் செய்ய முற்பட்டதே தற்கொலைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டிக் கூச்சலிட்டனர். மைக்கேல்பட்டியில் மட்டுமன்று, தமிழ்நாடு முழுக்க கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி கிடுகிடு போராட்டங்களை முன்னெடுத்தனர். இலாவண்யாவின் தந்தை முருகானந்தத்தின் பெயரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சிபிஐ புலனாய்வுக்கு வழிசெய்தனர். இலாவண்யாவின் பெற்றோரையும் ஊராரையும் கையில் போட்டுக் கொண்டு இலாவண்யாவின் பிணத்தை வைத்து அரசியல் செய்வதற்காக தங்கள் ’கைச்சரக்கு’ முழுவதையும் தில்லிச் செல்வாக்கையும் களமிறக்கினர்.

பாசக ஆர்எஸ்எஸ் கும்பல் இதற்காகவே கதைகட்டிப் பரப்பியது: ஈராண்டு முன்பு இயேசு சபையினரான பள்ளிப் பொறுப்பாளர்கள் இலாவண்யாவையும் பெற்றோரையும் மதம் மாறச் சொன்னார்களாம். அவர்கள் மறுத்து விடவே இலாவண்யாவைக் குறிவைத்துத் துன்புறுத்தினார்களாம். விடுதி அறைகளைப் பெருக்கித் தூய்மை செய்யச் சொன்னார்களாம். தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தார்களாம். தொல்லை பொறுக்க முடியாமல் இலாவண்யா தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாராம்.

மைக்கேல்பட்டி மக்களிடம் பாசகவின் கட்டுக்கதை எடுபடவில்லை. இலாவண்யா படித்த பள்ளியின் அருமை தெரிந்தவர்கள் சாதிமதம் கடந்து பாசக முயற்சிகளை முறியடிப்பதில் முன்னுக்கு நின்றனர். பாசகவின் பிண அரசியலை எதிர்த்து முறியடிப்பதில் தமிழ்நாட்டின் குடியாட்சிய ஆற்றல்கள் ஒன்றுபட்டு நின்றன. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தன்னாலியன்ற சிறு பங்காற்றியது.

பாசக தன் பிண அரசியலுக்கு அடிப்படையாகக் கொண்ட அந்தக் காணொலியை பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் வெளியிட்டார். சரியாகச் சொன்னால் தயாரித்து வெளியிட்டார். வெட்டிக் குறைத்து ஒரு துண்டை மட்டும் வெளியிட்டார். அந்தக் காணொலியை உடனடியாகப் புலனாய்வுக் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முன்னாள் இ.கா.ப. (IPS) அதிகாரியான அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் அதனைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். எப்போது? இலாவண்யா இறந்த பிறகு வெளியிட்டார்.

அண்ணாமலை வகையறா ஈறைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கித் தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி அரசியல் ஈட்டம் பெற முயல்வது கண்கூடாகத் தெரிகிறது. இலாவண்யா சாவு கிறித்துவக் கல்விக்கூட நிர்வாகங்கள் இந்துக் குழந்தைகளை மதமாற்றம் செய்து கிறித்துவர்களாக்க முயல்வதைக் காட்டுகிறதாம்! இந்த முயற்சிக்கு ’இந்து விரோத’ திமுக அரசு உடந்தையாம்! எனவே மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற வேண்டுமாம்!

இந்திய அரசமைப்பின் படி மதம் மாறுவதும் மாற்றுவதும் குற்றமில்லை. ஒரு மதத்திலிருந்து பிறிதொரு மதத்துக்கு மாறுவது மட்டுமன்று, மதமே வேண்டாம் என்று விலகிக் கொள்ளவும் உரிமை உண்டு. இது இயல்பாயமைந்த மாந்த உரிமை மட்டுமன்று, இந்திய அரசமைப்பு அறிந்தேற்றுள்ள உரிமையும் ஆகும். அரசமைப்பின் சிற்பி என்று அனைவராலும் மதிக்கப்பெறும் அண்ணல் அம்பேத்கரே இலட்சக்கணக்கான ஆதரவாளர்களோடு பௌத்த மதத்துக்கு மாறினார் அல்லவா? இந்த மதமாற்றம் இந்திய அரசமைப்பை மீறியது, சட்டத்துக்குப் பகையானது என்று இன்று வரை யாராவது குற்றஞ்சாட்டியதுண்டா? குறை கூறியதுண்டா? மென்மையாகக் கூட குற்றாய்வு செய்ததுண்டா?

காந்தியும் நேருவும் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்குத் தலைவரான போதே, இந்துவாக சாக மாட்டேன் என்று உறுதியேற்றிருந்தார், உண்மையில் பௌத்தம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் என்பது உலகறிந்த செய்திதான். .

அம்பேத்கருக்குத் தெரியாத அரசமைப்புச் சட்டம் அண்ணாமலைக்குத் தெரிந்து விட்டதா? இந்திய அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள சமய விடுமை (மத சுதந்திரம்) என்பது மதத்தைக் காட்டிக் கொள்வதற்கும் கடைப்பிடிப்பதற்கும் பரப்புவதற்குமான (profess, practice and propagate) உரிமைகளைத் தன்னகத்தே கொண்டதாகும். பரப்பும் உரிமை என்பதில் மதமாற்றும் உரிமையும் அடங்கும். இதுதான் முறையான சட்ட விளக்கம். இது கட்டாய மதமாற்றம் செய்வதற்கான உரிமையில்லை என்பதைக் கூறத் தேவையில்லை. மத மாற்றம் மட்டுமல்ல, எந்த மாற்றத்தைக் கட்டாயப்படுத்திச் செய்தாலும் குற்றம்தான்.

அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள இந்த மத மாற்ற உரிமைக்கு எதிராகத்தான் பத்து மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1977 ஸ்டானிஸ்லாவ் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றமும் மதமாற்றத் தடைச் சட்டம் செல்லும் என்று சப்பை கட்டியிருப்பது பெரிய கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பற்றி “நீதிபதிகள் பெருந்தீங்கு செய்து விட்டார்கள்” என்று சிறந்த அரசமைப்புச் சட்ட வல்லுநரான சீர்வாய் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒடுக்குண்ட மக்கள் சாதிக் கொடுமைகளுக்கு ஆறுதல் தேடி அடக்கலம் புகுவதற்கு மதமாற்றம் பயன்பட்டிருப்பது உண்மை. மதம் ஆறுதலற்ற உலகின் ஆறுதல் என்பதையே தமிழ்நாட்டின் பட்டறிவும் உணர்த்துகிறது. இதுவே தீர்வு என்று சொல்ல மாட்டோம். ஆனால் மதமாற்றம் என்னும் ஆறுதலைத் தேடிக் கொள்ளும் உரிமையைக்கூட ஒடுக்குண்ட மக்களுக்கு மறுப்பதுதான் பாசக - ஆர்எஸ்எஸ் கோரும் மதமாற்றத் தடைச் சட்டத்தின் நோக்கமும் விளைவும் ஆகும். இன்றளவும் கிறித்துவத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீட்டுரிமை மறுக்கப்படுவது காட்டுவதென்ன? அவர்களை இந்துக்களாக இருக்கும்படி அல்லது மாறும் படி சட்டம் கட்டாயப்படுத்துகிறது என்பதுதானே? இது கட்டாய மதமாற்றம் இல்லையா? .

ஆர்எஸ்எஸ் கும்பல் இல்லந்திரும்புதல் (”கர் வாப்பசி”) என்ற பெயரில் நடத்துவது மதமாற்றம் இல்லையா? வருண சாதி முறைமையை உயிர்நாடியாகக் கொண்ட ’இந்து தர்மத்தை’க் காப்பது என்றால் சாதி காத்தல், சமூக ஒடுக்குமுறை காத்தல், தீண்டாமை காத்தல் என்று பொருள். மதமாற்ற உரிமை என்பது சமூக நீதிக் கொள்கையின் ஒரு கூறு ஆகும். மதமாற்றத் தடைச் சட்டம் என்பது சமூகநீதிக்குத் தடை போடும் சட்டமாகும். சமூக நீதியை மறுக்கவே இந்துத்துவக் கும்பல் மதமாற்றப் பூச்சாண்டி கிளப்புகிறது.

தமிழ்த் தேசம் ஒன்றுபட்டு நின்று விழிப்புக் காத்து, இந்துத்துவத்தின் பிண அரசியலையும் மத அரசியலையும் புறங்காண வேண்டும்.

- தியாகு